அறிந்து கொள்ளுங்கள்

சந்தா விலையை பாதியாக குறைத்த நெட்ஃப்ளிக்ஸ்

Published On 2023-02-24 07:12 GMT   |   Update On 2023-02-24 07:12 GMT
  • நெட்ஃப்ளிக்ஸ் ஸ்டிரீமிங் தளத்தின் சந்தா கட்டணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
  • விலை மாற்றம் மட்டுமின்றி நெட்ஃப்ளிக்ஸ் புதிய சந்தா தொகுப்புகளை அறிவித்து இருக்கிறது.

உலகளவில் முன்னணி ஒடிடி தளமாக இருக்கும் நெட்ஃப்ளிக்ஸ் தனது விலையை 50 சதவீதம் வரை குறைத்து விட்டது. உலகின் சுமார் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு வட அமெரிக்காவில் சந்தா விலையை உயர்த்திய நிலையில், தற்போது விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஊரடங்கிற்கு பிந்தைய மக்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்க்கும் விதம் மாறி இருக்கிறது. இதற்கு ஏற்ப வருவாய் மற்றும் சந்தாதாரர் வளர்ச்சியை நெட்ஃப்ளிக்ஸ் அதிகப்படுத்த பல்வேறு வழிகளை பரிசோதனை செய்து வருகிறது.

தற்போதைய விலை குறைப்பு மத்திய கிழக்கு, துணை சகாரா ஆப்ரிக்க பகுதிகள், ஐரோப்பா, லத்தின் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் அமலுக்கு வந்துள்ளது. விலை குறைப்பு மட்டுமின்றி 12 நாடுகளில் குறைந்த விலை சந்தா திட்டங்களை நெட்ஃப்ளிக்ஸ் அறிவித்து இருக்கிறது. சமீபத்தில் டிஸ்னி பிளஸ், ஹூலூ மற்றும் ஸ்லிங் டிவி உள்ளிட்டவை தங்களின் சேவை கட்டணங்களை உயர்த்திய நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் தற்போது விலையை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது.

விலை குறைப்பு மட்டுமின்றி நெட்ஃப்ளிக்ஸ் சந்தாதாரர்கள் தங்களின் லாக்-இன் விவரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோருக்கு புதிய மாதாந்திர கட்டணத்தை அறிவித்துள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் IP முகவரிகள், டிவைஸ் ஐடி மற்றும் அக்கவுண்ட் ஆக்டிவிட்டி உள்ளிட்டவைகளை டிராக் செய்து கடவுச்சொல் பகிரப்படுவதை தடுக்க முயற்சித்து வருகிறது. நெட்ஃப்ளிக்ஸ் விதிகளின் படி ஒரே கடவுச்சொல்லை பலர் பயன்படுத்தும் வசதியை அந்நிறுவனம் நீண்ட காலமாக வழங்கி வந்தது.

புதிய கட்டண முறை லத்தீன் அமெரிக்காவில் சோதனை செய்யப்பட்டு வந்ததை அடுத்து கனடா, நியூசிலாந்து, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் வெளியிடப்பட்டு வருகிறது. புதிய கட்டணம் கனடா மற்றும் நியூசிலாந்தில் 8 டாலர்கள், போர்ச்சுகலில் 4 டாலர்கள், ஸ்பெயினில் 6 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய கட்டணங்கள் அமெரிக்காவில் இந்த ஆண்டே அமலுக்கு வர இருக்கிறது.

Tags:    

Similar News