புதுச்சேரி

மாநில அந்தஸ்து கோரி அ.தி.மு.க. 'பந்த்'- புதுவையில் தனியார் பஸ்கள் ஓடவில்லை

Published On 2022-12-28 04:33 GMT   |   Update On 2022-12-28 04:33 GMT
  • பந்த் போராட்டத்தையொட்டி தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை.
  • சொற்ப எண்ணிக்கையில் ஓடக்கூடிய புதுவை அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் மாநில எல்லைகளுக்கு இயக்கப்பட்டது.

புதுச்சேரி:

யூனியன் பிரதேசமான புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது.

மாநில அந்தஸ்து கோரிக்கை அவ்வப்போது வலுப்பெறும். சமீபத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அதிகாரம் இல்லாததால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் மன உளைச்சல் ஏற்படுவதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இதையடுத்து மாநில அந்தஸ்து பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. அரசியல் கட்சிகள் மாநில அந்தஸ்து வேண்டும் என வலியுறுத்த தொடங்கினர்.

இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் புதுவைக்கு மாநில அந்தஸ்து தர மத்திய அரசை வலியுறுத்தி இன்று (புதன்கிழமை) முழு அடைப்பு (பந்த்) போராட்டம் நடைபெறும் என அதன் மாநில செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.

இதற்கு தி.மு.க. மற்றும் வர்த்தக சபையினர், புத்தாண்டு காலம் என்பதால் வியாபாரம், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படுவர் என எதிர்ப்பு தெரிவித்தனர். வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், கடைகளை திறக்க பாதுகாப்பு தர போலீசை வலியுறுத்தினர்.

இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு பந்த் போராட்டம் தொடங்கியது. பந்த் போராட்டத்தையொட்டி தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. சொற்ப எண்ணிக்கையில் ஓடக்கூடிய புதுவை அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் மாநில எல்லைகளுக்கு இயக்கப்பட்டது.

புதுவையிலிருந்து இயக்கப்படும் தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. தமிழகத்திலிருந்து புதுவை வழியாக செல்லும் அரசு பஸ்களில் சில பஸ்நிலையம் வந்து சென்றது. பிற தமிழக அரசு பஸ்கள் மாநில எல்லையில் பயணிகளை இறக்கிவிட்டு சென்றனர். புதுவையில் தனியார் பஸ்களே அதிகளவில் இயக்கப்படுகிறது. இன்று தனியார் பஸ்கள் இயங்காததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

பெரும்பாலான ஆட்டோக்கள், டெம்போக்கள் ஓடவில்லை. நகரின் பிரதான வீதிகளான மறைமலை அடிகள் சாலை, நேருவீதி, காமராஜர் வீதி, அண்ணாசாலை, படேல் சாலை, மிஷன் வீதி, புஸ்சி வீதியில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், கடைகள் திறக்கப்படவில்லை. உட்புற பகுதிகளில் இருந்த ஒரு சில கடைகள் திறக்கப்பட்டிருந்தது.

புறநகரில் பிரதான வீதிகளில் இருந்த கடைகள் திறக்கப்படவில்லை. மத்திய-மாநில அரசு அலுவலகங்கள் இயங்கியது. பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. கல்லூரிகள் வழக்கம்போல இயங்கியது. கல்லூரி மாணவர் பஸ்கள் இயக்கப்பட்டது.

தட்டாஞ்சாவடி, சேதராப்பட்டு, திருபுவனை, மேட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகள் இயங்கியது. பந்த் போராட்டத்தையொட்டி நகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மக்கள் கூடும் சந்திப்புகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

புதிய பஸ்நிலையத்தில் போக்குவரத்து போலீஸ் சூப்பிரெண்டு மாறன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News