search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • பாபுவிடம் இருந்து ஐபோன், ஆவணங்கள் ஆகியவற்றை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றினர்.
    • கொல்கத்தாவில் செய்த குற்றத்தின் காரணமாக பாபுவை கைது செய்துள்ளதாக உள்ளூர் போலீசாரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி எல்லை பிள்ளை சாவடியில் 100 அடி சாலையில் ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை எதிரே ஆசிரமத்துக்கு சொந்தமான பகுதி உள்ளது.

    இதன் காம்பவுண்டு சுவரையொட்டி ஒரு சிறிய கேட் உள்ளது. இதற்குள் பழைய பொருட்கள் போட்டு வைத்துள்ள குடோன் உள்ளது.

    இதன் மாடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 பேர் உள்ளூர் போலீசார் உதவியோடு இன்று சோதனை செய்தனர்.

    அங்கு தங்கியிருந்த மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த எஸ்.கே. பாபு (வயது 26) என்ற வாலிபரிடம் விசாரணை நடத்தினர். காலை 8 மணி முதல் 11 மணி வரை 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையின்போது, பாபுவிடம் இருந்து ஐபோன், ஆவணங்கள் ஆகியவற்றை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றினர். பின்னர் அவரை கைது செய்து காரில் ஏற்றி அழைத்துச்சென்றனர். கோரிமேட்டில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு அவரை கொண்டுசென்று விசாரணை நடத்தினர். அவர் வெளிநாட்டிலிருந்து நபர்களை கடத்தி வந்து புதுவை உட்பட வெளி மாநிலங்களில் கொத்தடிமையாக விற்பனை செய்துள்ளாரா?

    எத்தனை பேரை அழைத்து வந்தார்? எங்கு விற்றுள்ளார்? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். இவர்களுக்கு வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்புகளோடு தொடர்புள்ளதா? ஏதேனும் சதி செயலில் ஈடுபட்டனரா? பயங்கரவாத செயல்களுக்கு துணை போனாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொல்கத்தாவில் செய்த குற்றத்தின் காரணமாக பாபுவை கைது செய்துள்ளதாக உள்ளூர் போலீசாரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    புதுவையில் அவர் கட்டிட வேலையில் ஈடுபட்டுள்ளார். அவர் வைத்திருந்த ஆதார் எண்ணை உள்ளூர் போலீசார் சோதனையிட்டதில் எந்த தகவலும் காட்டவில்லை. இதனால் அவரது பெயர், ஆதார் எண் அனைத்தும் போலியாக இருக்கக்கூடும் என தெரிகிறது.

    புதுவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வடமாநில வாலிபர் ஒருவரை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தொழிலதிபர்கள் பங்கு பெறும் வணிக கருத்தரங்கம் தனியார் ஓட்டலில் நடந்தது.
    • நக்கீரர் தமிழ் சங்க தலைவர் பாஸ்கரன் வரவேற்று பேசினார்.
    புதுச்சேரி:

    புதுவை தமிழ் சங்கம் மற்றும் நக்கீரர் தமிழ் சங்கம் இணைந்து ராஜராஜ சோழன் 1038-வது சதய விழாவை முன்னிட்டு வளரும் தமிழ் தொழிலதிபர்கள் பங்கு பெறும் வணிக கருத்தரங்கம் தனியார் ஓட்டலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு புதுவை தமிழ் சங்க தலைவர் முத்து தலைமை தாங்கினார்.

    திருச்சிராப்பள்ளி தமிழ் சங்க நிர்வாகி உதயகுமார் பெரியசாமி, புதுவை தமிழ் சங்க செயலாளர் சீனு மோகன்தாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நக்கீரர் தமிழ் சங்க தலைவர் பாஸ்கரன் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பாபு, புதுச்சேரி மருந்து உற்பத்தியாளர்கள் சங்க செயலாளரும் குரும்பாம்பட்டு தொழில் முனைவோர் கூட்டமைப்பு தலைவருமான சீனிவாசன், தமிழ் சங்க பலகை தலைவர் தமிழ் பித்தன், லேடர் கமர்சியல் நிறுவனர் செழியன் குமாரசாமி, தேசிய வர்த்தகர்கள் முன்னேற்ற பேரவை தலைவர் ஜோதிகுமார், தமிழ்நாடு அனைத்து சமையல் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் இனியவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    நிகழ்ச்சியில் மலேசிய தமிழ் அமைப்புகளின் பேரவை தலைவர் மலேசிய எழுத்தாளர் ராஜேந்திரனுக்கு பாராட்டு வழங்கப்பட்டது. இதில் குணவதி மைந்தன், கோபாலகிருஷ்ணன், சுரேஷ்பாபு, சங்கர், பெருமாள், சதீஷ் அசோகன், குமரன், எம்.ஜி.ஆர். மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக புதுவை தமிழ் சங்க பொருளாளர் அருள் செல்வம் நன்றி கூறினார்.


    • சாத்தியக்கூறுகள் என்ற நூல் வெளியீட்டு விழா பல்கலைக்கழகத்தில் நடந்தது.
    • பணியாளர்கள் கலியபெருமாள், வேலவன் உட்பட பலர் இதில் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங் எழுதிய இடைநிலை கலை பயிற்சி சிக்கல்கள், சாத்தியக்கூறுகள் என்ற நூல் வெளியீட்டு விழா பல்கலைக்கழகத்தில் நடந்தது.

    முனைவர் ரவிவர்மா பன்னாட்டு கருத்தரங்கு கட்டுரைகளை தொகுத்து நூலாக பதிப்பித்துள்ளார். பேராசிரியர் ஸ்ரீதரன், முனைவர் சரவணன்வேலு, பயிற்றுநர் முருகேவல், உதவி பேராசிரியர்கள் பவித்ரா, பிரியங்கா சர்மா, அலுவலக பணியாளர்கள் கலியபெருமாள், வேலவன் உட்பட பலர் இதில் பங்கேற்றனர்.

    • கிராம நிர்வாகிகள் கூட்டாக பேட்டி
    • காலாப்பட்டில் அமைந்துள்ள இது போன்ற கம்பெனிகளால் எங்களுடைய குடிநீர் உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் பாதிப்படைந்துள்ளது.

    புதுச்சேரி:

    கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவில் மண்டபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த காலாப்பட்டு, பெரிய காலாப்பட்டு, பிள்ளைசாவடி, கனகச்செசெட்டிகுளம் பகுதி பஞ்சாயத்தார்கள் சரவணன், கண்ணன், கோதண்டம், அருணகிரி, தமிழ்மாறன், சங்கர், ஜானகிராமன் உள்ளிட்ட பலர் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    காலாப்பட்டில் இயங்கி வரும் தனியார் மாத்திரை தயாரிக்கும் தொழிற்சாலை 1986-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு தொடர்ந்து இதுபோன்ற எதிர்பாராத விபத்துக்கள் நடந்து வண்ணம் உள்ளது. காலாப்பட்டில் அமைந்துள்ள இது போன்ற கம்பெனிகளால் எங்களுடைய குடிநீர் உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் பாதிப்படைந்துள்ளது.

    காலாப்பட்டு தொகுதியில் ஒரு அ.தி.மு.க. உறுப்பினர் கூட இல்லதா நிலையில் சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு ஆதரவாக காலாப்பட்டு பகுதியை சேர்ந்த கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் செயல்படுவதாக அ.தி.மு.க.வினர் கூறிய குற்றச்சாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.

    கடந்த 4-ந் தேதி இரவு தொழிற்சாலையில் விபத்து நடந்து தீக்காயம் அடைந்த தொழிலாளர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்ல சொல்லி தொழிலாளர்களின் உறவினர்கள் வற்புறுத்தியதின் அடிப்படையிலேயே அவர்கள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து ரத்ததான விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.
    • பேராசிரியர்கள் மற்றும் சுகாதார நிலைய உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    மணக்குள விநாயகர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் திருபுவனை ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து ரத்ததான விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.

    ஊர்வலத்தை, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி ஐஸ்வர்யா, டாக்டர்கள் ஜமுனாஸ்ரீ, ஷீலா தொடங்கி வைத்தனர். ஊர்வலத்தில் மணக்குள விநாயகர் பாலி டெக்னிக் கல்லூரி என். எஸ்.எஸ்.மாணவ,மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் சுகாதார நிலைய உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ஊர்வலம் திருபுவனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் சுகாதார நிலையத்தை வந்தடைந்தது. ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ். அலுவலர் வேலழகன் செய்திருந்தார்.


    • தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தல்
    • அவர்களுக்கு என்ன ஆனது என்று உண்மை நிலவரத்தை அவர்களது உறவினர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கவில்லை.

    புதுச்சேரி:

    தமிழக வாழ்வுரிமைக் கட்சி புதுச்சேரி மாநில அமைப்பாளர் விடுத்துள்ள அறிக்கையில்,

    புதுச்சேரி பெரியக்காலாப்பட்டில் இயங்கி வரும் தனியார் மருந்து தொழிற்சாலை அபாயகரமான சூழ்நிலையில் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் கடந்த 4ம் தேதி இரவு நடந்த கொதிகலன் வெடித்து நடந்த பயங்கர விபத்தால் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீக்காயங்களுடன் படுகாயம் அடைந்துள்ளனர்.

    ஜிப்மரில் அனும திக்கப்பட்ட 11 பேர் அவசர அவசரமாக சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு நிர்வாகம் சார்பில் கொண்டு செல்லப் பட்டனர். மற்றவர்கள் புதுவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் இரண்டு பேர் 90% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவது தகவல் வெளியாகி உள்ளது. அவர்களுக்கு என்ன ஆனது என்று உண்மை நிலவரத்தை அவர்களது உறவினர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கவில்லை.

    உறவினர்களிடம் விசாரிக்கையில் இது வரைக்கும் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் யாரும் வந்து பார்க்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

    பாதிக்கப்பட்ட தொழி லாளர்களின் எதிர்காலம் கருதி தீக்காயம் அடைந்த அனைவருக்கும் தலா ரூபாய் ஒரு கோடி ரூபாய் அரசு இழப்பீடு வழங்க வேண்டும். தீ விபத்து ஏற்பட்ட காலாப்பட்டு தொழிற்சாலையை போல், காலாப்பட்டு ஈ சி ஆர் சாலையில் மற்றொரு தொழிற்சாலை இயங்கி வருகிறது பாதுகாப்பு உறுதி தன்மை குறித்து அந்த கம்பெனியிலும் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    இதே போல் புதுச்சேரியில் சேதராப்பட்டு மேட்டுப்பாளையம் தட்டாஞ்சா வடி நெட்டப் பாக்கம் திருபுவனை கிருமாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இயங்கி வரும் ஆபத்தான தொழிற்சாலை களை அடையாளம் கண்டு உடனடியாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • 2 கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை
    • கொள்ளை கும்பல் புகுந்து கோவில் உண்டியலை உடைத்தும்,

    புதுச்சேரி:

    பாகூர், கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள 2 கோவில்களில் கடந்த 5-ந்தேதி நள்ளிரவில் கொள்ளை கும்பல் புகுந்து கோவில் உண்டியலை உடைத்தும், சாமிக்கு வைத்திருந்த வெள்ளி கிரீடம் உள்ளிட்ட சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள், பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இது சம்பந்தமாக இரு போலீஸ் நிலைய போலீசாரும் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

    கோவிலில் திருட்டு சம்பவம் நடந்ததால் பக்தர்களும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் மற்றும் 30-க்கும் மேற்பட்ட போலீசார் கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம், கந்தன் பேட் பகுதிகளில் நேற்று இரவு போலீசார் அணிவகுப்பு நடத்தினர்.

    மக்கள் கூடும் இடங்களில் போலீசார் ஒலிபெருக்கி மூலம், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை, பண்டிகை காலம் என்பதால் வெளியில் செல்லும்போது வீடு பூட்டி இருக்கிறதா என்று உறுதி செய்த பின்பு செல்ல வேண்டும். மேலும் வீட்டிலேயே சாவியை வைத்து விட்டு செல்லக்கூடாது.

    ஊருக்குள் சந்தேகப்ப டும்படியான நபர்கள் சுற்றி வந்தால் போலீசாருக்கு 24 மணிநேரமும் தகவல் தெரிவிக்கலாம். வீட்டில் உள்ள வாகனங்களை ஒன்றுக்கும் மேற்பட்ட பூட்டுகளால் பாதுகாக்க வேண்டும். சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்யக்கூடாது.

    பண்டிகை காலங்களில் விபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்பாக பட்டாசை வெடிக்க வேண்டும். என அறிவுறுத்தினர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன் பேசும்போது: ரோந்து போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

    அவ்வப்போது ஊருக்குள் வாகன சோதனை நடத்த வேண்டும் என்று போலீ சாருக்கு உத்தரவிட்டார்.

    • எதிர்க்கட்சித் தலைவர் சிவா வழங்கினார்
    • எதிர்க்கட்சித் தலைவர் சிவா 110 பால் உற்பத்தியாளர்களுக்கு இன்டக்சன் அடுப்பு மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட, கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் பால் உற்பத்தியாளர்களுக்கு தீபாவளியையொட்டி பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா 110 பால் உற்பத்தியாளர்களுக்கு இன்டக்சன் அடுப்பு மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் வில்லியனூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் காளிதாஸ், நிர்வாகிகள் வேலு பாலமுருகன் மற்றும் தி.மு.க தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, மாநில விவசாய அணி அமைப்பாளர் குலசேகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே வந்த போது அதிவேகமாக வந்த பைக் சக்கரபாணியின் பைக் மீது வேகமாக மோதியது.
    • சக்கரபாணி சிகிச்சை பலன் இன்றி சக்கரபாணி பரிதாபமாக இறந்தார்.

    புதுச்சேரி:

    கண்டமங்கலம் அருகே ஆழியூர் பகுதியை சேர்ந்தவர் சக்கரபாணி ( வயது50). இவர் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று சக்கரபாணி தனது மகளை கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அழைத்துச்சென்றார். பின்பு சர்வீஸ் சாலை வழியாக வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார்.

    அப்போது கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே வந்த போது அதிவேகமாக வந்த பைக் சக்கரபாணியின் பைக் மீது வேகமாக மோதியது. இதில் சக்கரபாணி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து ேமல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சக்கரபாணி சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு சக்கரபாணி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அன்பழகன் எச்சரிக்கை
    • ஓ.பி.எஸ். தரப்புக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

    புதுச்சேரி:

    அ.தி.மு.கவின் கொடி, சின்னங்களை பயன்படுத்த ஓ.பி.எஸ். தரப்புக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

    இதை வரவேற்று புதுவை அ.தி.மு.க.வினர் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதன்பின் அன்பழகன் கூறியதாவது:-

    அ.தி.மு.க. கொடி, சின்னம் பழனிசாமி தரப்புக்கு சொந்தம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் கட்சியில் குழப்பம் ஏற்படுத்த ஓ.பி.எஸ். தரப்பினர் கோர்ட்டிற்கு சென்றனர். தற்போது கோர்ட்டிலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.எனவே புதுவையில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அ.தி.மு.க. கொடி, சின்னத்தை பயன்படுத்தினால் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


    • சண்முகவேலுடன் சீனிவாசனும் கல்லூரி விடுமுறை என்பதால் தங்கி இருந்தான்.
    • மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி பிரேத சோதனைக்கு அனுப்பி விட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மோதிலால் நகர் கிராஸ் எக்ஸ்டன்சன் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 57).

    இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஒரு மனைவியும், சண்முகவேல் (23), சீனிவாசன் (19) என்ற என்ற 2 மகன்களும் ராஜாமணி என்ற முருகேசனின் தாயும் உள்ளனர்.

    சண்முகவேல் பி.எஸ்.சி. நர்சிங் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து முடித்துள்ளார்.

    கடந்த ஒரு வருடமாக வேலை செய்து வந்தார். சண்முகவேல் ஒரு வாரத்திற்கு முன்பு வேலையை ராஜினாமா செய்து விட்டு புதுச்சேரியில் வேலை பார்க்கப் போவதாக கூறி மூலக்குளத்தில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். சண்முகவேலுடன் சீனிவாசனும் கல்லூரி விடுமுறை என்பதால் தங்கி இருந்தான்.

    மேலும் சண்முகவேல் அவரது நண்பர்களிடம் மனஅழுத்தமாக இருப்பதாக போன் மூலம் அட்க்கடி தெரிவித்து வந்துள்ளான். கல்லூரியில் சண்முகவேலுக்கு மனஅழுத்ததுக்கு மருத்துவ ஆலோசனை கொடுத்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று காலை வீடு சுத்தம் செய்து எல்லோரிடமும் நன்றாக பேசிக்கொண்டு இருந்தான். மாலை 5 மணிக்கு மேல் வீட்டை சுத்தம் செய்வதாக கூறி அறைக்கு சென்றான். நீண்ட நேரம் ஆகியும் கீழே வராததால், சீனிவாசன் சண்முகவேலின் போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் என வந்தது.

    பின்னர் இரவில் சீனிவாசன் மேலே சென்று கதவை தட்டியபோது திறக்காததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.

    அப்போது சண்முகவேல் மின்விசிறியில் நைலான் கயிரில் தூக்கு போட்டுக் தொங்கி கொண்டு இருந்தான். உடனே சீனிவாசனும் பக்கத்தில் இருந்தவர்களும் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு சண்முகவேலை மீட்டு கொண்டு சென்றனர்.

    அப்போது சண்முகவேலை மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி பிரேத சோதனைக்கு அனுப்பி விட்டனர்.

    இது குறித்து முருகேசன் அளித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் சண்முகவேல் மன அழுத்தத்தின் காரணமாகவோ அல்லது வேறு காரணமாகவோ இறந்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உத்தரவு
    • காகிதம் இல்லாத சட்டசபையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    மத்திய அரசின் இவிதான் செயலி திட்டத்தின் மூலம் புதுவை சட்டசபையை காகிதம் இல்லாத சட்டசபையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சபாநாயகர் செல்வம் தலைமையில் நடந்தது. எம்.எல்.ஏக்கள் ரமேஷ், அங்காளன், ரிச்சர்டு, அரசு செயலர் மணிகண்டன், சட்டசபை செயலர் தயாளன், தகவல் தொழில்நுட்பத்துறை இயக்குனர் மோகன்குமார், தேசிய தகவல் மைய அதிகாரி கோபி சுவாமிநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில், புதுவை சட்டசபையை காகிதம் இல்லாத சட்டசபையாக மாற்றும் பணிகளை வரும் டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என சபநாயகர் செல்வம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


    ×