வங்கக்கடலில் ஒருநாள் முன்கூட்டியே உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
- மத்திய அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
- வங்கக்கடலில் வரும் 22ம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என முன்னதாக அறிவிப்பு.
வங்கக்கடலில் ஒருநாள் முன்கூட்டியே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வரும் 21ம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல், அதனை ஒட்டிய வடக்கு அந்மான் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, வங்கக்கடலில் வரும் 22ம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று அக்டோபர் 23ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, வரும் 21-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள்; நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 22, 23-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 24-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.