செய்திகள் (Tamil News)
பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம், வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி அருள்பாலித்த காட்சி.

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்

Published On 2019-03-15 07:51 GMT   |   Update On 2019-03-15 07:51 GMT
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அசுரர்களை வென்ற பின் பங்குனி மாத உத்திர நட்சத்திர திருநாளன்று தெய்வானையை முருகன் திருமணம் செய்த நாளே பங்குனி உத்திர திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. கோடை வெயில் தொடங்கும் பங்குனி மாதத்தில் முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு பல லட்சம் பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்த காவடி எடுத்து வந்து அபிஷேகம் செய்வது சிறப்பு அம்சமாகும்.

சிறப்பு வாய்ந்த இந்ததிருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு திரு ஆவினன்குடி கோவிலில் வாஸ்து சாந்தி பூஜை, அஸ்திரதேவர் உலா, புனிதமண் எடுத்தல், கிராமசாந்தி பூஜை போன்றவை நடைபெற்றது.தொடர்ந்து திருஆவினன்குடி கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கொடி பட பூஜை நடந்தது. இதையடுத்து காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் கொடி படத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கொடியேற்றம் நடந்தது. அதனைத் தொடர்ந்து கொடி கம்பத்துக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. அப்போது கோவிலில் எழுந்தருளிய வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் அரோஹரா கோ‌ஷம் முழங்க சுவாமியை வழிபட்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 20-ந் தேதி திருக்கல்யாணமும், வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது. 21-ந் தேதி பங்குனி உத்திர தேரோட்டம் மாலை 4.20 மணிக்கு நடக்கிறது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க முக்கிய வீதிகள் வழியாக சுவாமி வீதி உலா வந்து அருளாசி வழங்குவார். பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து பழனிக்கு தீர்த்த காவடி எடுத்து வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News