search icon
என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்று கொண்டு இருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
    • நிர்மலா மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த வேண்பாக்கத்தில் வசித்து வந்தவர் ரவிக்குமார் (வயது63). அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. இவரது மனைவி நிர்மலா. இவர்களது ஒரே மகள் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார்.

    இன்று காலை கணவன்-மனைவி இருவரும் சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரில் மகளை விட்டு விட்டு காரில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். காரை ரவிக்குமார் ஓட்டினார். மீஞ்சூர்- வண்டலூர் வெளிவட்ட சாலையில் மீஞ்சூரை அடுத்த சீமாபுரம் சுங்கச்சாவடி அருகே வந்துகொண்டு இருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்று கொண்டு இருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் ரவிக்குமாரும், நிர்மலாவும் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு மீஞ்சூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பரிசோதித்த டாக்டர்கள் முன்னாள் எம்.எல்.ஏ.ரவிக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். நிர்மலா மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பலியான ரவிக்குமார் 1991-96-ம் ஆண்டில் பொன்னேரி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தார். இவரது மனைவி நிர்மலாவும் அதே ஆண்டில் திண்டுக்கல் தொகுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து உள்ளார். ரவிக்குமாரின் சொந்த ஊர் மணலிபுதுநகர் அடுத்த நா.பாளையம் ஆகும். அவர் நெஞ்சுவலிக்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்து உள்ளார். ரவிக்குமார் கடைசியாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு தடப்பெரும்பாக்கத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • வணிகர் பாதுகாப்பு குறித்து அரசு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.
    • ஜி.எஸ்.டி.வரி விதிப்பு முறையில் 18, 12, 28 என்ற முறையை மாற்றி ஒரே முறை வரியாக மாற்றிட வேண்டும்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம்-வேண்பாக்கம் வியாபாரிகள் சங்க தலைவர் சுரேஷ் குமார். இவரது மகன் விக்னேஷ்குமார்-உமா மகேஸ்வரி திருமணம் பொன்னேரியில் உள்ள திருமணமண்டபத்தில் நடைபெற்றது.

    மணமக்களை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வாழ்த்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாநகராட்சிகளில் கடைகளுக்கு உரிமம் பெற கட்டிட உரிமையாளர் வரி கட்டியிருக்க வேண்டும் என்று அறிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. கடைகளுக்கு நிபந்தனைகள் ஏதுமின்றி உரிமம் தர வேண்டும். கடையை காலி செய்ய வேண்டுமென்றால் கட்டிட உரிமையாளர் வேண்டுமென்றே வரியை கட்டாமல் கடைக்கு சீல் வைக்கும் ஆபத்து உள்ளது.

    ஜி.எஸ்.டி.வரி விதிப்பு முறையில் 18, 12, 28 என்ற முறையை மாற்றி ஒரே முறை வரியாக மாற்றிட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வருகிறோம். மே மாதம் புதிய அரசு அமைந்தவுடன் மீண்டும் சென்று வலியுறுத்த உள்ளோம். ஒட்டு மொத்தமாக 30 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. அரிசி விலை கடுமையாக ஏறியுள்ளது. பூண்டு விலை தற்போது சரிந்து வருகிறது.

    வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்கும் அரசியல் கட்சி குறித்து ஆய்வு செய்து பாராளுமன்ற தேர்தலில் வணிகர்கள் சங்க பேரமைப்பு ஆதரவு அளிக்கும். கடைகளுக்குள் புகுந்து வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலிடம் இருந்து பாதுகாப்பு குறித்து மே மாதம் நடைபெற்ற உள்ள வணிகர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

    வணிகர் பாதுகாப்பு குறித்து அரசு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். 24 மணி நேரம் கடையை திறக்கலாம் என்று முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில் போலீசார் கடைகளை மூட நிர்பந்திப்பது அபத்தமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பேரமைப்பு தலைவர் வில்லியம்ஸ், நந்தன், எஸ்.வி, முருகன், மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்ட கூடுதல் செயலாளர் முருகன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் பால்ராஜ், கேசவன், ரமேஷ் கண்ணன், செங்குன்றம் வியாபாரிகள் சங்கதலைவர் செல்வகுமார், செல்லதுரை, அப்துல், காதர், வேலு, ஆச்சாரி, பால் பாண்டி, பாலகிருஷ்ணன், அஜிஸ், யுவராஜ், திராஜிதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
    • புத்தக கண்காட்சியை பார்த்து பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்கலாம்.

    திருவள்ளூர்:

    தமிழகம் முழுவதும் கடந்த 2022-ம் ஆண்டு முதல் மாவட்டம் தோறும் புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கெனவே கடந்த 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் திருவள்ளூர், ஆவடி ஆகிய இடங்களில் புத்தக கண்காட்சி நடை பெற்றுள்ளது.

    இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான புத்தக கண்காட்சி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இன்று தொடங்கியது. இந்த கண்காட்சியை திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக பதிப்பாளர் விற்பனையாளர் சங்கம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

    இந்த கண்காட்சி மார்ச் 4-ந்தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறும். இந்த கண்கட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் பயன்படத்தக்க புத்தகங்கள் ஒரே கூரையின் கீழ் இந்த புத்தக கண்காட்சியில் கிடைக்கின்றன.


    இந்த கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் கண்காட்சி நடைபெறும் வளாகத்தில் தினமும் சிந்தனையை தூண்டும் நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் தமிழறிஞர்கள் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர்.

    மேலும் புத்தக வாசிப்பின் பயன்கள் குறித்து மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இந்த புத்தக கண்காட்சியை பார்த்து பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்கலாம்.

    • சேதமடைந்த கரைகளில் சீரமைப்பு பணிகள் தற்போது நடை பெற்று வருகின்றன.
    • ஏரியில் போதுமான தண்ணீர் உள்ளதாலும் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீரை பெறவில்லை.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறை வேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது.

    இங்கு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் மற்றும் மழைநீரை சேமித்துவைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்படுகிறது.

    கடந்த ஆண்டு மிச்சாங் புயல் காரணமாக பலத்த மழை கொட்டி தீர்த்ததால் கிருஷ்ணா கால்வாயில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் தமிழக எல்லையான ஊத்துக் கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் கிருஷ்ணா கால்வாய் கரைகள் சேதம் அடைந்தன. சேதமடைந்த கரைகளில் சீரமைப்பு பணிகள் தற்போது நடை பெற்று வருகின்றன.

    கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திரா அரசு வருடம்தோறும் தமிழகத்துக்கு 12 டி.எம்.சி. தண்ணீரை நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.

    ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. என 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாலும், ஏரியில் போதுமான தண்ணீர் உள்ளதாலும் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீரை பெறவில்லை.

    மேலும் வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்து வருவதால் குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பும் வேகமாக குறைந்து வருகிறது.

    இந்த நிலையில் வருகிற கோடைமாதங்களில் சென்னை நகரில் குடிநீர் தேவை மேலும் அதிகரிக்கும். இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணாகால்வாய் கரை சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து கண்ட லேறு அணையில் இருந்து தண்ணீரை பெற திட்டமிட்டு இருப்பதாக பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி ஆகும். இன்று காலை நிலவரப்படி ஏரியில் 2.580 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்பு கால்வாயில் வினாடிக்கு 150 அடி தண்ணீரும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 15 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.

    • திருமணம் நடந்தபோது, 600 சவரன் தங்கம், ரூ.1.65 கோடி மதிப்புள்ள 2 கார்கள், 20 கிலோ வெள்ளி ஆகியவை கொடுக்கப்பட்டது.
    • மகளின் வாழ்க்கைக்காக நேரில் சென்று பேசினால் மேலும் 500 சவரன், ரூ.10 கோடி கே.பி.கந்தன் கேட்கிறார்.

    சென்னை:

    சோழிங்கநல்லூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.கந்தன் மீது அவரது மருமகள் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் வரதட்சணை புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில்,

    திருமணத்தின்போது 1000 சவரன் வரதட்சணை கேட்டனர். 2018ம் ஆண்டு திருமணம் நடந்தபோது, 600 சவரன் தங்கம், ரூ.1.65 கோடி மதிப்புள்ள 2 கார்கள், 20 கிலோ வெள்ளி ஆகியவை கொடுக்கப்பட்டது. மேலும் 400 சவரன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

    கே.பி.கந்தனின் மருமகள் ஸ்ருதி பிரியதர்ஷினி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். அவரது தந்தை கூறுகையில்,

    வரதட்சணை கேட்டு, தனது மகளை கே.பி.கந்தன் குடும்பத்தினர் அடித்து துன்புறுத்தினர்.

    பெண் குழந்தை பிறந்த பிறகு 2021ல் தனது மகளை கே.பி.கந்தன் குடும்பத்தினர் வீட்டை விட்டு விரட்டி விட்டனர்.

    மகளின் வாழ்க்கைக்காக நேரில் சென்று பேசினால் மேலும் 500 சவரன், ரூ.10 கோடி கே.பி.கந்தன் கேட்கிறார்.

    மகள் மருத்துவம் படித்தபோது, சக மருத்துவர்களுடன் எடுத்த புகைப்படங்களை தவறாக சித்தரித்து அவதூறு பரப்புகிறார்கள்.

    கே.பி.கந்தன், அவரது மனைவி, மகன் கே.பி.கே.சதீஷ்குமார் மற்றும் மகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • பல்வேறு ஆலோசனைகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடைபெற்றது.
    • ஆலோசனைக் கூட்டத்தில் பொன்னேரி தேர்தல் துணை வட்டாட்சியர் கனகவல்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    பாராளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துவருகிறது. இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள், ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் பொன்னேரி தாலுகா அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் தலைமையில் நடைபெற்றது. வட்டாட்சியர் மதிவாணன் முன்னிலை வதித்தார்.

    கூட்டத்தில், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட 311 வாக்குச்சாவடி மையங்களில் 34 பூத்துகளில் அதிக வாக்கு எண்ணிக்கை உள்ளதால் அங்கு போலீசாரை கூடுதலாக நியமிக்கவும், தேர்தலின் போது வாக்குச்சாவடி பணிகளை எவ்வாறு மேற்கொள்வது, கட்டிடங்கள் பாதுகாப்பு , அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து பாதுகாப்பு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடைபெற்றது.

    அப்போது சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் கூறும்போது, அதிக வாக்குகள் உள்ள 34 பூத்துகளில் அதிகாரிகள் மற்றும் போலீசார் நேரில் சென்று ஆய்வு செய்து தேர்தலின் போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொன்னேரி தேர்தல் துணை வட்டாட்சியர் கனகவல்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மழைவெள்ளம் காரணமாக இந்த தரைப்பாலம் கடந்த 2016, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை சேதமடைந்தது.
    • தரைப்பாலம் ஒவ்வொரு முறை சேதம் அடையும் போது தற்காலிகமாக சீரமைக்கப்படுகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே– கொண்டஞ்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சத்தரை ஊராட்சி. இப்பகுதியில் கூவம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.

    இந்த பாலத்தை பயன்படுத்தி கொண்டஞ்சேரி, மப்பேடு வழியாக 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், தண்டலம், அரக்கோணம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்துக்கு முக்கிய தரைப்பாலமாகவும் உள்ளது.

    மழைவெள்ளம் காரணமாக இந்த தரைப்பாலம் கடந்த 2016, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை சேதமடைந்தது. பின்னர் தரைப்பாலம் சீரமைக்கப்பட்டது.

    ஒவ்வொரு முறை தரைப்பாலம் சேதம் அடையும் போதும் அப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் தரைப்பாலம் தற்காலிகமாக மட்டுமே சீரமைக்கப்பட்டது.

    இதற்கிடையே கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையின் போதும் கூவம் ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் 4-வது முறையாக சேதமடைந்தது. இதனால் இவ்வழியே அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சுற்றி உள்ள கிராமஙகளைச் சேர்ந்தவர்கள் கடும் சிரமம் அடைந்து வந்தனர்.

    ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் புதிய மேம்பாலம் கட்ட ரூ. 20 கோடி மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயார் செய்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அரசுக்கு அனுப்பப்பட்டு இருந்ததாக தெரிகிறது. ஆனால் இதில் இதுவரை முடிவு செய்யப்படவில்லை. இதனால் கூவம் ஆற்றின் குறுக்கே எந்த திட்டத்தில் பாலப்பணிகள் தொடங்கு வது என்ற குழப்பத்தில் சீரமைக்கப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில் பொது மக்களின் வேண்டுகோளின்படி அவசர தேவை பயன்பாட்டுக்காக கூவம் ஆற்றில் தற்போது 4 -வது முறையாக சேதமடைந்த பகுதிகளை சீரமைத்து தற்காலிக பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, தரைப்பாலம் ஒவ்வொரு முறை சேதம் அடையும் போது தற்காலிகமாக சீரமைக்கப்படுகிறது.

    அந்த இடத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • பெண் போலீஸ் சசிகலாவின் போதைக்கு எதிரான இந்த முயற்சிக்கு நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் கூறி வருகின்றனர்.
    • போதை இல்லா வாழ்க்கை படுஜோருங்க. இது போதை இல்லா தமிழகம் என்று கூறுங்க..

    ஆவடி:

    ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரியும் சசிகலா, போதைப் பொருளுக்கு எதிராக தான் எழுதிய பாடல் ஒன்றை அவரே அழகாக பாடி, அதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பெண் போலீஸ் சசிகலாவின் போதைக்கு எதிரான இந்த முயற்சிக்கு நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் கூறி வருகின்றனர்.

    பெண் போலீஸ் எழுதி பாடிய பாடலின் ஒரு சில வரிகள் வருமாறு:

    உனக்கும் வேணா, எனக்கும் வேணாம் போதை தானுங்க... ஒன்னா சேர்ந்து ஓரம் கட்ட சேர்ந்து பாடுங்க.

    போதையில்லா மேடையிலே நடனம் ஆடுங்க.. வாழ்க்கை ஒரு வீணையப்பா பார்த்து வாசிங்க.

    கஞ்சாவத்தான் நஞ்சாகத்தான் எண்ணிப்பாருங்க...

    கஞ்சா போதையைத்தான் கைவிடனும் தம்பி.. குடும்பம் இருக்குதுப்பா உங்களைத்தான் நம்பி..

    போதை இல்லா வாழ்க்கை படுஜோருங்க. இது போதை இல்லா தமிழகம் என்று கூறுங்க..

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குழந்தையின் உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
    • பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி, ராமானுஜ கூடத் தெருவில் தனியாருக்கு சொந்தமான பெண்கள் விடுதி உள்ளது. நேற்று இரவு அதன் அருகில் உள்ள குப்பை தொட்டியில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் யுவராணி என்பவர் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த போது பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை உயிருடன் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து யுவராணி உடனடியாக அந்த பகுதி மக்களின் உதவியுடன் குப்பை தொட்டியில் எறும்புகள் மொய்த்த நிலையில் பிறந்து சில நாட்களே ஆகி இருந்த பெண் குழந்தையை மீட்டார். பின்னர் குழந்தையை பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தையின் உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.


    இதுபற்றி அறிந்ததும் பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். குழந்தையின் தாய் யார்? குழந்தையை வீசி சென்றது ஏன்? கடத்திவரப்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    மர்ம நபர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த குழந்தையை குப்பை தொட்டிக்குள் வீசி சென்று இருப்பதும் குழந்தை அழுத படியே சோர்ந்து உயிருக்கு போராடியபடி கிடந்து இருப்பதும் தெரிந்தது. இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகன்கள் மற்றும் மகள் திருமணத்திற்கு பிறகு மூதாட்டி ஜானகி பிள்ளைகளால் கைவிடப்பட்டுள்ளார்.
    • சொத்துக்களை மீட்டு தரும்படி வருவாய் துறை அதிகாரிகளை நாடிய மூதாட்டி ஜானகி அலைக்கழிக்கப்பட்டுள்ளார்.

        திருத்தணி:

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள வங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் 90 வயது மூதாட்டி ஜானகி. இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

    30 ஆண்டுகளுக்கு முன்பே கணவர் இறந்துவிட்ட நிலையில் மகன்கள் மற்றும் மகளை வளர்க்க மூதாட்டி ஜானகி பெரும் பாடுபட்டுள்ளார்.

    மகன்கள் மற்றும் மகள் திருமணத்திற்கு பிறகு மூதாட்டி ஜானகி பிள்ளைகளால் கைவிடப்பட்டுள்ளார். மேலும் சொத்துக்களை மூதாட்டி ஜானகியுடம் இருந்து பிள்ளைகள் எழுதி வாங்கியுள்ளனர். மருமகள்களாலும் மூதாட்டி ஜானகி தாக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதையடுத்து சொத்துக்களை மீட்டு தரும்படி வருவாய் துறை அதிகாரிகளை நாடிய மூதாட்டி ஜானகி அலைக்கழிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், வருவாய்துறையினர் காலம்தாழ்த்தாமல் பிள்ளைகளிடம் இருந்து சொத்துக்களை மீட்டு தரும்படி மூதாட்டி ஜானகி கோரிக்கை விடுத்துள்ளார். 

    • பலத்த காற்று வீசினால் சிமெண்ட் கம்பங்கள் உடைந்து கீழே விழும் நிலை உள்ளது.
    • மின் கம்பங்களை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள பூச்சிஅத்திப்பேடு ஊராட்சிக்குட்பட்ட வேம்பேடு கிராமம், செல்லியம்மன் கண்டிகை பகுதியில் சுடுகாடு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகியவற்றிற்கு இடையே அலமாதியில் இருந்து உயர் அழுத்த மின்சாரம் வருகிறது. இதையடுத்து அந்த பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு அங்கிருந்து மின்கம்பங்கள் மூலம் மின்வினியோகம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் இந்த உயர் அழுத்த டிரான்ஸ்பார்மரில் உள்ள மின்கம்பிகளை தாங்கி பிடிக்கும் 2 சிமெண்டு மின்கம்பங்களும் முற்றிலும் சிதிலமடைந்து சிமெண்டுகள் பெயர்ந்து அதில் உள்ள கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின் கம்பங்கள் எந்த நேரத்திலும் முறிந்து விழும் நிலையில் காட்சி அளிக்கின்றன. பலத்த காற்று வீசினால் சிமெண்ட் கம்பங்கள் உடைந்து கீழே விழும் நிலை உள்ளது.

    இதேபோல் அப்பகுதியில் உள்ள பல மின் கம்பங்கள் மிகவும் சேதம் அடைந்து காணப்படுகின்றன. எனவே சேதம் அடைந்த மின் கம்பங்களை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கடந்த ஆண்டு ஆயிலச்சேரி கிராமத்தில் அலமாதி துணை மின் நிலையத்தில் இருந்து உயர் அழுத்த மின்சாரம் செல்லும் மின்கம்பம் உடைந்து விழுந்ததால் வயல்வெளியில் இருந்த ஒருவர் பலியானார். கோடு வெளி கிராமத்தில் மின்வயர் அறுந்து விழுந்ததில் ஒரு பெண் மற்றும் 10 ஆடுகள், ஒரு மாடு பலி ஏற்பட்டது. எனவே உயிர் பலி ஏற்படும் முன்னர் இப்பகுதியில் உள்ள சேதம் அடைந்த மின்கம்பங்களை போர்க்கால அடிப்படையில் மாற்றி அமைக்க வேண்டும் என்றனர்.

    • சாலை திட்டத்தில் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பணிகள் நடைபெற்றது.
    • சாலையில் கிடக்கும் ஜல்லி கற்களில் அப்பகுதி கிராமமக்கள் பயணம் செய்து வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ளது போளிவாக்கம் சத்திரம் பகுதி. இங்கு இருந்து அழிஞ்சிவாக்கம், வெள்ளகால்வா வரை உள்ள சுமார் 7 கிலோமீட்டர் சாலையை போளிவாக்கம் சத்திரம் வழியாக புதுகண்டிகை, குன்னத்தூர், பள்ளகாலனி, மேட்டு காலனி, அழிஞ்சிவாக்கம், ஆஞ்சிவாக்கம், பூவேலி குப்பம் மேட்டுச்சேரி, வெள்ளக்கால்வா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் , மருத்துவசிகிச்சை உள்ளிட்டவைக்கு செல்ல இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும்.

    இந்த நிலையில் போளிவாக்கம் சத்திரம் பகுதியில் இருந்து அழிஞ்சிவாக்கம், வெள்ளகால்வா வரை சாலை மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தில் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பணிகள் நடைபெற்றது.

    இதற்காக கடந்த ஒரு ஆண்டுகுக்கு முன்பே போளிவாக்கம் சத்திரம் பகுதியில் இருந்து வெள்ளகால்வா வரை 7 கி.மீ தூரம் ஏற்கனவே இருந்த சாலை அகற்றப்பட்டு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. ஆனால் அதன்பிறகு பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டன.

    தற்போது சாலையில் கிடக்கும் ஜல்லி கற்களில் அப்பகுதி கிராமமக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இதனால் வாகனங்களின் டயர்களை சேதம் அடைந்து அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. ஜல்லி சாலையில் முதியோர் பள்ளி மாணவ மாணவிகள், கிராமத்தினர் செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    இதையடுத்து சாலை அமைக்கப்படாததை கண்டித்தும், உடனடியாக சாலை அமைக்க கோரியும் போளிவாக்கம் சத்திரம் பகுதி கிராமமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை அமைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    ×