search icon
என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • பொதுமக்களின் ஆவணங்கள், சான்றிதழ்கள் இழந்து வேலையிழந்து தவித்து வருகிறார்கள்.
    • பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்பதில் அரசு சார்பில் நிவாரண பணிகள் போதுமானதாக இல்லை.

    அரூர்:

    தருமபுரி மாவட்ட இந்திய குடியரசு கட்சியின் சார்பில் அரூரில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கட்சியின் தலைவர் தமிழரசன் அரூருக்கு வருகை தந்தார்.

    முன்னதாக செ.கு.தமிழரசன் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மிச்சாங் புயல் காரணமாக பலத்த மழை பெய்தது. இதில் கடந்த 10 நாட்களுக்கு மேல் சென்னை மற்றும் அதன் ஒட்டிய பகுதிகளிலும் கடலூர் தொகுதிகளிலும் எதிர்பாராத அளவிற்கு கடும் மழை புயல் தாக்கம் ஏற்பட்டுள்ளன. இதில் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

    வீடுகளில் தண்ணீர் புகுந்து, பொதுமக்களின் ஆவணங்கள், சான்றிதழ்கள் இழந்து வேலையிழந்து தவித்து வருகிறார்கள்.


    பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்பதில் அரசு சார்பில் நிவாரண பணிகள் போதுமானதாக இல்லை. எனவே, நிவாரண பணிகளை உடனடியாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ஒவ்வொரு ரேசன் கார்டு தாரர்களுக்கும் தலா ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என இந்திய குடியரசு கட்சி வலியுறுத்துகிறது.

    இனிவரும் காலங்களிலே இப்படிப்பட்ட அவலங்கள் ஏற்படாமல் இருக்க நிரந்தர தீர்வுகளை காண நல்லத்திட்டங்களை தமிழக அரசு வழங்க வேண்டும்.

    திருமாவளவன் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது அரசு வழக்கறிஞர் பணிக்கு உள்இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு உயர்நீதிமன்றதால் தள்ளுபடி செய்யப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து இப்போது இருக்கிற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசிலும் இது நடக்கவில்லை. கேட்டால் இதற்கு சட்டத்தில் இடமில்லை என்கிறார்கள். இப்போது மாநில அரசு வழங்குகிற இட ஒதுக்கீடு 18 சதவீதம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் 1 சதவீதம் பழங்குடியின மக்களுக்கு 1969 முதல் வழங்கப்படுகிறது.

    தற்போது அரை நூற்றாண்டு கடந்து விட்ட நிலையில் மக்கள் தொகை கூடிவிட்டது, ஆகையால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 19சதவீதமும், குறைந்தபட்சம் 22 சதவீதமும், மலைவாழ் மக்களுக்கு 1 சதவீதம் குறைந்தபட்சம் 2சதவீதம் ஆக இட ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும்.

    தி.மு.க. அரசுக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான உண்மையான சமூக கல்வி பொருளாதார இந்த வளர்ச்சியில் அக்கறை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேசத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் பேசவில்லை.
    • மோடியைப் பற்றி பேசினால் கூட அனுமதிக்கிறார்கள் அதானி பற்றி பேசினால் அனுமதிப்பதில்லை.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி வாக்கு சாவடி முகவர் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி கலந்து கொண்டு பேசியதாவது:-

    காஷ்மீர் மாநிலத்தை 370-வது அரசியல் திருத்த நீக்கத்தை பற்றியும், அம்மாநிலத்தை மூன்றாகப் பிரித்தது பற்றியும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது மோடி ராஜினாமா செய்ய வேண்டிய செயல். ஆனால் அவர்கள் அதை செய்யமாட்டார்கள்.

    காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அரியலூரில் ரெயில் கவிழ்ந்ததற்கு ரெயில்வே அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். உச்ச நீதிமன்றம் இவ்வளவு பெரிய தாக்கத்தை தொடுத்தும் பாரதிய ஜனதா வாய் திறக்கவில்லை காரணம் அவர்கள் சர்வதிகாரிகள். எல்லா அமைப்புகளையும் அழித்து வருகிறார்கள். மம்தா பானர்ஜி கட்சியின் ஒரு எம்பியை நீக்கம் செய்திருக்கிறார்கள் காரணம் அதானி பற்றியும் அதானி கம்பெனியை பற்றியும் கேள்வி எழுப்பியது காரணம். அவர் ஒன்றும் தேச துரோக குற்றம் செய்யவில்லை. தேசத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் பேசவில்லை. அதானியை பற்றி பேசினாலே பாராளுமன்றத்தில் இருந்து வெளியே அனுப்பி விடுவோம் என்ற நிலைக்கு மோடி சென்று இருக்கிறார். மோடியைப் பற்றி பேசினால் கூட அனுமதிக்கிறார்கள் அதானி பற்றி பேசினால் அனுமதிப்பதில்லை.


    மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததை நாங்கள் பின்னடைவாக கருதவில்லை. பாரதிய ஜனதா கட்சியை விட காங்கிரஸ் அதிக வாக்குகள் வாங்கியுள்ளது. 40% அதிக அளவு வாங்கி இருக்கிறோம் வாக்கு எண்ணிக்கையிலும் எண்ணிக்கை அதிகம்.

    மக்கள் மனதில் ராகுல் காந்தி இருக்கிறார் காங்கிரஸ் கட்சி இருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று. 2002ல் இதே போன்ற நிகழ்வு அந்த மூன்று மாநிலங்களிலும் நிகழ்ந்தது. அப்போது சத்தீஸ்கர். ராஜஸ்தான். மத்திய பிரதேசம். நடந்த தேர்தலில் காங்கிரஸ் மூன்று மாநிலங்களிலும் தோல்வி அடைந்தது. 2004 பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை விட மூன்று மாநிலங்களில் அதிக பாராளுமன்ற உறுப்பினர்களை வாக்குகள் பெற்று வெற்றி பெற்றோம். பாராளுமன்றத்தை கைப்பற்றினோம்.

    தமிழகத்தை பொறுத்தவரை மழை வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு சரியாக கையாண்டு உள்ளது. 17 மணி நேரம் புயல் சென்னை நகரத்திற்கு மேலே சுழன்று வந்திருக்கிறது. மேக வெடிப்பு போல வெடித்து மழை நீர் பொழிந்து இருக்கிறது எந்த ஒரு நிர்வாகத்தாலும் அவ்வளவு பெரிய தண்ணீரை உடனடியாக வெளியேற்ற முடியாது ஆனாலும் அரசாங்கம் நன்றாக செயல்பட்டு இருக்கிறது. அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை அவர்கள் தங்களால் இயன்ற காரியத்தை செய்திருக்கிறார்கள். விமர்சிப்பவர்கள் யார் என்று சொன்னால் அரசியல் காரணங்களுக்காக விமர்சிப்பவர்கள் தான் இயற்கை பேரிடரை எந்த ஒரு நிர்வாகமும் உடனடியாக சரி செய்ய முடியாது இது மனித குற்றம் அல்ல இயற்கை செய்திருக்கின்ற பெரிய செயல்.

    எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக மழை தண்ணீரை வெளியேற்றி இருக்கிறார்கள். 6000 ரூபாய் நிதி உதவி வழங்க இருப்பது பாராட்டுக்குரியது. மனிதாபிமான நோக்கத்தோடு தமிழ்நாடு முதலமைச்சர் செய்திருக்கிறார். அதனை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பாராட்டுகிறது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இன்றளவும் கொங்கு மண்டலத்தில் தொழில் வளம் சிறந்து விளங்குகிறது.
    • வேளாண் குடும்பத்தில் பிறந்த நான் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து உயர்ந்துள்ளேன்.

    அரூர்:

    தருமபுரி மாவட்டம், அரூரில் கொங்கு வேளாள கவுண்டர்கள் திருமண மண்டப வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள தீரன் சின்னமலை சிலை திறப்பு விழா நடைபெற்றது.

    இந்த விழாவில், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டப் பேரவைத் தொகுதியின் உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமை வகித்தார்.

    தருமபுரி மாவட்ட கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்க செயலர் எம்.கே.சேகர் வரவேற்றார். தீரன் சின்னமலை முழு திருவுருவ வெண்கல சிலையை உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் கவர்னருமான பி.சதாசிவம் திறந்து வைத்து அவர் பேசியதாவது:-

    கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து போரிட்டவர் தீரன் சின்னமலை. தீரன் சின்னமலையின் வரலாற்று குறிப்புகள் வெளிநாட்டினர் பலர் தங்களின் பயண குறிப்புகளில் குறிப்பிட்டு உள்ளனர். கொங்கு நாட்டின் குறுநில மன்னராக இருந்த தீரன் சின்னமலை ஆட்சியில் அமைதியான வாழ்வும், தொழில், மருத்துவம், வேளாண் பணிகளில் சிறந்து விளங்கியுள்ளது. இன்றளவும் கொங்கு மண்டலத்தில் தொழில் வளம் சிறந்து விளங்குகிறது.

    வட மாநில மக்கள் கூட கொங்கு மண்டலத்தை நோக்கியே வருகை தருகின்றனர்.கொங்கு மண்ணில் ஆதிக்க மனப்பான்மை எப்போதும் இல்லை. உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பேதமும் எப்போதும் இல்லை. வேளாண் குடும்பத்தில் பிறந்த நான் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து உயர்ந்துள்ளேன்.

    எனவே, கிராமப் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் நன்றாக படித்து, வேலை வாய்ப்பு களை பெற்று சமுதாயத்துக்கு சேவை செய்ய வேண்டும் .

    இவ்வாறு அவர் பேசினார்.

    சிலை திறப்பு விழா மலரை நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.சின்ராஜ் வெளியிட முதல் பிரதியை கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவையின் மாநிலத் தலைவர் ஆர்.தேவ ராசன் பெற்றுக்கொண்டார்.

    விழா தொகுப்பினை தருமபுரி மாவட்ட கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்கத் தலைவர் வே.சந்திர சேகரன், பொருளர் எஸ்.எம்.தங்கராசு ஆகியோர் மேற்கொண்டனர்.

    இந்த விழாவில் கர்நாடகா மாநில உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறை ஆணையர் ஆர். இராமச்சந்திரன், தமிழ்நாடு சட்ட மேலவையின் முன்னாள் உறுப்பினரும், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலருமான செ.முத்துசாமி, ஈரோடு வேளாளர் கல்வி அறக்கட்டளையின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், பெருந்துறை விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எல்.சென்னியப்பன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலர் ஜி.அசோகன், தமிழ்நாடுகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக, காலை 9.30 மணியவில் முளைப்பாலிகை ஊர்வலத்தை கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் உ.தனியரசு தொடக்கி வைத்தார்.

    இந்த ஊர்வலத்தில் வழக்கறிஞர் ஜீ.வி. பிரகாசம் சர்ச்சில், நாகராசன், திருப்பதி கவுண்டர், பொன்.வெங்கடாசலம்சின்னசாமி, தமிழரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஊர்வலத்தில் நையாண்டி மேள நிகழ்ச்சியும், கேரளா செண்டை மேள நிகழ்சி நடைபெற்றது.

    சிலை திறப்பு விழாவில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு பகுதிகளில் இருந்து வந்திருந்த பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், விவசாயிகள், வணிகர்கள், தொழிலா ளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

    • கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவது தொடர்ந்து குறைக்கப்பட்டுள்ளது.
    • நீர்வரத்தால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள சீனி பால்ஸ், ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றன.

    ஒகேனக்கல்:

    தமிழக கர்நாடகா காவிரி எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது.

    கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றின் வழியாக உபரிநீர் வினாடிக்கு 883 கன அடியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தற்போது கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1195 கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 583 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளன.

    அதேபால கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 243 கன அடியாக உள்ள நிலையில், நீர்வெளியேற்றம் என்பது வினாடிக்கு 300 கன அடியாக உள்ளது.

    கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவது தொடர்ந்து குறைக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி எல்லைப்பகுதிகளில் உள்ள ஒரு சில இடங்களில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு நேற்று வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இன்று காலையும் ஒகேனக்கல்லுக்கு அதே அளவில் நீர்வரத்து நீடித்து வருகிறது.

    இந்த நீர்வரத்தால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள சீனி பால்ஸ், ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றன.

    • வீடியோவில் சிறுத்தை புலி ஒன்று 2 ஆடு, ஒரு நாயை கடித்து குதறியது.
    • வனத்துறையினர், சிறுத்தைகளை பிடிக்க வனவர் தலைமையில் தனிக்குழு அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

    மாரண்டஅள்ளி:

    தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி அருகே உள்ள புதூர் கிராமத்தில் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் சிறுத்தைகள் இருப்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீ போல் பரவியது.

    அந்த வீடியோவில் சிறுத்தை புலி ஒன்று 2 ஆடு, ஒரு நாயை கடித்து குதறியது. இதை அறிந்த கிராம மக்கள் பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து பாலக்கோடு வனசரக அலுவலர் நடராஜ் மற்றும் வனத்துறையினர் புதூர் கிராமத்திற்கு விரைந்து சென்று சிறுத்தைகள் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனர்.

    அதில் சிறுத்தைப்புலி ஒன்று 2 ஆடு, ஒரு நாயை கடித்து குதறியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ஆய்வு செய்தபோது சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்த வனத்துறையினர், சிறுத்தைகளை பிடிக்க வனவர் தலைமையில் தனிக்குழு அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

    சிறுத்தை பிடிபடும் வரை பொதுமக்கள் யாரும் இரவு நேரங்களில் தனியாக வெளியே நடமாட வேண்டாம் எனவும், குறிப்பாக குழந்தைகளை வெளியில் விளையாட விட வேண்டாம் என்றும் வீட்டிற்கு வெளியே படுத்து தூங்க வேண்டாம் எனவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என கூறி பொதுமக்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுத்தனர்.

    மேலும் சிறுத்தைகள் நடமாட்டம் குறித்து தெரிய வந்தால் உடனடியாக பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு பாலக்கோடு வனசரக அலுவலர் நடராஜ் அவர்கள் கேட்டு கொண்டுள்ளார்.

    சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதை அறிந்த அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர்.
    • கைதான பா.ஜ.க.வினரை தருமபுரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி பாராளுமன்ற தொகுதி எம்.பி. டாக்டர் செந்தில்குமார் பாராளுமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற முடியும். தென் மாநிலங்களில் வெற்றி பெற முடியாது. இந்தி பேசும் மாநிலங்களை கோமூத்ரா மாநிலங்கள் என குறிப்பிட்டார். இதனை கண்டித்து தமிழகத்தில் பா.ஜ.க.வினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தருமபுரி மாவட்ட பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கட்சியினர் எந்தவித முன்அறிவிப்பின்றி திடீரென்று தருமபுரி  பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட கூடாது என்று பா.ஜ.க.வினரை தடுத்து நிறுத்தினர். ஆனாலும், அவர்கள் கலைந்து செல்லாமல் அங்கேயே நின்று கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 50-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர்.

    கைதான பா.ஜ.க.வினரை தருமபுரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • போக்குவரத்து வசதியின்றி பொதுமக்கள் தவிப்பு
    • நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளையும் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

     தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது அன்னை நகர், நல்லம்பள்ளியில் உள்ள சேலம் தர்மபுரி முக்கிய சாலையில் டாட்டா நகருக்கு எதிரே உள்ளது. இந்த பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ளவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனியாரிடம் வீட்டு மனைகள் வாங்கி வீடு கட்டி குடியிருந்து வரும் நிலையில் 30 ஆண்டுகள் கழித்து குடியிருப்பு வீடுகளுக்கு சாலை வசதி வேண்டுமென்றால் 5 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும்.

    பணம் கொடுத்தால் மட்டுமே பஞ்சாயத்து நிர்வாகத்திடம் உங்களுக்கு உரிய சாலையை கிரயம் செய்து ஒப்படைக்க முடியும் என்று மிரட்டி வருவதாகவும் இது சம்பந்தமாக நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு பலமுறை முறையிட்டுள்ளனர்.

    மேலும் இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால் கழிவுநீர் செல்வதற்கு வழி இன்றி முக்கிய சாலையான சேலம் தருமபுரி சாலை ஓரத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதேபோல் நல்லம்பள்ளி பஸ் நிறுத்தத்தில் இருந்து வடக்கு தெரு கொட்டாவூர் வரை சுமார் 1 கிலோ மீட்டருக்கு கழிவுநீர் கால்வாய் வசதிகள் இல்லாததால் இந்த முக்கிய சாலை ஓரத்தில் இருக்கும் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவு நீர் சாலை ஓரத்தில் தேங்கி நின்று தொற்றுநோய் பரவும் அவல நிலை உள்ளது.

    இந்த நிலையில் மர்ம நபர்கள் பொக்லிங் வைத்து குழிதோண்டி அன்னை நகருக்கு செல்லும் பாதையை அடைத்து விட்டதால் அன்னை நகரில் இருந்து செல்லும் பள்ளி குழந்தைகள் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் அத்தியாவாசிய தேவைகளுக்காக பொருட்களை வாங்கி செல்லும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் செல்வதற்கு வழி இன்றி 2 நாட்களாக அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இது சம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குடியிருப்பு வாசிகள் புகார் தெரிவித்த நிலையில் நேற்று மாலை பஞ்சாயத்து நிர்வாகத்தையும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளையும் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • 7 மையங்களில் 8990 பேர் எழுதுகின்றனர்
    • காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்திற்கு வர அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    தருமபுரி, 

    வருகின்ற 10.12.2023 அன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள இரண்டாம் நிலை காவலர்,சிறைக்காவலர்,தீயணைப்பாளர் பதவிக்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.

    இத்தேர்வு தருமபுரி மாவட்டத்தில் செந்தில் பப்ளிக் பள்ளி, அதியமான்கோட்டை 2 ஆயிரம் பேரும், விஜய் வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளி (ஆண்கள்) பென்னாகரம் ரோடு, தருமபுரி 1500 பேரும், பச்சமுத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி(மகளிர்) குண்டல்பட்டி, தருமபுரி 600 பேரும், விஜய் வித்யாரம் சீனியர் செகண்டரி பள்ளி எஸ் வி ரோடு, தருமபுரி 600 பேரும், ஒளவையார் அரசு பெண்கள் மேல் நிலைப ;பள்ளி, தருமபுரி 1500 பேரும், பச்சமுத்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தருமபுரி சேலம் மெயின் ரோடு, (பச்சையம்மன் கோவில் எதிரில்) தருமபுரி 687 பேரும், விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி நல்லம்பள்ளி, தருமபுரி 2103 (பெண்தேர்வர்கள் மட்டும்) ஆகிய 7 மையங்களில் மொத்தம் 8990 தேர்வர்கள் தேர்வெழுதவுள்ளனர்.

    இத்தேர்வானது காலை 10 மணி முதல் 12.40 மணி வரையில் (பிரதான தேர்வு மற்றும் தமிழ தகுதி தேர்வு) நடைபெறவுள்ளது. இத்தேர்வில்க லந்துகொள்ள நுழைவுச் சீட்டு வரப்பெற்றவர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்திற்கு வர அறிவுறுத்தப் பட்டுள்ளது. இத்தேர்வுக்கு வரும் தேர்வர்கள் அவர்களுக்கு அனுப்பப் பட்ட நுழைவுச் சீட்டில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

    தேர்வு மையத்திற்கு எவ்வித மின்னணு மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களான எலக்ட்ரானிக் மற்றும் ஸ்மார்ட் கைகடிகாரங்கள், புளுடூத் உபகரணங்கள் செல்போன் ஆகியவற்றை எடுத்துவரக்கூடாது. என்றும் தாமதமாக வரும் தேர்வர்கள் தேர்வு மையத்தில் அனுமதிக்கப்ப டமாட்டார்கள் என்றும், முறைகேடுகளில் ஈடுபடும் நபர்கள் தேர்வு மையத்திலிருந்து வெளியேற்றப்ப டுவதுடன், தகுந்த சட்ட நடவடிக்கை களையும் எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும், 10.12.2023 அன்று சுமார் 900 காவல் அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

    • ரூ.5.02 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகைகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
    • முன்னாள் படைவீரர்களுக்கு கேடயங்களை வழங்கப்பட்டது.

     தருமபுரி 

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் படைவீரர் கொடி நாளையொட்டி மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் தலைமையில் கொடிநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நம் தாய்நாட்டை காக்கும் வகையில் பணி, வெயில், மழை எதுவும் பாராமல் நமது தேசத்திற்காக பாதுகாக்கும் படைவீரர்கள் மற்றும் போர் வீரர்களின் மகத்தான சேவையினை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ஆம் நாள் படைவீரர் கொடிநாளாக அனுச ரிக்கப்படுகிறது. இந்த படைவீரர் கொடி நாளில் தேசத்திற்காக பாதுகாக்கும் வீரர்களை கௌரவிக்கும் விதமாக மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்காக தேநீர் உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்து.

    தருமபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டில் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் இலக்கான ரூ.1.32 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக, தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2024-ஆம் ஆண்டிற்கான கொடிநாள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட வருவாய் அலுவலர் கொடிநாள் நிதி அளித்து வசூலை தொடங்கி வைத்தார். மேலும், எதிர்வரும் ஆண்டுகளிலும் இலக்கினை விட கூடுதலாக கொடிநாள் நிதி வசூல் செய்து வழங்கிட அரசுத்துறை அலு வலர்கள் கேட்டுக்கொண்டார்கள்.

    இதனை தொடர்ந்து, முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் சார்பில் 22 முன்னாள் படைவீரரது சிறார்களுக்கு ரூ.5.02 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகைகளை மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் வழங்கினார்.

    முன்னதாக, 1971- இந்தியா, பாகிஸ்தான் போரில் உயிர்நீத்த இந்திய படைவீரர்களின் தியாகத்தை போற்றும் வகையிலும், பங்குபெற்ற வீரர்களின் நினைவாகவும் மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி, முன்னாள் படைவீரர்களுக்கு கேடயங்களை வழங்கி பேசினார். அப்போது அவர், தருமபுரி மாவட்ட நிர்வாகம் என்னென்றும் முன்னாள் படைவீரர் நலனில் உறுதுணையாக இருக்கும். மேலும், முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை முன்னாள் படைவீரர் அலுவலகத்தினை அணுகி முழுமையாக பெற்று பயனடையலம் எனவும் தெரிவித்தார்.

    இந்நிகழ்வின்போது கூடுதல் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் இளங்கோ, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராமதாஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன், முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் பிரேமா, மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
    • மகிழம், கொய்யா, இலுப்பை உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

     ஏரியூர், 

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமகொண்ட அள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில், சிகரள அள்ளி இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ராமகொண்ட அள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தயாநிதி தலைமை வகித்தார். பள்ளியின் தமிழாசிரியர் சுப்ரமணி வரவேற்புரை நிகழ்த்தினார். உதவி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், சிகரல அள்ளி இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் முத்து குமார், கிருஷ்ணன், ரகுராமன், வைரம், குமார் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்துறை தலைவர் நாகராஜ், மரக்கன்றுகள் நடுவதில் பயன்கள் குறித்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஏரியூர் காவல் ஆய்வாளர் யுவராஜ் பங்கேற்று, பள்ளியில் பயிலும் 300 மாணவ மாணவிகளுக்கு மகிழம், கொய்யா, இலுப்பை உள்ளிட்ட இலவச மரக்கன்றுகளை வழங்கினார். நிறைவாக பள்ளியின் ஆசிரியை இளமதி நன்றி உரை கூறினார்.

    • பல மாதங்களாக தண்ணீர் இன்றி தவிப்பு
    • பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பண்டஅள்ளி ஊராட் சிக்குட்பட்டது ஜர்க்கான் கொட்டாய் மற்றும் காராஜ் நகர் குடியிருப்பு கிராமங் கள். இந்த இரு கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட குடியி ருப்பு வீடுகள் உள்ளது. இந்த குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் வழங்கும் பொருட்டு, 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் பல லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது.

    இரு மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைக்கப் பட்டு ஓர் ஆண்டுக்கு மேலா கியும், இன்றளவும், சம்மந் தப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மூலம், இரு கிராமத்தை சேர்ந்த குடியிருப்பு மக்க ளுக்கு குடிநீர் வழங்கப்ப டாமல், கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். இதனால் இரு கிராமங்களை சேர்ந்த குடியிருப்பு மக்கள், குடிநீருக்காக, பல கிலோமீட் டர் தூரம், மாற்று கிராமங்க ளுக்கு நாள்தோறும் நடந்தே சென்று, குடங்களில் குடிநீர் எடுத்துவரும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    குடிநீர் இல்லாமல் தவிக்கும், இரு கிராமங்களை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள், பல்வேறு பணிக்கு செல்லும் பொதுமக்கள் என பலரும், உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் நாள்தோறும் தவித்து வருகின்றனர்.

    பல லட்சம் மதிப்பீட்டில், குடிநீர் தேவையை பூர்த்தி செய்திட, இரு கிராமங்களில் அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம், குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்ககோரி, சம்மந்தப்பட்ட அதிகாரி களுக்கு பலமுறை கோரிக் கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்ப டவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த சம்மந்தப்பட்ட இரு கிராமங்களை சேர்ந்த குடியிருப்பு பொதுமக்களும், காலிகுடங்களுடன் ஒன்று திரண்டு, சம்மந்தபட்ட இரு மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் முன்பு, குடிநீர் வழங்கிட விரைந்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், ஆர்ப்பாட்டம் இன்று நடத்தினர்.

    மேலும் ஆர்ப்பாட்டத்தின் மீது சம்மந்தப்பட்ட அதிகா ரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், இரு கிராமங்களைச் சேர்ந்த குடியிருப்பு மக்களும் ஒன்றிணைந்து, காலிகுடங்க ளுடன் தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளா கத்தில், விரைவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபடு வோம் என கோரிக்கை விடுத்துள்ளனர். இருகி ராமங்களில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைத்தும், குடிநீர் வழங்க கோரி, ஒரே ஊராட்சியில், இரு கிராமமக்கள் காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் பணம் திருடு போயிருப்பது தெரிய வந்தது.
    • கோவை நகை கடை கொள்ளையன் கைவரிசையா? போலீசார் விசாரணை

    கோவையில் உள்ள பிரபல நகை கடையில் சிறிய துவாரத்தின் வழியாக கடந்த 28- ந்தேதி நுழைந்த வாலிபர் 4½ கிலோ தங்க மற்றும் வைர நகைகளை திருடிச் சென்றார்.

    இதுகுறித்து கோவை தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள தேவரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த விஜய் (வயது 28) என்பது தெரிய வந்தது. ஆனைமலையில் வீட்டில் பதுங்கி இருந்த விஜய்யை பிடிக்க தனிப்படை போலீசார் சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தேவ ரெட்டியூரில் உள்ள விஜயின் தந்தை முனிரத்தினம், அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது தங்க மோதிரம், தங்க பிரேஸ்லெட் உள்ளிட்ட தங்க நகைகளும்,2 செல் போன்களும் வீட்டுக்குள் வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த முனிரத்தினம் அவற்றை கம்பைநல்லூர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு வந்து முனிரத்தினத்திடம் விசாரித்து அந்த நகைகளை பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் டி.புளி யம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி துரைராஜ்(45) என்பவர் விட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று இருந்தார். நேற்று அவர் வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் பணம் திருடு போயிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக தகவல் அறிந்த மொரப்பூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    கோவை நகை கடையில் திருடிய விஜய், துரைராஜ் வீட்டில் திருட்டில் ஈடுபட்டானா? என்ற கோணத்தில் போலீசாரின் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை நகை கடையில் திருடிய விஜய் அந்த மலைப்பகுதியில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.இதன் காரணமாக கோவை தனிப்படை போலீசார் அந்த பகுதியில் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×