கிரிக்கெட் (Cricket)

திருப்பூர் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய கோவை லைகா கிங்ஸ்

Published On 2024-07-31 02:31 GMT   |   Update On 2024-07-31 02:31 GMT
  • அமித் சாத்விக், துஷார் ரஹேஜா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 105 ரன்களை சேர்த்தது.
  • கோவை அணிக்கு சாய் சுதர்சன் 56 பந்துகளில் 123 ரன்களை விளாசினார்.

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் முதலாவது குவாலிபையர் போட்டி திண்டுக்கல்லில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த போட்டியில் தொடரின் புள்ளிகள் பட்டியலில் முதலத் இரண்டு இடங்களை பிடித்த லைகா கோவை கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

திருப்பூர் அணிக்கு துவக்க வீரர்களான அமித் சாத்விக், துஷார் ரஹேஜா ஜோடி அபாரமாக ஆடி, முதல் விக்கெட்டுக்கு 105 ரன்களை சேர்த்தது. இதில் அமித் (67), துஷார் (55) ரன்களை எடுத்த நிலையில் அவுட் ஆகினர். அசுத்து வந்த பாலசந்தர் அனிருத் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 200 ரன்களை குவித்தது. முகமது அலி 45 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். கோவை சார்பில் ஷாருக் கான் மற்றும் ஜதாவத் சுப்ரமணியன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

201 எனும் கடின இலக்கை துரத்திய கோவை அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் ஜிவி விக்னேஷ் ரன் ஏதும் எடுக்காமலும், சுஜய் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சாய் சுதர்சன் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரை தொடர்ந்து வந்த சுரேஷ் குமார் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பிறகு சாய் சுதர்சன் மற்றும் முகிலேஷ் ஜோடி இணைந்து திருப்பூர் அணியின் பந்துவீச்சை பதம் பார்க்க ஆரம்பித்தது. சாய் சுதர்சன் 56 பந்துகளில் 123 ரன்களை விளாச, முகிலேஷ் 31 பந்துகளில் 48 ரன்களை எடுத்தார். இதனால் கோவை அணி 185 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 201 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கோவை லைகா கிங்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இறுதிப் போட்டி ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

Tags:    

Similar News