11.1 இன்ச் மற்றும் 13 இன்ச் ஐபேட் ப்ரோ மாடல்களை உருவாக்கும் ஆப்பிள்
- ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புது ஐபேட் ப்ரோ விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
- அடுத்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்யும் ஐபோன் 15 சீரிஸ் நான்கு மாடல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் 11.1 இன்ச் மற்றும் 13 இன்ச் அளவுகளில் OLED ஐபேட் ப்ரோ மாடல்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இரு மாடல்கள் 2024 ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய ஐபேட் மினி மாடலை 2024 வாக்கில் அறிமுகம் செய்யும் என்றும் கூறப்பட்டது.
பிரபல டிப்ஸ்ளே பிரிவு வல்லுனரான ராஸ் யங், தற்போது வெளியிட்டு இருக்கும் தகவல்களில் 2024 ஆண்டு ஆப்பிள் நிறுவனம் புது OLED ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்யும். புது மாடல்கள் 11.1 இன்ச் மற்றும் 13 இன்ச் அளவுகளில் உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும் இவற்றில் OLED பேனல்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. முன்னதாக இந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் ஆப்பிள் நிறுவனம் தனது 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடல்களை அப்டேட் செய்து இருந்தது.
அந்த வகையில் புது ஐபேட் மாடல்களில் M2 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்டு விட்ட நிலையில், 2024 வரை இதற்கான மேம்பட்ட வெர்ஷன் வெளியாகும் என எதிர்பார்க்க முடியாது. OLED பேனல்களுக்கு மாறும் முன் ஆப்பிள் வெளியிடும் சிறு அப்டேட் ஆக புது மாடல்கள் இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இதுதவிர ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு 14.1 இன்ச் ஐபேட் ப்ரோ மாடலை அறிமுகம் செய்யும் என ராஸ் யங் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். தற்போது இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட மாட்டாது என்றும் மாறாக 16 இன்ச் அளவில் புது ஐபேட் உருவாக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.