செய்திகள்
தங்கத்தேர் வெள்ளோட்டத்தை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு பிறகு தங்கத் தேர் வெள்ளோட்டம்

Published On 2019-02-23 08:54 GMT   |   Update On 2019-02-23 08:54 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 3½ ஆண்டுகளாக முடங்கி கிடந்த தங்கத் தேரின் வெள்ளோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 3½ ஆண்டுகளாக முடங்கி கிடந்த தங்கத் தேரின் வெள்ளோட்டம் நடந்தது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்த தஙகத் தேரை இழுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர். இந்த தேர் பழுதானதால் 3½ ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் போனது.

கிளிகோபுரம் அருகே இரும்பு தகரங்களால் அமைக்கப்பட்ட கொட்ட கையில் முடக்கப்பட்டது. தங்கத் தேரை சீரமைக்க, கோவில் நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்கவில்லை என்று பக்தர்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் ரூ. 3 லட்சம் மதிப்பில் தங்கத் தேர் சீரமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்தது. அந்த பணி நிறைவு பெற்று நேற்று வெள்ளோட்டம் நடந்தது.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தங்கத் தேர் உட்பிரகாரத்தில் வலம் வந்தது.

வெள்ளோட்டத்தின் போது தங்கத் தேர் முன்பகுதியில் உள்ள குதிரையின் இடது கால் உடைந்தது. 3½ ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்ட நாளிலேயே குதிரையின் கால் முறிந்தது பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

சேதமடைந்ததை உடனடியாக சரி செய்ய நடவடடிக்கை எடுக்கப்படும் என்று கோவில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News