search icon
என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • ஜெயக்குமாரின் நண்பர்கள், உறவினர்கள், என பலதரப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.
    • வாக்குமூலங்களை போலீசார் கவனமாக ஆராய்ந்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஜெயக்குமாரின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள், வேலையாட்கள், ஊர் மக்கள் என பலதரப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.

    இந்நிலையில் ஜெயக்குமார் உடல் கிடந்த தோட்டத்தில் சிக்கியுள்ள ஆதாரங்கள், சாட்சியங்களின் வாக்குமூலங்களை போலீசார் கவனமாக ஆராய்ந்து வருகின்றனர். கடந்த 4-ந்தேதி ஜெயக்குமார் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அதற்கு முந்தைய நாள் மற்றும் அதற்கு அடுத்த நாள் வரை கரைசுத்துபுதூர் சுற்றுவட்டாரத்தில் அதிகம் பயன்பாட்டில் இருந்த செல்போன் எண்கள் பட்டியலை எடுத்துள்ளனர். அதன் மூலம் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் ஒரு திருப்பம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே ஜெயக்குமார் வழக்கில் அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டவர்களிடம் ஏற்கனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான தனிப்படையினர் எழுத்து பூர்வமாக வாங்கிய தகவல்களை ஆராயும் பணி நடக்கிறது.

    1,500 பக்கங்கள் கொண்டதாக ஒப்படைக்கப்பட்ட அந்த தகவல்களை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலான குழுவினர் கவனமாக படித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • கோடை மழை வழக்கத்தை விட சற்று அதிகமாகவே பெய்துள்ளது.
    • விவசாய பணிகளுக்கும் தண்ணீர் திறக்கப் படுகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இந்த ஆண்டு கோடை மழை வழக்கத்தை விட சற்று அதிகமாகவே பெய்துள்ளது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மழை குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

    நெல்லையில் மீண்டும் கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு படை யெடுத்து வருகின்றனர். பாபநாசம் அகஸ்தியர் அருவி, களக்காடு தலையணை, பணகுடி குத்திரபாஞ்சான் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் குளித்து மகிழ குடும்பம் குடும்பமாக சென்று வருகின்றனர்.

    மேலும் மாஞ்சோலை தேயிலை தோட்டம் விரைவில் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருப்பதால் அதற்கு முன்பே மாஞ்சோலையை பார்வையிட்டு வந்துவிட வேண்டும் என்று அங்கும் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

    வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கால்நடைகள் பகல் நேரங்களில் குளம், குட்டைகளில் இருக்கும் தண்ணீருக்குள் தஞ்சம் அடைவதை காண முடிகிறது.

    இன்று காலை நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் மூலக்கரைப் பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் மட்டும் 2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கடுமையான வறட்சியை நோக்கி சென்ற பிரதான அணைகளின் நீர்மட்டம் கோடை மழை காரணமாக வெகுவாக உயர்ந்துள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு நீங்கி உள்ள தோடு, விவசாய பணிகளுக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த ஆண்டு கோடை மழை நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு பெருமளவு கை கொடுத்து உள்ளது என்றே கூறலாம்.

    கடந்த ஆண்டு இதே நாளில் பிரதான அணை யான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் நீர் இருப்பு 29.75 அடி மட்டுமே இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 74.20 அடியில் உள்ளது.

    118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டு 62.15 அடியாக இருந்த நிலையில் தற்போது 83.53 அடியாக உள்ளது. மேலும் சேர்வலாறு அணை நீர்மட்டம் இந்த ஆண்டு இன்று 90 அடியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் அந்த அணையில் 48.75 அடி மட்டுமே நீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பாபநாசம் அணை நீர்மட்டம் 2 மடங்கும், சேர்வலாறு அணை நீர் இருப்பு ஒரு மடங்கும் உயர்ந்து இருக் கிறது.

    இதற்கிடையே நீர் போதிய அளவு இருப்பதால் அணைகளில் இருந்து முன் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு விடும் என்பதால் விவசா யிகள் தற்போது நெல் நடவு பணிகளை தொடங்கி உள்ளனர். பாபநாசம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், முக்கூடல், அரியநாயகிபுரம், கல்லூர், சுத்தமல்லி உள்ளிட்ட இடங்களில் நெல் நடவுக்காக பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தில் சில நாட்களாகவே மழை இல்லை. அதேநேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் சாரல் மழையால் குற்றா லத்தில் மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குறைந்த அளவில் தண்ணீர் விழுகிறது. அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருவதால் நீண்ட வரிசையில் நின்று குளிக்கின்றனர்.

    கோடை மழையால் பாவூர்சத்திரம், செங்கோட்டை, தென்காசி, ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கிணறுகளில் நீர்மட்டம் அதிகரிப்பால் விவசாயிகள் கத்தரிக்காய், தக்காளி, சின்ன வெங்காயம், மிளகாய், மல்லி இலைகளை பயிரிட்டுள்ளனர். சங்கரன்கோவில் சுற்று வட்டாரத்தில் மானாவாரி பயிர்களான உளுந்து, சோளம் உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் நேற்று திடீர் சாரல் மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 12 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. காடல்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் 13 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. எட்டயபுரம், விளாத்திகுளத்திலும் லேசான சாரல் அடித்தது.

    • 3-வது கட்ட மாக 1,700 வினாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டது.
    • இலக்கை வெற்றிகரமாக அடைந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த காவல் கிணறு மகேந்திரகிரியில் இஸ்ரோ மையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த மையத்தில் இருந்து விண்ணில் விண்கலம் செலுத்துவதற்கு தேவை யான கிரையோஜெனிக் என்ஜின், விகாஷ் என்ஜின், பி.எஸ். 4 என்ஜின் ஆகியவை தயாரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் கீழ் விண்ணில் செலுத்தப்பட இருக்கும் ராக்கெட்டுகளில் மனிதன் விண்ணிற்கு சென்று விட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவதற்காக எஸ்.எம்.எஸ்.டி.எம். என்ற மாதிரி என்ஜினின் சோதனை பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது.

    அதன்படி 3-வது கட்ட மாக 1,700 வினாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டது. அதற்கான கவுண்டவுன் ஆரம்பிக்கப் பட்டு நேற்று சோதனை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்தது.

    இந்நிகழ்ச்சியில் மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குனர் ஆசீர் பாக்யராஜ் கலந்து கொண்டு நேரில் பார்வையிட்டார். திருவனந்தபுரம் திரவ இயக்க திட்ட மைய இயக்குனர் நாராயணன், ககன்யான் திட்ட இயக்குனர் மோகன் ஆகியோர் திருவனந்தபுரத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக பார்வையிட்டனர்.

    சோதனை வெற்றிகரமாக நடந்ததால் இஸ்ரோ குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் முதல் கட்டமாக 725 வினாடிகளும், 2-வது கட்டமாக 350 வினாடிகளும் வெற்றிகரமாக சோதனை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • உளவியல் ரீதியாக அனைவரது மனதிலும் ஜாதி உள்ளது.
    • அனைவரும் ஒன்றிணைந்து படம் பார்ப்பது திரையரங்கில் தான்.

    நெல்லை:

    தூத்துக்குடியில் சினிமா படப்பிடிப்பிற்காக இயக்குனர் மாரி செல்வராஜ் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தார். அப்போது அங்கு செய்தியாளர்களை சந்தித்த மாரி செல்வராஜ் கூறியதாவது:-

    தென் மாவட்டத்தில் உளவியல் ரீதியாக அனைவரது மனதிலும் ஜாதி உள்ளது. இது அவர்களது மனதில் ஆழமாக பதிந்துள்ளது. இதனை ஒரே நாளில் மாற்ற முடியாது. ஆனால் எல்லாம் மாறும். எல்லோரும் ஒன்றாக சேர்ந்து நுணுக்க மாக கலைத்துறை, அரசியல் உள்ளிட்டவைகளின் மூலம் அழுத்தமான வேலையை முன்னெடுக்க வேண்டி உள்ளது. அப்படி செய்தால் தான் அடுத்த தலைமுறையில் மாற்றம் வரும். புரிதலுக்கு உள்ளாகும்.

    தற்போது படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகிறது. அனைவர் வீட்டிலும் பூஜை அறை உள்ளது. இருந்தபோதிலும் கோவிலுக்கு சென்று தான் சாமி கும்பிடுகிறார்கள். அதேபோல் அனைவரும் ஒன்றிணைந்து படம் பார்ப்பது திரையரங்கில் தான். அது என்றும் மாறாது. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது அவரது விருப்பம். அரசியலுக்கு அனைவரும் வரலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜெயக்குமார் அரசு மற்றும் தனியார் வங்கிகள் என 5-க்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்குகள் வைத்துள்ளார்.
    • வங்கிகளை நாடுவதற்கு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் தலைமையில் 2 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஜெயக்குமார் உடல் கிடந்த இடம், அவரது தோட்டத்தில் வேலை பார்த்தவர்கள், பணிப்பெண்கள், உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் என பலதரப்பட்டவர்களிடமும் விசாரணை நடதப்பட்டுள்ளது.

    அவர் கடந்த 4-ந் தேதி பிணமாக மீட்கப்படுவதற்கு முன்பு வரை கடைசியாக 3 நாட்களுக்கு எங்கெல்லாம் சென்றார்? அவருடன் அதிக நேரம் இருந்தவர்கள் யார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஜெயக்குமார் அரசு மற்றும் தனியார் வங்கிகள் என 5-க்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்குகள் வைத்துள்ளார். அவற்றை ஆய்வு செய்ய வங்கிகளை நாடுவதற்கு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அடுத்த 2 நாட்களுக்கு, ஜெயக்குமார் கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு சென்று கடைசி 2 ஆண்டுகள் அவரது வங்கி கணக்கில் பண பரிவர்த்தனைகளை ஆய்வு செய்கின்றனர். அவரது வங்கி கணக்கிற்கு யாரெல்லாம் பணம் செலுத்தி உள்ளனர்? ஜெயக்குமார் யாருக்கெல்லாம் பணம் அனுப்பி உள்ளார்? என்பது குறித்த ஆய்வை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    அதே நேரத்தில் மற்றொரு குழுவினர் திசையன்விளை பஜார் பகுதியில் உள்ள விடுதிகளில் கடைசி 2 மாதங்கள் வந்து தங்கி இருந்தவர்களின் பெயர் விபரங்களை சேகரித்து அவர்களிடம் விசாரணை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இன்னும் ஓரிரு நாட்களில், அவர் கடிதத்தில் எழுதி வைத்திருந்த அவர்களுக்கு சம்மன் அனுப்பவும், தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்களை விசாரிக்கவும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    • இதுவரை சம்பவம் நடந்த தோட்டம், ஜெயக்குமார் வீடு, அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.
    • சிலரை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வரவழைத்தும் விசாரணை நடத்திட முடிவு செய்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் உவரி அருகே உள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்த ஜெயக்குமார் தனசிங் (வயது 60).

    இவர் கடந்த 4-ந்தேதி அவரது வீட்டின் பின்னால் உள்ள தோட்டத்தில் எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது மர்ம மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுவரை சம்பவம் நடந்த தோட்டம், ஜெயக்குமார் வீடு, அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.

    இந்நிலையில் இன்று சாட்சியங்களிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர். ஏற்கனவே சிலரிடம் விசாரித்து இருந்தாலும், அவர்கள் நெல்லை மாவட்ட போலீசார் விசாரித்தபோது கூறிய தகவல்களும், தற்போது சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளிடம் கூறிய தகவல்களும் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதால் மீண்டும் அந்த நபர்களிடம் விசாரணையை நடத்துகின்றனர்.

    மேலும் பல்வேறு சாட்சியங்களிடமும் இன்று நேரில் திசையன்விளைக்கு சென்றும், சிலரை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வரவழைத்தும் விசாரணை நடத்திட முடிவு செய்துள்ளனர்.

    மேலும் கரைசுத்து புதூரில் ஜெயக்குமார் உடலை முதலில் பார்த்த தோட்ட தொழிலாளி, அவரது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்கள், அவரது கார் டிரைவர், இறப்பதற்கு முன்பாக கடைசி 3 நாட்கள் அதிக நேரம் அவருடன் இருந்தவர்கள், அந்த நாட்களில் ஜெயக்குமார் தனது செல்போனில் அதிக நேரம் பேசியவர்களிடமும் இன்று விசாரணை நடத்தி அதனை பதிவு செய்து கொள்ள அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    • சேர்வலாறு அணை நீர்மட்டம் 83.69 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 85 அடியாகவும் உள்ளது.
    • ஊத்து மற்றும் காக்காச்சியில் தலா 6 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 4 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பரவலாக பெய்து வந்த கோடை மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் கடந்த ஒரே வாரத்தில் பிரதான அணையான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது. குறிப்பாக சேர்வலாறு, பாபநாசம் அணைகளில் நீர் இருப்பு கிடுகிடுவென உயர்ந்தது.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மழை குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பாபநாசத்தில் 3 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 2 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் லேசான சாரல் பெய்தது. மழை குறைந்ததால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து சீராக தண்ணீர் விழுகிறது.

    எனினும் ஏற்கனவே பெய்த மழையால் அணைகளுக்கு நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் 2 அடி உயர்ந்து 69.80 அடியை எட்டியுள்ளது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் 83.69 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 85 அடியாகவும் உள்ளது.

    களக்காடு தலையணையில் ஓடிய காட்டாற்று வெள்ளம் குறைந்துவிட்டதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு, குடும்பத்துடன் சென்று குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    அகஸ்தியர் அருவியிலும் சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர். மாஞ்சோலை வனப்பகுதிக்கு சுற்றுலா செல்ல 10 நாட்களுக்கும் மேலாக தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் அங்கும் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டு விட்டது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள நாலுமுக்கு எஸ்டேட்டில் இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக 12 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. ஊத்து மற்றும் காக்காச்சியில் தலா 6 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 4 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    • சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவினர் மீண்டும் கரைசுத்து புதூருக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 32 பேருக்கும் இதுவரை சம்மன் அனுப்பவில்லை.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று ஜெயக்குமாரின் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் ஜெயக்குமார் உடல் கிடந்த அவரது தோட்டத்திலும் சென்று மீண்டும் ஆய்வில் ஈடுபட்டனர். தோட்டத்தை முழுமையாக அளவீடு செய்தனர். பின்னர் ஆய்வு நடத்தி கிடைக்கப்பெற்ற தடயங்களை சேகரித்தனர்.

    இந்நிலையில் இன்று காலை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவினர் மீண்டும் கரைசுத்து புதூருக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 4 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. நடத்திய விசாரணை மற்றும் தோட்டத்தில் நடத்திய ஆய்வுகளில் கிடைத்துள்ள சில தடயங்களையும், ஏற்கனவே நெல்லை மாவட்ட போலீசார் தங்களது விசாரணையின்போது சேகரித்து ஒப்படைத்துள்ள தடயங்களையும் இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலான குழுவினர் ஒப்பிட்டு பார்த்து அதன்மூலம் ஏதேனும் புதிய தகவல்கள் கிடைக்குமா? என்பதை ஆராய்ந்து வருகின்றனர்.

    மேலும் மாவட்ட போலீசார் விசாரணையில் என்னென்ன செய்தார்கள் என்பதை ஆய்வு செய்து, அவர்கள் செய்ய தவறியவற்றை குறிப்பெடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 32 பேருக்கும் இதுவரை சம்மன் அனுப்பவில்லை. தற்போது வழக்கு தொடர்பான ஆவணங்களை சரிசெய்து வருகிறோம்.

    அதன்பின்னர் அவர்களுக்கு பதிவு தபால் அனுப்புவதற்கு தேவையான பணிகள் நடக்கும். இன்னும் சில நாட்களில் சம்மன் அனுப்பப்படும். அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களை ஒரு வாரத்தில் அழைத்து விசாரணை நடத்தப்படும் என சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மழை நின்று விட்டதாலும், காற்றின் வேகம் குறைந்துள்ளதாலும் இன்று காலை முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
    • தூத்துக்குடி மாவட்டத்திலும் 10 நாட்களுக்கு பிறகு இன்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    நெல்லை:

    மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 40 முதல் 55 கிலோமீட்டர் வரை வீசக் கூடும் என்றும், கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கடந்த 17-ந்தேதி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    இதைத்தொடர்ந்து கடந்த 18-ந்தேதி முதல் நேற்று வரை 10 நாட்களாக நெல்லை மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, உவரி, கூத்தன்குழி, பஞ்சல், தோமை யர்புரம் உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களில் உள்ள சுமார் 10 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் மாவட்டத்தில் மழை நின்று விட்டதாலும், காற்றின் வேகம் குறைந்துள்ளதாலும் இன்று காலை முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இதனால் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 1,500 நாட்டு படகுகள் மூலம் மீன வர்கள் கடலுக்கு மீன் பிடிக்க புறப்பட்டு சென்றுள்ளனர். கிழக்கு கடற்கரை முழுமையும் காற்றின் வேகத்தால் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்ததால் மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.

    இதனால் கேரளாவில் இருந்து தான் மீன் இறக்குமதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் மீன் பிடிக்க மீனவர்கள் சென்றுள்ளதால் இனி விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    தூத்துக்குடி மாவட்டத்திலும் 10 நாட்களுக்கு பிறகு இன்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    தூத்துக்குடி, வேம்பார், பெரியதாழை ஆகிய பகுதிகளை சேர்ந்த 3,600 நாட்டுப் படகுகளில் 20 ஆயிரம் மீனவர்கள், 10 ஆயிரம் தொழிலாளர்கள் அதிக மீன்கள் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியுடன் கடலுக்கு புறப்பட்டு சென்றனர்.

    • 32 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    • தொழில் ரீதியில் அவருடன் பழகிய நண்பர்கள் ஆகியோரிடம் விசாரிக்கின்றனர்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 4 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை தேடுதல், ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடம் சம்பவத்தன்று நடந்தவற்றை எழுத்துப்பூர்வமாக வாக்குமூலமாக பெறுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் இன்று ஜெயக்குமார் மரண வழக்கில் ஏற்கனவே போலீசாரால் விசாரிக்கப்பட்ட அவரது உறவினர்கள், தொழில் ரீதியில் அவருடன் பழகிய நண்பர்கள் ஆகியோரிடம் விசாரிக்கின்றனர். இதற்காக ஒரு குழு கரைசுத்துபுதூருக்கு சென்று இந்த விசாரணையை மேற்கொள்கின்றனர்.

    மேலும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அடங்கிய மற்றொரு குழு ஜெயக்குமாரின் செல்போனுக்கு கடைசி 2 நாட்கள் வந்த செல்போன் எண்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் விபரங்களை கேட்டறிய முடிவு செய்துள்ளனர்.

    அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தொழில் அதிபர்கள், உறவினர்கள், நெருக்கமானவர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட 32 பேருக்கும் இன்னும் ஓரிரு நாளில் சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • மணிமுத்தாறு அணைக்கு 177 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
    • தென்காசி மாவட்டத்திலும் மழை குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் விழுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்தது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    குறிப்பாக மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 13 அடியும், சேர்வலாறு அணை 21 அடி வரையிலும் உயர்ந்தது. நேற்று மழை வெகுவாக குறைந்துவிட்டதால் அணைகளுக்கு வரும் நீரின் அளவும் குறையத் தொடங்கியது.

    பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளுக்கு 4 ஆயிரம் கனஅடி வரை வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 736 அடியாக குறைந்தது. இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 1 1/2 அடி உயர்ந்து 67.70 அடியை எட்டியுள்ளது. மற்ற அணைகளின் நீர்மட்டம் உயர்வில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. மணிமுத்தாறு அணைக்கு 177 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    மலைப்பகுதியில் மழை பெய்யாமல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதோடு இதமான காற்று வீசி வருகிறது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் அடித்து வருகிறது. அவ்வப்போது வீசும் காற்றால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் அக்னி வெயில் காலம் நாளையுடன் முடிவடையும் நிலையில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் ஒரு வழியாக முடிந்துவிட்டது என நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

    தென்காசி மாவட்டத்திலும் மழை குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் விழுகிறது. அங்குள்ள மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக சென்று குளித்து மகிழ்கின்றனர். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் ரம்மியமான காற்று வீசு வருகிறது.

    வழக்கமாக தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கி விடும். அதற்கு முன்னோட்டமாக மே மாதம் கடைசியில் இருந்தே கேரளாவில் மழை பெய்ய தொடங்குவதோடு, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவக்காற்று வீசும். அந்த வகையில் கடந்த 2 நாட்களாக தென்காசி மாவட்டத்தில் காற்று வீச தொடங்கி உள்ளது.

    மாலையில் தொடங்கி இரவிலும் காற்று பலமாக வீசி வருகிறது.

    ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. தொடர்ந்து வீசிவரும் இந்த இதமான காற்றால் தென்மேற்கு பருவ காலம் தொடங்கிவிட்டதோ என்று மக்கள் எண்ண தொடங்கியுள்ளனர்.

    • ஜெயக்குமாரின் செல்போனுக்கு கடைசியாக தொடர்பு கொண்டு பேசியவை உள்ளிட்டவற்றை விளக்கமாக எழுதி ஒப்படைத்தனர்.
    • முக்கிய பிரமுகர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்புவதற்கு தேவையான ஆவண பணிகளை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே. ஜெயக்குமார் மர்மச்சாவு வழக்கை கடந்த 3 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    நேற்று பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தி, மகன்கள் கருத்தையா ஜெப்ரின், ஜோ மார்ட்டின், மகள் கேத்தரின் ஆகியோர் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வருமாறு அழைக்கப்பட்டு இருந்தனர்.

    இதனை தொடர்ந்து அவர்கள் மதியம் ஒரு காரில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது கேத்தரின் கை குழந்தையுடன் விசாரணைக்கு வந்திருந்தார். பின்னர் அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி நேரடி விசாரணை நடத்தினார்.

    அதன்பின்னர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ் ஆகியோர் முன்னிலையில் அவர்களது குடும்பத்தினர் சம்பவத் தன்று நடந்த நிகழ்வுகள், ஜெயக்குமாரின் செல்போனுக்கு கடைசியாக தொடர்பு கொண்டு பேசியவை உள்ளிட்டவற்றை விளக்கமாக எழுதி ஒப்படைத்தனர்.

    இந்த விசாரணையானது மாலை 6.45 மணி வரை அதாவது சுமார் 6 மணி நேரம் வரை நீடித்தது. அதன்பின்னர் ஜெயக்குமார் குடும்பத்தினர் காரில் ஏறி ஊருக்கு புறப்பட்டனர். தொடர்ந்து இன்று ஒரு குழு கரைசுத்து புதூருக்கு சென்று ஜெயக்குமாரின் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் விசாரணை நடத்த உள்ளனர். மற்றொரு குழு ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கிய பிரமுகர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்புவதற்கு தேவையான ஆவண பணிகளை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

    ×