இந்தியரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச் - டிம் குக் என்ன சொன்னார் தெரியுமா?
- ஆப்பிள் நிறுவத்தின் ஆப்பிள் வாட்ச் மாடல் சர்வதேச ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் அதிகம் விற்பனையாகி வருகிறது.
- ஆப்பிள் வாட்ச் மாடல்களில் உள்ள பாதுகாப்பு அம்சம் பற்றிய உண்மை சம்பவங்கள் உலகம் முழுக்க நடைபெற்று வருகின்றன.
ஆப்பிள் வாட்ச் மாடல்கள் அதனை அணிந்திருப்போர் உயிரை காப்பாற்றியதாக உலகம் முழுக்க ஏராளமான சம்பவங்கள் நடைபெறுவதாக வழக்கமான ஒன்று தான். அந்த வரிசையில், இந்தியாவில் ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. ஆப்பிள் வாட்ச் அணிந்திருந்த ஒருத்தர் 150 அடி ஆழமான பகுதியில் தவறி விழுந்திருக்கிறார். இவர் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் 7 மூலம் அவரது குடும்பத்தார் அவரை மீட்டுள்ளனர்.
இந்திய இளைஞர் ஸ்மித் மேத்தா என்பவர் ஆழமான பகுதியில் தவறி விழுந்திருக்கிறார். இவரை தொடர்பு கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தான், அவர் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் அவரை மீட்க உதவி இருக்கிறது. மிகவும் கோரமான ஆபத்தில் சிக்கி, ஆப்பிள் வாட்ச் மூலம் காப்பாற்றப்பட்ட சம்பவத்தை அந்த இளைஞர் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கிற்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்து இருந்தார்.
மகாராஷ்டிராவை சேர்ந்த ஸ்மித் மேத்தா தான் வசிக்கும் பகுதியில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். மழை பெய்து கொண்டிருந்த போது அவர் தனது நண்பர்களுடன் மலை ஏற்றத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இவருடன் மூன்று நண்பர்கள் சென்று இருந்தனர். மலை ஏற்றம் முடிந்து திரும்பி கொண்டிருந்த போது பள்ளத்தாக்கில் தவறி விழுந்து விட்டார்.
எனினும், கீழே விழும் போது மரம் மற்றும் பாறை மீது விழுந்ததில் எலும்பு முறிவுகளுடன் உயிர் பிழைத்து இருக்கிறார். கடுமையான வலியில் தவித்துக் கொண்டிருந்த இளைஞரை அவரது நண்பர்கள் அவர் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் உதவியுடன் காப்பாற்றினர். பின் காயமுற்ற இளைஞருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தனக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்தமைக்காக டிம் குக், ஸ்மித் மேத்தாவுக்கு பாராட்டு தெரிவித்தார்.