search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • 2024 டி20 உலகக் கோப்பையில் வர்ணனையாளராக டேல் ஸ்டெய்ன் இருந்து வருகிறார்.
    • ஸ்டெய்னுக்கு அமெரிக்க ஊழியர் ஒருவர் பந்துவீச சொல்லி கொடுத்த ஒரு வீடியோ அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    டி20 உலகக் கோப்பை 2024 கடந்த ஜூன் 2-ம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில், எந்த உலகக் கோப்பையிலும் இல்லாத அளவிற்கு 20 அணிகள் பங்கேற்று வருகிறது.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா ஜாம்பவான் டேல் ஸ்டெய்னுக்கு அமெரிக்க ஊழியர் ஒருவர் பந்துவீச சொல்லி கொடுத்த ஒரு வீடியோ அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    2024 டி20 உலகக் கோப்பையில் வர்ணனையாளராக டேல் ஸ்டெய்ன் இருந்து வருகிறார். ஏதேனும் ஒரு அணியில் வளர்ந்து வரும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சந்தேகம் என்றால் சொல்லி கொடுப்பார். ஆனால், ஸ்டெய்ன் யார் என்றே அடையாளத்தை முழுமையாக தெரியாத அமெரிக்க ஊழியர் ஒருவர், ஜாம்பவான் ஸ்டெய்னுக்கு சில பந்துவீச்சு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

    இதை எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத ஸ்டெயினும் தனக்கு எதுவும் தெரியாததுபோல், அனைத்தையும் ஆர்வத்துடன் கற்றுகொண்டு தான் முதல்முறை பந்துவீசுவதுபோல் முயற்சி செய்தார்.

    இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நீ படிச்ச ஸ்கூல்ல அவர் ஹெட்மாஸ்டர் டா என்ற வசனத்தை முன் வைத்து கலாய்த்து வருகின்றனர். மேலும் சிலர், அமெரிக்காவில் கிரிக்கெட் பிரபலம் இல்லை என்பதை இதன்மூலம் தான் தெரிகிறது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    அமெரிக்காவில் கிரிக்கெட் மிகவும் பிரபலமான விளையாட்டு அல்ல. இதனால்தான், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அமெரிக்காவில் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் 2024 டி20 உலகக் கோப்பையை நடத்த அனுமதி வழங்கியுள்ளது.

    • மேக்ஸ்வெல் கடைசியாக விளையாடிய 10 போட்டிகளில் 5 போட்டிகளில் டக் அவுட் ஆகியுள்ளார்.
    • கிறிஸ் கெயில் சாதனையை டேவிட் வார்னர் முறியடித்துள்ளார்.

    பார்படாஸ்:

    ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் வரலாற்று சாதனை படைத்துள்ளார். அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஆரன் பிஞ்ச் மொத்தம் 103 போட்டிகளில் விளையாடி 3,120 ரன்களை எடுத்திருக்கிறார். இதனை வார்னர் முறியடித்து இருக்கிறார்.

    அவர் 56 ரன்கள் (51 பந்துகள், 6 பவுண்டரிகள்) எடுத்த வார்னர், மொத்தம் 104 போட்டிகளில் விளையாடி 3,155 ரன்களை குவித்திருக்கிறார். இந்த போட்டியில், வார்னர் மற்றொரு சாதனையையும் படைத்திருக்கிறார். அவர், 27-வது அரை சதம் அடித்துள்ளார். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான கிறிஸ் கெயிலின் சாதனையையும் முறியடித்திருக்கிறார்.

    கெயில் 110 அரை சதம் அடித்திருக்கிறார். வார்னர் மொத்தம் 111 அரை சதம் எடுத்திருக்கிறார். இதேபோன்று, இந்த வரிசையில் இந்திய வீரர் விராட் கோலி இவர்களை நெருங்கும் வகையில், 105 அரை சதம் எடுத்துள்ளார்.

    மேலும் இந்த போட்டியில் மேக்ஸ்வெல் டக் அவுட் ஆனதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனையை படைத்துள்ளார். அவர் கடைசியாக விளையாடிய 10 போட்டிகளில் 5 போட்டிகளில் டக் அவுட் ஆகியுள்ளார். இதில் 3 கோல்டன் டக் அவுட் ஆகும்.

    • ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் வார்னர் அரை சதம் விளாசினார்.
    • இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பிரிட்ஜ்டவுண்:

    டி20 உலகக்கோப்பையில் 10-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஓமன் அணிகள் மோதியது. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ரன்களில் 3 முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும், வார்னர் - ஸ்டோய்னிஸ் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். குறிப்பாக வார்னர் அதிரடி காட்டாமல் நிதானமாக விளையாடினார். அவர் 51 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது எதிரணி பந்து வீச்சாளர் அவரது விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆக்ரோஷமாக செயல்பட்டார். 

    இதனால் சோகத்துடன் வெளியேறிய வார்னர் ஆஸ்திரேலிய அணியின் டிரெஸ்ஸிங் அறைக்கு செல்வது பதிலாக எதிரணியின் டிரெஸ்ஸிங் அறைக்கு சென்றார். உடனே அருகில் இருந்தவர்கள் கூறியவுடன் சுதாரித்து கொண்டு தங்களது டிரெஸ்ஸிங் அறைக்கு சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • 9-வது லீக் ஆட்டத்தில் சி பிரிவில் உள்ள உகாண்டா-பப்புவா நியூ கினியா அணிகள் மோதின.
    • 7 விக்கெட் இழப்புக்கு 78 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

    கயானா:

    9-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கயானாவில் இன்று நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் சி பிரிவில் உள்ள உகாண்டா-பப்புவா நியூ கினியா அணிகள் மோதின.

    டாஸ் வென்ற உகாண்டா கேப்டன் பிரையன் மசாபா பந்து வீச்சை தேர்வு செய்தார். உகாண்டா வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் பப்புவா நியூ கினியா அணி 19.1 ஓவரில் 77 ரன்னில் சுருண்டது.

    அல்பேஷ் ராம்ஜானி, காஸ்மாஸ் , ஜூமா மியாகி, பிராங்க் நசுபுகா தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

    பின்னர் விளையாடிய உகாண்டா அணி 78 ரன் இலக்கை 7 விக்கெட்டை இழந்து தான் எடுத்தது. அந்த அணி 18.2 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 78 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ரியாசத் அலி 33 ரன் எடுத்தார். அலைனோ, நார்மன் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    20 ஓவர் உலக கோப்பையில் உகாண்டாவுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். அந்த அணி முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் 125 ரன் வித்தியாசத்தில் தோற்று இருந்தது.

    உகாண்டா 3-வது போட்டியில் வெஸ்ட் இண்டீசை 9-ந் தேதி எதிர்கொள்கிறது.

    பப்புவா நியூகினியாவுக்கு தொடர்ந்து 2-வது தோல்வி ஏற்பட்டது. முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடம் 5 விக்கெட்டில் தோற்று இருந்தது. 3-வது போட்டியில் ஆப்கானிஸ்தானை 14-ந் தேதி சந்திக்கிறது.

    • பாகிஸ்தான் பயிற்சி ஆட்டமின்றி நேரடியாக உலகக் கோப்பையில் களம் காணுகிறது.
    • அமெரிக்கா இப்போது கவனிக்கக்கூடிய அணியாக மாறியுள்ளது.

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய நேரப்படி இன்று இரவு 9 மணிக்கு டல்லாஸ் நகரில் நடக்கும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, போட்டியை நடத்தும் அமெரிக்காவை (ஏ பிரிவு) எதிர்கொள்கிறது.

    சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த 20 ஓவர் தொடரில் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் பயிற்சி ஆட்டமின்றி நேரடியாக உலகக் கோப்பையில் களம் காணுகிறது.

    கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், இப்திகர் அகமது, பஹர் ஜமான் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பாகிஸ்தானின் பிரதான பலமே பந்து வீச்சு தான். வேகப்பந்து வீச்சாளர்கள் ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், முகமது அமிர், அப்பாஸ் அப்ரிடி, சுழற்பந்து வீச்சாளர் ஷதப் கான் மிரட்ட காத்திருக்கிறார்கள்.

    சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் இமாத் வாசிம் விலா பகுதியில் காயத்தால் அவதிப்படுவதால் இன்றைய ஆட்டத்தில் ஆடமாட்டார் என்று கேப்டன் அசாம் தெரிவித்தார்.

    சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 4,023 ரன்கள் எடுத்துள்ள பாபர் அசாமுக்கு அதிக ரன் குவித்தோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியை (4,038 ரன்) முந்துவதற்கு 16 ரன் மட்டுமே தேவை.

    இது குறித்து பாபர் அசாமிடம் கேட்ட போது, 'உலகக் கோப்பையை வெல்ல முயற்சிக்கவே இங்கு வந்துள்ளோமே தவிர, எனது தனிப்பட்ட சாதனை மைல்கல் குறித்து சிந்திப்பதற்காக அல்ல. சிறப்பாக விளையாடி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும். அது தான் முக்கியம். முந்தைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுள்ளோம்' என்றார்.

    அமெரிக்கா

    மோனக் பட்டேல் தலைமையிலான அமெரிக்கா தொடக்க ஆட்டத்தில் கனடாவுக்கு எதிராக 195 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து அசத்தியது. நியூசிலாந்து அணிக்காக விளையாடி விட்டு இடம்பெயர்ந்துள்ள ஆல்-ரவுண்டர் கோரி ஆண்டர்சன், முன்பு தென்ஆப்பிரிக்க ஜூனியர் அணிக்காக ஆடிய ஆன்ட்ரியாஸ் கவுஸ், இந்திய வம்சாவளியினர் கேப்டன் மோனக் பட்டேல், ஹர்மீத் சிங், சவுரப் நெட்ராவல்கர், பாகிஸ்தானில் பிறந்தவரான அலிகான் இப்படி பல நாட்டு வீரர்களின் கலவையாக உருவாகியுள்ள அமெரிக்கா இப்போது கவனிக்கக்கூடிய அணியாக மாறியுள்ளது.

    கடந்த ஆட்டத்தில் விக்கெட் கீப்பர் ஆரோன் ஜோன்ஸ் 94 ரன்கள் விளாசி, வெற்றிக்கு வித்திட்டார். உள்ளூர் சூழலில் விளையாடும் அமெரிக்க வீரர்கள் நிச்சயம் சவால் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகள் சர்வதேச கிரிக்கெட்டில் நேருக்கு நேர் மல்லுக்கட்டுவது இதுவே முதல் முறையாகும்.

    இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு பிரிட்ஜ்டவுனில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் நமிபியா- ஸ்காட்லாந்து அணிகள் ('பி' பிரிவு) சந்திக்கின்றன. நமிபியா தனது முதல் லீக்கில் சூப்பர் ஓவரில் ஓமனை பதம் பார்த்தது. அதே சமயம் ஸ்காட்லாந்து தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் மோதியது.

    அந்த ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது. ரிச்சி பெர்ரிங்டன் தலைமையிலான ஸ்காட்லாந்து வெற்றிக் கணக்கை தொடங்கும் ஆவலில் உள்ளது.

    • அபார பந்துவீச்சு காரணமாக 96 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • ரோகித் சர்மா பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

    அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஐயர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐயர்லாந்து அணி இந்தியாவின் அபார பந்துவீச்சு காரணமாக 96 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். இதன் மூலம் இந்திய அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 97 ரன்களை குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அரைசதம் கடந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

     


    அந்த வகையில், சர்வதேச டி20 போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியில் ரோகித் சர்மா இணைந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இந்திய வீரர் விராட் கோலி, இரண்டாம் இடத்தில் ரோகித் சர்மா, மூன்றாவது இடத்தில் பாபர் அசாம் உள்ளனர்.

    மேலும், 4 ஆயிரம் ரன்களை கடக்க குறைந்த பந்துகளை எடுத்துக் கொண்ட வீரர்கள் பட்டியிலில் ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளார். இவர் 2 ஆயிரத்து 860 பந்துகளை எதிர்கொண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். விராட் கோலி மற்றும் பாபர் அசாம் முறையே 2 ஆயிரத்து 900 மற்றும் 3 ஆயிரத்து 82 பந்துகளை எதிர்கொண்டு இந்த பட்டியிலில் இடம்பிடித்துள்ளனர்.

    இதுதவிர சர்வதேச கிரிக்கெட்டில் 600 சிக்சர்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். மேலும், அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார். இவரைத் தொடர்ந்து கிரிஸ் கெயில் 553 சிக்சர்களை விளாசி 2-வது இடத்திலும், ஷாகித் அப்ரிடி 476 சிக்சர்களை அடித்து 3-வது இடத்திலும் உள்ளனர்.

    இந்தியாவுக்காக அதிக வெற்றிகளை குவித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா மூன்றாவது இடத்தில் உள்ளார். நேற்றைய வெற்றியின் மூலம் இவர் 300 போட்டிகளில் வெற்றியை தேடி கொடுத்துள்ளார். இந்திய கேப்டனாக அதிக போட்டிகளில் வெற்றி பெற்றவர் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளார்.

    இந்திய டி20 அணியின் கேப்டனாக 42 போட்டிகளில் ரோகித் சர்மா வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்த இரு இடங்களில் எம்.எஸ். டோனி மற்றும் விராட் கோலி உள்ளனர். இருவரும் முறையே 41 மற்றும் 30 போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றி தேடிக்கொடுத்தனர்.

    • விராட் கோலி 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
    • ரிஷப் பண்ட் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நியூயார்க்கில் நடைபெற்ற போட்டியில் இந்தியா- அயர்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து இந்தியாவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 16 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 96 ரன்னில் சுருண்டது.

    ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டும், பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 97 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

    விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். விராட் கோலி 5 பந்தில் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து ரோகித் சர்மா உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாகவும், அதேவேளையில் அடிக்கக்கூடிய பந்தை அடித்து விளையாடினர். ரோகித் சர்மா 36 பந்தில் அரைசதம் அடித்தார். இதனால் இந்தியா 10 ஓவரில் 76 ரன்கள் விளாசியது.

    10 ஒவர் முடிந்த நிலையில் ரோகித் சர்மா 37 பந்தில் 52 ரன்கள் எடுத்து ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார். இதனால் சூர்யகுமார் யாதவ் களம் இறங்கினார்.

    சுழற்பந்து வீச்சாளர் ஒயிட் வீசிய பந்தை தூக்கிய அடிக்க முயன்ற சூர்யகுமார் கேட்ச் ஆகி 2 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். அடுத்து ஷிவம் டுபே களம் இறங்கினார். அப்போது இந்தியா 11.4 ஓவரில் 91 ரன்கள் எடுத்திருந்தது.

    13-வது ஓவரின் 2-வது பந்தை ரிஷப் பண்ட் சிக்சருக்கு தூக்கினார். இதனால் இந்தியா 12.2 ஓவரில் 97 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ரிஷப் பண்ட் 26 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷிவம் டுபே ரன்ஏதும் எடுக்காமல் இருந்தார்.

    • ஹர்திக் பாண்ட்யா 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
    • பும்ரா 3 ஓவரில் 6 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பையில் நியூயார்க்கில் நடைபெற்றும் வரும் போட்டியில் இந்தியா- அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி அயர்லாந்து அணி முதலில் களம் இறங்கியது. தொடக்க வீரர்களான ஆண்ட்ரூ பால்பிரைன் (5), பால் ஸ்டிர்லிங் (2) ஆகியோரை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் டக்கர் 10 ரன்னில் ஹர்திக் பாண்ட்யா பந்தில் வெளியேறினார்.

    அதன்பின் அயர்லாந்து இந்தியாவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் ஒரு கட்டத்தில் 50 ரன்களை தாண்டுமா? என்ற நிலை இருந்தது.

    கர்ட்டிஸ் கேம்பர் 12 ரன்களும், டெலானி 26 ரன்களும், லிட்டில் 14 ரன்களும் எடுக்க அயர்லாந்து 70 ரன்களை கடந்தது. இறுதியாக 16 ஓவரில் 96 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    ஹர்திக் பாண்ட்யா 4 ஓவரில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங், பும்ரா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். சிராஜ், அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை மோதின.
    • 7 ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நியூயார்க்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று அரங்கேறும் 8-வது லீக்கில் இந்திய அணி, அயர்லாந்தை சந்திக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

    இந்திய அணி விவரம் வருமாறு:

    ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், பும்ரா, அர்ஷ்தீப் சிங், சிராஜ்

    சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை மோதியுள்ளன. 7 ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • ஐபிஎல் தொடங்கிய காலத்தில் சிஎஸ்கே அணிக்காக விளையாடினார்.
    • தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். ஐபிஎல் போட்டியில் தனது திறமையான பந்து வீச்சால் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதில் கைதேர்ந்தவர்.

    இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் முதன்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகத்தான் விளையாடினார். பின்னர் பஞ்சாப் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடினார். இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார்.

    இந்த நிலையில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்புவார் என செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸின் உயர் செயல்திறன் மையத்தின் (Chennai Super Kings High Performance Centre) பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ள அகாடமிகளை கவனிக்கும் வகையில் உருவாக்கப்பட இருக்கிறது.

    இது தொடர்பாக சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறுகையில் "இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் அஸ்வின். அவரின் வருகை உயர் செயல்திறன் மையத்திற்கும், எங்களுடைய அகாடமிகளுக்கும் மிகப்பெரிய அளவில் பூஸ்ட்-ஆக அமையும்" என்றார்.

    அடுத்த வருடம் மெகா ஆக்சன் நடைபெறுகிறது. அப்போது அஸ்வினை மீண்டும் ஏலம் எடுப்பீர்களா? என்ற கேள்விக்கு, "ஆக்சனில் என்ன நடக்கிறது என்பதை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும்" என்றார்.

    டோனி அடுத்த வருடம் விளையாடுவாரா என்ற கேள்விக்கு, "இது தொடர்பாக டோனி மட்டுமே முடிவு செய்ய வேண்டும். நாங்கள், அவருடைய ரசிகர்கள் அவர் விளையாட வேண்டும் என்று விரும்புகிறோம். இறுதியான முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். அவருடைய முடிவுக்கு மதிப்பு அளிப்போம்" என்றார்.

    • விளையாட்டில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி மிகப்பெரிய என நான் நம்புகிறேன்.
    • இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது நெருக்கடியை எப்படி கையாள்கிறது என்பதுதான் முக்கியம்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி வருகிற 9-ந்தேதி நியூயார்க்கில் நடக்கிறது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி எப்போதும் மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்படும். அமெரிக்க ரசிகர்களுக்கு இது சூப்பர் பவுல் (Super Bowl) போன்று இருக்கும் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஷாகித் அப்ரிடி கூறுகையில் "முதன்முறையாக உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை பார்க்க இருக்கும் அமெரிக்கர்களுக்கு, இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் சூப்பர் பவுல் போன்றதாக இருக்கும் என்பது தெரிந்திருக்கும்.

    நான் எப்போதுமே இந்தியாவில் நடைபெறும் போட்டியில் விளையாட விரும்புவேன். விளையாட்டில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி மிகப்பெரிய என நான் நம்புகிறேன். நான் இதுபேன்ற போட்டிகளில் விளையாடும்போது நான் ஏராளமான அன்பை இந்திய ரசிகர்களிடம் இருந்து பெற்றுள்ளேன். இரண்டு பக்க வீரர்களும் அதுபோன்று பரஸ்பர அன்பை பெற்றுள்ளனர்.

    இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது நெருக்கடியை எப்படி கையாள்கிறது என்பதுதான் முக்கியம். இரண்டு அணிகளும் அதிக திறமைகளை கொண்டதுதான். அன்றைய நாளில் வீரர்கள் ஒன்றிணைந்து திறமையை வெளிப்படுத்துவது அவசியம். இந்தியாவுக்கு எதிரான போட்டி மற்றும் தொடர் முழுவதும் இது தேவை. நெருக்கடியை கையாளும் அணி முதல் இடத்தை பிடிக்க முடியும்.

    இவ்வாறு அப்ரிடி தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவில் தேசிய கால்பந்து லீக் தொடர் பிரபலம். இதன் இறுதிப் போட்டியை சூப்பர் பவுல் என அழைப்பாளர்கள். கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி இங்குள்ள மியாமி அணியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா எந்தளவுக்கு நல்ல அணி என்பதை நாங்கள் அறிவோம். அதை சொல்வதற்காக நாங்கள் கூச்சப்படவில்லை.
    • இந்த போட்டிக்காக அணியாக நாங்கள் ஆர்வமுடன் உள்ளோம்.

    டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. அதில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்து அணியை இன்று எதிர்கொள்கிறது. அப்போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்நிலையில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி காண்போம் என்று அயர்லாந்து அணி வீரர் ரோஸ் அடேர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த போட்டிக்காக அணியாக நாங்கள் ஆர்வமுடன் உள்ளோம். இந்திய வீரர்களை நியூயார்க் நகரில் முதல் போட்டியில் எதிர்கொள்வதை எதிர்நோக்கியுள்ளோம். இந்தியா எந்தளவுக்கு நல்ல அணி என்பதை நாங்கள் அறிவோம். அதை சொல்வதற்காக நாங்கள் கூச்சப்படவில்லை. ஆனால் நாங்கள் இந்த போட்டிக்காக முழுமையாக தயாராகியுள்ளோம்.

    அதனால் இந்தியாவுக்கு நாங்கள் நல்ல போட்டியை கொடுப்போம் என்று நம்புகிறோம். போட்டியை எந்த நேரத்திலும் மாற்றக்கூடிய வீரர்கள் இந்திய அணியில் நிறைந்திருக்கிறார்கள். இருப்பினும் நாங்கள் எங்களுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி முடிந்த வரை இந்தியாவை அமைதியாக வைத்திருக்க முயற்சிப்போம்.

    என்று கூறினார்.

    ×