வாட்ஸ்அப் மட்டும் போதும்- வேற ஆப் பயன்படுத்துவோரிடமும் சாட் செய்யலாம் - விரைவில் புது வசதி
- வாட்ஸ்அப்-இல் ஒருங்கிணைந்து வேலை செய்ய அனுமதிக்கும்.
- வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் அம்சம் இடம்பெற்றுள்ளது.
வாட்ஸ்அப் செயலியில் மூன்றாம் தரப்பு சாட்களுக்கான வசதி விரைவில் வழங்கப்படும் என தெரிகிறது. ஐரோப்பிய யூனியனின் டிஜிட்டல் மார்கெட்ஸ் விதியை ஏற்கும் வகையில் இந்த வசதி வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் மூன்றாம் தரப்பு செயலிகள் வாட்ஸ்அப்-இல் ஒருங்கிணைந்து வேலை செய்ய அனுமதிக்கும்.
புதிய வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டா வெர்ஷனில் இதற்கான வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இதே அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டா 24.2.10.72 வெர்ஷனில் இந்த அம்சம் இடம்பெற்று இருக்கிறது. இதனை wabetainfo கண்டறிந்து தெரிவித்து இருக்கிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டு இருக்கும் ஸ்கிரீன்ஷாட்களில் "Third-Party Chats" (மூன்றாம் தரப்பு சாட்கள்) பெயரில் தனி ஃபோல்டர் இடம்பெற்று இருக்கிறது. இந்த ஃபோல்டரில் மற்ற செயலிகளின் சாட்களை பார்க்க முடியும் என்று தெரிகிறது. இந்த அம்சம் எவ்வாறு இயங்கும் என்பது பற்றி அதிக தகவல்கள் இல்லை. மேலும், இதில் எந்தெந்த செயலிகள் இயங்கும் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்த அம்சம் வழங்கப்பட்டதும், வாட்ஸ்அப் பயனர்கள் மற்ற குறுந்தகவல் செயலிகளை பயன்படுத்துவோரிடமும் சாட் செய்ய அனுமதிக்கும். வாட்ஸ்அப்-இல் மற்ற கான்டாக்ட்களுக்கு சாட் செய்வதை போன்றே, இதர செயலிகளை பயன்படுத்துவோரிடமும் சாட் செய்ய முடியும்.
புதிய அம்சம் பற்றி அதிக தகவல்கள் இடம்பெறவில்லை. எனினும், வாட்ஸ்அப் இதனை ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். வெர்ஷன்களில் வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவது மட்டும் தற்போதைக்கு உறுதியாகி இருக்கிறது.