புதுச்சேரி

கோப்பு படம்.

பாகூரில் நாளை 'பந்த்' போராட்டம்

Published On 2023-11-13 08:56 GMT   |   Update On 2023-11-13 08:56 GMT
  • கிராம மக்கள் அறிவிப்பு
  • நிலம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து சட்டவிதிமுறைப்படி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுச்சேரி:

புதுவை பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலுக்கு சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றங் கரையில் தீர்த்தவாரி மண்டபம் இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஆற்று திருவிழாவின் போது, மூலநாதர் சுவாமி இந்த மண்டபத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பது வழக்கம்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜுலை மாதம் விழுப்புரம்- –நாகப்பட்டினம் புறவழிச்சாலை பணிக்காக தீர்த்தவாரி மண்டபத்தை, நெடுஞ்சாலை துறையினர் இடித்து அப்புறப்படுத்தினர்.

தீர்த்தவாரி மண்டபம் இருந்த இந்த இடம் சோரியாங்குப்பம் கிராமத்தில் உள்ள செடல் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமானது என்றும், இழப்பீடு தொகை தங்களுக்கு தான் சேர வேண்டும் என அந்த கிராம மக்கள் உரிமை கோரினர்.

மேலும், அந்த இடத்தில் புதியதாக தீர்த்தவாரி மண்டபம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், குருவிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிலுக்கான சொந்த இடத்தை கணினி மயமாக்கும்போது குருவிநத்தம் என குறிப்பிட்டிருந்தது நீக்கப்பட்டது.

அந்த ஆவணத்தில் குருவிநத்தம் கிராமத்தின் பெயரையும் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதேபோல், பாகூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் மூலநாதர் கோவிலின் பயன்பாட்டில் இருந்து வந்த தீர்த்தவாரி மண்டபம் சட்ட விரோதமாக, சோரியாங்குப்பம் கோவிலுக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் புதுவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வல்லவன் தலைமையில் பாகூர், சோரியாங்குப்பம், குருவிநத்தம் ஆகிய 3 கிராம முக்கியஸ்தர்களுடன் கடந்த மாதம் 30-ந் தேதி பேச்சு வார்த்தை நடந்தது.

பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இதில் இந்து அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன், பாகூர் தாசில்தார், போலீஸ் சூப்பிரண்டுகள் வீரவல்லபன், பக்தவச்சலம் மற்றும் அதிகாரிகள், 3 கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

அதில் தீர்த்தவாரி மண்டபம் தொடர்பாக 3 கிராமத்தினரும் உரிமை கோரியதால் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் நிலவியது.

இதனை தொடர்ந்து, இந்து அறநிலையத்துறை ஆணையர் பேசும்போது, இடிக்கப்பட்ட மண்டபத்தை கட்டி கொடுக்கத்தான் இழப்பீடு வழங்கப் பட்டுள்ளது. நிலத்திற்காக இழப்பீடு வழங்கப்பட வில்லை.

மேலும், மண்டபத்தை கட்டுவது என்பது அரசின் கொள்கை முடிவு. நிலம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து சட்டவிதிமுறைப்படி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.

இதையடுத்து, பாகூர் முக்கியஸ்தர்கள் பேசுகையில், எங்களுக்கு இடிக்கப்பட்ட மண்டபத்தை கட்டி கொடுத்தால் போதும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதனையேற்று உடனே தீர்த்தவாரி மண்டபம் கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் வல்லவன் உறுதியளித்தனர்.

அதேபோன்று, குருவிநத்தம், சோரியாங்குப்பம் கிராம முக்கியஸ்தர்களுடன் நடந்த பேச்சு வார்த்தையில் உங்களிடம் ஆதாரம் இருப்பதால், ஒரு வாரத்தில் அதனை திருத்தம் செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பிறகு, இழப்பீடு தொகையை எப்படி கொடுப்பது என்று பேசி முடிவு செய்யப்படும். என்றார். இதனை இரு கிராமத்தினரும் ஏற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து, பொங்கல் பண்டிகை வர இருப்பதால் தீர்த்தவாரி மண்டபத்தை உடனடியாக கட்ட வேண்டும். அதற்கான தேதியை அறிவிக்க வேண்டும் என்று பாகூர் கிராமத்தினர். கோரிக்கை மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்து  பாகூரில் பந்த் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News