அறிந்து கொள்ளுங்கள்

நீங்களே டிசைன் பண்ணுங்க.. போன் உருவாக்க நத்திங் புது முயற்சி

Published On 2024-03-21 11:34 GMT   |   Update On 2024-03-21 11:34 GMT
  • ஸ்மார்ட்போன் தயாரிப்பில் இதுவே முதல் முறை ஆகும்.
  • திட்டத்தில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

நத்திங் நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் இதுவரை நடந்திராத முதல் முறை திட்டத்தை அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த திட்டம் தொடர்பான டீசர் வெளியானது. தற்போது இந்த திட்டம் பற்றிய விவரங்களை நத்திங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

அதன்படி நத்திங் நிறுவனம் "கம்யுனிட்டி எடிஷன் திட்டம்" என்ற பெயரில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயனர்கள் நத்திங் போன் 2a மாடலில் தாங்கள் விரும்பும் வகையில் டிசைன் செய்யலாம். இந்த திட்டத்தில் நத்திங் கம்யுனிட்டி மற்றும் நத்திங் குழு இணைந்து செயல்படும் என்று நத்திங் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கார்ல் பெய் தெரிவித்துள்ளார்.

 


ஸ்மார்ட்போன் தயாரிப்பில் கம்யுனிட்டியை ஈடுபட வைப்பது சந்தையில் இதுவே முதல் முறை ஆகும். முதற்கட்டமாக ஸ்மார்ட்போன், அதன்பிறகு ஒ.எஸ். உள்ளிட்டவைகளை டிசைன் செய்வதிலும் கம்யுனிட்டியை ஈடுபட வைக்க நத்திங் திட்டமிட்டுள்ளது. புதிய கம்யுனிட்டி எடிஷன் திட்டத்தில் பயனர்கள் டிசைன், வால்பேப்பர் மற்றும் பேக்கேஜ் செய்வது தொடர்பான யோசனைகளை நத்திங் நிறுவனத்திடம் தெரிவிக்க முடியும்.

இந்த திட்டத்தில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ள முடியும். விருப்பமுள்ளவர்கள் நத்திங் போன் 2a புதிய வேரியண்ட் தொடர்பான யோசனைகளை நத்திங் கம்யுனிட்டி தளத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் விசேஷ வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த திட்டம் ஆறு மாத காலத்திற்கு செயல்பாட்டில் இருக்கும். இதில் நான்கு நிலைகள் உள்ளன.

இந்த திட்டத்தில் முதல் நிலை- ஹார்டுவேர் டிசைன் சார்ந்தது ஆகும். பயனர்கள் புதிய ஸ்மார்ட்போனின் ஹார்டுவேர் தொடர்பான யோசனைகளை மார்ச் மாதத்திற்குள் சமர்பிக்க வேண்டும். இதைத் தொடர்ந்த மே மாத வாக்கில் வால்பேப்பர் டிசைன் பற்றிய யோசனைகளையும், ஜூன் மாதத்திற்குள் பேக்கேஜ் டிசைன் தொடர்பான யோசனைகளையும், விளம்பரம் தொடர்பான யோசனைகளை ஜூலை மாதத்திற்குள் சமர்பிக்க வேண்டும்.

 

பயனர்கள் விரும்பும் வகையில், அவர்களது யோசனைகள் தெளிவாக புரியும்படி எந்த வடிவில் வேண்டுமானாலும் பதிவேற்றம் செய்யலாம் என நத்திங் தெரிவித்துள்ளது. பயனர்கள் சமர்பிக்கும் யோசனைகள் தேர்வாகும் படச்த்தில் அவை கம்யுனிட்டி எடிஷன் திட்ட வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

யோசனைகளை சமர்பிப்பதற்கான அவகாசம் நிறைவு பெற்றதும், யோசனைகள் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படும். வாக்கெடுப்பிலும் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். சமர்பிக்கப்பட்ட யோசனைகள் அனைத்தையும், இந்த திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக குழு மதிப்பீடு செய்து ஒவ்வொரு நிலையிலும் வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவர்.

நத்திங் கம்யுனிட்டி எடிஷன் திட்டம் ஆறு மாதங்கள் நடைபெறும். இந்த திட்டத்தில் நான்கு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒரு புதிய சாதனம் உருவாக்கப்பட இருக்கிறது.

Tags:    

Similar News