ஓசூரில் ஐபோன் உற்பத்தி.. ஆப்பிள் டார்கெட்.. கியரை மாற்றும் டாடா குழுமம்..
- டாடா நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை உற்பத்தி செய்தது.
- ஓசூரில் உள்ள உற்பத்தி ஆலை 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
விஸ்ட்ரன் ஐபோன் உற்பத்தி ஆலையை டாடா குழுமம் முழுமையாக கையகப்படுத்தி, ஐபோன்களை உற்பத்தி செய்யும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை பெற்றது. முன்னதாக டாடா நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை உற்பத்தி செய்து கொடுத்தது.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி டாடா நிறுவனம் ஓசூரில் உள்ள ஆலையில் உற்பத்தியை இருமடங்கு அதிகப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஐபோன் உற்பத்திக்காக ஆப்பிள் நிறுவனம் டாடா குழுமத்தை அதிகளவு நம்புவதாக தெரிகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் யூனிட்கள் சர்வதேச சந்தையிலும் ஏற்றுமதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது ஓசூரில் உள்ள உற்பத்தி ஆலை 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு, அதில் 15 ஆயிரம் பேர் வரை பணியாற்றி வருகின்றனர்.
முதற்கட்டமாக ஐபோன்களின் குறிப்பிட்ட சில பாகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த பாகங்கள் ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரன் ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து வினியோகம் செய்யப்பட உள்ளன. அடுத்த 12 முதல் 18 மாதங்களில் ஓசூர் ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டு, உற்பத்தி தற்போது இருப்பதை விட இருமடங்கு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
இதன் மூலம் விரிவாக்கம் செய்யப்பட்ட ஆலையில் 28 ஆயிரம் பேர் வரை பணியாற்ற முடியும். இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகப்படுத்துவது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் டாடா குழுமத்திற்கு இலக்கு நிர்ணயித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.