அமெரிக்கா தாண்டி பல நாடுகளில் விஷன் ப்ரோ விற்பனை - வெளியான புது தகவல்
- அமெரிக்க பயனர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் இருந்து வருகிறது.
- விஷன் ப்ரோ விர்ச்சுவல் கீபோர்டில் அதிக மொழிகள் சேர்க்கப்பட இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது விஷன் ப்ரோ ஹெட்செட்டின் விர்ச்சுவல் கீபோர்டில் 12 புதிய மொழிகளை சேர்க்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது விஷன் ப்ரோ விர்ச்சுவல் கீபோர்டில் ஆங்கிலம் (அமெரிக்க) மொழி மற்றும் எமோஜி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் விஷன் ப்ரோ சாதனம் அமெரிக்க பயனர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் இருந்து வருகிறது.
இந்த நிலையை மாற்றும் வகையில், ஆப்பிள் நிறுவனம் விஷன் ப்ரோ சாதனத்தை அதிக நாடுகளுக்கு கொண்டு செல்லும் முயற்சியாக அதிக மொழிகளை சேர்க்க இருக்கிறது. அதன்படி கான்டோனீஸ் (டிரேடிஷனல்), சைனீஸ் (சிம்ப்லிஃபைடு), இங்லீஷ் (ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், சிங்கப்பூர், பிரிட்டன்), ஃபிரென்ச் (கனடா, ஃபிரான்ஸ்), ஜெர்மன் (ஜெர்மனி), ஜேப்பனீஸ் மற்றும் கொரியன் போன்ற மொழிகள் விஷன் ப்ரோ விர்ச்சுவல் கீபோர்டில் சேர்க்கப்பட இருக்கிறது.
புதிய மொழிகள் சேர்க்கப்பட இருப்பதால், விஷன் ப்ரோ மாடல் விரைவில் ஆஸ்திரேலியா, கனடா, சீனா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதேபோன்று ஹாங்காங் மற்றும் தாய்வானிலும் இந்த சாதனம் அறிமுகம் செய்யபப்டலாம் என்று கூறப்படுகிறது.
முன்னதாக ஆப்பிள் நிறுவனம் தனது விஷன் ப்ரோ மாடலை இந்த ஆண்டிற்குள் மேலும் அதிக நாடுகளில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து இருந்தது. எனினும், எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை.
இந்த நிலையில், ஆப்பிள் வல்லுநரான மிங்-சி-கியூ ஆப்பிள் தனது விஷன் ப்ரோ மாடலை இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டிற்கு முன்பே அதிக நாடுகளில் விற்பனைக்கு கொண்டுவரலாம் என்று தெரிவித்து இருக்கிறார்.