செய்திகள்

திருவல்லிக்கேணி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

Published On 2018-12-18 06:59 GMT   |   Update On 2018-12-18 06:59 GMT
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 8-ந்தேதி முதல் திருவிழா பகல் பத்து வேங்கடகிருஷ்ணன் திருக்கோலத்துடன் தொடங்கியது.

அதை தொடர்ந்து வேணு கோபாலன், காளிங்கர் நர்த்தன், சக்கரவர்த்தி திருமகள், திருக்கோலங்களில் விழா நடந்தது. இன்று ராப்பத்து திருவிழாவின் முதல் நாள் (18-ந்தேதி) தொடங்கியது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அதன் வழியாக பார்த்தசாரதி பெருமாள் வந்து நம்மாழ்வாருக்கு காட்சி அளித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். விழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கோவிலில் வெளியே கூடியிருந்த பக்தர்களுக்காக பெரிய அகன்ற டிஜிட்டல் திரையில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் எம்.ஜோதிலட்சுமி தலைமையில் அதிகாரிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.

மாமல்லபுரம் ஸ்தலசயண பெருமாள் கோவிலில், திருநின்றவூர் பக்தவச்சல பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News