புதுச்சேரி

மணப்பட்டு ஏரி முழுவதும் ஆகாயத் தாமரைகள் நிறைந்திருக்கும் காட்சி.

மணப்பட்டு ஏரி தண்ணீர் வெளியேறி கடலில் கலக்கும் அவலம்

Published On 2023-11-19 06:47 GMT   |   Update On 2023-11-19 06:47 GMT
  • ஏரியில் தண்ணீர் சேமிக்கப்படாமல் வாய்க்கால்கள் மூலமாக கடலில் வீணாக கலக்கிறது.
  • நிலத்தடி நீர்மட்டம் சேமிக்கப்படாமலும் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

புதுச்சேரி:

புதுவை மாநிலத்தின் நெற்களஞ்சியமாக பாகூர் இருந்து வருகிறது.

இந்த விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்காக 24 ஏரிகள் இருந்தது. ஆனால் தற்போது பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு 21 ஏரியை மட்டுமே பராமரித்து வருகிறது. மற்ற ஏரிகளை அவர்கள் கண்டு கொள்வதில்லை. இதில் மணப்பட்டு தாங்கள் ஏரியும் இருந்து வருகிறது.

இந்த ஏரிக்கு அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தேங்கும் மழை நீர், தென்பெண்ணை ஆற்றில் குறுக்கே கட்டப்பட்டுள்ள சித்தேரி அணைக்கட்டில் இருந்து வாய்க்கால் மூலமாக பாகூர் சித்தேரி என்ற ஏரிக்கும் அதிலிருந்து நிரம்பி மணப்பட்டு ஏரிக்கு வந்து சேமிக்கப்படும்.ஆனால் இந்த ஏரி முறையாக பராமரிக்கப்படாததால் ஆகாயத்தாமரைகள் ஆள் உயரத்திற்கு வளர்ந்தும், மதகுகள் சேதம் அடைந்து தண்ணீர் தேங்க முடியாதபடி வழிந்து வருகிறது. 2 நாட்கள் மழை பெய்தாலே மணப்பட்டு ஏரி நிரம்பி தண்ணீர் வழிய தொடங்கும். இந்த ஏரியில் தண்ணீர் சேமிக்கப்படாமல் வாய்க்கால்கள் மூலமாக கடலில் வீணாக கலக்கிறது.

இந்த நிலை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ஆனால் பொதுப்பணித்துறை இதை கண்டு கொள்ளாமலேயே உள்ளது. ஏற்கனவே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள பாலம் ஒன்று உடைந்தது.

மேலும் ஏரியின் மதகு உடையும் தருவாயில் இருக்கிறது. தற்பொழுது பெய்த மழையால் விவசாய நிலங்களில் இருந்து வடியும் தண்ணீர் மணப்பட்டு தாங்கல் ஏரியில் இருந்து ஆர்ப்பரித்து வெளியேறி கடலில் கலக்கிறது.

இதனால் நிலத்தடி நீர்மட்டம் சேமிக்கப்படாமலும் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News