search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • டாஸ் வென்ற நெல்லை பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய திருப்பூர் அணி 189 ரன்களை குவித்தது.

    நெல்லை:

    டி.என்.பி.எல். தொடரின் லீக் ஆட்டங்கள் நெல்லையில் நடந்து வருகின்றன. இன்று நடைபெறும் 23வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நெல்லை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, திருப்பூர் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அமித் சாத்விக் முதல் பந்தில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    துஷார் ரஹேஜாவுடன் ராதாகிருஷ்ணன் இணைந்தார். இந்த ஜோடி ஆரம்பமே அதிரடியில் இறங்கியது. கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். இதனால் பவர் பிளேயில் திருப்பூர் அணி 77 ரன்களை சேர்த்தது.

    ரஹேஜா 3 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 13 பந்தில் 41 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய ராதாகிருஷ்ணன் அரை சதம் எடுத்து 50 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கணேஷ், முகமது அலி 50க்கு மேற்பட்ட ரன்களைச் சேர்த்தனர். முகமது அலி 35 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், திருப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 189 ரன்களைக் குவித்துள்ளது.

    இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்குகிறது.

    • ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது.
    • இந்தியா பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்து வருகிறது.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய அணி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. பொதுவான இடத்திற்கு போட்டியை மாற்ற வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் பாகிஸ்தான் தங்கள் நாட்டில்தான் நடத்த வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தது.

    இந்த நிலையில்தான் கடந்த வாரம் கொழும்பில் ஐசிசி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாம்பியன்ஸ் டிராபிக்கான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால் அட்டவணை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படவில்லை. சாம்பியன் டிராபியை நடத்துவதற்கு என்ன தேவையோ? அதை பெற்றுவிட்டது. வரைவு போட்டி அட்டவணை, என்ன வடிவிலான போட்டி (20 ஓவர் அல்லது 50 ஓவர்) ஆகியவற்றையும் தாக்கல் செய்துள்ளது.

    ஐசிசி இதை எப்படி வெளியிட்டு ஆலோசனை நடத்தி இறுதிப்படுத்துகிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும். பாகிஸ்தான் வரைவு அட்டவணையை பரிந்துரை செய்ததில் ஒரு பகுதியாக உள்ளது. லாகூரில் இந்தியாவின் அனைத்து போட்டிகளும் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் அதுவும் லாகூரில்தான் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் ஐசிசி-யிடம் பிசிபி தனது ஆர்வத்தை வெளிப்படுத்தும் ஆவணத்தில் அனைத்து விவரங்களையும் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வரி முறைகள், மைதானங்கள் தேர்வு, இந்திய அணி பாகிஸ்தானில் வந்து விளையாடுவதற்கான அரசின் அனுமதி உள்ளிட்டவைகளை எழுத்துப்பூர்வமாக அளித்துள்ளது.

    இதனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு இந்திய அணி விளையாட வருமா? என்பதை பிசிசிஐ-யிடம் இருந்து தகவல் பெறுவது, அட்டவணையை இறுதிப்படுத்தி வெளியிடுவது என அனைத்தை பொறுப்புகளையும் ஐசிசி-யிடம் விட்டுவிட்டது.

    அதேவேளையில் ஒருவேளை இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்தால், போட்டியை பாகிஸ்தானுக்கு வெளியே நடத்துவதற்காக துணை பட்ஜெட்டையும் வைத்துள்ளது.

    பாகிஸ்தானில் சென்று விளையாடுவது என்பது முற்றிலும் இந்திய அரசின் முடிவு என பிசிசிஐ உறுதியாக தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கேன் வில்லியம்சனை விட ஏழு புள்ளிகள் குறைவாக உள்ளார் ஜோ ரூட்.
    • வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 3-வது டெஸ்டில் சிறப்பாக விளையாடினால் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்பு.

    இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்டில் ஜோ ரூட் அபாரமாக விளையாடி 2-வது இன்னிங்சில் சதம் விளாசினார். மேலும், அந்த அணியின் மற்றொரு பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக்கும் சதம் அடித்தார்.

    இதனால் இருவரும் ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். ஜோ ரூட் 12 ரேட்டிங் புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் நீடிக்கிறார். கேன் வில்லியம்சன் ஏழு புள்ளிகள் முன்னிலையுடன் முதல் இடத்தில் உள்ளார்.

    நாளை மறுதினம் தொடங்கும் 3-வது டெஸ்டில் சிறப்பாக விளையாடினால் ஜோ ரூட் முதல் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.

    தற்போது கேன் வில்லியம்சன் 859 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். ஜோ ரூட் 852 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளார். ஹாரி ப்ரூக் 771 புள்ளிகளுடன் 4 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தில் உள்ளார்.

    பாபர் அசாம் ஒரு இடம் சரிந்து 4-வது இடத்தை பெற்றுள்ளார்.

    இந்தியாவின் ரோகித் சர்மா 7-வது இடத்திலும், ஜெய்ஸ்வால் 8-வது இடத்திலும், விராட் கோலி 10-வது இடத்திலும் உள்ளனர். சுப்மன் கில் 20-வது இடத்தை பிடித்துள்ளார்.

    • ஒவ்வொரு கேப்டனுக்கும், ஒவ்வொரு பயிறசியாளருக்கும் மாறுபட்ட எண்ணங்கள் இருக்கும்.
    • ஹர்திக் பாண்ட்யா ஒயிட்பால் கிரிக்கெட்டில் இந்திய அணிக்க மிக மிக முக்கியமான வீரர்.

    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டார். இதனால் ரோகித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சூர்யகுமார் யாதவ் இலங்கை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2026 உலகக் கோப்பை வரை கேப்டனாக நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பிசிசிஐ-யின் இந்த முடிவுக்கு முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். சிலர் விமர்சித்துள்ளனர். இந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படாதது ஆச்சர்யம் அளிக்கவில்லை என ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஆஷிஷ் நெஹ்ரா கூறியதாவது:-

    இல்லை. எனக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை. கிரிக்கெட் என வரும்போது இது போன்ற நிகழ்வுகள் நடைபெறும். உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்ட்யா துணைக் கேப்டனாக இருந்தார். ஆனால் அதே நேரத்தில் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் வந்துள்ளார். ஒவ்வொரு கேப்டனுக்கும், ஒவ்வொரு பயிறசியாளருக்கும் மாறுபட்ட எண்ணங்கள் இருக்கும். இந்த நேரத்தில் கம்பீரின் யோசனை இதை நோக்கி உள்ளது.

    அஜித் அகர்கர் மற்றும் கவுதம் கம்பீர் ஹர்திப் பாண்ட்யா குறித்து தெளிவாக தெரிவித்துள்ளனர். இது சிறந்தது என நான் நினைக்கிறேன். அவர் டி20-யுடன் 50 ஓவர் கிரிக்கெட்டிலும் விளையாடுகிறார். ஆனால் அதில் குறைவாகத்தான் விளையாடி வருகிறார். ஒயிட்பால் கிரிக்கெட்டில் இந்திய அணிக்க மிக மிக முக்கியமான வீரர்.

    அவர் அணியில் இருக்கும்போது, 4 வேகபந்து வீச்சாளர்கள் அணியில் இருப்பார்கள். வித்தியாசமான சமநிலையை அணியில் கொண்டு வருவார். சர்வதேச கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் (Impact Player Rule) விதி கிடையாது என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

    • கருணையற்ற விதத்தில் அடித்து ஆட விரும்புகிறோம்.
    • சில சமயங்களில் 280 முதல் 300 ரன்கள் வரை ஒரே நாளில் எடுப்போம்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுபயணம் செய்துள்ளது. முதல் 2 போட்டியிலும் இங்கிலாந்து அணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

    பிரண்டன் மெக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் கூட்டணியில் இங்கிலாந்து அணியின் பேஸ்பால் அணுகுமுறை மற்ற அணிகளுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது. அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 416 ரன்கள் குவித்து அசத்தியது. மேலும் டெஸ்ட் வரலாற்றில் 4.2 ஒவர்களில் 50 கடந்து வரலாற்று சாதனை படைத்தது.

    இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் 500 முதல் 600 ரன்கள் வரை எங்களால் அடிக்க முடியும் என இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் ஒல்லி போப் தெரிவித்துள்ளார்.

    உண்மையில், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அணி, 2022 டிசம்பரில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டின் தொடக்க நாளில் 506 ரன்கள் குவித்தது.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சில சமயங்களில் 280 முதல் 300 ரன்கள் வரை ஒரே நாளில் எடுப்போம். அது சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையாடுவதன் விளைவது. ஆனால், ஒரே நாளில் 500 முதல் 600 ரன்களை எடுக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

    உண்மையில் அதிமான ரன்கள் அடிக்க ஆவலாக இருக்கிறது. பசி என்றே சொல்லாம். தற்போது அதிகமான பசி இருக்கிறது. ஒரு பேட்டிங் அணியாக கருணையற்ற விதத்தில் அடித்து ஆட விரும்புகிறோம். ஆனாலும் இந்த ஆட்டத்தை நாங்கள் எப்படி ஆடுவோமோ அதே போல்தான் ஆடுகிறோம். ஏனெனில், இது எங்கள் தேசிய விளையாட்டு. கருணையற்ற விதத்தில் ஆடுவது டெஸ்ட் கிரிக்கெட்டின் ஓர் அங்கமாகும்.

    இப்படி ஆடு என்று போதிக்கப்பட்டுள்ளீர்களா என்று என்னிடம் கேட்டனர். ஆனால், அப்படியெல்லாம் இல்லை. இது எங்கள் இயல்பான ஆட்டம்தான். இப்படித்தான் கிரிக்கெட்டை யோசிக்கிறோம்.

    இவ்வாறு போப் கூறினார்.

    • முதலில் விளையாடிய வங்காளதேசம் 191 ரன்கள் குவித்தது.
    • அதனை தொடர்ந்து விளையாடிய மலேசியா 77 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேசம் - மலேசியா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய வங்காளதேசம் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 191 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக முர்ஷிதா 80 ரன்னும் சுல்தானா 62 ரன்களும் விளாசினர். மலேசியா அணி தரப்பில் மஹிரா இஸ்ஸாதி இஸ்மாயில், எல்சா ஹண்டர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    இதனையடுத்து மலேசியா அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஐன்னா ஹமிசா ஹாஷிம்- வான் ஜூலியா ஆகியோர் களமிறங்கினர். ஆட்டத்தில் 2-வது பந்திலேயே ஐன்னா ஹமிசா 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த எல்சா ஹண்டர் 20 ரன்னிலும் வான் ஜூலியா 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதனை தொடர்ந்து வந்த வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் வங்காளதேசம் அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் பி பிரிவில் முதல் அணியாக மலேசியா வெளியேறியது. 

    • காயம் காரணத்தால் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார்.
    • இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி வருகிற 27-ந் தேதி நடக்கிறது.

    இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையில் இந்திய வீரர்கள் இன்று 2-வது நாளாக வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி வருகிற 27-ந் தேதி நடக்க உள்ள நிலையில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சமீரா, காயம் காரணத்தால் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார்.

    அவரது காயத்துக்கான காரணம் என்னவென்று இதுவரை சரியாக தெரியவில்லை. இவருக்கு மாற்று வீரரை விரைவில் அறிவிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    • முதலில் ஆடிய வாஷிங்டன் பிரீடம் அணி 15.3 ஓவரில் 174 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது.
    • டக்வொர்த் லீவிஸ் விதிப்படி யூனிகார்ன் அணி வெற்றிபெற 14 ஓவரில் 177 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் நடந்து வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் 20-வது போட்டியில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன், வாஷிங்டன் பிரீடம் அணிகள் மோதின. டாஸ் வென்ற சான் பிரான்சிஸ்கோ யூனிகான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

    அதன்படி முதலில் ஆடிய வாஷிங்டன் பிரீடம் அணி 15.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 174 ரன் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.

    இதனால் ஆட்டம் தடைபட்டது. ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் தலா 56 ரன்கள் எடுத்து வெளியேறினர். ரச்சின் ரவீந்திரா 6ப ந்தில் 2 சிக்சருடன் 16 ரன் எடுத்தார்.

    மழை பெய்து ஆட்டம் தடைபட்டதால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி யூனிகார்ன் அணி வெற்றிபெற 14 ஓவரில் 177 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    சான் பிரான்சிஸ்கோ பிரீடம் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் முதல் பந்தில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய இந்திய வம்சாவளி வீரான சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜோஷ் இங்கிலீஷ் 17 பந்தில் 45 ரன்கள் குவித்தார்.

    இறுதியில், சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன் அணி 13.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 177 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி 42 பந்தில் 6 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 79 ரன்கள் குவித்து, ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளி வீரரான சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி பிரசாத், கர்நாடகா அண்டர் 16 அணிக்காக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வங்காளதேசம் தரப்பில் முர்ஷிதா 80 ரன்கள் விளாசினார்.
    • மலேசியா அணி தரப்பில் மஹிரா இஸ்ஸாதி இஸ்மாயில், எல்சா ஹண்டர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேசம் - மலேசியா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி தொடக்க வீரர்களாக திலாரா அக்டர்- முர்ஷிதா காதுன் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். 33 ரன்கள் எடுத்த நிலையில் திலாரா அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் நிகர் சுல்தானா, முர்ஷிதாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    தொடர்ந்து விளையாடிய இருவரும் அரை சதம் விளாசினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கபட்ட முர்ஷிதா 80 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் வங்காளதேசம் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 191 ரன்கள் குவித்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சுல்தானா 62 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    மலேசியா அணி தரப்பில் மஹிரா இஸ்ஸாதி இஸ்மாயில், எல்சா ஹண்டர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    • பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான ட்ரெவர் பேலிஸ்-ன் இரண்டு ஆண்டு ஒப்பந்தம் முடிவடைந்துள்ளது.
    • அவரை தொடர்ந்து நீட்டிக்க வாய்ப்பில்லை.

    ஐபிஎல் 2025 அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன் மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு அணிகளும் ரீ-டெய்ன் செய்வதற்கான வீரர்களின் எண்ணிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

    ஒவ்வொரு அணியும் நிறைய வீரர்களை கழற்றிவிட்டுள்ளனர். கேப்டன்கள் கூட சில அணிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் வீரர்கள் மட்டுமின்றி பயிற்சியாளரை கூட சில அணிகள் மாற்ற செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    அந்த வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான ட்ரெவர் பேலிஸ்-ன் இரண்டு ஆண்டு ஒப்பந்தம் முடிவடைந்துள்ளது. அவரை தொடர்ந்து நீட்டிக்க வாய்ப்பில்லை. அதனால் பஞ்சாப் அணி இந்திய முன்னாள் வீரர்களை பயிற்சியாளராக நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    குறிப்பாக வீரேந்தர் சேவாக், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோரில் ஒருவரை பயிற்சியாளராக நியமிக்க உள்ளதாக பஞ்சாப் அணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதில் சேவாக், யுவராஜ் சிங் ஆகியோர் பஞ்சாப் அணிக்காக விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
    • நேபாளம் அணி வீராங்கனைகள் சிலர் ஸ்மிருதி மந்தனாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் இடம்பெற்றுள்ளன. பி பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன.

    லீக் சுற்று முடிவில் இரு பிரிவுகளில் முதல் இரண்டு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும். அந்த வகையில், நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா செயல்பட்டார்.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய நேபாளம் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களை மட்டுமே எடுத்தது.

    இதனால் இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    இந்த போட்டி முடிந்த பின் நேபாளம் அணி வீராங்கனைகள் சிலர் இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதற்கும் மேலாக நேபாளம் அணியின் கேப்டன் இந்து பர்மா, தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஸ்மிருதி மந்தனாவுக்கு புத்தர் சிலையை பரிசாக வழங்கினார். இந்த சம்பவம் ரசிகர்களிடையே மிகந்த வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பாக புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.

    • திருச்சி, திண்டுக்கல் அணிகள் தலா 6 புள்ளிகளுடன் உள்ளன.
    • நெல்லை ராயல் கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    நெல்லை:

    8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 5-ந்தேதி சேலத்தில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து கோவையில் 2-வது கட்ட ஆட்டங்கள் நடைபெற்றது. தற்போது நெல்லையில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் 3-வது கட்ட போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டி தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும்.

    நேற்றுடன் 21 ஆட்டங்கள் முடிந்துள்ளன. நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் 6 ஆட்டத்தில் 5 வெற்றி, 1 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

    4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

    திருச்சி, திண்டுக்கல் அணிகள் தலா 6 புள்ளிகளுடன் உள்ளன. அதே நேரத் தில் திண்டுக்கல்லுக்கு இன்னும் 2 ஆட்டம் இருக்கிறது. திருச்சி அணிக்கு ஒரே ஒரு போட்டியே உள்ளது.

    நெல்லை 5 புள்ளியுட னும், திருப்பூர் தமிழன்ஸ் 4 புள்ளியுடனும், மதுரை 3 புள்ளியுடனும், சேலம் 2 புள்ளியுடனும் உள்ளன.

    டி.என்.பி.எல். போட்டியின் 23-வது ஆட்டம் நெல்லையில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் 3-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. அதே நேரத்தில் நெல்லை அணி 5 புள்ளியுடன் இருக்கிறது. திருப்பூர் அணி 4 புள்ளியுடன் உள்ளது.

    பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.

    ×