search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • ரேசன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என கோரிக்கையாக வைத்து வந்தனர்.
    • என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு கண்டு கொள்ளவில்லை.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்தது.

    ஆட்சி அமைந்த நாளிலேயே முதியோர் உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்து வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து பெண்களை கவரும் வகையில் சிலிண்டருக்கு மானியம், பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத் தொகை, குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் உதவித் தொகை, புதிதாக விண்ணப்பித்த அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை ஆகியவற்றையும் வழங்கினார்.

    இதனால் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா அரசுக்கு நற்பெயர்தான் இருந்தது. இந்த நற்பெயருக்கு பாதகம் விளைவிக்கும் வகையில் முத்தியால்பேட்டையில் சிறுமி கஞ்சா போதையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இது புதுச்சேரி மக்கள டையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதை எதிர் கட்சிகளான காங்கிரசும், தி.மு.க.வும் கையில் எடுத்து பிரசாரம் செய்தனர்.

    புதிய ஆட்சி அமைந்தவுடன் ரெஸ்டோ பார் திறந்தது, கஞ்சா உட்பட போதைப்பொருட்களை கட்டுப்படுத்த தவறியது, நெரிசல் மிகுந்த நகரமாக புதுச்சேரியை மாற்றி விட்டனர் என காங்கிரஸ், தி.மு.க.வினர் பிரசாரம் செய்தனர்.

    மேலும் கடந்த ஆட்சியில் மூடப்பட்ட ரேசன் கடைகளை புதிய அரசு மீண்டும் திறக்கவில்லை. ரேஷன் கடைகளை திறக்காத விவகாரத்தை எதிர்கட்சிகள் தொடர்ந்து மக்களிடம் கொண்டு சென்றனர். பெண்கள் இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்குவதை விரும்பவில்லை.

    ரேசன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என கோரிக்கையாக வைத்து வந்தனர். ஆனால் அதனை என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு கண்டு கொள்ளவில்லை. இதையே பிரசாரமாக காங்கிரஸ் பயன்படுத்தியது. மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்த காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், ரேசன் கடைகள் மூடிக்கிடக்க என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா அரசுதான் காரணம் எனக்கூறி பிரசாரம் செய்தார். இது காங்கிரசின் வெற்றிக்கு பெரிதும் கைகொடுத்துள்ளது.

    • கோவிலின் வரலாறு குறித்து ஆலய அர்ச்சகர்கள் சங்கர், பாபு ஆகியோர் விளக்கினர்.
    • பால விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் பாகூரில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட 1,400 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த வேதா அம்பிகை சமேத ஸ்ரீ மூலநாதர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் இன்று காலை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சிறப்பு வழிபாடு நடத்தி சாமி தரிசனம் செய்தார்.

    கோவிலின் வரலாறு குறித்து ஆலய அர்ச்சகர்கள் சங்கர், பாபு ஆகியோர் விளக்கினர்.

    கோவிலில் உள்ள மூலநாதர், கணபதி, முருகன், நவக்கிரகங்கள், துர்க்கை, பைரவர், பொங்கு சனி பகவான், சண்டீஸ்வரர் உட்பட தெய்வங்களை பற்றி எடுத்துக்கூறினர்.

    பின்னர் பால விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

    108 தேங்காய் உடைத்து அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் வளாகத்தை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்தார்.

    இதன்பின் வேதாம்பிகை சன்னதியில் சிறிது நேரம் தியானம் செய்த பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    • ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
    • கோடை விடுமுறை காலம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

    புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதியில் இருந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில், புதுச்சேரியில் கோடை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதுச்சேரியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், விடுமுறை ஜூன் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

    இதனால் புதுச்சேரியில் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும் என்று புதுச்சேரி பள்ளிக்கல்வித் துறை அறிவித்து இருக்கிறது.

    • கவர்னரிடம் காருடனான தனது அனுபவங்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி பகிர்ந்து கொண்டார்.
    • கார் செயின்ட் லூயிஸ் சாலை, பட்டேல்சாலை, கடற்கரை சாலை, துய்மா வீதி வழியாக மீண்டும் கவர்னர் மாளிகை வந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி கடந்த 1997-ம் ஆண்டு முதன் முதலில் அம்பாசிடர் கார் வாங்கினார்.

    வெள்ளை நிற அம்பாசிடர் காரை 20 ஆண்டுகள் வரை அவர் பயன்படுத்தி வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு கார் பழுதானதால் அதை பயன்படுத்தாமல் நிறுத்தி வைத்தார். இந்த நிலையில் ராசியான தனது காரை மீண்டும் பயன்படுத்த முடிவெடுத்தார்.

    இதற்காக காரை தூத்துக்குடிக்கு அனுப்பி சுமார் ரூ.5 லட்சம் செலவில் புதுப்பித்தார். புதுப்பிக்கப்பட்ட அம்பாசிடர் கார் புதுச்சேரி கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து உள்ளூர் நிகழ்வுகளில் தனது விருப்பமான பழைய காரையே அவர் பயன்படுத்துகிறார்.

    இந்த நிலையில் இதை அறிந்த புதுவை கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அந்த காரை பார்க்க விரும்பினார். அதையடுத்து நேற்று மாலை தனது அம்பாசிடர் காரில் ராஜ் நிவாஸ்க்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி சென்றார். அங்கு சிறிது நேரம் கவர்னருடன் ஆலோசித்த ரங்கசாமி காரை பார்க்க கவர்னரை அழைத்து வந்தார்.

    காரை வந்து பார்த்த கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் காரை பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். கவர்னரிடம் காருடனான தனது அனுபவங்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி பகிர்ந்து கொண்டார்.

    பின்னர் இருவரும் அம்பாசிடர் காரின் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்தனர். கார் செயின்ட் லூயிஸ் சாலை, பட்டேல்சாலை, கடற்கரை சாலை, துய்மா வீதி வழியாக மீண்டும் கவர்னர் மாளிகை வந்தது. அங்கு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை இறக்கி விட்டு முதல்-அமைச்சர் ரங்கசாமி புறப்பட்டு சென்றார்.

    இதுபற்றி முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கேட்டதற்கு காரில் சென்றபோது புதுச்சேரி மாநிலத்தை சிறப்பான நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பது பற்றி பேசினோம். எனது மிக ராசியான வண்டியில் பயணம் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

    • சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த நிரவி பகுதியை சேர்ந்த, திருமலை ராஜன் ஆற்று பாலம் அருகே ஒயிட் ஹவுஸ் காலனி உள்ளது. இங்கு தச்சுவேலை செய்யும் சிங்காரவேலு, தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் (வயது 13), இவன் தனது நண்பர்களோடு வீட்டின் அருகே நேற்று மதியம் விளையாடிக் கொண்டிருந்தார்.

    மாலை வெகுநேரமாகியும் சந்தோஷ் வீடு திரும்ப வில்லை. இதனால் சந்தோஷ் பெற்றோர்கள் அவனை பல இடங்களில் தேடினர். அப்போது வீட்டின் அருகே சந்தோஷின் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், பின்னர் இது குறித்து நிரவி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட சிறுவனின் கழுத்து, கை, கால், மார்பு என 17 இடங்களில் கத்தியால் அறுக்கப்பட்டிருந்தது. சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனின் கொலை குறித்து, அவனுடன் விளையாடியவர்களுடனும், அப்பகுதியிலும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பக்கத்து வீட்டை சேர்ந்த சிறுவன் சந்தோசை கொலை செய்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

    அதன்படி அந்த சிறுவனின் வீட்டிற்கு போலீசார் சென்றபோது, வீட்டில் யாரும் இல்லை. பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு ரத்தத்துடன் கத்தி ஒன்று கிடைத்தது. சிறுவனை கொலை செய்ய பயன்படுத்திய கத்தியாக இருக்கலாம் என்று சந்தேகமடைந்த போலீசார், இது குறித்து அந்த குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டனர். ஆனால், அந்த குடும்பத்தினர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.

    பக்கத்துவீட்டை சேர்ந்த 17 வயது சிறுவன் மயிலாடுதுறையில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைந்தது. அங்கு விரைந்த போலீசார் அந்த சிறுவனை மடக்கி பிடித்தனர். இவர் தனது தாயாரின் உதவியுடன் சிறுவன் சந்தோஷை கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து சிறுவனை கைது செய்த போலீசார், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாயாரை தேடி வருகின்றனர்.

    வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    • ஒரு பெண்ணை வாலிபர் தேர்ந்தெடுத்த நிலையில் ரூ.10 ஆயிரத்தை செலுத்துமாறு கூறியுள்ளார்.
    • சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஆன்லைன் மோசடியில் ஏமாறுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எவ்வளவுதான் போலீசார் வழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் சிலர் ஏமாறுவதை தடக்க முடியவில்லை.

    இதில் பெண் ஆசை காட்டி அதிகளவில் மோசடிகள் நடக்கிறது. புதுச்சேரி கல்மண்டபம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் உல்லாசமாக இருக்க ஆன்லைனில் பெண்கள் விவரங்களை தேடியுள்ளார். அப்போது அதில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

    எதிர்முனையில் பேசிய நபர் சில பெண்களின் புகைப்படங்களை அனுப்பி அதில் தேவையான பெண்ணை தேர்ந்தெடுக்குமாறு கூறியுள்ளார்.

    ஒரு பெண்ணை வாலிபர் தேர்ந்தெடுத்த நிலையில் ரூ.10 ஆயிரத்தை செலுத்துமாறு கூறியுள்ளார். அதன்படி அவரும் ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்பியுள்ளார்.

    எதிர்முனையில் பேசிய மர்ம நபர் புதுச்சேரி பஸ் நிலையம் அருகே உள்ள பிரபல ஓட்டலில் அந்த பெண் இருப்பதாகவும் அங்கு செல்லுமாறு கூறியுள்ளார். அதை நம்பி அங்கு சென்ற வாலிபருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    அந்த ஓட்டலில் அவர் தேடி வந்த பெண் இல்லை. இதனால்தான் மோசடி செய்யபட்டதை உணர்ந்த அந்த வாலிபர் சைபர்கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார்.

    இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுவையில் நேற்று இரவு முதல் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
    • கரையில் நின்று செல்பி மற்றும் ரீல்ஸ் எடுத்து இளம் தம்பதியினர் மகிழ்ந்தனர்.

    புதுச்சேரி:

    வங்க கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    புதுவையில் நேற்று இரவு முதல் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில் விடுமுறை நாளான இன்று இருள் விலகாத அதிகாலையிலேயே சூரிய உதயத்தை காண கடற்கரைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.


    ஆனால் காலை வேளையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் சூரிய உதயம் தெரியவில்லை. இதனால் சூரிய உதயத்தை காண வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் கடலில் இறங்கி சிலர் குளித்தனர்.

    அப்போது அங்கு வந்த போலீசார் ஆபத்தான கடல் பகுதி என்பதால் கடலில் குளிக்க தடை உள்ளதை சுட்டிகாட்டி சுற்றுலா பயணிகளை அப்புறப்படுத்தினார்கள். சூரிய உதயத்தை பார்க்க முடியவில்லை, கடலில் குளிக்கவும் அனுமதியில்லை என சுற்றுலா பயணிகள் கவலை அடைந்தனர். இருப்பினும் கரையில் நின்று செல்பி மற்றும் ரீல்ஸ் எடுத்து இளம் தம்பதியினர் மகிழ்ந்தனர்.

    • அரசியலமைப்பு சட்டப்படி எந்த கட்சியும் சாராமல் இருக்க வேண்டிய கவர்னர் பாஜக கைக்கூலியாக செயல்படுவது வேதனை தருகிறது.
    • புதுவையில் முன்பு இருந்த கவர்னர்கள் போல சி.பி.ராதாகிருஷ்ணனும் புதுவை அரசு நிர்வாகத்தில் தலையிடுகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்கட்ட தேர்தல் முதல் 6-ம் கட்ட தேர்தல் வரை மோடி 10 ஆண்டு பிரதமராக என்ன செய்தார்? என பிரசாரத்தில் பேசவில்லை.

    பிரதமர், அமித் ஷா, பா.ஜனதா தலைவர்கள் காங்கிரஸ் தலைவர்களை வசைபாடுவதும், காங்கிரஸ் கட்சியை தரம்தாழ்ந்து பேசுவதும், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களை சிறையில் தள்ளும் வேலையைத்தான் செய்கின்றனர்.

    அயோத்தி கோவிலை இடிக்கும் கட்சி காங்கிரஸ் என பிரதமர் பொய் பிரசாரம் செய்கிறார். பிரதமர் தன்னை அவதார புருஷன் என பேசி வருகிறார். அவரது பேச்சில் இருந்து பா.ஜ.க. படுதோல்வி அடையும் என தெரிகிறது. இந்தியா கூட்டணி மிகப்பெரும் அளவில் எம்.பி. தொகுதிகளை கைப்பற்றும்.

    பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் 200 இடங்களை தாண்டாது. இந்தியா கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும். புதுவையில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கம் அமோக வெற்றி பெறுவார். தமிழகம், புதுவையில் 40 தொகுதியிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். ஒரு இடத்தில்கூட பா.ஜனதா வெற்றி பெற வாய்ப்பு இல்லை. அ.தி.மு.க.வும் படுதோல்வி அடையும்.

    தமிழ்நாடு கவர்னராக ரவி பொறுப்பேற்றது முதல் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து பேசி வருகிறார். அவர் அதிகார மீறல், ஜனநாயகத்தை மதிக்கவில்லை என சுப்ரீம்கோர்ட் சாடியும் திருந்தவில்லை. தமிழக தி.மு.க. ஆட்சிக்கு தொல்லை கொடுப்பது, கோப்புகளை நிராகரிப்பது, திருப்பி அனுப்புவது என அவர் அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார்.

    தமிழக கவர்னர் ரவி திருவள்ளுவர் விழாவை கவர்னர் மாளிகையில் கொண்டாடியுள்ளார். திருவள்ளுவர் எந்த காலத்திலும் காவி உடை அணிந்தது இல்லை. அவர் படங்கள், சிலைகளில் வெள்ளை உடையுடன் இருப்பார். வேண்டுமென்றே பிரச்சனையை உருவாக்க, தமிழ்நாட்டில் தமிழ் மொழியை கொச்சைப்படுத்த, தமிழக அரசுக்கு தொல்லை கொடுக்க சர்ச்சை வேலையை கவர்னர் செய்துள்ளார்.

    இதற்கு கவர்னர் மட்டும் பொறுப்பல்ல, அவரை ஊக்குவிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடியும்தான் பொறுப்பு.

    கவர்னர் மூலம் எதிர்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வெகு விரைவில் வரும்.

    கவர்னர் தமிழக மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் தனது ஆர்.எஸ்.எஸ். சித்தாந்ததை படிப்படியாக தமிழ்நாட்டில் நுழைக்கும் வேலையை பார்க்கிறார். அரசியலமைப்பு சட்டப்படி எந்த கட்சியும் சாராமல் இருக்க வேண்டிய கவர்னர் பாஜக கைக்கூலியாக செயல்படுவது வேதனை தருகிறது.

    புதுவையில் முன்பு இருந்த கவர்னர்கள் போல சி.பி.ராதாகிருஷ்ணனும் புதுவை அரசு நிர்வாகத்தில் தலையிடுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாணவர் ஜெகதீஷ், நடிகர் பாலா ஏழை கல்லூரி மாணவருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கிய சம்பவத்தை கலை நயமிக்க ஒரு பொம்மையாக கடந்த மார்ச் 22-ந்தேதி உருவாக்கினார்.
    • வில்லியனூர் தனியார் கல்லூரி விழாவிற்கு வந்த பாலா மாணவன் ஜெகதீஷை அழைத்து பாராட்டி அவர் உருவாக்கிய பொம்மையை பெற்றார்.

    புதுச்சேரி:

    சின்னத்திரை வாயிலாக லட்சக்கணக்கானோர் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் பாலா.

    இவரது சமூக சேவை பணிகள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் மேல்மருவத்தூரில் கல்லூரியில் படித்துக்கொண்டே பெட்ரோல் பங்க்கில் வேலை பார்க்கும் இளைஞரின் வறுமையை உணர்ந்து அந்த மாணவனுக்கு புதிய மோட்டார் சைக்கிளை பரிசாக வழங்கினார்.

    இந்த செயல் அனைவராலும் பாராட்டப்பட்டது. இதனை ஒரு செய்தியாக கடந்து விடாமல் புதுச்சேரி சேலியமேடு கிராம அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர் ஜெகதீஷ் பொம்மையாக தயார் செய்தார்.

    பள்ளியின் நுண்கலை ஆசிரியர் உமாபதி கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களுக்கு கிராமங்களில் கிடைக்கும் பயனற்ற தேங்காய் குருமி, தென்னை நார், சுரக்காய் குடுவை போன்றவற்றைக் கொண்டு பொம்மைகளை உருவாக்கும் பயிற்சி அளித்து வந்தார்.

    இதில் பயிற்சி பெற்ற மாணவர் ஜெகதீஷ், நடிகர் பாலா ஏழை கல்லூரி மாணவருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கிய சம்பவத்தை கலை நயமிக்க ஒரு பொம்மையாக கடந்த மார்ச் 22-ந்தேதி உருவாக்கினார்.

    இந்த பொம்மையை பாலாவுக்கு பரிசாக தர விரும்புவதாகவும் தான் சென்னைக்கு செல்ல இயலாது என்பதால் புதுச்சேரிக்கு பாலா எப்போது வருகிறாரோ அப்போது தருவதற்கு தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.

    இந்த நிலையில் வில்லியனூர் தனியார் கல்லூரி விழாவிற்கு வந்த பாலா மாணவன் ஜெகதீஷை அழைத்து பாராட்டி அவர் உருவாக்கிய பொம்மையை பெற்றார்.

    இதற்கெல்லாம் நான் தகுதியானவனா என தெரியவில்லை. இருப்பினும் தம்பி உருவாக்கிய பொம்மையை மகிழ்ச்சியுடன் பெற்று செல்கிறேன். இதுவரை பெரிதாக உதவி எதுவும் செய்யவில்லை. இன்னும் நிறைய செய்ய வேண்டும்.

    இவ்வாறு பாலா கூறினார்.

    • மதுபோதையில் அவர்கள் போடும் ஆட்டத்துக்கு அளவில்லாமல் போவதால் கடற்கரைக்கு வருபவர்கள் நிம்மதியை இழக்கின்றனர்.
    • நகரப்பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக வந்தவர்களை மடக்கி எச்சரிக்கை செய்தனர். சிலருக்கு அபராதமும் விதித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரிக்கு வார இறுதி விடுமுறை நாட்களில் வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    அவர்களில் பலர் மது குடித்து விட்டு ரகளையில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக புதுவை பழைய துறைமுக பகுதியில் இடிந்த நிலையில் உள்ள ஆபத்தான பாலத்தின் தூண்களில் அமர்ந்து மது குடிப்பது, கடற்கரையில் கொட்டப்பட்டுள்ள பாறாங்கற்களில் அமர்ந்து மது குடித்துவிட்டு பாட்டில்களை பாறைகளில் வீசி உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    இதனால் மதுபாட்டில்களின் கண்ணாடி சிதறல்கள் கடற்கரைக்கு வருபவர்களின் பாதங்களை பதம் பார்க்கின்றன. மேலும் கும்பலாக வரும் இளைஞர்கள் குடித்து விட்டு ரகளையிலும் ஈடுபடுகின்றனர். இதனால் கடற்கரைக்கு குடும்பத்தோடு வருபவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். வயதுக்கு வந்த பெண்களோடு வரும் பெற்றோர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கும் ஆளாகின்றனர். மதுபோதையில் அவர்கள் போடும் ஆட்டத்துக்கு அளவில்லாமல் போவதால் கடற்கரைக்கு வருபவர்கள் நிம்மதியை இழக்கின்றனர்.

    இந்த நிலையில் போலீசார் பழைய துறைமுக பகுதியில் அதிரடி ஆய்வினை மேற்கொண்டனர். அங்கு குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட சுற்றுலா பயணிகளையும் மதுபாட்டில்களை பாறையில் வீசி உடைத்து ரகளையில் ஈடுபட்டவர்களையும் விரட்டியடித்தனர். பின்னர் எச்சரிக்கை செய்து அங்கிருந்து வெளியேற்றினர்.

    மேலும் நகரப்பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக வந்தவர்களை மடக்கி எச்சரிக்கை செய்தனர். சிலருக்கு அபராதமும் விதித்தனர்.

    • தங்கத்தின் விலையில் மாற்றமாகி கொண்டு விலை ஏறிக்கொண்டே இருக்கும்.
    • நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படும். வடமாநிலங்களில் வெள்ள பாதிப்பு அதிகரிக்கும்.

    புதுச்சேரி:

    சூரியன், புதன், குரு, சுக்கிரன் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளனர். 25-ந்தேதி புதன் ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

    ஜூன் மாதம் 3-ந்தேதி திங்கட்கிழமை ஒரே நேர்கோட்டில் இந்த 4 கிரகணங்களும் வருகிறது. இந்த நேர்கோட்டு கிரகணங்கள் அமைப்பால் ஜூன் 9-ந் தேதி வரை பலன்கள் கிடைக்கும்.

    இந்த 4 கிரகணங்கள் ஒரே நேர்கோட்டு அணிவகுப்பால் பல்வேறு பலன்கள் கிடைக்கிறது. அதே போல் சில பாதிப்புகளும் ஏற்படும் என்று ஜோதிடத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பிரபல ஜோதிடர் ஒருவர் கூறியதாவது:-

    சூரியன், புதன், குரு, சுக்கிரன் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகின்றனர். இந்த 4 கிரகணங்களும் ஒரே வீட்டில் இருப்பதால் எதிர்க்கட்சிகளுக்கு போட்டியான காலமாக இது அமைகிறது.

    இந்த கிரகணங்களின் நேர் கோட்டு சஞ்சரிப்பு ஆளுங்கட்சிக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி தரும். அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும். கிரகணங்கள் பெயர்ச்சி ஆவது போல் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களின் இடமாறுதல் பெயர்ச்சியும் உண்டாகலாம்.

    வெயில் தாக்கம் அதிகரிக்கும். தென்மேற்கு பருவமழை நிதானமாக உற்பத்தியாகி வெயில் தாக்கத்தை குறைக்கும். ஜூன் 15-ந் தேதிக்கு மேல் வெயிலின் உக்கிரம் குறையும். மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவ கல்வி படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.


    பொதுவாக சிலருக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஏற்படும். தங்கத்தின் விலையில் மாற்றமாகி கொண்டு விலை ஏறிக்கொண்டே இருக்கும். நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படும். வடமாநிலங்களில் வெள்ள பாதிப்பு அதிகரிக்கும்.

    கேதார்நாத், பத்ரிநாத், ஹரித்துவார், ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படும். கேதார்நாத்தில் பனிப்பொழிவு அதிகரிக்கும். பத்ரிநாத்தில் உறைபனி ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுமக்கள் தங்களுடைய கட்டிட கழிவுகள், பழைய கட்டுமானப் பொருட்கள் எதையும் சாலைகளில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.
    • அனைத்து முக்கிய வீதிகளிலும் உள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணித்து தவறு செய்பவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி உள்ளாட்சித்துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரியில் குப்பை கொட்டுவதால் ஏற்படும் சிரமங்களை போக்கவும், அழகை பராமரிக்கவும் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகள், உள்ளாட்சித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு பகுதியில் புதிய கட்டிடம் கட்டுபவர்கள் பழைய கட்டிட கழிவுகளை பொறுப்பற்ற முறையில் சாலையோரங்களில் தேக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய செயல்களால் சாலையில் நடப்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாவதுடன் விபத்துகளும் நடக்கின்றன.

    எனவே பொதுமக்கள் தங்களுடைய கட்டிட கழிவுகள், பழைய கட்டுமானப் பொருட்கள் எதையும் சாலைகளில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.

    மேலும் சாலையோரங்களில் உணவுக் கடைகள் வைத்திருப்போர் உணவுக் கழிவுகளை அருகில் உள்ள குப்பை தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும் அல்லது குப்பை அகற்றும் ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதுமற்ற வணிக நிறுவனங்களுக்கும் பொருந்தும். பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்காத வண்ணம் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். தவறுவோர் மீது நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து விதிகளின்படி அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும்.


    இதுதவிர பொது இடங்களில் குப்பை கொட்டும் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரை அபராதமும், கட்டுமான பொருட்களையோ கழிவுகளையோ வீடு மற்றும் வணிக நிறுவனங்கள் முன் அல்லது பொதுவெளியில் கொட்டுபவர்களுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அனைத்து முக்கிய வீதிகளிலும் உள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணித்து தவறு செய்பவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அபராதம் விதித்தும் எச்சரிக்கையை மதிக்காமல் செயல்படுவோர் மீது பிரிவு எண்.133 குற்றவியல் சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×