மீண்டும் பணிநீக்கம் - 5 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பிய மெட்டா!
- பணிநீக்கம் செய்யப்பட்ட மெட்டா ஊழியர்கள் லின்க்டுஇன் தளத்தில் பணிநீக்க நடவடிக்கை குறித்து பதிவிட்டுள்ளனர்.
- மார்க் ஜூக்கர்பர்க் 10 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர் என்று தெரிவித்து இருந்தார்.
மெட்டா நிறுவனம் இறுதிக்கட்ட பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்த முறை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், பணிநீக்கம் செய்யப்பட்ட மெட்டா ஊழியர்கள் லின்க்டுஇன் தளத்தில் பணிநீக்க நடவடிக்கை குறித்து பதிவிட்டு வருகின்றனர்.
சுமார் 5 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்று இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரியேட்டர் மார்கடிங் பிரிவில் பணியாற்றி வந்த ஊழியர் தெரிவித்துள்ளார். இவரது பதிவு மட்டுமின்றி, மேலும் பலர் வெளியிட்டு இருக்கும் பதிவுகளில் இந்த முறை பணிநீக்க நடவடிக்கையில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் இதர நிறுவனங்களில் பணியாற்றி வந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிந்து கொள்ள முடிகிறது.
கடந்த மார்ச் மாதத்தில் மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் 10 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர் என்று தெரிவித்து இருந்தார். செலவீனங்களை குறைக்கும் நோக்கில் இந்த கடின முடிவை எடுக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்த அறிவிப்பின் அங்கமாகவே தற்போதைய பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த முறை பணிநீக்க நடவடிக்கையில் விளம்பரங்கள் விற்பனை, மார்கடிங், தகவல் பரிமாற்றம் மற்றும் கூட்டணிகள் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றி வந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் 11 ஆயிரம் பேர், அதாவது 13 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக மெட்டா நிறுவனம் முதல் முறையாக அறிவித்து இருந்தது.