புதுச்சேரி
கராத்தே வளவன்

போர்க்கால அடிப்படையில் வாய்க்கால்களை தூர் வார வேண்டும்

Published On 2023-11-14 06:47 GMT   |   Update On 2023-11-14 06:47 GMT
  • மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் வலியுறுத்தல்
  • பொது மக்களுக்கு எந்த ஒரு பலனும் ஏற்படவில்லை.

புதுச்சேரி:

புதுச்சேரி மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

வடகிழக்கு பருவ மழை மற்றும் அதனால் வரும் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு துரிதமாக செயல்பட வேண்டும். கடந்த 3 நாட்களுக்கு முன்பு புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி இது தொடர்பாக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

 இது ஏதோ வழக்கமான சம்பிரதாய கூட்டமாக அமைந்துள்ளதாகவே கருத வேண்டி உள்ளது. இந்த கூட்டத்தினால் மழையினால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் பொது மக்களுக்கு எந்த ஒரு பலனும் ஏற்படவில்லை.

வாய்க்கால்கள் சரியாக தூர்வாரப்படாதது இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. புதுவை அரசு போர்க்கால அடிப்படையில் உப்பனார் வாய்க்கால் மற்றும் செஞ்சி சாலை வாய்க்கால், சின்ன வாய்க்கால் ஆகியவற்றில் உள்ள அடைப்புகளை நீக்கி மழை நீர் தங்கு தடை இன்றி செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு நாள் மழை வெள்ளத்துக்கு புதுவை மாநிலம் வெள்ளக் காடாக மாறியது புதுவை அரசின் செயலற்ற தன்மையை தெளிவாக காட்டுகின்றது. இதில் புதுவை மாநிலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உள்ளது என்றும் அதற்காக பல கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்பது புதுவை மக்களை ஏமாற்றும் திட்டம் என்பதும் வெட்ட வெளிச்சமாக தெரிகின்றது.

எனவே புதுவை அரசு இனியும் காலம் கடத்தாமல் கடும் மழையை எதிர்கொள்ள அனைத்து இடங்களிலும் தூர்வாரி வடிகால் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News