மார்க்-இன் ஆட்டம் ஆரம்பம்.. திரெட்ஸ் ஆப்-இல் விரைவில் புது வசதி!
- திரெட்ஸ் ஆப்-இல் டெக்ஸ்ட் அப்டேட்கள், லைக், ரிப்ளை, ரி-போஸ்ட், ஷேர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
- திரெட்ஸ் செயலியில் புதிய அம்சங்கள் எப்போது வழங்கப்படும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
மெட்டா நிறுவனம் டுவிட்டர் தளத்துக்கு போட்டியாக உருவாக்கி இருக்கும் புதிய செயலி தான் திரெட்ஸ். இன்ஸ்டாகிராமை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய திரெட்ஸ் செயலி அறிமுகமானது முதலே அதிகளவு டவுன்லோட்களை கடந்து வருகிறது.
தற்போது திரெட்ஸ் ஆப்-இல் டெக்ஸ்ட் அப்டேட்கள், லைக், ரிப்ளை, ரி-போஸ்ட், ஷேர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. எனினும், திரெட்ஸ் ஆப்-இல் நேரடி குறுந்தகவல் செய்யும் வசதி இதுவரை வழங்கப்படவில்லை. விரைவில் இந்த நிலை மாறி, இந்த அம்சம் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
இன்ஸ்டாகிராம் தலைமை செயல் அதிகாரி ஆடம் மொசெரி, திரெட்ஸ் ஆப்-இல் டைரக்ட் மெசேஜ்களை தற்போதைக்கு வழங்கும் திட்டம் இல்லை என்று முன்னதாக தெரிவித்து இருந்தார். சமூக வலைதள ஆய்வாளரான மேட் நவரா வெளியிட்டு இருக்கும் தகவல்களில், விரைவில் திரெட்ஸ் செயலியில் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் இடம்பெற்று இருக்கிறது.
அதில், டிரென்ட்ஸ் அன்ட் டாபிக்ஸ் (Trends&Topics), இம்ப்ரூவ்டு சர்ச் (Improved Search) மற்றும் மெசேஜிங் (Messaging) போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், கிரியேட்டர்கள் வழங்கும் கருத்துக்களுக்கு ஏற்ப அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில், திரெட்ஸ் செயலியில் குறுந்தகவல் அம்சம் வழங்க கோரி ஏராளமான கோரிக்கைகள் எழுந்து இருக்கும் என்று தெரிகிறது. புதிய அம்சங்கள் எப்போது திரெட்ஸ் செயலியில் வழங்கப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.