புதுச்சேரி

வெள்ளம் பாதித்த போது தமிழக முதலமைச்சர் எங்கே சென்றார்? கவர்னர் தமிழிசை கேள்வி

Published On 2024-01-06 07:53 GMT   |   Update On 2024-01-06 07:53 GMT
  • ஒரு அரசாங்கம், மற்றொரு அரசாங்கத்துக்கு கொடுக்கின்ற பணத்தை தடுப்பதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை.
  • திருச்சியில் பிரதமர் பேசும் போது, முதல் வார்த்தையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களோடு இருக்கிறேன் என்றார்.

புதுச்சேரி:

மத்திய அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி முதலியார்பேட்டை போலீஸ் நிலையம் அருகே நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு மத்திய அரசு திட்ட பயனாளர்களுடன் கலந்துரையாடி நலத்திட்டங்களை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கக்கூடாது.

ஏனென்றால் இது மக்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த திட்டமாகும். ரூ.1000 கூட செலவு செய்ய முடியாத ஒரு குடும்ப தலைவர் விபத்தில் சிக்கிய போது ஆயூஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் தொகையினால் காப்பற்றப்பட்டுள்ளார். இதனை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு பெண் கூறினார். இது பல லட்சம் மக்களுடைய உணர்வாகும். எனவே நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் எம்.எல்.ஏ.க்களுக்கு பாராட்டுக்கள்.

மத்திய அரசுக்கு எதிரான கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களாக இருந்தாலும் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் வந்து கலந்து கொள்ள வேண்டும்.

இதை அரசியலாக பார்க்காமல் அவசியமாக பார்க்க வேண்டும். ஒரு அரசாங்கம், மற்றொரு அரசாங்கத்துக்கு கொடுக்கின்ற பணத்தை தடுப்பதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை. அவர்கள் நேரடியாக கணக்கு வைத்துள்ளனர்.

ஆகவே தமிழக நிதி தொடர்பாக மத்திய நிதி மந்திரி வெளிப்படையாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழக அமைச்சர் உதயநிதி, பிரதமரை பார்க்கிறார். மறுநாள் காலையில் ஒரு நாளிதழில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து கட்டுரை எழுதுகின்றனர்.

குஜராத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது பிரதமர் உடனே சென்றார் என்கிறார்.

அப்போது குஜராத் முதல்-மந்திரி வெள்ளம் பாதித்த பகுதியில் மக்களோடு இருந்தார். ஆனால் தமிழகத்தில் வெள்ளம் பாதித்த போது முதலமைச்சர் எங்கே இருந்தார் என்று எல்லோருக்கும் தெரியும். முதலமைச்சரே அங்கு செல்லவில்லை. ஆனால் பிரதமர் மட்டும் வரவில்லை என்று குறை கூறுகின்றனர்.

திருச்சியில் பிரதமர் பேசும் போது, முதல் வார்த்தையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களோடு இருக்கிறேன் என்றார்.

புதுச்சேரியில் நல்ல கலாசாரம் தான் இருக்க வேண்டும். வெடிகுண்டு கலாசாரம் இருக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News