search icon
என் மலர்tooltip icon

    தென்காசி

    • 14 இடங்களில் தையல் போட்டதாக கூறப்படுகின்றது.
    • மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி திருமலை கோவில் அடிவாரப் பகுதியில் தனியார் தோட் டத்தின் காவலாளியாக இருப்பவர்கள் பரமசிவன்-காளியம்மாள் தம்பதியினர். இவர்களது மகன் கவுசிக்(வயது 10). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகின்றார்.

    கடந்த 7-ந்தேதி சைக்கிளில் இருந்து கீழே விழுந்த கவுசிக் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை உறவினர் பூவையா அழைத்து சென்றுள்ளார்.

    அங்கு சிறுவனுக்கு தலைப்பகுதியில் சுத்தம் செய்யாமல் 14 இடங்களில் தையல் போட்டதாக கூறப்படுகின்றது.

    இதன் தொடர்ச்சியாக மறுநாள் கடுமையான வலியில் துடித்த சிறுவனை அவரது தாய் காளியம்மாள் தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து தலையில் பட்ட காயத்திற்கு உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேலும் தலையில் பட்ட காயத்தின் பகுதி புண் ஏற்பட்டு சீழ் வடிந்து பெரும் பாதிப்பு ஏற்படும் சூழல் இருந்தது. சரியான நேரத்தில் சிறுவனை அழைத்து வந்ததால் அவரது தலையில் இருந்த மண் உள்ளிட்டவைகள் உடனடியாக சுத்தம் செய்யப்பட்டு மறு சிகிச்சை அளிக்கப்பட்டு அவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து அவரது தாயார் தெரிவிக்கும்போது, பண்பொழியில் உள்ள ஒரு மருத்துவமனையில் காயம்பட்ட பகுதிகளில் சுத்தம் செய்யப்படாமல், வலிக்கு எந்த விதமான ஊசி உள்ளிட்டவைகள் செலுத்தாமல், முறையான சிகிச்சை அளிக்காமல் அவசர கதியில் தனது குழந்தைக்கு சிகிச்சை அளித்ததாக தெரிவித்தார்.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து அவரது உத்தரவுப்படி நேற்று இரவு மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் பிரேம லதா தலைமையில் மாவட்ட மருத்துவமனை கண்காணிப் பாளர் ஜெஸ்லின் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் அந்த மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அந்த மருத்துவமனையில் நெல்லையை சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர் பெயரில் போர்டு வைக்கப்பட்டி ருந்தது. ஆனால் அங்கு அவர் இல்லை.

    அவருக்கு பதிலாக மருத்துவமனை கட்டிடத்தின் உரிமையாளரான கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த அமீர் ஜலால் மருத்துவம் பார்த்து வருவதை கண்டு பிடித்தனர்.

    அப்போது மருத்துவ அதிகாரிகள் குழுவினர், அங்கு முதியவர் ஒருவருக்கு சிகிச்சையளித்ததையும் கண்டறிந்து அவர் மருத்து வம் படிக்காமல் மருத்துவம் பார்த்தத்தை அறிந்தனர்.

    தொடர்ந்து அச்சன்புதூர் போலீஸ் நிலையத்தில் சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் அளித்த புகாரை தொடர்ந்து அமீர் ஜலாலை கைது செய்தனர். விசாரணையில், அவர் மருத்துவம் படிக்காமல் 17 ஆண்டு காலமாக மருத்துவம் பார்த்தது தெரிய வந்துள்ளது.

    • ஆடித்தபசு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
    • விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவ தலங்களில் ஒன்று.

    இங்கு சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமான் கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார். இத்தகைய அரிய நிகழ்ச்சியே ஆடித்தபசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடித்தபசு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று அதிகாலை 5 மணிக்கு கோமதி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது.

    கொடி ஏற்ற நிகழ்ச்சியில் தென்காசி எம்.பி. டாக்டர் ராணிஸ்ரீ குமார், ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி., தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி, நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா வருகிற 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    • குற்றாலத்தில் தங்கியிருந்த சாட்டை துரைமுருகனை திருச்சி போலீசார் கைது செய்தனர்.
    • முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன் குற்றாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றாலத்தில் தங்கியிருந்த சாட்டை துரைமுருகனை திருச்சி போலீசார் கைது செய்தனர்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரசார மேடையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழக அரசையும் தரக்குறைவாக விமர்சித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    தென்காசி மாவட்டம் குற்றாலம் வந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    • தென்காசி மாவட்டத்தில் உள்ள சசிகலாவின் ஆதரவாளர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
    • சொக்கம்பட்டி ராஜா, ஜெகன் உள்ளிட்டவர்கள் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.

    தென்காசி:

    அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கவும், 2026-ல் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரவும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திக்க இருப்பதாக சசிகலா தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் சசிகலா வருகிற 17-ந்தேதி தனது சுற்றுப்பயணத்தை தென்காசி மாவட்டத்தில் இருந்து தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதற்காக 16-ந் தேதி இரவு 9 மணியளவில் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தரும் சசிகலா, மறுநாள் 17-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வரை தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்து உரையாட உள்ளார். அதனை தொடர்ந்து அவர் மற்ற மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    இதற்கிடையே தென்காசிக்கு 16-ந்தேதி வருகை தரும் சசிகலாவிற்கு இலத்தூர் விலக்கு பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்க தென்காசி மாவட்டத்தில் உள்ள சசிகலாவின் ஆதரவாளர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்கான ஆயத்தப் பணிகளில் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    அவர் 21-ந்தேதி வரை தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களை சந்திக்க உள்ள நிலையில், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும், அதற்கு தேவையான அனுமதியை பெறுவதற்காகவும் வக்கீல் பூசத்துரை தலைமையில், குத்துக்கல்வலசை செல்வம், சின்ன ஆணைக்குட்டி பாண்டியன், செந்தூர் பாண்டியன், ரமேஷ் பாண்டியன், சுந்தரராஜன், பண்பொழி பேரூர் உறுப்பினர் சுப்பையா கண்ணு, சுரேஷ், சொக்கம்பட்டி ராஜா, ஜெகன் உள்ளிட்டவர்கள் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.

    அதனை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தேவையான பாதுகாப்புகள் அளிக்க ஏற்பாடுகள் செய்வதாக உறுதி அளித்தார்.

    • பொதுவாக வார இறுதி நாட்களில் அருவிகளில் கூட்டம் அலைமோதும்.
    • இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்து வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்பட்டு வரும் குற்றாலம் அருவிகளில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை காலமான ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சீசன் தொடங்கும்.

    அப்போது அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவு ஆர்வம் காட்டுவார்கள்.

    தற்போது குற்றாலத்தில் சீசன் தொடங்கி உள்ள நிலையில் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது. இதனால் உள்ளூர் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளிக்க குவிந்து வருகின்றனர்.

    பொதுவாக வார இறுதி நாட்களில் அருவிகளில் கூட்டம் அலைமோதும். அதன்படி இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்து வருகிறது.

    இருப்பினும் இன்று காலை முதல் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    நேற்று காலை முதல் குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வெயில் சுட்டெரித்த நிலையில் பிற்பகலுக்கு மேல் குளிர்ந்த காற்றுடன் மிதமான சாரல் மழை பரவலாக பெய்தது.

    இதனால் குளிர்ந்த காற்றுடன் ரம்மியமான சூழ்நிலை நிலவுவதால் சீசனை அனுபவிக்க வெளியூர் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அங்கு குளுகுளு சீசன் நிலவுகிறது.

    • தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணி மாற்றம் செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து குருவையாவை கைது செய்தனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்திநகர் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அவர் கணவரை இழந்த நிலையில் தன் குழந்தையுடன் காந்திநகர் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சங்கரன்கோவிலில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த குருவையா என்பவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் அவர் பழங்கோட்டை பகுதிக்கு மாற்றப்பட்டார். அங்கும் பக்கத்து வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த சம்பவத்தில் அங்கிருந்து தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணி மாற்றம் செய்யப்பட்டார்.

    இவர் ஏற்கனவே சங்கரன்கோவிலில் பணிபுரிந்து வந்ததபோது காந்திநகர் பகுதியை சேர்ந்த இளம்பெண் அறிமுகம் என்பதால் அவருக்கு தன்னுடைய செல்போன் மூலம் ஆபாச 'மெசேஜ்' அனுப்பியதாக கூறப்படுகிறது.

    மேலும் இதுகுறித்து போலீசில் கூறினால் கொன்று விடுவேன் என்று அந்த பெண்ணை மிரட்டி உள்ளார். இது குறித்து அந்த இளம்பெண் சங்கரன்கோவில் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குருவையாவை கைது செய்தனர்.

    இதேபோல் காந்திநகர் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (30), ராஜா (35), சண்முக பிரபு (36) ஆகியோர் அந்த பெண் வேலைக்கு செல்லும் போது அடிக்கடி கிண்டல் செய்து வந்ததாகவும், மேலும் அவரிடம் ஆபாச வீடியோ வெளியிட்டு விடுவோம் என கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அந்த பெண் அளித்த புகாரின் பேரில் முத்துக்குமார், ராஜா, சண்முகபிரபு ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

    • ஏற்கனவே மாலை 5.30 மணிக்கு மேல் குளிக்க அனுமதி மறுப்பு.
    • சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

    தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முக்கிய சுற்றுலா தளமாக விளங்கிவரும் குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதத்தில் சீசன் களை கட்டும் .

    அப்போது அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுவர். தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குற்றால அருவிகளுக்கு குளிக்க வருவர்.

    இந்நிலையில், பழைய குற்றால அருவியில் இரவு 8 மணி வரை குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சுற்றுலா பயணிகள் தென்காசி பழைய குற்றால அருவியில் குளிக்க காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    பழைய குற்றால அருவியில் ஏற்கனவே மாலை 5.30 மணிக்கு மேல் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    இது, சுற்றுலா பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • மலைப்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது.
    • குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    நெல்லை:

    நெல்லையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தற்போது மழை பெய்யவில்லை. எனினும் 2 நாட்களாக பெய்த மழையால் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகியவற்றின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 143 அடி கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 102.95 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து116.53 அடியாகவும் உள்ளது.

    மலைப்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது. மாஞ்சோலை வனப்பகுதியில் சாரல் மழை பெய்த வண்ணனம் உள்ளது. இதனால் அங்குள்ள ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு எஸ்டேட்டுகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவுகிறது. காலையில் இருந்து வெயில் அடித்து வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மழை இல்லாததால் குற்றாலத்தில் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. எனினும் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இன்று விடுமுறை தினத்தையொட்டி காலை முதலே மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    அணைகளை பொறுத்த வரை குண்டாறு அணை நீர்மட்டம் கடந்த ஒரு வாரமாக நிரம்பி வழிகிறது. கடனா அணை 60.30 அடியாகவும், ராமநதி அணை 76 அடியாகவும் உள்ளது. அடவிநயினார் கோவில் அணை நீர்மட்டம் இன்று 1 அடி உயர்ந்து 93.25 அடியாக உள்ளது. மாவட்டம் முழுவதும் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது. விவசாயிகள் கார் பருவ சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
    • குற்றாலத்தில் குளு குளு சீசன் நிலவுகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.

    கேரளாவில் மழை தீவிரம் எடுத்துள்ள நிலையில் தென்காசியிலும் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் அங்கு குளு குளு சீசன் நிலவுகிறது.

    சாரல் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. தற்போது மெயின்அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வரும் நிலையில் குளுமையான காற்றுடன் அவ்வப்போது சாரல் மழையும் விட்டுவிட்டு பெய்து வருகிறது.

    இதனால் குற்றாலத்தில் சீசன் களைகட்டி உள்ளது. இதனால் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் குடும்பம் குடும்பமாக கார்களிலும், வேன்களிலும் வந்தனர்.

    இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மேலும் அருவியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளதால் அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

    • குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை பெய்யும்.
    • அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் சீசன் காலமாக கருதப்படும். இந்த காலங்களில் குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை பெய்யும்.

    மேலும் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இந்த அருவிகளில் குளிப்பதற்கும், குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழையில் நனைவதற்கும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணி கள் குற்றாலம் வருகை தருவார்கள்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக தென்காசி, குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழையினால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் நலன் கருதி குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நேற்று முன்தினம் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

    குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை அதிகமாக பெய்வதால் அருவிகளில் குளிக்க தடை நேற்று நீட்டிக்கப்பட்ட நிலையில், நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் இன்றும் 3-வது நாளாக மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • குற்றாலம் அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • சுற்றுலாப் பயணிகள் சிறிது நேரம் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சுற்றுலா தலமான குற்றாலம் அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    இந்நிலையில் நேற்று மாலையில் தென்காசி, செங்கோட்டை, புளியரை, மேலகரம், இலஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை தொடர்ந்து பெய்தது.

    மலைப்பகுதிகளிலும் மழை பெய்ததன் காரணமாக குற்றாலம் அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அபாய ஒலி எழுப்பப்பட்டு மெயின் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இன்று காலையில் பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் சிறிது நேரம் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் தொடர்ந்து பெய்த சாரல் மழையால் அங்கு தண்ணீர் மேலும் அதிகரித்ததால் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் போலீசாரால் உடனடியாக அப்புறப்படுத்தப் பட்டனர்.

    மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சிற்றருவி மற்றும் புலியருவியில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    பிரதான அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர். 

    • சேர்வலாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மட்டும் 2 மில்லி மீட்டர் மழை பெய்தது.
    • குளிர்ந்த காற்று வீசுவதால் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பிற்பகலில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் வானம் மேக மூட்டமாக காட்சியளித்தது. ஆனால் மழை எதுவும் பெய்யவில்லை. அதேநேரம் கடந்த சில நாட்கள் பெய்த சாரல் மழை காரணமாக அணைகளுக்கு குறைந்த அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பிரதான அணையான பாபநாசம் அணைக்கு 433 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    143 அடி கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் தற்போது 87.80 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 98.16 அடியாகவும், மணிமுத்தாறு அணையில் நீர் இருப்பு 77.94 அடியாகவும் உள்ளது. கடந்த ஆண்டு இந்த 3 அணைகளிலும் தற்போதைய அளவை விட பாதிக்கும் கீழாகவே நீர் இருப்பு இருந்தது. சேர்வலாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மட்டும் 2 மில்லி மீட்டர் மழை பெய்தது.

    இன்று காலை முதலே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வானில் கருமேகங்கள் திரண்டு காணப்படுகிறது.

    குளிர்ந்த காற்று வீசுவதால் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் பெய்து வரும் மழையின் எதிரொலியாக தென்காசியில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்த வண்ணம் உள்ளது. சிவகிரி பகுதியில் மட்டும் 1 மில்லி மீட்டர் மழை பெய்தது.

    அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது. இன்று காலை வரை ராமநதியில் 8 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 5.5 மில்லி மீட்டரும், குண்டாறில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. 84 அடி கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 66 அடியை எட்டியுள்ளது.

    குண்டாறு அணை நீர்மட்டம் 32 அடியை நெருங்கி உள்ளது. அடவிநயினார் அணையில் 67 அடி நீர் இருப்பு உள்ளது.

    மலைப்பகுதியில் பெய்யும் மழையின் காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அதில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து வருகின்றனர். மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து குளித்து செல்கின்றனர்.

    ×