புதுச்சேரி

மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணிக்கான பூமி பூஜையை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்த காட்சி.

நீர் தேக்க தொட்டி கட்டுமான பணி மீண்டும் தொடக்கம்

Published On 2023-08-31 09:12 GMT   |   Update On 2023-08-31 09:12 GMT
  • அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் முயற்சியில் நடந்தது
  • அரசுக்கும் இருந்த பிரச்சினை தொடர்பாக ஒப்பந்ததாரர் கட்டுமான பணியை மேற்கொள்ளவில்லை.

புதுச்சேரி:

புதுச்சேரி மாநிலம் ஊசுடு தொகுதி, தொண்டமாநத்தம் கிராமத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி கட்டுமான பணி தொடங்கியது. ஒவ்வொரு 5 ஆண்டுகளிலும் கட்டுமான பணி இடையில் இடையில் நிறுத்தப்பட்டது.

முதலில் கட்டுமான பணியில் ஈடுபட்ட ஒப்பந்த தாரருக்கும் அரசுக்கும் இருந்த பிரச்சினை தொடர்பாக ஒப்பந்ததாரர் கட்டுமான பணியை மேற்கொள்ளவில்லை.

மற்றவருக்கு கட்டுமான பணி அரசு வழங்கிய நிலையில், முதலாவதாக கட்டுமான பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து 2017-க்கு பிறகு மேல்நிலை நீர் தேக்கு தொட்டி கட்டுமான பணி முழுமை அடையாமல் பாதியிலேயே நின்றது.

தற்போது தொண்டமாநத்தம் சுற்றியுள்ள பகுதியில் குடிநீர் தேவை அதிகமாக இருப்பதால் தொகுதி எம்.எல்.ஏ.வும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சருமான சாய்.ஜெ.சரவணன்குமார் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு அவரது தீவிர முயற்சியில் வழக்கு முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் மீதமுள்ள பணிக்கு திட்டம் வகுக்கப்பட்டு ரூ.63.81 லட்சம் மதிப்பீட்டில் கட்டுமான பணியினை மேற்கொள்ள பூமி பூஜை நடந்தது. அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் பூமி பூஜை செய்து வைத்து பணியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பழனியப்பன், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், ஊசுடு தொகுதி பாரதீய ஜனதா கட்சி தலைவர் சாய். தியாகராஜன், தொகுதி குடிநீர் வழங்கல் தலைவர் பாலு, துணைத் தலைவர் சதாசிவம், கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News