டி20 உலக கோப்பை பயணம்: ரோகித், டிராவிட் குறித்து மனம் திறந்த ஷிவம் துபே
- அதிரடியாக ஆடவேண்டும் என்ற கேப்டன் ரோகித் சர்மாவின் அணுகுமுறை வெற்றிக்கு முக்கிய காரணமானது.
- உலகக் கோப்பை பயணம் நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது என ஷிவம் துபே கூறியுள்ளார்.
புதுடெல்லி:
டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. அதிரடியாக ஆடவேண்டும் என்ற கேப்டன் ரோகித் சர்மாவின் அணுகுமுறை வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஜஸ்ப்ரித் பும்ரா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல் என அனைவரும் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.
இதற்கிடையே, டி20 உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்பட்ட ஷிவம் துபே, ஆரம்ப கட்டத்தில் தடுமாற்றமாகவே செயல்பட்டார். இதனால் அவரை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை கொண்டு வாருங்கள் என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், இறுதிப்போட்டியில் களமிறங்கிய அவர் ஒரு சிக்சர், 3 பவுண்டரியுடன் 16 பந்தில் 27 ரன்களை குவித்தார்.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை பயணம் தமக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது என சிவம் துபே கூறியுள்ளார். கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கொடுத்த ஆதரவினாலேயே இறுதிப்போட்டியில் அதிரடியாக ஆடியதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஷிவம் துபே தனியார் இணைய தளத்தில் பேசியதாவது:
டி20 உலகக் கோப்பை பயணம் எனக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தது. இறுதிப்போட்டி மிக முக்கிய தருணமாக அமைந்தது. அன்றைய நாளில் நானும் அணியுடன் சேர்ந்து வெற்றியில் பங்காற்றியதில் மகிழ்ச்சியடைகிறேன்.
உலகக் கோப்பையில் விளையாடிய ஒவ்வொரு போட்டியும் எனக்கு பாடமாகும். பயிற்சியாளர்கள், சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு என்னை உற்சாகப்படுத்தியது.
எனக்கு அசைக்க முடியாத, நம்பமுடியாத ஆதரவை கொடுத்த கேப்டன் மற்றும் பயிற்சியாளர் நேர்மறையாக இருந்து கடினமாக உழைக்க ஊக்குவித்தனர். எனது திறமை மீது நம்பிக்கை வைத்த அவர்களின் வழிகாட்டுதல் என்னை நம்புவதற்கு உதவியது.
இந்த அனுபவம் வருங்காலத்தில் அணியின் வெற்றிக்காக என்னை இன்னும் வலுவாக மேம்படுத்த உதவுமென்று நம்புகிறேன் என தெரிவித்தார்.