செய்திகள்

சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா நாளை தொடக்கம்

Published On 2018-07-16 06:40 GMT   |   Update On 2018-07-16 06:40 GMT
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 27-ந்தேதி தபசு காட்சி நடைபெறுகிறது.
தென்தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சைவ-வைணவ திருத்தலங்களில் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் சித்திரைத்திருவிழா, திருவாதிரை திருவிழா, நவராத்திரி திருவிழா, கந்த சஷ்டி திருவிழா உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். இங்கு கோமதியம்மனுக்கு சங்கரநாராயணராக சிவபெருமான் காட்சி அளிக்கும் ஆடித்தபசு திருவிழா பிரசித்தி பெற்ற விழாவாகும்.

இந்த நிகழ்வை காண நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது உண்டு. ஆண்டு தோறும் ஆடிமாதம் ஆடித்தவசு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். விழா நாட்களில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை இருவேளைகளிலும் வீதி உலா நடைபெறும். கோவில் நிர்வாகம் சார்பிலும் மற்றும் மண்டகப்படிதாரர்கள் சார்பிலும் கலைநிகழ்ச்சிகள், கூட்ட அரங்குகள் பொது இடங்களில் நடைபெறும்.

இந்த ஆண்டிற்கான திருவிழா நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 8.15க்கு மேல் 8.35க்குள் கோமதி அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்ககொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 9-ம் திருநாளான வருகிற 25-ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியான ஆடித்தவசு திருவிழா 11-ம் திருநாளான 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு சிவபெருமாள் சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு சிவபெருமாள் சங்கரலிங்கமாக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் பரஞ்சோதி மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

ஆண்டு தோறும் ஆடித்தவசு திருநாளில் முதல் காட்சி 6 மணிக்கும், இரண்டாவது காட்சி நள்ளிரவு 12 மணிக்கும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஜூலை 27 அன்று இரவு சந்திரகிரகணம் 11.45 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.30 மணி வரை உள்ளதால் இரவு 12 மணிக்கு நடைபெறும் இரவு காட்சி இந்த ஆண்டு இரவு 9 மணிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News