search icon
என் மலர்tooltip icon

    இஸ்ரேல்

    • இஸ்ரேல் அரசு காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
    • காசாவில் இந்தியர்கள் சிக்கி தவித்து வருகிறார்கள்.

    பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது திடீரென சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்த இஸ்ரேல் அரசு காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    இந்த போரால் இஸ்ரேல் மற்றும் காசாவில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி தவித்து வருகிறார்கள். அவர்களை அங்கிருந்து பத்திரமாக மீட்க மத்திய அரசு களத்தில் இறங்கி இருக்கிறது. இதற்காக 'ஆபரேஷன் அஜய்' என்ற பெயரில் அதிரடி மீட்பு நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்து உள்ளது. அதன்படி இஸ்ரேலில் இருந்து 286 இந்தியர்கள், 18 நேபாள குடிமக்களுடன் 5வது விமானம் டெல்லி வந்தடைந்தது. அவர்களை  மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார்.

    பின்னர் அவர் கூறுகையில், "இந்தியர்கள் எங்கெல்லாம் சிக்கித் தவிக்கிறார்களோ, அவர்களை மீட்டெடுப்பதே எங்கள் முன்னுரிமை. நாங்கள் ஆபரேஷன் கங்கா மற்றும் ஆபரேஷன் காவேரியை வெற்றிகரமாக நடத்தி, இப்போது ஆபரேஷன் அஜய்யின் கீழ் நாங்கள் இஸ்ரேலில் இருந்து மக்களை அழைத்து வருகிறோம். இது ஐந்தாவது விமானம், நாங்கள் ஏற்கனவே செய்துள்ளோம். 1180 பேரை வீட்டிற்கு அழைத்து வந்தோம். வெளியேற்றத்தை தொடங்கும் முதல் நாடு நாங்கள் தான், மேலும் எங்கள் அண்டை நாடுகளை சேர்ந்தவர்களையும் அழைத்து வருகிறோம்."

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இஸ்ரேலில் பிரதமர் மோடி மிகவும் விரும்பப்படும் தலைவர்
    • பிரதமர் மோடி உடனடியாக கண்டனம் தெரிவித்தார்

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் போர் 11-வது நாளாக தொடர்கிறது.

    இந்நிலையில், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலன் (Naor Gilon) இந்தியாவின் நிலைப்பாட்டை குறித்து கருத்து தெரிவித்தார்.

    அதில் அவர் கூறியதாவது:

    இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனுக்கும் இடையே பல தசாப்தங்களாக நடைபெற்று வரும் சிக்கலை தீர்க்க இஸ்ரேல் தற்போது முயலவில்லை. இப்பொழுது புதியதாக எழுந்திருக்கும் தீவிர பிரச்சனையை தீர்க்க போராடுகிறோம். ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்தால்தான் மீண்டும் இது போன்ற தாக்குதல்கள் நடக்காது.

    இந்தியா மீது இஸ்ரேல் நாட்டு மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேலில் மிகவும் விரும்பப்படும் தலைவர். பிற நாடுகளை விட இந்தியாவின் மீதுதான் இஸ்ரேலியர்கள் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

    அக்டோபர் 7 அன்று நடைபெற்ற பயங்கர தாக்குதலுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியாவும் எங்கள் பக்கம் நின்றது. மோடி உடனடியாக கண்டனம் செய்தார். பிற நாட்டினர் உடனடியாக கண்டனம் தெரிவிக்கவில்லை; பிறகுதான் தெரிவித்தனர்.

    அமெரிக்கர்கள் எங்களுக்கு துணை நிற்கின்றனர். மேலும் அமெரிக்கர்களுக்கு இந்தியாவுடன் தற்போது வலுவான உறவு உள்ளது. நாங்கள் இந்தியாவை நம்புவதால், அவர்கள் எங்கள் பிரச்சனையில் தலையிடுவதை நாங்கள் வரவேற்கிறோம்.

    சுமார் 20 ஆயிரம் இந்தியர்கள் இஸ்ரேலில் வசிக்கின்றனர். அதில் சுமார் 1000 இந்தியர்கள் மட்டுமே இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பினார்கள்; அவர்களையும் நாங்கள் பத்திரமாக அனுப்பி வைத்தோம்.

    இவ்வாறு நவோர் கிலான் தெரிவித்தார்.

    • இஸ்ரேலின் தேசிய தடயவியல் துறையில் பெரும்பாலான உடல்கள் வைக்கப்பட்டுள்ளன
    • உயிரிழந்தவர்களின் உடல்களை யூதர்கள் முழுமையாக எரியூட்ட வேண்டும்

    கடந்த அக்டோபர் 7 சனிக்கிழமை காலை, இஸ்ரேல் நாட்டிற்குள் திடீரென நுழைந்த பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர், அங்குள்ள பொதுமக்கள் மீது பெரும்தாக்குதலை நடத்தி 1400க்கும் மேற்பட்ட பொதுமக்களை பயங்கரமான முறையில் கொன்றனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்க போவதாக கூறி பாலஸ்தீன காசா பகுதி மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களின் உடல்கள் பட்டியலிடப்பட்டு ஏராளமான ஸ்ட்ரெட்சர்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. அவற்றை அந்நாட்டின் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இஸ்ரேலின் தேசிய தடயவியல் துறையில் (National Center of Forensic Medicine) பெரும்பாலான உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலில் இது போல் உள்ள மேலும் 4 மையங்களிலும் இந்த ஆய்வு பணிகள் நடைபெறுகின்றன.

    உருக்குலைந்த உடல்களை அவர்கள் ஆய்வு செய்த பின் தாங்கள் கண்டறிந்ததாக கூறும் தகவல்கள் மூலமாக ஹமாஸ் அமைப்பினரிடம் சிக்கி உயிரிழந்தவர்களின் பரிதாப நிலை குறித்து அறிய முடிகிறது.




     


    அந்த உண்மைகள் நெஞ்சை உறைய வைப்பதாக உள்ளது.

    இது குறித்து அந்த தடயவியல் அதிகாரிகள் தெரிவித்ததாவது:

    பல டிரக்குகளில் இன்னமும் உடல்கள் கொண்டு வரப்படுகின்றன. அவற்றில் இருந்து வரும் துர்நாற்றம் மிகவும் அதிகமாக உள்ளது. பல உடல் பாகங்களை ஒன்று சேர்க்கும் மிக சோகமான மற்றும் கடினமான செயலில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.

    கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டு, ஒருவருடன் ஒருவராக கட்டப்பட்டு, கொல்லப்பட்டு, பின்னர் எரியூட்டப்பட்ட உடல்களை அடையாளம் காண்பது மிகவும் கடினமான செயல். அனைத்து உடல்களும் அடையாளம் தெரியாத அளவு எரித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. யூத நம்பிக்கையின்படி உயிரிழந்தவர்களின் உடல்கள் முழுமையாக எரியூட்டப்பட வேண்டும். ஆனால் அதை செயல்படுத்த முடியாத அளவு அவர்கள் உடல்களை எரியூட்டி கொலை செய்துள்ளனர். குழந்தைகளை தாக்குதலில் இருந்து காக்க இறுகி அணைத்தபடி பலர் உயிர் விட்டுள்ளனர்.



    பெண்கள் கடுமையான பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு பிறகு கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பல குழந்தைகளின் உடல்கள் உள்ளன. அவர்கள் மிருகத்தனமாக கொல்லப்பட்டுள்ளனர். பல உடல்களில் பத்திற்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகள் ஒரே நேரத்தில் துளைத்திருக்கின்றன. மரபணு மாதிரிகளையும், கைரேகை அடையாளங்களையும், பல்வரிசை குறிப்புகளையும் கொண்டு ஆய்வு செய்து உயிரிழந்தவர்களை அடையாளம் காண முயல்கின்றோம்.

    உயிரிழக்கும் போது அந்த மக்கள் எத்தகைய துயரங்களை அனுபவித்திருப்பார்கள் என்பதை நாங்கள் உலகினருக்கு காட்ட விரும்புகிறோம். நாங்கள் நடக்காதவற்றை கூறுவதாக உலகின் சில நாடுகள் கூறின. ஒரு சிலர் நாங்கள் நாய்களின் எலும்புகளை காட்டுவதாக குற்றம் சாட்டினார்கள். எனவே உண்மை நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறோம். இதுவரை இப்படியொரு கொடுமையை எங்கள் பணியில் நாங்கள் கண்டதில்லை.

    இவ்வாறு தடயவியல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
    • ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் காசா மீது ஏவுகணை வீசி தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

    இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டுள்ளார் என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

    ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு முக்கிய தலைவராக செயல்பட்டு வந்தவர் ஒசாமா அல் மசினி. இவர் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக்கைதிகளாக பிடித்து வரப்படுபவர்களை கையாளுதல் மற்றும் பயங்கரவாத செயலில் ஈடுபட்டு வந்தார். நேற்று நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒசாமா அல் மசினி பலியானார் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    • சுதந்திரப் போர் முடிவடையவில்லை.
    • ஹமாஸ் மீது வெற்றி பெறுவதே முக்கிய நோக்கம்" என்று தெரிவித்தார்.

    ஜெருசலேம்:

    ஹமாசுக்கு எதிராக நடைபெற்று வரும் போர், மனிதகுலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் "ஒளியின் சக்திகளுக்கும்", விலங்குகளை உள்ளடக்கிய "இருளின் சக்திகளுக்கும்" இடையேயான யுத்தம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், "75 ஆண்டுகள் கடந்தும் கூட, சுதந்திரப் போர் முடிவடையவில்லை. ஹமாஸ் மீது வெற்றி பெறுவதே முக்கிய நோக்கம்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,, "ஹமாஸை தோற்கடிக்க உலகம் ஒன்றுபட வேண்டும். இந்தப் போர் எங்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்குமான போரும் கூட. இந்தப் போரில் நாங்கள் வெற்றி பெறுவோம். ஏனெனில் இது இந்த பிராந்தியத்தில் எங்களின் இருப்பைப் பற்றியது.

    ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா பயங்கரவாதத்தின் ஒரு பகுதிதான் ஹமாஸ். இவர்கள் மத்திய கிழக்கு பகுதிகளை படுகுழியில் தள்ளுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

    இப்போது, இஸ்ரேல் யாரை எதிர்கொள்கிறது என்பதை உலகெங்கிலும் உள்ள பலர் புரிந்துகொண்டிருப்பார்கள். ஹமாஸ் நாஜிக்களின் புதிய வெர்ஷன். நாஜிக்கள் மற்றும் ஐஎஸ்ஐஎஸ்சை தோற்கடிக்க உலகம் ஒன்றுபட்டது போல, ஹமாஸை தோற்கடிக்கவும் ஒன்றுபட வேண்டும். ஈரானும், ஹிஸ்புல்லாவும் எங்களை சோதனை செய்து பார்க்க வேண்டாம். அப்படி செய்தால் இந்த முறை நீங்கள் செலுத்தும் விலை மிக அதிகமாக இருக்கும்" என்று அவர் தெரிவித்திருந்தார்.

    • இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினரின் போர் 10-வது நாளாக தீவிரமடைந்துள்ளது.
    • ஹமாஸூக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான போர் மட்டுமல்ல, இது உலகளாவிய போர் என அறிவிப்பு.

    கடந்த அக்டோபர் 7 அன்று, இஸ்ரேல் மீது நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழிக்க போவதாக கூறி பாலஸ்தீனம் முழுவதும் அவர்களை தேடி பழி வாங்கி வருகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினரின் போர் 10-வது நாளாக தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பலரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்படி, இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 41 நாடுகளை சேர்ந்தவர்கள் உயிரிழப்பு மற்றும் மாயமாகியுள்ளதாக இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதில், 105 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 103 பேர் மாயமாகியுள்ளனர் என்றும் இது ஹமாஸூக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான போர் மட்டுமல்ல, இது உலகளாவிய போர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், எந்தெந்த நாட்டை சேர்ந்தவர்கள் மாயம் மற்றும் உயிரிழப்பு என்ற தகவலையும் இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா, இலங்கை, நேபாளம், சீனா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஜெர்மனி, அமெரிக்கா, ரஷியா, தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின், தாய்லாந்து, பிரிட்டன், உக்ரைன் ஆகிய நாட்டைச் சேர்ந்தவர்கள் உயிரிழப்பு மற்றும் மாயமாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    • அக்டோபர் 7 அன்று, இஸ்ரேலில் ஹமாஸ் 1400க்கும் மேற்பட்டவர்களை கொன்றது
    • எங்கள் கவனத்தை திசை திருப்ப ஈரான் முயல்கிறது என இஸ்ரேல் கூறியுள்ளது

    லெபனான் நாட்டை மையமாக கொண்டு செயல்படும் அமைப்பு, ஹிஸ்புல்லா (Hezbollah).

    1992ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பிற்கு அந்நாட்டு அரசாங்கத்தின் ஆதரவு இருந்து வருகிறது. அந்நாட்டில் அது ஒரு அரசியல் கட்சியாகவும் தன்னை முன்னிறுத்தி கொண்டுள்ளது. இஸ்ரேலையும், அமெரிக்காவையும் தீவிரமாக எதிர்த்து வரும் இந்த அமைப்பு, மத்திய தரைகடல் பகுதியில் அந்த இரு நாடுகளின் ஆதிக்கத்தை ஒழிக்க போராடி வருகிறது.

    கடந்த அக்டோபர் 7 அன்று தன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி 1400க்கும் மேற்பட்ட மக்களை கொன்று, 150க்கும் மேற்பட்டவர்களை சிறை பிடித்து சென்ற ஹமாஸ் அமைப்பின் மீது போர் அறிவித்த இஸ்ரேல், அந்த அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதியெடுத்துள்ளது. இஸ்ரேலி ராணுவ படையினர் (IDF) பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் மீது வான்வழியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இது மட்டுமின்றி தரைவழி தாக்குதலை தொடங்க போவதாக அறிவித்திருக்கும் இஸ்ரேல், மும்முரமாக போரிட்டு வரும் வேளையில் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். அதை எதிர் கொண்டு பதில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்கள் வந்தால் எதிர் கொள்ளவும் தயார் நிலையில் உள்ளது.

    இத்தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் ரியர் அட்மிரல் (Rear Admiral) டேனியல் ஹகரி (Daniel Hagari) கருத்து தெரிவித்தார்.

    அவர் இது குறித்து தெரிவித்ததாவது:

    நாங்கள் காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போரிட்டு வருகிறோம். எங்கள் கவனத்தை திசை திருப்ப லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்பினர் எல்லையில் தொடர் துப்பாக்கி சூட்டை நடத்தி வருகின்றனர். இது ஈரான் நாட்டின் தூண்டுதலால் ஈரானின் துணையுடன் நடைபெறுகிறது.

    இவ்வாறு ரியர் அட்மிரல் குற்றம் சாட்டி பேசினார்.

    • இந்தியா தொடர்ந்து தனது நாட்டு மக்களை மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
    • குடிநீர், உணவு இல்லாமல் தவித்து கொண்டிருக்கும் காசா தெற்கு பகுதி மக்களில் 10 லட்சம் பேர் இடம் பெயர்ந்தாலும் மீதமுள்ளவர்கள் இன்னமும் அங்கேயே இருக்கிறார்கள்.

    டெல்அவிவ்:

    இஸ்ரேல், ஹமாஸ் படையினர் இடையே ஏற்பட்டுள்ள மோதல் இன்று (திங்கட்கிழமை) 10-வது நாளை எட்டி உள்ளது.

    கடந்த 7-ந்தேதி இஸ்ரேல் தெற்கு பகுதியில் திடீர் தாக்குதலை தொடங்கிய ஹமாஸ் படையினர் தொடர்ந்து நவீன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    ஹமாஸ் படையினரை முற்றிலுமாக ஒழிப்போம் என்ற சபதத்துடன் இஸ்ரேலும் பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது. ஹமாஸ் படையினர் ஆட்சி நடத்தி வரும் காசா பகுதிக்குள் தரை வழியாக நுழைந்து தாக்குதல் நடத்தவும் இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டு உள்ளது. இதற்காக காசாவின் வடக்கு பகுதியில் உள்ள 10 லட்சம் மக்கள் வெளியேற வேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் உத்தரவிட்டது.

    அந்த கெடு முடிந்த நிலையில் காசா மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகிறார்கள். அவர்கள் காசாவின் தெற்கு பகுதிக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். ஆனால் காசாவின் தெற்கு பகுதியிலும் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசுவதால் அங்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலையில் காசா பகுதி மக்கள் கடும் தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    இதையடுத்து எகிப்து நாட்டுக்குள் காசா மக்கள் சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் எகிப்து எல்லையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு உள்ளது. சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    இதற்கிடையே காசா மீது நேற்று இரவும் இஸ்ரேல் விமானங்கள் குண்டுகளை வீசின. 250 இடங்களை குறி வைத்து குண்டுகள் வீசப்பட்டதாக இன்று காலை இஸ்ரேல் ராணுவம் தகவல் வெளியிட்டது. என்றாலும் ஹமாஸ் படையினரும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    காசாவின் வடக்கு பகுதியில் இருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறி இருப்பதாக ஐ.நா. சபை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து தரை வழி தாக்குதலை தொடங்குவதற்கு நேற்று முதல் இஸ்ரேல் தயாராகி வருகிறது. தரை வழி தாக்குதலுக்காக சுமார் 4 லட்சம் வீரர்களை இஸ்ரேல் தயாராக வைத்துள்ளது.

    இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இரவு இஸ்ரேல் பிரதமருடனும், பாலஸ்தீன பிரதமருடனும் அடுத்தடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஜோ பைடன் பேசியதாக தெரிகிறது.

    இதையடுத்து அமெரிக்கா சார்பில் திடீர் எச்சரிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "போரை இரு தரப்பினரும் மேலும் நீடிக்க விடாமல் தடுப்பது பற்றி ஜோ பைடன் பேசியுள்ளார். காசா மக்களுக்கு குடிநீர், உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு இஸ்ரேல் மனிதாபிமானத்துடன் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதற்கு இரு நாடுகளும் சாதகமான பதில் அளித்துள்ளன" என்றார்.

    இந்த நிலையில் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு ஜோ பைடன் நேற்று இரவு பேட்டியளித்தார். அப்போது அவர் காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து தரைவழி தாக்குதல் பற்றி இஸ்ரேல் பிரதமர் உடனடி ஆலோசனை நடத்தினார்.

    காசாவின் தெற்கு பகுதியில் உள்ள ஹமாஸ் படை மீது தரை வழி தாக்குதல் நடத்தி பேரழிவை ஏற்படுத்த வேண்டும் என்பதில் இஸ்ரேல் தீவிரமாக உள்ளது. அமெரிக்கா, ஈரான் உள்பட பல நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ள போதிலும் ஹமாஸ் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் ராணுவம் முனைப்புடன் உள்ளது.

    இஸ்ரேல் ராணுவம் காசா மக்களுக்கு விடுத்திருந்த கெடு முடிந்த நிலையில் திட்டமிட்டபடி தரை வழி தாக்குதலை இன்று (திங்கட்கிழமை) இஸ்ரேல் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதை உறுதி செய்வது போல இன்று காசா அருகே தனது படைகளை இஸ்ரேல் மேலும் நகர்த்தியது.

    இன்று அதிகாலை முதல் காசா எல்லை அருகே நிறைய வீரர்களை இஸ்ரேல் விமானங்கள் தரைஇறக்கி வருகின்றன. எனவே எந்த நேரத்திலும் தரைவழி தாக்குதலை தொடங்கலாம் என்ற நிலை நிலவுகிறது.

    ஏற்கனவே குடிநீர், உணவு இல்லாமல் தவித்து கொண்டிருக்கும் காசா தெற்கு பகுதி மக்களில் 10 லட்சம் பேர் இடம் பெயர்ந்தாலும் மீதமுள்ளவர்கள் இன்னமும் அங்கேயே இருக்கிறார்கள். எந்த நேரத்திலும் தங்கள் மீது குண்டு வீசப்படலாம் என்று அவர்கள் கடும் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    நேற்று இரவு காசா தெற்கு பகுதியில் 250 இடங்களை குறி வைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் அழித்துள்ளன. இதில் ஹமாஸ் படையின் மூத்த கமாண்டர் ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

    இதற்கிடையே இன்று காலை 9 மணிக்கு எகிப்து தனது எல்லையை கடந்தது. இதனால் காசா மக்கள் அந்த வழியாக அகதிகளாக வெளியேற தொடங்கி உள்ளனர். அவர்களுக்கு உதவ ஐ.நா. சபை குழுக்களை அனுப்பி உள்ளது.

    மேலும் பிணை கைதிகளாக இருப்பவர்களை ஹமாஸ் படையினர் விடுவிக்க வேண்டும் என்றும் ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த நிலையில் இந்தியா தொடர்ந்து தனது நாட்டு மக்களை மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இன்று இந்தியாவின் 5-வது விமானம் டெல்அவ்வில் இருந்து புறப்பட்டு உள்ளது.

    இன்று மதியம் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், "காசாவின் அனைத்து முனைகளிலும் இஸ்ரேல் தரைப்படை தயார் நிலையில் உள்ளது. மிகப்பெரிய போரை நடத்தப் போகிறோம்" என்று அறிவித்துள்ளது.

    இதனால் இஸ்ரேல் ராணுவம் இன்று இரவு மிகப்பெரிய தாக்குதலை நடத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இஸ்ரேல் மும்முனை தாக்குதல் நடத்தினால் காசாவில் உயிரிழப்பு மிகப்பெரிய அளவில் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.

    • பாதுகாப்பு அதிகாரி சுடும் காட்சிகளும், ஹமாஸ் படையை சேர்ந்தவர் சுருண்டு விழுந்து மரணம் அடையும் காட்சிகளும் வீடியோவில் முழுமையாக பதிவாகி உள்ளது.
    • முழு வீடியோவும் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    டெல்அவிவ்:

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஹமாஸ் படையினர் முதலில் இஸ்ரேலில் ஊடுருவி தாக்குதல் நடத்தினார்கள்.

    இந்த தாக்குதலில் ஈடுபட்ட போது ஹமாஸ் படையை சேர்ந்தவரின் கேமரா அவரது மரணத்தையே வீடியோ எடுத்தது. அந்த வீடியோவில் ஹமாஸ் படையை சேர்ந்தவர் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகள் அவர் வைத்திருந்த கேமராவிலேயே பதிவாகியுள்ளது.

    இந்த வீடியோ கடந்த 7-ந்தேதி எடுக்கப்பட்டு உள்ளது. ஹமாஸ் படையை சேர்ந்த அவர் தெற்கு இஸ்ரேலில் உள்ள கிப்புட்ஸ் சூர்பா பகுதியில் உடையில் செல்போன் கேமராவை பொருத்தியபடி தாக்குதலில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். அப்போது அந்த கேமரா இஸ்ரேலியர்கள் மீதான தாக்குதலை படம் பிடித்தது.

    அவரது முன்னால் ஹமாஸ் படையை சேர்ந்த மற்றொருவர் தாக்குதல் நடத்தியபடி முன்னேறி சென்று கொண்டிருந்தார். இந்த காட்சிகளும் வீடியோவில் பதிவானது. தாக்குதல் காட்சிகளை அவர் படம் பிடித்துக்கொண்டிருந்த போது திடீரென்று துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்கிறது.

    அப்போது வீடியோ எடுத்துக்கொண்டிருந்த ஹமாஸ் படையை சேர்ந்த அவர் திடீரென்று வலியால் துடித்தபடி தரையில் சுருண்டு விழுந்தார். அந்த நேரத்தில் மீண்டும் மீண்டும் துப்பாக்கியால் சுடும் சத்தங்கள் கேட்டன. அவரை இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். அந்த அதிகாரி சுடும் காட்சிகளும், ஹமாஸ் படையை சேர்ந்தவர் சுருண்டு விழுந்து மரணம் அடையும் காட்சிகளும் வீடியோவில் முழுமையாக பதிவாகி உள்ளது. இந்த வீடியோவை இஸ்ரேலிய பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.

    இந்த முழு வீடியோவும் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    • பிரதமர் நேதன்யாகு காசாவில் ராணுவ முகாமிற்கு நேரில் சென்று இஸ்ரேல் ராணுவத்தினரை சந்தித்தார்.
    • காசா மீது தரைவழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் ராணுவம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல்மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

    இதற்கிடையே காசா மீது தரைவழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது.

    இந்நிலையில், பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஹமாஸ் தாக்குதலில் மாயமானோர் மற்றும் ஹமாஸ் அமைப்பினரால் சிறைபிடிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினார்.

    • இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் அதிகரித்து வருகிறது.
    • காசா பகுதிக்கான குடிநீர், உணவு பொருட்கள், மின்சாரம், எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் ராணுவம் நிறுத்திவிட்டது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல்- ஹமாஸ் போர் கடந்த 7ம் தேதி தொடங்கியது. இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் அதிகரித்து வருகிறது. மேலும், இந்த போர் தாக்குதலால் மக்கள் தங்களின் வீடு, உடமைகளைவிட்டு வெளியேறி வருகின்றனர்.

    இதனிடையே போர் தொடங்கிய உடன் காசா பகுதிக்கான குடிநீர், உணவு பொருட்கள், மின்சாரம், எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் ராணுவம் நிறுத்திவிட்டது. இதன்காரணமாக காசா பகுதி மக்கள் குடிநீர், உணவு இன்றி பரிதவித்து வந்தனர்.

    இந்நிலையில் தெற்கு காசா பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் பிரதமர் இந்த முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக காசாவுக்கான நீர் விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்திய இஸ்ரேலின் முடிவுக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

    • இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ராக்கெட் தாக்குதல் குறித்து சைரன் ஒலிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
    • லெபனான் உடனான வடக்கு எல்லையில் இருந்து 4 கி.மீ., வரையிலான பகுதியை இஸ்ரேல் சீல் வைத்துள்ளது.

    இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான மோதல் இன்று 9வது நாளாக நீடித்து வருகிறது.

    கடந்த 7-ம்தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் இஸ்ரேலுக்குள் ஊடுருவியும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். பலரை பிணை கைதிகளாக பிடித்து சென்றனர்.

    இதையடுத்து போர் பிரகடனத்தை அறிவித்த இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசாமுனை மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. இரு தரப்பிலும் இதுவரை அப்பாவி பொதுமக்கள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.

    ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்ற பிணை கைதிகளை இஸ்ரேல் ராணுவம் மீட்டது. இதையடுத்து போர் தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் ராணுவம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. எல்லையில் 3 லட்சம் வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ராக்கெட் தாக்குதல் குறித்து சைரன் ஒலிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    காசா பகுதியில் இருந்து இஸ்ரேலின் தெற்கு மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா, இஸ்ரேலிய வடக்கு எல்லைக் கிராமத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

    லெபனான் உடனான வடக்கு எல்லையில் இருந்து 4 கி.மீ., வரையிலான பகுதியை இஸ்ரேல் சீல் வைத்துள்ளது.

    ×