நச்சுனு ஸ்லிம் டிசைன் கொண்ட புது பி.எஸ். 5 அறிமுகம்.. விலை எவ்வளவு தெரியுமா?
- புதிய பிளே ஸ்டேஷன் 5 பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது.
- ஏற்கனவே விற்பனை செய்யப்படும் பி.எஸ்.5 கன்சோலை விட மெல்லியதாக இருக்கிறது.
சோனி நிறுவனம் முற்றிலும் புதிய பிளே ஸ்டேஷன் 5 சாதனத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 1 டி.பி. வரை பில்ட்-இன் ஸ்டோரேஜ் மற்றும் கழற்றக்கூடிய டிஸ்க் டிரைவ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த சாதனம் பி.எஸ். 5 ஸ்லிம் என்று அழைக்கப்படுகிறது.
இது ஏற்கனவே விற்பனை செய்யப்படும் பி.எஸ்.5 கன்சோலை விட மெல்லியதாக இருக்கிறது. கேமர்களின் மாறி வரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், புதிய பிளே ஸ்டேஷன் 5 பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்டு இருப்பதாக சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.
என்ன ஸ்பெஷல்?
புதிய பி.எஸ். 5 ஸ்லிம் அதன் முந்தைய மாடலை விட 30 சதவீதம் சிறியதாகவும், 24 சதவீதம் வரை எடை குறைவாகவும் இருக்கிறது. டிஸ்க் டிரைவை பொருத்துவதற்கு சோனி நிறுவனம் இதன் பக்கவாட்டில் இடம் கொடுத்துள்ளது. இதனை விரும்பாதவர்கள், அதனை கழற்றிக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. இதனை கழற்றினால், சைடு பேனலை பொருத்திக் கொள்ள வேண்டும்.
பி.எஸ். 5 டிஜிட்டல் எடிஷன் வாங்குவோர், எதிர்காலத்தில் புளூ-ரே டிஸ்க் டிரைவை மட்டும் தனியாக வாங்கிக் கொள்ள முடியும். புதிய மாடலின் ஒவ்வொரு பக்கத்திலும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட்கள் வழங்கப்படுகின்றன.
புதிய பி.எஸ். 5 ஸ்லிம் (டிரைவ் உடன்) மாடலின் விலை 499.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 41 ஆயிரத்து 600 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பி.எஸ். 5 டிஜிட்டல் எடிஷன் விலை 449.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 37 ஆயிரத்து 440 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அமெரிக்க சந்தைக்கான விலை ஆகும். அமெரிக்காவில் இதன் விற்பனை அடுத்த மாதம் துவங்குகிறது. இதைத் தொடர்ந்து உலகின் மற்ற நாடுகளிலும் இதன் விற்பனை துவங்க இருக்கிறது.