search icon
என் மலர்tooltip icon

    நீலகிரி

    • குடியிருப்புகளுக்கு நடுவே ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது போல திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
    • தொடர் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று தொடங்கி நாளை வரை கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    அதன்படி நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது.

    நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    கோத்தகிரி பகுதியில் விடிய, விடிய பெய்த மழைக்கு கீழ்தட்டப்பள்ளம் என்ற இடத்தில் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்தது.

    இந்த மழைக்கு கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில், குஞ்சப்பனை அருகே 5 இடங்களில் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்ததோடு மண்சரிவுகளும் ஏற்பட்டது.

    பர்லியார்-கல்லாறு சாலையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் லேசான மண்சரிவு ஏற்பட்டதுடன், மரங்களும் பெயர்ந்து சாலையில் விழுந்தது.

    தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலைத் துறையினர், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, மரங்களை வெட்டி அகற்றி, மண்சரிவை சரி செய்து போக்குவரத்தை சீர் செய்தனர்.

    பந்தலூர் பகுதியிலும் கனமழை பெய்தது. இதில் எருமாடு அருகே ஆண்டவன் சிறாவில் உள்ள வீரேந்திரன் எனபவரின் வீடு சேதம் அடைந்தது.

    பந்தலூர் பகுதியில் பெய்யும் தொடர்மழைக்கு பொன்னானி, சேரம்பாடி, சோலாடி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    நேற்று மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் கன மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் நகரின் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக சாலையில் சென்ற வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி மெதுவாகவே சென்றன. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சென்றதால் துர்நாற்றம் வீசியது. இதனால் மக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

    வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் நனைந்து மிதந்து கொண்டிருந்தன. பொதுமக்கள் பத்திரமாக தேவையான பொருட்களை உயரத்தில் வைத்து கொண்டனர்.

    இன்னும் பல இடங்களில் குடியிருப்புகளுக்கு நடுவே ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது போல திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

    முழங்கால் அளவையும் தாண்டி தண்ணீர் சென்றதால் மக்களால் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத சூழ்நிலை உருவானது.

    மேட்டுப்பாளையம் நகராட்சி 20-வது வார்டு மாதையன் லே-அவுட், அன்பு சீரணி நகர், நகராட்சி அண்ணா வணிக வளாகம் ஆகிய பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது.

    குறிப்பாக மாதையன் லே அவுட் குடியிருப்பில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. காட்டாறு போல சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் பொதுமக்கள் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது.

    வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதோடு மட்டுமின்றி பல்வேறு இடங்களில் குடியிருப்புக்கு அருகேயும் குளம் போல் தண்ணீர் ஆங்காங்கே தேங்கியுள்ளது.

    இதேபோல் மேட்டுப்பாளையம் நகராட்சி 6-வது வார்டில் வீட்டின் பின்பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதேபோல் என்பவரது வீட்டின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது. இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் காரமடை நில வருவாய் அலுவலர் ரேணுகாதேவி, கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    நீலகிரி மற்றும் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மரங்களும் முறிந்து விழுந்ததுடன், பெரிய, பெரிய பாறைகளும் உருண்டு வந்து தண்டவாளத்தில் விழுந்தன.
    • ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்டவாளத்தில் கிடந்த மரங்கள் மற்றும் மண்சரிவினை அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்தது.

    விடிய, விடிய பெய்த மழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் பாதையில் கல்லாறு-ஹில்குரோவ் இடையே 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

    மரங்களும் முறிந்து விழுந்ததுடன், பெரிய, பெரிய பாறைகளும் உருண்டு வந்து தண்டவாளத்தில் விழுந்தன. இதனால் தண்டவாளம் முழுவதும் மூடியபடி கிடந்தது.

    கல்லாறு-அடர்லி பாதையிலும் மண்சரிவும், மரங்கள் முறிந்து விழுந்து கிடந்தன. இந்நிலையில் நேற்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயில் புறப்பட தயாராக இருந்தது.

    தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்ட தகவல் மேட்டுப்பாளையம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து நேற்று மலைரெயில் சேவை உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் மலைரெயிலில் பயணிக்கலாம் என ஆர்வத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    தகவல் அறிந்ததும் ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்டவாளத்தில் கிடந்த மரங்கள் மற்றும் மண்சரிவினை அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் போக்குவரத்து இன்றும், நாளையும் என 2 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ரெயில் பாதை சீரமைக்கும் பணி முழுவதும் முடிந்த பின்னர் மலைரெயில் சேவை தொடங்கும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • கொணவக்கரை பகுதியில் அதிகாலை நேரத்தில் புகுந்தது
    • சமூகவலைதளங்களில் வீடியோ வைரல்

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்று வட்டாரப் பகுதியில் சமீப காலமாக வனவிலங்குகள் நகர் பகுதியில் உலா வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

    குறிப்பாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியே அமைந்துள்ள நிலையில் சமீப காலமாக கரடி, காட்டு யானைகள், காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி நகர் மற்றும் கிராம பகுதிகளுக்குள் உலா வரத்தொடங்கி உள்ளது

    கொணவக்கரை பகுதியில் அதிகாலை நேரத்தில் சிறுத்தை ஒன்று உலா வந்துள்ளது. பின்னர் அங்குள்ள தனியார் விடு திக்குள் புகுந்த சிறுத்தை, அங்கு இருந்த வாத்து ஒன்றை கவ்வி சென்றது.

    இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது.தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    வனவிலங்குகள் நட மாட்டம் அதிகரித்துள்ள நிலையில், வனத்துறையினர் இதுபோன்ற வனவிலங்குகள் கிராம பகுதிகளில் உலா வருவதை தடுக்க பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகன ரோந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் குறித்து அறிவுறுத்தல்
    • கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்பு

    அருவங்காடு,

    இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதன் ஒருபகுதியாக குன்னூர் பஸ் நிலையத்தில் கோட்டாட்சியர் பூஷனகுமார் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    அப்போது வாக்களிக்க தகுதி உடையவர்கள் அடையாள அட்டைபெற விண்ணப்பிக்க வேண்டும், மேலும் வாக்காளர் பெயர்திருத்தம், நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் ஆகியவை குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் மனு செய்து சரிசெய்து கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

    விழிப்புணர்வு நிகழ்ச்சியில் குன்னூர் தாசில்தார் கனிசுந்தரம், தேர்தல் சிறப்புபிரிவு அதிகாரி கோபி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • கோழிக்கரை பகுதியில் மர்மமாக இறந்து கிடந்தது
    • குட்டியை தேடி தாய் வருவதால் ஊழியர்கள் தீவிர கண்காணிப்பு

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டத்தில் சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் உணவு தேடி மலைகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. எனவே கோத்தகிரி, குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

    இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள கோழிக்கரை பகுதியில் பிறந்து சில நாட்களே ஆன ஒரு குட்டி பெண் யானை மர்மமாக இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்தில் குட்டி யானை சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து மாவட்ட உதவி வன பாதுகாவலர் தேவராஜ், குன்னூர் வனச்சரகர் ரவீந்திரன் முன்னிலையில் முதுமலை தெப்பக்காடு கால்நடை மருத்துவர் ராஜேஷ் பிரேத பரிசோதனை செய்தார்.

    குட்டியானையின் இறப்பு தொடர்பாக குன்னூர் வனச்சரகர் ரவீந்திரன் கூறியதாவது:-

    கோழிக்கரை பகுதியில் குட்டி யானை இறப்பு குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு சென்றோம். அப்போது சடலத்தை சுற்றிலும் 3 பெரிய யானைகள் நின்றன. பின்னர் அவை தாமாகவே அடர்ந்த வனத்திற்குள் சென்று விட்டன.

    இறந்த குட்டி யானையின் உடலை மீட்டு உடற்கூராய்வு செய்தோம். பின்னர் அந்த யானையின் உடல் பாகங்கள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

    மலைச்சரிவில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே அந்த குட்டி யானை கால்தவறி பள்ளத்தாக்கில் விழுந்து பலியானதா, உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்ததா என்பது குறித்து பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம்.

    இதற்கிடையே பலியான குட்டியின் தாய் யானை அடிக்கடி சம்பவ இடத்துக்கு வந்து செல்வதால், அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி, வனஊழியர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

    • பழவியாபாரியிடம் சீத்தாப்பழம் வாங்கி ருசிக்கிறது
    • சுற்றுலா பயணிகள் செல்போனில் புகைப்படம் எடுத்து உற்சாகம்

    அருவங்காடு,

    தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப் பகுதியில் மட்டும் காணப்படுகிறது மலபார் அணில்.

    இந்த அணில்கள் நீலகிரி, கேரளா, களக்காடு, உடுமலை போன்ற அடர்ந்த வனப்பகுதிகளில் மட்டுமே காண முடியும். அணில் வகையிலேயே உருவத்தில் மிகப்பெரியதாகவும் மற்றும் அழிந்து வரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

    இதனை பராமரித்து பாதுகாப்பாக வைக்க வேண்டுமென சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இந்த வகை அணில்கள் முகாமிட்டுள்ளது. 100 ஆண்டு கால பழமை வாய்ந்த வானுயர்ந்த மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் இந்த பூங்காவில் அதிகளவில் உள்ளன.

    இதன் காரணமாக மலபார் அணில்கள் இங்கு சுற்றி திரிகின்றன. அவ்வப்போது வெளியில் வந்து சுற்றுலா பயணிகளுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி செல்கின்றன.

    சுற்றுலா பயணிகள் அணில்களை தங்கள் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து கொள்கின்றனர்.

    தற்போது, மலபார் அணில்கள், பூங்கா நுழைவு வாயில் முன்புள்ள பழக்கடைக்கு வந்து அங்கு வைத்திருக்க கூடிய பழங்களை ருசித்து செல்கிறது.

    குறிப்பாக இங்கு பழக்கடை நடத்தி வரும் கமலா என்ற பெண்ணிடம் அவர் கடை திறக்கும் வரை காத்திருந்து அணிலுக்கு பிடித்த சீதா பழங்களை அவர் கைகளால் வாங்கி அணில்கள் ருசித்து செல்கின்றனர். இதுசுற்றுலா பயணிகளுக்கு ஆச்சரியத்தை கொடுத்து உள்ளது. அவர்கள் அதனை பார்த்து ரசித்து செல்கிறார்கள்.

    • 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்
    • அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிப்பு

    ஊட்டி,

    ஊட்டி கோட்டாட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஊட்டி இளம் படுகா் சங்க நிா்வாக குழுவுக்கான தோ்தல் வருகிற 22-ந் தேதி நடக்க உள்ளது.

    இதற்கான வேட்புமனு படிவங்கள் சங்க வளாகத்தில் உள்ள தோ்தல் அலுவலகத்தில் இதற்கென நியமனம் செய்யப்பட்ட அலுவலா் மற்றும் ஊட்டி மண்டல துணை தாசில்தாா் ஆகியோரிடமிருந்து நவம்பா் 9-ந் தேதி காலை 10 மணி முதல் 10-ந் தேதி மாலை 5 மணி வரை பெற்று கொள்ளலாம். இளம் படுகா் சங்கத்தில் நிா்வாகக் குழுவின் தலைவா், 2 துணைத் தலைவா்கள், செயலாளா், பொருளாளா், 6 நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஆகிய 11 பதவிகளுக்கு தோ்தல் நடைபெற உள்ளது.

    தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள், குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் சங்கத்தின் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். ஒரு உறுப்பினா் ஒரு பதவிக்கு மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். வேட்பு மனுவுடன் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். இது திரும்ப வழங்கப்படாது. 2011-2012-ம் நிதியாண்டின் இறுதி நாள் வரை சோ்ந்த உறுப்பினா்கள் மட்டுமே தோ்தலில் வாக்களிக்கலாம்.

    பூா்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுக்களை வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 3 மணிக்குள் இதற்காக நியமனம் செய்யப்பட்ட உதவி தோ்தல் அலுவலரிடம் வழங்க வேண்டும்.

    இளம் படுகா் சங்க கட்டிடத்தில் வருகிற 22-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை தேர்தல் நடைபெறும். அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்படும்.

    தோ்தல் தொடா்பாக எழும் கோரிக்கைகள், முறையீடுகள் குறித்து தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் கோட்டாட்சியரின் முடிவே இறுதியானது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாநில அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றனர்
    • 7-ம் வார்டு நகர்மன்ற உறுப்பினர் விசாலாட்சி பங்கேற்பு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் பெத்தலகம் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள், மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக வெளியூருக்கு செல்கின்றனர்.

    முன்னதாக அவர்கள் நீலகிரி எம்.பி ஆ.ராசாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும், 7-ம் வார்டு நகர்மன்ற உறுப்பிருமான விசாலாட்சி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

    • இணையம் மூலம் கையொப்பத்தை பதிவுசெய்தார்
    • மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தி.மு.க சார்பில் நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. இதற்காக அவர்கள் மாவட்ட அளவில் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கழக துணை பொது செயலாளரும், நீலகிரி எம்.பி.யுமான ஆ.ராசா ஊட்டி முகாம் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அப்போது அவர் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் முன்னிலையில் இணையம் மூலம் கையெழுத்தை பதிவுசெய்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர்அலி, மாநில ஆதிதிராவிடர் நலகுழு துணைசெயலாளர் பொன்தோஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் சதகத்துல்லா, தொரை, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார், துணை அமைப்பாளர்கள் பாபு, நாகராஜ், கீழ்குந்தா பேரூர் செயலாளர் சதீஷ்குமார், மாணவரணி துணை அமைப்பாளர் ஜெகதீஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் திரண்டு வந்தனர்
    • பொன்னாடை அணிவித்து ஆசிபெற்றனர்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட அ.தி.மு.க.வில் புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் அவர்கள் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் கோவைக்கு புறப்பட்டு வந்தனர்.

    அங்கு அவர்கள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து, பூங்கொத்துகள் வழங்கி வாழ்த்து பெற்றனர்.

    இதில் முன்னாள் எம்.பி கே.ஆர்.அர்ஜுணன், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் பாலநந்தகுமார், பாசறை மாவட்டசெயலாளர் அக்கீம்பாபு, மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் தேனாடு லட்சுமணன், பொதுக்குழு உறுப்பினர் மாதன், குந்தா கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்.எஸ்.வசந்தராஜன், இளைஞரணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
    • மலை ரெயில் பாதையில் சரிந்து கிடக்கும் மண் மற்றும் மரங்களை அப்புறுப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.

    உலக பாரம்பரிய சின்னமான நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலைரெயில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரெயில்நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி இயக்கப்பட்டு வருகிறது.

    உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் இந்த மலைரெயில் பெரிதும் கவர்ந்து வருகிறது.

    இம்மலை ரெயில் மழை காலங்களில் இதன் பாதையில் ஏற்படும் மண் சரிவுகளால் சரிவர இயங்க இயலாமல் அடிக்கடி தடைபட்டு நிற்கிறது.

    கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்றிரவும் பலத்த மழை பெய்தது.

    இந்த மழைக்கு கல்லார் ரெயில் நிலையம் முதல் அடர்லி ரெயில் நிலையம் வரை பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு தண்டவாள பாதை புதைந்து போனது. மேலும் மரங்களும் சாய்ந்து தண்டவாளத்தில் விழுந்தன.

    இதனால் இன்று காலை வழக்கம் போல் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு குன்னூருக்கு சுற்றுலா பயணிகளுடன் புறப்பட வேண்டிய மலைரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.மேலும் மண் சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் சீரமைப்பு பணியில் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    அவர்கள் மலை ரெயில் பாதையில் சரிந்து கிடக்கும் மண் மற்றும் மரங்களை அப்புறுப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.

    ரெயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவுகள் இன்று மாலைக்குள் சீர் செய்யப்பட்டு நாளை வழக்கம் போல் மலைரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • உரிய அனுமதியின்றி நில அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் புகார்கள் வருகிறது.
    • நில அபிவிருத்தியாளர்கள் மீது நகர் ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவு 47ஏ, 56 மற்றும் 57-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்ட எல்லைக்குள் உரிய அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும், விவசாய நிலங்களை அழித்து விவசாயம் அல்லாத நோக்கத்திற்காக அனுமதியற்ற முறையில் மனைப்பிரிவுகள் அமைக்கப்பட்டு வருவதாகவும், உரிய அனுமதியின்றி நில அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் புகார்கள் வருகிறது.

    அந்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு விதிமீறல்கள் தெரியவரும் போது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    எனவே முறையான அனுமதி ஏதும் பெறப்படாமல் அமைக்கப்படும் மனைப்பிரிவுகளில் பொதுமக்கள் யாரும் மனைகளை வாங்கி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது

    மேலும் பொதுமக்கள் யாரும் முறையான கட்டிட அனுமதி பெறப்படாமல் பணிகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அனுமதியற்ற கட்டிடங்களை இடிக்கவோ அல்லது மூடி முத்திரையிடவோ தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் மலையிட கட்டிட விதிகள் 1993, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998(திருத்தப்பட்டது 2022)ன் படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நில அபிவிருத்தியாளர்கள் மீது நகர் ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவு 47ஏ, 56 மற்றும் 57-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே நீலகிரி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி பொதுமக்கள் யாரும் கட்டிடம் கட்ட வேண்டாம் எனவும், மனைப்பிரிவு, நில அபிவிருத்தி பணிகள் மற்றும் அணுகுசாலை அமைக்கும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×