search icon
என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • மீனவர்கள் கடலுக்கு செல்ல கடந்த 17-ந்தேதி முதல் தடை விதிக்கப்பட்டது.
    • ராமேசுவரம், பாம்பன் மீன்பிடி இறங்கு தளங்கள் பரபரப்பாக காணப்பட்டது.

    ராமேசுவரம்:

    தமிழகம் முழுவதும் கடந்த வாரம் மீன்பிடி தடை காலம் முடிந்த நிலையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ராமேசுவரத்திலும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் 60 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தனர்.

    இந்த நிலையில் வங்க கடல், மன்னார் வளைகுடா மற்றும் பாக்நீரினை பகுதிகளில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்தது.

    இதையடுத்து ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல கடந்த 17-ந்தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. மேலும் மாவட்ட மீனவ நலத்துறையும் அனுமதி டோக்கன் வழங்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று மாலை முதல் காற்றின் வேகம் குறைந்து கடல் இயல்பு நிலைக்கு மாறியது. இதையடுத்து இன்று முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

    அதன்படி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று அதிகாலை மீன்பிடிக்க சென்றனர். இதனால் ராமேசுவரம், பாம்பன் மீன்பிடி இறங்கு தளங்கள் பரபரப்பாக காணப்பட்டது.

    • நாள் ஒன்றுக்கு ரூ.8 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக மீனவ சங்கத்தினர் தெரிவித்தனர்.
    • மீன்பிடி தொழிலை நம்பியுள்ள பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் கடலோர பகுதிகளில் நிலவும் நிலையற்ற வானிலை காரணமாக மன்னார்வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

    குறிப்பாக மேற்கண்ட கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக் காற்று வீசக்கூடும் என்றும், எனவே மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இதனைதொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் பாதுகாப்பு கருதி மீன்பிடிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தடை விதித்தனர். இந்த தடை மூன்றாவது நாளாக தொடருகிறது.

    இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோளியகுடி, கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட துறைமுகங்களில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. மீன்பிடி தடை காலம் முடிந்த நாளில் இருந்து பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    மேலும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் முடங்கியுள்ளனர். இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.8 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக மீனவ சங்கத்தினர் தெரிவித்தனர்.

    மேலும் மீன்பிடி தொழிலை நம்பியுள்ள பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

    • மீனவர்களை படகுகளுடன் சிறை பிடித்த இலங்கை கடற்படை, இலங்கையில் உள்ள காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகிறது.
    • கைதான மீனவர்கள் 4 பேரும் ராமநாதபுரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றவர்கள் ஆவர்.

    ராமநாதபுரம்:

    கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை அவ்வப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்பை கைது செய்வது வாடிக்கையாக உள்ளது. மீன் பிடிதடைக்காலம் முடிந்து நேற்று முன் தினத்தில் இருந்து மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள்.

    இந்த நிலையில், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேரை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்களை படகுகளுடன் சிறை பிடித்த இலங்கை கடற்படை, இலங்கையில் உள்ள காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகிறது.

    கைதான மீனவர்கள் 4 பேரும் ராமநாதபுரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றவர்கள் ஆவர். இதனால் கவலை அடைந்துள்ள தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, கடலில் அச்சமின்றி மீன் பிடிக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடலில் தற்போது ஜெல்லி மீன்கள் அதிகளவில் காணப்படுகிறது.
    • ஜெல்லி மீன்கள் உடலில் அரிப்பை ஏற்படுத்துகிறது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த அரிய மான் சிறந்த பொழுது போக்கு இடமாக திகழ்கிறது. இதனால் ராமேசுவரம் வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் பெரும்பாலானோர் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் பொழுதை கழிக்க அரியமான் கடற்கரைக்கு வருகின்றனர்.

    அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கடலில் உற்சாகமாக குளித்து மகிழ்வதுடன் கடற்கரை ஓரமுள்ள சவுக்கு காடுகளில் குடும்பத்தினருடன் அமர்த்து உணவு சாப்பிட்டு விடுமுறை நாட்களை கழித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தற்போது பக்ரீத் பண்டிகையை யொட்டி தொடர் விடுமுறை மற்றும் அரியமான் கடற்கரையில் கடற்கரை திருவிழா நடைபெற்று வருவதால் தினசரி திரளான சுற்றுலாப் பயணிகள் அரியமானுக்கு குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.

    இதனிடையே கடலில் தற்போது ஜெல்லி மீன்கள் அதிகளவில் காணப்படுகிறது. ஒளிரும் தன்மையும், மெல்லிய உடல் அமைப்பும் கொண்ட இந்த மீன்கள் தண்ணீரின் நிறத்தில் காணப்படுகின்றன. பசையும், பற்றிக் கொள்ளும் தன்மையும் உள்ளதால் மனிதர்களின் உடலில் எளிதில் ஒட்டிக் கொள்கின்றன.

    விஷத்தன்மை உள்ள இந்த மீன்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அதனை பிடித்து மகிழ்கின்றனர். அந்த மீன் ஒட்டிக்கொள்ளும் போது, அதில் இருந்து சுரக்கும் விஷத்தன்மை கொண்ட திரவம் உடலில் அரிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் ஒவ்வாமையையும் ஏற்படுத்துகிறது.

    இந்நிலையில் இன்று அரியமான் கடற்கரையில் குளித்த சுமார் 30-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை ஜெல்லி மீன் கடித்ததில் அவர்களுக்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டதுடன், ஒவ்வாமை ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களுக்கு மருத்துவ குழுவினர்கள் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக சுற்றுலா பயணிகளிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும். எனவே இதுகுறித்து கடற்கரையில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
    • மீன்பிடி துறைமுகம் நேற்று முதல் களை கட்டத்தொடங்கிவிட்டது.

    ராமேசுவரம்:

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ் கடலில் சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், தடைக் காலம் நேற்று முன்தினம் இரவுடன் நிறைவடைந்த நிலையில் ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 570-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

    இன்று காலையில் கரை திரும்பிய மீனவர்களுக்கு சிறிய படகுகளுக்கு 250 கிலோ முதல் 300 கிலோ வரையிலும், பெரிய படகு களுக்கு 300 கிலோ முதல் 450 கிலோ வரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இறால் மீன், நண்டு, கணவாய் உள்ளிட்ட விலை உயர்ந்த மீன்கள் கிடைத்திருந்தன.

    61 நாட்கள் தடை காலம் நிறைவடைந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு ரூ.8 கோடி வரையிலான இறால் மீன், நண்டு, கனவாய் போன்றவை கிடைத்துள்ள தால் மகிழ்ச்சியடைந்தனர்.

    கன்னியாகுமரி

    மேலும் முதல் நாளான நேற்று ஒரே நாளில் 293 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. இதில் 4 படகுகள் பழுது காரணமாக பாதி வழியில் கரைக்கு திரும்பிவிட்டன. கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மற்ற விசைப்படகுகள் இரவு 9 மணி முதல் கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பினார்கள்.

    கரை திரும்பிய விசை படகுகளில் சீலா, வஞ்சிரம், நெய்மீன், பாறை, விளமீன், கைக்கொழுவை, நெடுவா, முட்டி, கணவாய் சூறை, கிளாத்தி, சுறா, நவரை, அயிலை போன்ற உயர்ரக மீன்கள் கிடைத்தன. மீனவர்கள் பிடித்துக்கொண்டு வந்த உயர்ரக மீன்களை போட்டி போட்டு ஏலம் எடுப்பதற்காக வெளியூர், வெளிமாவட்டங்கள் மற்றும் கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான மீன் வியாபாரிகள் வந்து குவிந்திருந்தனர்.

    இதனால் 2 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றதால் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகம் நேற்று முதல் களை கட்ட தொடங்கிவிட்டது. கடலுக்கு சென்ற முதல் நாளே ரூ.3 கோடி மதிப்புள்ள மீன்கள் சிக்கின. இதனால் சின்னமுட்டம் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • அமைச்சர் செஞ்சி மஸ்தானும் மரியாதை செலுத்தி தீ விபத்தில் இறந்த 7 தமிழர்களின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.
    • ராமு உடல் அவரது சொந்த ஊரான பரமக்குடி தென்னவனூக்கு ஆம்புலன்சு மூலம் கொண்டு வரப்பட்டது.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா தென்னவனூரை சேர்ந்தவர் கருப்பணன் மகன் ராமு (வயது 60). இவர் தற்போது அடுத்த பட்டணம்காத்தான் செக்போஸ்ட் அருகில் குடியிருந்து வந்தார்.

    இவருக்கு திருமணமாகி குருவம்மாள் என்ற மனைவியும், சரவணக்குமார் என்ற மகனும், சத்யா என்ற மகளும் உள்ளனர். மகள் சத்யாவுக்கு திருமணமாகி கணவருடன் தனிக்குடித்தனம் வசித்து வந்தார்.

    ராமு முதலில் உள்ளூரில் வேலை பார்த்தார். ஆனால் குழந்தைகளை படிக்க வைக்கவும், மகளை திருமணம் செய்து கொடுக்கவும், குடும்பம் நடத்தவும் பணம் பற்றாக்குறையாக இருந்ததால் ராமு வெளிநாட்டு வேலைக்கு செல்ல முடிவெடுத்தார்.

    அதன்படி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றார். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில்தான் அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 12-ந்தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதில் மூச்சுத்திணறலில் ராமு உள்பட 7 தமிழர்கள் என மொத்தம் 45 இந்தியர்கள் உயிரிழந்தனர்.

    இவர்களின் உடல்கள் விமானம் மூலம் நேற்று கொச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவற்றை கேரளா முதல்வர் பினராயி விஜயன் முறைப்படி பெற்றுக்கொண்டார்.

    அங்கு தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தானும் மரியாதை செலுத்தி தீ விபத்தில் இறந்த 7 தமிழர்களின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். அதன்படி ராமு உடல் அவரது சொந்த ஊரான பரமக்குடி தென்னவனூக்கு ஆம்புலன்சு மூலம் கொண்டு வரப்பட்டது.

    அங்கு கூடியிருந்த மனைவி மற்றும் உறவினர்கள் ராமு உடலை பார்த்து கதறி அழுதனர். தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் ராமு உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    தமிழக அரசு சார்பில் அறிவித்த ரூ.5 லட்சத்திற்கான காசோலையை ராமுவின் குடும்பத்தாரிடம் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு வழங்கினார்.

    • கடல் தண்ணீர் உள்புகுந்ததால் படகு மூழ்க தொடங்கியது.
    • நடுக்கடலுக்கு சென்று 3 மீனவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மண்டபம்:

    தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று அதிகாலை முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 61 நாட்களுக்கு பிறகு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இன்று அதிகாலை ஆர்வத்துடன் மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டனர்.

    மண்டபத்தை சேர்ந்த சுதர்சன் என்பவரது படகில் பாம்பனை சேர்ந்த மீனவர்கள் பரக்கத்துல்லா, கலீல் ரகுமான், ஆரோக்கியம், பிரசாத், மண்டபம் முகமது அனீபா ஆகிய 5 பேர் கட லுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    மண்டபத்தில் இருந்து சில மைல் தொலைவில் நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சூறாவளி காற்றால் அலையின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் விசைப்படகு கட்டுப்பாடின்றி தள்ளாடியது.

    தொடர்ந்து கடல் சீற்றம் காரணமாக விசைப்படகில் தண்ணீர் புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் தண்ணீரை வெளியேற்ற முயன்றனர். ஆனால் அவர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை. தொடர்ந்து கடல் தண்ணீர் உள்புகுந்ததால் படகு மூழ்க தொடங்கியது.

    செய்வதறியாது தவித்த மீனவர்கள் கடலில் குதித்தனர். இதில் பிரசாத், முகமது அனீபா ஆகியோர் அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த மற்றொரு படகில் ஏறி உயிர் தப்பினர். ஆனால் மற்ற மீனவர்களான பரக்கத்துல்லா, கலீல்ரகுமான், ஆரோக்கியம் ஆகியோர் கடல் சீற்றத்தால் மாயமானார்கள். அவர்களை பல மணி நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து கரைக்கு அவசரமாக திரும்பிய மீனவர்கள் படகு மூழ்கி மீனவர்கள் மாயமானது தொடர்பாக கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கடலோர காவல்படை போலீசார் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்கள் சம்பவம் நடந்த நடுக்கடலுக்கு சென்று 3 மீனவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தடை காலம் முடிந்து முதல் நாளிலேயே விசைப்படகு மூழ்கி மீனவர்கள் மாயமானது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்களின்கதி என்ன என்று இதுவரை தெரியவில்லை.

    • ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட துறைமுகங்களில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்பட்டது.
    • தடைகாலம் நிறைவடைந்தவுடன் அனைத்து படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் என மீனவ சங்கத்தினர் தெரிவித்தனர்.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் மீன்கள் இனப்பெருக்க காலமாக கருத்தப்படும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட துறைமுகங்களில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்பட்டது.

    இந்த தடைகாலத்தின்போது மீனவர்கள் தங்களது விசைப்படகுகள் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். மேலும் வலைகள், போட் பலகை உள்ளிட்ட உபகரணங்களும் சீரமைக்கப்பட்டது. இதற்கிடையே 61 நாட்கள் அமலில் இருந்த மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

    ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 550-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தங்களது விசைப்படகுகளை 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை சீரமைத்து கடலுக்கு மீன்பிடிக்க செல்ல ஆயத்தமாகி உள்ளனர். விசைப்படகுகளில் வலைகள், ஐஸ்கட்டிகள், டீசல் கேன்கள் உள்ளிட்ட பொருட்கள் இன்று காலையில் சிறிய பைபர் படகுகள் மூலம் கொண்டு சென்றனர். தடைகாலம் நிறைவடைந்தவுடன் அனைத்து படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் என மீனவ சங்கத்தினர் தெரிவித்தனர்.

    தடைகாலம் நிறைவடைந்து 61 நாட்களுக்கு பின் மீன்பிடிக்க செல்வதால் அதிகளவில் இறால் மீன், நண்டு, கணவாய் மற்றும் விலை உயர்ந்த மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீனவர்கள் கடலுக்கு செல்கிறார்கள். மீன் ஏற்றுமதியாளர்கள் சிண்டிகேட் அமைத்து விலையை குறைத்து எடுப்பதை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து மீனவர்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தடைகாலம் நிறைவடைந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இந்திய எல்லைக்குள் மட்டுமே மீன்பிடிக்க வேண்டும். ஆர்வம் மிகுதியால் எல்லைதாண்டி இலங்கை கடற்பகுதிக்குள் மீன்பிடிக்க செல்லக்கூடாது. மேலும் தடை செய்யப்பட்ட வலைகளை எக்காரணத்தை கொண்டும் பயன்படுத்தக்கூடாது என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    • பேருந்தின் மீது திடீரென சாய்ந்த மின்கம்பத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    • விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அரண்மனை பகுதியிலிருந்து இன்று வழக்கம் போல அரசு பேருந்து ஆற்றங்கரை என்ற பகுதி சென்று விட்டு ராமநாதபுரம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

    இந்த நிலையில் ஆட்டோ ஒன்று பயணிகளை ஏற்றி வந்து கொண்டிருந்தது. அப்போது ஆட்டோவும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளனது.

    விபத்தின் போது பேருந்தின் மீது திடீரென சாய்ந்த மின்கம்பத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு வந்து விபத்தில் காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர் மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அக்னி தீர்த்தக்கடலில் மூழ்கி எழுந்தால் மற்றவர்கள் விட்டுச்சென்ற ஆடைகளுடன் எழும் நிலை உருவாகுகிறது.
    • பலர் கடலில் புனித நீராடுவதை தவிர்த்து தலையில் தண்ணீரை தலையில் தெளித்துக் கொண்ட கையோடு அங்கிருந்து புறப்பட்டு செல்கின்றனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் தென்னிந்தியாவின் காசி என்று போற்றப்படும் ராமநாத சுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இது இந்துக்களின் புனித ஸ்தலமாக கருதப்படுவதால் நாள்தோறும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    குறிப்பாக தமிழகத்தை விட வட மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோவிலின் பெருமைகளை அறிந்து இங்குள்ள அக்னி தீர்த்தக்கடல் மற்றும் 21 புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி, அம்பாளை தரிசித்து செல்கிறார்கள்.

    மேலும் அக்னி தீர்த்த கடற்கரையோரம் அமர்ந்து புரோகிதர்கள் மூலம் முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து செல்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். அவ்வாறு வழிபாடு நடத்துபவர்கள் விதிகளை மீறி தங்களுடைய ஆடைகளையும் கடலிலும், ஆங்காங்கேயும் விட்டு செல்வதால் கடற்கரையை சுற்றியுள்ள பகுதி சுகாதார சீர்கேடுகளுடன் முகம் சுழிக்க வைப்பதாக அமைகிறது.

    இதற்கிடையே நகராட்சி நிர்வாகம் சார்பில் அக்னி தீர்த்தக்கடலில் கழிவுநீரும் கலக்கப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாக பாவங்களை தொலைத்து புண்ணியங்களை தேட வரும் பக்தர்கள் படும் அவஸ்தை சொல்லிமாளாது. அக்னி தீர்த்தக்கடலில் மூழ்கி எழுந்தால் மற்றவர்கள் விட்டுச்சென்ற ஆடைகளுடன் எழும் நிலை உருவாகுகிறது. பல இடங்களில் பக்தர்கள் திறந்த வெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்த தயங்குவதில்லை.

    தூய்மையற்று அதன் புனித தன்மை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக கூறும் பக்தர்கள், மன வருத்தமும் அடைவதாக ஆதங்கம் தெரிவிக்கிறார்கள். இன்னும் பலர் கடலில் புனித நீராடுவதை தவிர்த்து தலையில் தண்ணீரை தலையில் தெளித்துக் கொண்ட கையோடு அங்கிருந்து புறப்பட்டு செல்கின்றனர்.

    கோடிக்கனக்கான இந்துக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் அக்னி தீர்த்தக்கடலின் புனித தன்மையை பாதுகாக்கவும், பக்தர்கள் சுகாதாரத்தை கருத்தில் கொண்டும் மாவட்ட நிர்வாகம் தயக்கமின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இரண்டு மாதங்கள் மட்டுமே இந்த பாலம் பயன்பாட்டில் இருந்தது.
    • பாலம் ஒரு பகுதி சேதடைந்து உடைந்து கடலில் மூழ்கி வருகிறது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அமைந்துள்ளது தனுஷ்கோடி. இந்த பகுதியில் கடல் பெரும்பாலான நாட்களில் கடல் சீற்றத்துடனேயே காணப்படும். இதனால், இந்த பகுதியில் துணை துறைமுகம் அமைக்க முடியாத நிலை இருந்து வருகிறது.

    இந்த நிலையில், இங்கு ரூ.15 கோடி மதிப்பீட்டில் 70 அடி அகலமும், 70 அடி நீளமும் கொண்ட 'டி' வடிவிலான மீன் இறங்கு தளம் அமைக்கப்பட்டது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் இந்த இடத்தில் மீன் இறங்கு தளம் அமைத்தால் சேதமடைந்து விடும் என தெரிவித்தனர். ஆனால் அதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

    இதன் பின்னர் பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. இரண்டு மாதங்கள் மட்டுமே இந்த பாலம் பயன்பாட்டில் இருந்தது. இதன் பின்னர் கடல் சீற்றம் காரணமாக அந்த பகுதிக்கு மீனவர்கள் படகுகளுடன் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனைதொடர்ந்து, மீனவர்கள் இந்த மீன் இறங்கு தளத்தை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டனர். இதன் பின்னர் தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களில் செல்பி எடுக்கும் இடமாக இந்த பாலம் மாறியது.

    இந்த நிலையில் தொடர்ந்து சூறை காற்று மற்றும் கடல் சீற்றத்தில் ஏற்படும் அலைகள் மீன் இறங்கு தளத்தில் மீது மோதி மோதி பாலம் சேதமடைய தொடங்கியது. இதன் பின்னர் அந்த பாலம் முழுமையாக அடைக்கப்பட்டது. தற்போது பாலம் ஒரு பகுதி சேதடைந்து உடைந்து கடலில் மூழ்கி வருகிறது. மீனவர்கள் பலமுறை எச்சரித்தும் அந்த இடத்தில் பாலத்தை கட்டி ரூ.15 கோடியை அதிகாரிகள் வீணடித்து விட்டதாக தனுஷ்கோடி மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    • பக்தர்கள் நீராட முடியாமல் கடும் சிரமம் அடைந்தனர்.
    • படகுகளும் தரைதட்டி நின்றது.

    ராமேசுவரம்:

    தென்னகத்து காசி என்று போற்றப்படும் பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராம நாத சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அமாவாசை நாளில் இங்குள்ள அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது புண்ணியமாக கருதப்படுகிறது.

    எனவே மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கடந்த ஒரு மாதமாக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் ராமேசுவரத்தில் வழக்கத்தைவிட பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. தற்போது பள்ளி விடுமுறை நீட்டிக்கப்பட்டு இருப்பால் ராமேசுவரத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் இன்று வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று முதலே பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவ ரத்தில் குவிந்தனர். அவர்கள் இன்று அதிகாலை அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    வழக்கமாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் நிலையில் அக்னி தீர்த்தக் கடலில் நீர் மட்டம் உள்வாங்கி காணப்பட்டது.

    அதன்படி இன்று காலை அக்னி தீர்த்த கடல் திடீரென உள்வாங்கியது. இந்த நிகழ்வு அங்கு வந்த பக்தர்களுக்கு புதியதாக இருந்தது. சுமார் 150 மீட்டர் தூரம் கடல் உள் வாங்கியதால் பவளப்பாறைகள் வெளியில் தெரிந்ததோடு சேறும், சகதியுமாக காணப்பட்டன. இதனால் பக்தர்கள் நீராட முடியாமல் கடும் சிரமம் அடைந்தனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த படகுகளும் தரைதட்டி நின்றது.

    சில மணி நேரத்திற்கு பின் மீண்டும் கடல் இயல்பு நிலைக்கு மாறியது. கடல் உள்வாங்குவது உள்ளூர் மக்களுக்கு வழக்கமானதாக இருந்தாலும், வெளியூரிலிருந்து வந்தவர்களுக்கு புதிய அனுபவமாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் உள்வாங்கிய கடலை செல்போன்களில் படம் பிடித்துக்கொண்டனர்.

    இதற்கிடையே அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் நீராடிக்கொண்டு இருக்கும் போது திடீரென நகராட்சி சுத்திகரிப்பு நிலை யத்தில் இருந்து கழிவு நீரை திடீரென திறந்து விட்டதால் நுர்நாற்றம் வீசியது. அந்த பகுதியில் நீராடிக்கொண் டிருந்த பக்தர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

    அக்னி தீர்த்தம் என இறை நம்பிக்கையுடன் நீரா டும் இடத்தில் கழிவு நீர் திறந்து விடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். அந்த பகுதியில் நீராடும் பக்தர்களுக்கு தொற்று நோய் ஏற்பட்டால் யார் பொறுப்பு என கேள்வி எழுப்பினர். 

    ×