புதுச்சேரி
கோப்பு படம்.

4 பெண்கள் உள்பட 10 பேரிடம் ரூ.5 லட்சம் மோசடி

Published On 2023-11-21 08:19 GMT   |   Update On 2023-11-21 08:19 GMT
  • ரூ.3 ஆயிரத்து 600 மோசடி செய்துள்ளார்.
  • ரூ.9 ஆயிரம் கடன் பெற்றார்.

புதுச்சேரி:

புதுவை கிருமாம்பாக்கத்தை சேர்ந்த ஹரிகரன் என்பவர் ஆன்லைன் லோன் அப் மூலம் ரூ.9 ஆயிரம் கடன் பெற்றார்.

அந்த தொகையை வட்டியுடன் ரூ.14 ஆயிரமாக திருப்பி செலுத்தினார். அவரை மர்மநபர் இணைய தளம் மூலம் தொடர்பு கொண்டு ஹரிகரனின் புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து, மேலும் பணத்தை செலுத்தும்படி மிரட்டியுள்ளார்.

பண்டசோழநல்லூரை சேர்ந்த மங்கையர்கரசியிடம் மர்ம ஆசாமி ஒருவர் வங்கி அதிகாரிபோல் பேசி ரகசிய எண்ணை (ஓ.டி.பி.) பெற்று அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.3 ஆயிரத்து 600 மோசடி செய்துள்ளார்.

லாஸ்பேட்டை, பெத்து செட்டிபேட்டை சதீஷ் என்பவரிடம் அவரது உறவினர் பேசுவதுபோல் மர்மநபர் ஆள்மாறாட்டம் செய்து ரூ.60 ஆயிரத்தை ஆன்லைன் மூலமாக பெற்று மோசடி செய்துள்ளார்.

புதுப்பேட்டை ராஜராஜன் என்பவரிடம் பாஸ்டாக் அதிகாரிபோல் பேசி, ரூ.8 ஆயிரம் மோசடி நடந்துள்ளது. ஆரோவில் ஜோதிர்மயி பொம்மோனா தனது தந்தைக்கு கூரியர் மூலம் லேப்டாப் அனுப்பியுள்ளார்.

கூரியர் அதிகாரிபோல் ஒருநபர் அவரிடம் பேசி, அப்பொருளை பெற ரூ.10 ஐ வங்கிக் கணக்கில் இருந்து செலுத்துமாறு கூறி ஒரு லிங்க் அனுப்பியுள்ளார். அதை நம்பி ஜோதிர்மயி அப்பணத்தை அனுப்பிய நிலையில், அடுத்த சில நொடிகளில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.35 ஆயிரம் மோசடியாக எடுக்கப்பட்டது தெரியவந்தது.

தவளகுப்பத்தில் வசிக்கும் அரிகரனிடம், பகுதிநேர வேலை இருப்பதாகவும், இதன்மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் எனக் கூறி டெலிகிராமில் ஒரு லிங்க் வந்துள்ளது. அதன்படி ஆன்லைனில் சிறிய தொகையை முதலீடு பணியை தொடங்கியுள்ளார்.

பின்னர் மோசடி கும்பல் கூறியதை நம்பி ரூ.3.75 லட்சத்தை முதலீடு செய்த பிறகு எந்த வருமானமும் வரவில்லை. மேலும் முதலீடு செய்த பணத்தையும் திரும்ப எடுக்க முடிய வில்லை.

கோவிந்த சாலையை சேர்ந்த கவியிடம் பிட்காயின் முதலீடு ஆசைகாட்டியும், பிரசாத் என்பவரிடம் ஓ.டி.பி. பெற்றும் பணம் மோசடி நடந்துள்ளது.

இதுதவிர அரும்பார்த்தபுரம் செந்தில்குமார், ரூ.2 ஆயிரத்துக்கு உலர்பழங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து பணத்தை இழந்துள்ளார். இதுதவிர திவ்யா என்ற இளம்பெண்ணிடம் பாஸ்டாக் அதிகாரிபோல் பேசி ரூ.8 ஆயிரத்தை மர்ம ஆசாமி நூதனமாக ஏமாற்றி பறித்துள்ளார்.

மொத்தம் 4 பெண்கள் உட்பட 10 பேரிடம் நூதனமாக நடந்த ரூ.5.06 லட்சம் மோசடிகள் தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி, கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் தனித்தனியே வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News