என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
மதுரை
- மக்கள் விரோத ஆட்சியை வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களின் மகத்தான ஆதரவுடன் தூக்கி எறிந்து முற்றுப்புள்ளி வைப்போம்.
- வருகிற 30-ந்தேதி பசும்பொன் வரும் எடப்பாடியாருக்கு மகத்தான வரவேற்பு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வழங்க வேண்டும்.
மதுரை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வருகிற 30-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக 29-ந்தேதி மாலை மதுரை வரும் எடப்பாடி பழனிசாமிக்கு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு வழங்கப்படுகிறது.
இது தொடர்பான ஆலோசனை கூட்டம் மதுரை மாநகர் மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் இன்று நடைபெற்றது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியில், அ.தி.மு.க.வின் 53-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் தி.மு.க.வி.ன் அதிகார துஷ்பிரயோகத்தால் அ.தி.மு.க. கொடியை கூட ஏற்றுவதற்கு எதிர்நீச்சல் போடும் நிலை உள்ளது.
இந்த மக்கள் விரோத ஆட்சியை வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களின் மகத்தான ஆதரவுடன் தூக்கி எறிந்து முற்றுப்புள்ளி வைப்போம். வருகிற 30-ந்தேதி பசும்பொன் வரும் எடப்பாடியாருக்கு மகத்தான வரவேற்பு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வழங்க வேண்டும். வருங்கால முதலமைச்சராகும் எடப்பாடியாருக்கு மதுரை நகரமே திரண்டு வந்து வரவேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதலமைச்சர் சொன்னதைப்போல நாம் யாரை நம்பியும் இல்லை.
- நம்மை நம்பி இருப்பவர்களுக்கு உற்ற துணையாக, உறுதுணையாக இருப்பது தான் தி.மு.க. என்பதை அனைவரும் உணர வேண்டும்.
மதுரை:
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மதுரை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி மற்றும் கோ.தளபதி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டங்களில் இந்த முறை மதுரை பாராளுமன்ற தொகுதியை தி.மு.க.விற்கு ஒதுக்க வேண்டும் என தொடர்ச்சியாக பேசி வந்தனர்.
ஆனால் கட்சி தலைமை மதுரை தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சு.வெங்கடேசன் 2-வது முறையாக போட்டியிட்டு 2,09,409 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 9-ந்தேதி அப்போதைய அமைச்சரும், தற்போதைய துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஒத்தக்கடை பகுதியில் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதில் வெங்கடேசன் எம்.பி.யும் கலந்து கொண்டார்.
பின்னர் கடந்த 7-ந்தேதி மதுரை மாநகராட்சி பகுதிகளுக்குள் பல ஆண்டுகளாக வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கூறி மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரமாண்ட பேரணி வெங்கடேசன் எம்.பி. தலைமையில் நடந்தது.
அப்போது அவர் பேசுகையில், 10 ஆயிரம் பேருக்கு பட்டா கொடுத்தார்கள். ஆனால் மாநகராட்சி பகுதியில் உள்ள ஏழைகளுக்கு பட்டா கொடுக்காமலும், அதுதொடர்பாக அரசாணை வெளியிடாமலும் இருக்கிறார்கள் என தி.மு.க. அரசை விமர்சித்தார்.
பட்டா கேட்டு நடத்திய இந்த பேரணி பட்டா வழங்கும் நிகழ்ச்சியை நடத்திய அமைச்சருக்கு எதிராக உள்ளதோ என கருதி, மதுரை தி.மு.க.வி.னரும், அமைச்சரின் ஆதரவாளர்களும் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் போராட்டத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சியினருக்கு எதிரான கருத்துகளை சமூகவலை தளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இதற்கிடையே அமைச்சர் மூர்த்தியின் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வண்டியூர் பகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனி்ஸ்ட் கட்சி சார்பில் கிளை மாநாடு நடந்தது. அதில் வண்டியூர் பகுதிகளில் சாலைகள் மோசமாக இருப்பதால் அதனை சீரமைக்க வேண்டும், ரேசன் கடைகளில் பொருட்கள் தரமற்றதாகவும், எடை குறைவாக இருப்பதாகவும் கூறி கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றி அதனை வண்டியூர் பகுதியில் பேனராகவும் வைத்தனர்.
இதனையடுத்து ஓரிரு நாட்களில் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வண்டியூர் பகுதி முழுவதும் கண்டா வரச்சொல்லுங்க...! என்ற வாசகத்துடன் மதுரை வெங்கடேசன் எம்.பி.க்கு எதிராக பொதுமக்கள் என்ற பெயரில் நோட்டீசுகள் ஒட்டப்பட்டன. இது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினரிடையை கோபத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த ஒன்றிய மாநாட்டில் வெங்கடேசன் எம்.பி. பேசுகையில், வண்டியூர் சாலையை உடனடியாக செப்பனிட வேண்டும், ரேஷன் கடையில் தரமான பொருள் வை என்றால் ஒருத்தனுக்கு கோபம் வருகிறது என்றால் தரம் இல்லாத பொருளை எடை குறைவான பொருளை போடுபவனுக்கு பின்னால் இருக்கும் நபருக்கு தான் வரும்.
மக்களுக்கான போராட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஒருபோதும் பின்வாங்கமாட்டார்கள், எங்களை விட சிறந்த போராட்டக்காரர்களாக இருந்தால் எங்களோடு வாருங்கள் போட்டி போடலாம் என சவால் விடுத்தார்.
இந்தநிலையில் மதுரை மாவட்டம் ஆலத்தூர் பகுதியில் நடைபெற்ற தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடத்தப்பட்ட பேரணியை கடுமையாக சாடினார். அப்போது அவர் பேசியதாவது:-
மதுரையில் மீண்டும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் விரைவில் பட்டா வழங்க இருக்கிறார்கள். இதில் யாரும் உரிமை கொண்டாட முடியாது. தகுதி இல்லாதவர்களை அழைத்து பட்டா கொடுக்கிறேன் என சொல்லி திசை திருப்புகிற வேலையை விட்டுவிடுங்கள்.
தன்னுடைய புகழுக்காக எதையாவது பெற்றுத் தருகிறேன் என தவறான பிரசாரம் செய்வதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். மக்களுக்கு என்ன கொடுக்க வேண்டும் என தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை முதலமைச்சர் செய்து வருகிறார். நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் இருப்பவர்களுக்கு பட்டா வழங்க முடியாது.
கிடைக்காததை கிடைக்கும் என்றும், வாங்கி தருவோம் என்று சொல்லியும் வருபவர்களை தயவு செய்து நீங்கள் நம்பி ஏமாந்து விடவேண்டாம். தகுதி உள்ளவர்களுக்கு நிச்சயமாக பட்டாவை பெற்று தரக்கூடிய பணியை அரசுத்துறையும், அதிகாரிகளும் முழுவீச்சில் செய்து வருகின்றனர்.
முதலமைச்சர் சொன்னதைப்போல நாம் யாரை நம்பியும் இல்லை, நம்மை நம்பி இருப்பவர்களுக்கு உற்ற துணையாக, உறுதுணையாக இருப்பது தான் தி.மு.க. என்பதை அனைவரும் உணர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மதுரையில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் கூட்டங்களில் அவன், இவன் என மேடையிலேயே ஒருமையில் சவால் விடுத்து பேசும் வகையில் ஒருவரை ஒருவர் சாடி வருவதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடர்ந்து, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியிடமும் மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.
- தூத்துக்குடி நீதித்துறை நடுவர் சக்திவேல் 36-வது அரசு சாட்சியாக வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
- 100 பக்கம் சாட்சியம் உள்ளது. இதனை எவ்வாறு குறுக்கு விசாரணை செய்வீர்கள்.
மதுரை:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் காவலர் ரகு கணேஷ் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருந்ததாவது:-
சாத்தான்குளம் தந்தை -மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறேன். இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற வரும் நிலையில், தூத்துக்குடி நீதித்துறை நடுவர் சக்திவேல் 36-வது அரசு சாட்சியாக வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
என் தரப்பிலிருந்து நீதித்துறை நடுவர் சக்திவேலை குறுக்கு விசாரணை செய்ய இயலவில்லை. தற்போது நீதித்துறை நடுவர் சக்திவேலை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க கோரி கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். ஆனால் விசாரணை நீதிமன்றம் எனது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இது நியாயமான விசாரணையை மறுக்கும் வகையில் உள்ளது. ஆகவே கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து நீதித்துறை நடுவர் சக்திவேலை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தத.
இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் மாஜிஸ்திரேட் அளித்த சாட்சியம் 100 பக்கத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் பலமுறை வாய்ப்பளித்தும் ரகு கணேஷ் தரப்பில் குறுக்கு விசாரணை செய்யப்படவில்லை. ஆகவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
ரகு கணேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாஜிஸ்திரேட் மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும். எனவே அதற்கு அனுமதிக்க வேண்டுமென வாதிட்டார்.
அப்போது நீதிபதி கூறுகையில், 100 பக்கம் சாட்சியம் உள்ளது. இதனை எவ்வாறு குறுக்கு விசாரணை செய்வீர்கள். திறந்த நீதிமன்றத்தில் தான் நீதிபதி சாட்சியும் அளித்துள்ளார். அவ்வாறு இருக்கும்போது மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த கேட்பது வழக்கை இழுத்தடிக்கும் மாதிரி உள்ளது என கூறிய நீதிபதி இந்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கோரி தீர்ப்புக்காக வழக்கை வருகிற 21-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
- கோவில் கும்பாபிஷேகத்தின்போது பழைய கலசமும், தங்க ஆபரணங்களும் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்படவில்லை.
- கோவிலின் பாதுகாப்பு அறையில் இருக்கும் நகைகளையும், கோர்ட்டில் சமர்ப்பித்த நகை பட்டியலையும் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும்.
மதுரை:
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியைச் சேர்ந்த தங்கப்பன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சொத்துகளை பாதுகாக்க கோரி ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, பல்வேறு உத்தரவுகள் பெறப்பட்டு உள்ளன. இந்த கோவிலின் கலசத்தை பாதுகாக்கவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் கோவில் கும்பாபிஷேகத்தின்போது பழைய கலசமும், தங்க ஆபரணங்களும் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்படவில்லை. அவை எங்கு இருக்கின்றன என்று தெரியவில்லை. இது தொடர்பாக கேள்வி எழுப்பியபோதும் முறையான பதிலை கோவில் நிர்வாகம் தெரிவிக்கவில்லை.
எனவே திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் தங்க சிவலிங்கம், பஞ்சலோக சிலைகள், பழைய கலசம் மற்றும் தங்க நகைகள் உள்ளிட்டவைகளை ஏற்கனவே இருந்த இடத்தில் மீண்டும் வைத்து பாதுகாக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கோவிலின் செயல் அலுவலர் ரத்தினவேல் நேரில் ஆஜரானார். கோவில் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது நீதிபதிகள், கோவிலின் நகைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது. ஏன் தாமதம்? என கேள்வி எழுப்பினர்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
இந்த கோர்ட்டு பலமுறை உத்தரவிட்டும் கோவில் நகைகள் விவரங்களுடன் கூடிய பட்டியலை அறநிலையத்துறை அதிகாரிகள் சமர்ப்பிக்கவில்லை. இதனால் கோவிலின் செயல் அலுவலர் நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டது. அதன்பின்னர் அவசர அவசரமாக ஒரு குழு அமைத்து, நகைகளை சரிபார்த்ததாக பட்டியல் தயாரிக்கப்பட்டு இப்போது சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது.
எனவே கோர்ட்டு உத்தரவை முறையாக நிறைவேற்றாத கோவில் செயல் அலுவலர் ரத்தினவேல் பாண்டியன் மீது துறை ரீதியான நடவடிக்கையை அறநிலையத் துறை கமிஷனர் எடுக்க வேண்டும்.
மேலும், இந்த வழக்கில் அறநிலையத்துறை அதிகாரிகளின் நடவடிக்கை திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. எனவே கோவில் நகைகளை சரிபார்க்கவும், மாயமானதாக கூறப்படும் தங்க சிவலிங்கம் குறித்து விசாரணை நடத்தவும் ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி நியமிக்கப்படுகிறார்.
அவர், கோவிலின் பாதுகாப்பு அறையில் இருக்கும் நகைகளையும், கோர்ட்டில் சமர்ப்பித்த நகை பட்டியலையும் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும். பத்மநாபபுரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வைக்கப்பட்டு இருக்கும் நகைகள் குறித்தும் விசாரித்து 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதிக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் அனைத்து உதவிகளையும், ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- அவர்கள் செய்த பாவத்திற்கு அடுத்த ஜென்மம் அல்ல இந்த ஜென்மத்திலேயே அனுபவிப்பார்கள்.
- துரோகம் செய்தவர்களைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.
மதுரை:
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 53-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருமங்கலம் தொகுதி டி.குன்னத்தூரில் அமைந்துள்ள ஜெயலலிதா கோவிலில் பொதுக்கூட்டம் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர், ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-
கடந்த சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம், உசிலம்பட்டி தொகுதிகளை போல் உழைத்திருந்தால் 10 ஆண்டுகள் உறங்கிக் கொண்டு இருந்த தி.மு.க. ஆட்சிக்கு வந்திருக்காது. இப்போது தி.மு.க.வினர் எழுந்து நிற்பதற்கு யார் காரணம்? அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர்களால் தான் இந்த நிலை ஏற்பட்டது.
இந்த துரோகத்தை தெய்வங்களாக இருக்கும் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள். துரோகம் செய்தவர்களைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. அவர்களை தண்டிக்கவும் தேவையில்லை. அதை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரிடம் விட்டு விட வேண்டும். அவர்கள் செய்த பாவத்திற்கு அடுத்த ஜென்மம் அல்ல இந்த ஜென்மத்திலேயே அனுபவிப்பார்கள்.
43 தொகுதிகளில் ஒரு லட்சத்து 92 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் நாம் தோற்று ஆட்சியை இழந்தோம். எடப்பாடியார் தலைமையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அரசு அமைய முடியாமல் போனதற்கு காரணமானவர்கள் இன்று கட்சி வேட்டி கூட அணிய முடியாமல் தவித்து வருகிறார்கள்.
கட்சியிலிருந்து வெளியே செல்லாதீர்கள் என்று சொன்னபோது எல்லாம் என்னை அங்கே கூப்பிடுகிறார்கள், இங்கே கூப்பிடுகிறார்கள், தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள் என்று சொன்னவர்கள் இன்று கட்சியிலே சேர்த்துக் கொள்ளுங்கள், சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்சுகிறார்கள். இதற்கு யார் பொறுப்பு, அவர்களே தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- நியோ மேக்ஸ் நிதி மோசடி வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.
நியோமேக்ஸ் என்கிற நிதி நிறுவனம் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்தனர்.
இந்த நிதி நிறுவனம் பணத்தை திரும்பத் தராமல் ஏமாற்றியதாக புகார்கள் குவிந்தன. இதன்பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், நிர்வாக இயக்குநர்களான மதுரை கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், பாஜ பிரமுகர் திருச்சி வீரசக்தி உள்ளிட்ட 90க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து, 35க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, " நிதி நிறுவனம் நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நியோ மேக்ஸ் நிதி நிறுவன சொத்துக்களை இதுவரை முடக்காதது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், இந்த வழக்கில் என்ன தான் நடக்கிறது. இன்னும் எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து, அக்டோபர் 19ம் தேதிக்குள் நிதி நிறுவன சொத்துக்களை வழக்கில் இணைத்து, அவற்றை முடக்கி அரசாணை வெளியிட வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் தமிழ்நாடு உள்துறை செயலாளர் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும் எனவும் நீதிபதி பரத சக்கதரவர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- சுவரொட்டி தி.மு.க., கம்யூனிஸ்டு கூட்டணி கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
- திருப்பரங்குன்றம் ரோடு உள்ளிட்ட மதுரை தொகுதியில் உள்ள பெரும்பாலான ரோடுகள் பல மாதங்களாக படுமோசமாக உள்ளது.
மதுரை:
மதுரை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சு.வெங்கடேசன் 2-வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் அவரை காணவில்லை என மதுரை நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் விவரம் வருமாறு;-
மதுரை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வண்டியூர், சவுராஷ்டிராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சு.வெங்கடேசனுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், "கண்டா வர சொல்லுங்க... என்ற தலைப்பில் மதுரை பாராளுமன்ற தொகுதியில் 2 முறை எம்.பி.யாக வெற்றி பெற்றும் வண்டியூர் மக்களுக்கு நன்றி கூட சொல்ல வராத மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த வண்டியூர் மக்களுக்கு இதுவரை நீங்கள் செய்தது என்ன?" என கேள்வி கேட்டு வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.
இந்த சுவரொட்டி தி.மு.க., கம்யூனிஸ்டு கூட்டணி கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 2 முறை மதுரை பாராளுமன்ற உறுப்பினராக தேர்வான சு.வெங்கடேசன் பொதுமக்களிடம் நேரில் வந்து குறைகளை கேட்பதில்லை. மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் உள்ளனர்.
இதுதொடர்பாக எம்.பி. நேரில் வந்து விசாரித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருப்பரங்குன்றம் ரோடு உள்ளிட்ட மதுரை தொகுதியில் உள்ள பெரும்பாலான ரோடுகள் பல மாதங்களாக படுமோசமாக உள்ளது. அண்மையில் பெய்த மழையால் மதுரையில் குறிப்பிட்ட பகுதியில் வெள்ளநீர் புகுந்தது. இதனை கூட ஆய்வு செய்ய எம்.பி. சு.வெங்கடேசன் வரவில்லை என தெரிவித்தனர்.
- திமுக அரசும், அமைச்சர்களும் கமிஷன், கலெக்ஷன் மட்டுமே பார்க்கிறார்கள். மக்களை பார்ப்பதில்லை.
- மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் வரும் சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு பதிலடி கொடுப்பார்கள்.
மதுரை:
வீரபாண்டிய கட்டபொம்மனின் 225-வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலைக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ கூறியதாவது:
அ.தி.மு.க. ஆட்சியில் பருவ மழைகளையும் புயல்களையும் சிறப்பாக எதிர்கொண்டு மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தோம். ஆனால் தி.மு.க. அரசு மக்களுக்கு எதையும் செய்யவில்லை.
மழை நேரத்தில் முதல்வர் ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் போட்டோ சூட் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
தி.மு.க. அரசும், அமைச்சர்களும் கமிஷன், கலெக்ஷன் மட்டுமே பார்க்கிறார்கள். மக்களை பார்ப்பதில்லை.
மழையால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள். அமைச்சர் மூர்த்தி கூட மதுரையில் அவர் தொகுதியில் தான் ஆய்வு செய்கிறார்.
புது காதலன், புது காதலி போல தமிழக அரசும், ஆளுநர் உள்ளனர். ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள மாட்டோம் என ஆளுநருக்கு எதிராக செயல்பட்ட தி.மு.க, தற்போது ஆளுநரோடு இணக்கமாக இருக்கிறார்கள்.
முதல்வர் ஸ்டாலின் திடீரென டெல்லிக்கு செல்கிறார், பிரதமரை சந்திக்கிறார். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்குகிறார்கள் ஏதோ தேன்நிலவு போல நடக்கிறது.
ஆளுநர் எப்போதும் அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டி மக்களின் குறைகளை எடுத்துச் சொல்வார். ஆனால் ஆளுநர் தற்போது மாறி இருக்கிறார் என தெரிவித்தார்.
சென்னை மழையை முன்னிட்டு தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை பணிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இன்றைய தலைமுறைகள் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்த வேண்டும்.
- கோவில் நிலங்களில் குத்தகைதாரர்கள் குத்தகை தொகையை செலுத்துவதில்லை.
மதுரை:
வீரபாண்டிய கட்ட பொம்மனின் 225-வது நினைவுநாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மதுரை ஆதீனம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இன்றைய தலைமுறைகள் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்த வேண்டும். தொடர்ந்து இளைஞர்களுக்கு அரசு விடுதலைப் போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து மதுரை ஆதீனம் சார்பாக விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி வருகிறேன். அவர்கள் இல்லை என்றால் நான் இன்று இல்லை. தமிழகத்தில் இன்றைக்கு பருவம் தவறிய மழைக்கு இளைஞர்களிடையே பக்தி குறைவாக இருப்பது தான் காரணம். கோவில் நிலங்களில் குத்தகைதாரர்கள் குத்தகை தொகையை செலுத்துவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதுரையை சேர்ந்த கார்த்திக் தீபாவளி சீட்டு பிடித்து வந்தார்.
- தீபாவளி சீட்டு பணத்தில் ரூ.3 லட்சத்தை மகன் கார்த்திக்கிடம் இருந்து அவரது தந்தை லோகநாதன் வாங்கியிருந்தார்.
மதுரை, அக்.16-
மதுரை வில்லாபுரம் பகுதியில் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 60). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அப்பள கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். லோகநாதனுக்கு கார்த்திக் என்ற ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் அனைவரும் கூட்டுக்குடித்தனமாக வசித்து வந்தனர்.
சமீபத்தில் கார்த்திக் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். கார்த்திக் தீபாவளி சீட்டு பிடித்து வந்தார். இதற்காக அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோரிடம் பணம் வசூலித்து வங்கிக் கணக்கில் சேமித்து வைத்திருந்தார். அதனை தீபாவளி பண்டிகையின் பணம் வசூலித்தவர்களுக்கு பலகாரம், பரிசுப்பொருள் மற்றும் வட்டியுடன் கொடுக்க திட்டமிட்டு இருந்தார்.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீபாவளி சீட்டு பணத்தில் ரூ.3 லட்சத்தை மகன் கார்த்திக்கிடம் இருந்து அவரது தந்தை லோகநாதன் வாங்கியிருந்தார். தீபாவளிக்கு முன்னதாக அந்த பணத்தை திருப்பி தந்துவிடுவதாகவும் அவர் உறுதியளித்து இருந்தார். ஆனால் தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் தற்போது வரை லோகநாதன் ரூ.3 லட்சத்தை திருப்பித்தரவில்லை.
இதுதொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு அந்த பணத்தை கார்த்திக் தந்தையிடம் கேட்டபோது மீண்டும் தகராறு உருவானது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திக், தந்தை என்றும் பாராமல் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து லோகநாதனை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.
பின்னர் அவர் நேராக அவனியாபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் கொலையுண்ட லோகநாதன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கார்த்திக்கிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தீபாவளி சீட்டு பணத்தை பெற்றுக்கொண்டு திருப்பித்தராத தந்தையை மகனே கழுத்தை அறுத்துக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
- விழாவினை முன்னிட்டு தினமும் பகல் 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனை நடைபெறும்.
- சப்பரத்தில் மாலையில் எழுந்தருளி கோவில் ஆஸ்தான மண்டபத்தை 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா வருகிற நவம்பர் 2-ந்தேதி காப்புக் கட்டுதலுடன் நடைபெற உள்ளதையொட்டி பக்தர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது.
முருகப்பெருமானின் முதலாம் பட வீடான திருப்பரங்குன்றத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி விழா 7 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா வருகின்ற நவம்பர் 2-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவினை முன்னிட்டு அன்றைய தினம் அதிகாலையில் அனுக்கை பூஜை தொடங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்று, உற்சவர் சன்னதியில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சண்முகர் சன்னதியில் சண்முகர் வள்ளி, தெய்வானை, உற்சவ நம்பியார்க்கும் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெறும்.
தொடர்ந்து கோவிலில் தங்கி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவினை முன்னிட்டு தினமும் பகல் 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனை நடைபெறும். சண்முகர் தினமும் வெள்ளை அலங்காரம், பச்சை அலங்காரம், மயில் மீது அமர்ந்த அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அலங்காரங்களின் எழுந்தளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
இதே போல தினமும் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் தந்ததொட்டி விடையாத்தி சப்பரத்தில் மாலையில் எழுந்தருளி கோவில் ஆஸ்தான மண்டபத்தை 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வான வேல் வாங்குதல் வருகின்ற நவம்பர் 6-ந்தேதியும், சிகர நிகழ்ச்சியாக 7-ந்தேதி சொக்கநாதர் கோவில் வாசல் முன்பு சூரசம்ஹாரமும், 8-ந்தேதி காலை தேரோட்டமும் மாலையில் சுவாமிக்கு பாவாடை தரிசனம் மற்றும் மூலவர் தங்க கவச அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் அளிப்பார்.
விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ப.சத்யப்பிரியா, அறங்காவலர்கள் வ.சண்முகசுந்தரம், பொம்மத்தேவன், மணி செல்வம், ராமையா, கோவில் துணை ஆணையர் சூரியநாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- கூல் லிப் பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.
- கூல் லிப் பாக்கெடில் அதன் எச்சரிக்கை வாசகம் "Tobacco users die younger" என உள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளில் அருகே கூல் லிப் எனப்படும் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவது தொடர்பாக பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் கைதானார் ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் 'கூல் லிப்' எனும் போதைப் பொருளுக்கு அதிகம் அடிமையாகியுள்ளனர் என கருத்து தெரிவித்த நீதிபதி, தமிழகத்தில் கூல் லிப் போதைப்பொருளுக்கு தடை விதித்திருந்தாலும் பிற மாநிலங்களில் கூல் லிப் விற்பனை செய்யப்படுகிறது. இத்தகைய போதைப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படுகிறது என்று வேதனை தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், தற்போது பள்ளி மாணவர்களிடையே பெருகி வரும் வன்முறைக்கு இத்தகைய போதைப்பொருட்கள் பயன்பாடு முக்கிய காரணம். ஆகவே இத்தகைய போதைப் பொருளை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து ஏன் நாடு முழுவதும் தடை செய்யக் கூடாது? என மத்திய , மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது குட்கா நிறுவன தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கூல் லிப் மட்டுமல்ல, அது போல பலவகையான போதைப் பொருட்கள் உள்ளன. கூல் லிப் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை விடுக்கும் வாசகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று வாதிட்டார்.
இதற்கு கருத்து தெரிவித்த நீதிபதி மற்ற போதைப்பொருட்கள் எல்லாம் பள்ளி, கல்லூரிக்கு வெளியே பயன்பாட்டில் உள்ளன. ஆனால், கூல் லிப் பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் பயன்படுத்துகின்றனர் என்று தெரிவித்தார்.
மேலும், கூல் லிப் பாக்கெடில் அதன் எச்சரிக்கை வாசகம் "Tobacco users die younger" என உள்ளது. இது 'இறக்கும் வரை இளமையாகவே இருக்கலாம்' என புரிந்துகொள்ளும் வகையில் இருக்கிறது. கூல் லிப் பாக்கெட்டில் மண்டை ஓடு அடையாளத்தை ஏன் அச்சிடுவதில்லை? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி பரத சக்ரவர்த்தி, இது குறித்து விளக்கம் அளிக்க குட்கா நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.
கூல் லிப் பயன்பாட்டை குறைக்க என்ன மாதிரியான வழிகாட்டுதல் வழங்கலாம் என்பது குறித்து மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 16 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்