செய்திகள் (Tamil News)

ஒரு கெட்ட நாளை நினைவில் கொள்கிறார்கள்: விமர்சனத்திற்கு ரஷித் கான் பதிலடி

Published On 2019-06-21 15:35 GMT   |   Update On 2019-06-21 15:35 GMT
பத்து நல்ல நாட்களை விட்டுவிட்டு அவர்கள் வசதிக்காக ஒரு கெட்ட நாளை நினைவில் கொள்கிறார்கள் என விமர்சனத்திற்கு ரஷித் கான் பதிலடி கொடுத்துள்ளார்.
உலகின் தலைசிறந்த ரிஸ்ட் ஸ்பின்னர்களில் ஒருவராக ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் திகழ்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி சர்வதேச அளவில் பேசப்படுவதற்கு இவரது பந்து வீச்சும் முக்கிய காரணம்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டி இவருக்கு மிகவும் மோசமானதாக அமைந்துவிட்டது. 9 ஓவரில் விக்கெட் ஏதுமின்றி 110 ரன்கள் வாரி வழங்கினார். இதனால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.

இந்நிலையில் மக்கள் பத்து நல்ல நாட்களை விட்டுவிட்டு அவர்கள் வசதிக்காக ஒரு கெட்ட நாளை நினைவில் கொள்கிறார்கள் என ரஷித் கான் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து ரஷித் கான் கூறுகையில் ‘‘இங்கிலாந்துக்கு எதிரான போட்டி குறித்து நான் பெரிய அளவில் சிந்திக்கவில்லை. மக்கள் பத்து நல்ல நாட்களை மறுந்து விடுகிறார்கள். அவர்களின் மனதில் நிற்கும் அளவிற்கான ஒரு குறிப்பிட்ட மோசமான நாளை வசதியாக எடுத்துக் கொள்கிறார்கள். ரஷித் கான் கடந்த 10 நாட்களில் என்ன செய்தார்? என்பதை அவர்கள் நினைத்துப் பார்க்க விரும்புவதில்லை.



நான் செய்த தவறு மீது கவனம் செலுத்தி, அடுத்த போட்டியில் நடக்காதவாறு பார்த்துக் கொள்வேன். விமர்சனம் பற்றி சிந்திக்க ஏதுமில்லை. இதை மிகவும் எளிதாக எடுத்துக் கொள்வது எனக்கு அவசியமானது’’ என்றார்.

மேலும் புதிய கேப்டனான குல்பதின் நயிப் உடனான தொடர்பு குறித்து கேட்கையில் ‘‘நான் குல்பதின் நயிப்பிற்காகவோ, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்காகவோ விளையாடவில்லை. ஆப்கானிஸ்தானுக்காக விளையாடுகிறேன்’’ என்றார்.

Similar News