உடல் ஆரோக்கியம் மிக முக்கியம் - கேலக்ஸி ரிங்-ஐ அறிமுகம் செய்த சாம்சங்
- 2024 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் அறிவித்தது.
- சவுகரியமாக அணிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் பயனர்கள் தங்களின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் வகையில் உருவாக்கி இருக்கும் அதிநவீன தொழில்நுட்பம் பற்றிய விவரங்களை 2024 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் அறிவித்தது.
அதன்படி தனது கேலக்ஸி ரிங் சாதனத்தை அறிமுகம் செய்து, பயனர்களின் உடல்நலம் மற்றும் சுகாதாரம் தொடர்பாக சாம்சங் மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்தும் அறிவித்தது. புதிய கேலக்ஸி ரிங் 24 மணி நேரம் ஒருவர் மிகவும் சவுகரியமாக அணிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
கேலக்ஸி ரிங் சாதனத்தை கொண்டு பயனர்கள் தங்களது உடல் ஆரோக்கியம் பற்றிய விவரங்களை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். உடல்நலம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சாம்சங் நிறுவனம் தனது பல்வேறு சாதனங்களிலும் கேலக்ஸி ஏ.ஐ. அனுபவத்தை புகுத்த திட்டமிட்டு வருகிறது.
இதன் அங்கமாகவே கேலக்ஸி ரிங் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. வீட்டிற்குள் ஒருவருக்கு தனித்துவம் மிக்க மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய தீர்வுகளை வழங்கும் வகையில் கேலக்ஸி ரிங் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய சாதனம் அறிமுகம் செய்ததோடு, உடல்நலம் மற்றும் சுகாதாரம் தொடர்பான சேவைகளை சாம்சங் ஹெல்த்-இல் இணைக்க சாம்சங் திட்டமிட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கேலக்ஸி ரிங் சாதனம் அடுத்து நடைபெறும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டு, பிறகு விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.
முன்னதாக நடைபெற்ற கேலக்ஸி அன்பேக்டு நிகழ்ச்சியில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ரிங் சாதனத்தின் டீசரை வெளியிட்டு, விரைவில் இது பற்றிய விவரங்களை வழங்குவதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.