அறிந்து கொள்ளுங்கள்

மார்க் vs மஸ்க் - டுவிட்டரை அச்சுறுத்தும் மெட்டாவின் திரெட்ஸ்!

Published On 2023-07-06 05:28 GMT   |   Update On 2023-07-06 05:28 GMT
  • ஜனவரியில் இருந்து புதிய தளம் உருவாக்குவது தொடர்பான பணிகள் நடைபெற்று வந்தன.
  • திரெட்ஸ் சேவை இன்ஸ்டாகிராம்-இன் டெக்ஸ்ட் சார்ந்த உரையாடல் செயலி ஆகும்.

மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் டுவிட்டருக்கு போட்டியாக புதிய சமூக வலைதளம் 'திரெட்ஸ்' என்ற பெயரில் அறிமுகம் செய்கிறார். இவரின் இந்த போக்கு, எலான் மஸ்க்-க்கு நேரடி சவால்விடும் வகையில் இருப்பதாக தெரிகிறது. கடந்த காலங்களில் எலான் மஸ்க் மற்றும் மார்க் ஜூக்கர்பர்க் இடையே காரசாரமான கருத்து மோதல்கள் இருந்ததே இதற்கு காரணமாகும்.

டுவிட்டர் போன்ற சமூக வலைதள சேவைக்கு இன்றும் சந்தை இருப்பதாக மார்க் ஜூக்கர்பர்க்-இன் மெட்டா நிறுவனம் நம்புகிறது. திரெட்ஸ் சேவை கடந்த வாரம் அதன் ஊழியர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தளத்தில் மூத்த பிராடக்ட் பிரிவு அலுவலராக க்ரிஸ் கோக்ஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

 

திரெட்ஸ் தொடக்கம்:

கடந்த ஜனவரியில் இருந்து புதிய தளம் உருவாக்குவது தொடர்பான பணிகள் நடைபெற்று வந்தன. புதிய சேவையை பயன்படுத்துமாறு உலக பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கோக்ஸ் தெரிவித்துள்ளார். பிரபலங்கள் மட்டுமின்றி கிரியேட்டர்களிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தோற்றத்திலும், பயன்பாடு விஷயத்திலும் டுவிட்டர் போன்றே உருவாகி இருக்கும் திரெட்ஸ் சேவையை மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராம்-இன் டெக்ஸ்ட் சார்ந்த உரையாடல் செயலி என்று தெரிவித்து இருக்கிறது. இந்த தளத்தை பயனர்கள் இன்ஸ்டாகிராம் லாக்-இன் விவரங்களை கொண்டே பதிவு செய்து கொள்ளலாம்.

 

பாடுபடும் டுவிட்டர்:

டுவிட்டர் தளத்தினை உலகம் முழுக்க சுமார் 25 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். எலான் மஸ்க் டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து, இந்த தளம் சரிவை சந்தித்து வருகிறது. டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்க எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளார். டுவிட்டரை விலைக்கு வாங்கியதும், மூத்த தலைமை அதிகாரியில் இருந்து பலரை அதிரடியாக பணிநீக்கம் செய்தார்.

இதைத் தொடர்ந்து எலான் மஸ்க் மேற்கொண்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் காரணமாக ஏராளமான விளம்பரதாரர்கள் டுவிட்டரை விட்டு வெளியேறினர். இதன் காரணமாக டுவிட்டரின் வருவாய் படிப்படியாக குறைய தொடங்கியது. பிறகு வெரிஃபைடு அந்தஸ்தை பெற பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற முறை அறிவிக்கப்பட்டு, தற்போது இது அமலில் இருக்கிறது.

 

மார்க் விருப்பம்:

இதுதவிர ஏராளமான நடவடிக்கைகள் காரணமாக டுவிட்டர் முழுமையாக மாறி போனது. சமீபத்தில் பயனர்கள் நாள் ஒன்றுக்கு எத்தனை ட்வீட்களை பார்க்க முடியும் என்பதை கட்டுப்படுத்துவதாக எலான் மஸ்க் அறிவித்தார். இந்த எண்ணிக்கை வெரிஃபைடு பெற்றவர்கள், பெறாதவர்கள், புதிய பயனர்கள் என மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளன.

சமூக வலைதள உலகில் டுவிட்டர் ஏற்படுத்திய தாக்கம், மார்க் ஜூக்கர்பர்க்-ஐ பெரிதும் கவர்ந்தது. 2008-ம் ஆண்டு டுவிட்டரை விலைக்கு வாங்க மார்க் ஜூக்கர்பர்க் விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தான், மார்க் தற்போது திரெட்ஸ் தளத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த சேவையின் முதல் சவால், பயனர்கள் இதில் தங்களின் இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்-ஐ பயன்படுத்த விரும்புவார்களா என்பது தான்.

 

போட்டி நிறுவன சேவைகள்:

புதிய தளத்தில் அதிக பயனர்களை பெற, திரெட்ஸ் தளம் அவர்களுக்கு ஆரம்பத்தில் பல்வேறு வசதிகளை வழங்க வேண்டும். மற்றொரு பெரிய விஷயம் சமீப காலங்களில் டுவிட்டருக்கு போட்டியாக துவங்கப்பட்ட புளூஸ்கை, கடந்த திங்கள் கிழமை அன்று மட்டும் பயனர்கள் எண்ணிக்கையில் 20 சதவீதம் வளர்ச்சியை பெற்றது.

எனினும், அதிக பயனர்களை தாக்குப்பிடிக்க முடியாமல் புளூஸ்கை இன்வைட் முறையிலேயே இயங்கி வருகிறது. அதன்படி 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே இந்த சேவையை பயன்படுத்த முடியும். இத்தனை சவால்களை எதிர்கொண்டே மெட்டா நிறுவனத்தின் புதிய திரெட்ஸ் சமூக வலைதளம் பயன்பாட்டுக்கு வருகிறது.

Tags:    

Similar News