search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    • குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கட்சி பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
    • மாவட்ட அளவில் தலைமை தாங்கும் பொறுப்பில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் யாரையும் அதிடியாக நீக்கியதும் இல்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை மீண்டும் சேர்ப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

    அதே நேரத்தில் எதிராளிகளுடன் ரகசிய தொடர்பில் இருப்பவர்களை கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கையிலும் அவர் அதிரடியாக இறங்கியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ள எடப்பாடி பழனிசாமி, அந்த கட்சியினரோடும் பா.ஜ,க, வுக்கு ஆதரவான அமைப்பினருடனும் தொடர்பில் இருப்பவர்களையும் கண்காணித்து வருகிறார்.

    அந்த வகையில் குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கட்சி பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். பேரணியை தொடங்கி வைத்ததற்காக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் திருக்குறளை மேற்கோள் காட்டி அதிரடியான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

    "வான் போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு" என்கிற திருக்குறளை கடிதத்தில் குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியது இல்லை. ஆனால் நண்பர்கள் போல இருந்து உட்பகை கொண்டவர்களின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும் என்று எத்தனை ஆழமான அறிவுரையை வள்ளுவ பேராசான் நமக்கு தந்திருக்கிறார். உட்பகை கொண்டவர்கள் இனி நம் இயக்கத்திற்கு வேண்டாம் என்பதில் உறுதியோடு நிற்போம் என விளக்கியுள்ளார்.

    கட்சிக்கு வேண்டாதவர்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டு கட்சிக்குள்ளேயும் உள்பகை கொண்டு செயல்படுபவர்கள் யாராவது இருந்தாலும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்பதை தனது கடிதத்தின் மூலமாக எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாகவே தெரிவித்திருப்பதாக அ.தி.மு.க.வினர் கூறியுள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் எடப்பாடி பழனிசாமி இது போன்ற அதிரடியான வார்த்தைகளை குறிப்பிட்டு கட்சியினருக்கு கடிதம் எழுதியது இல்லை.

    அதே நேரத்தில் மாவட்ட அளவில் தலைமை தாங்கும் பொறுப்பில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் யாரையும் அதிடியாக நீக்கியதும் இல்லை. ஆனால் தற்போது கட்சி நிர்வாகிகளை களையெடுக்கும் விதத்தில் முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டியிருப்பது கட்சி நிர்வாகிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார்.
    • நீர்நிலை மற்றும் பூங்கா அமைப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியையும் அவர் ஆய்வு செய்தார்.

    சென்னை:

    சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

    சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் முதலமைச்சர் ஆய்வு செய்தார். ரேஸ் கோர்ஸ் நிலம் அரசின் வசம் வந்துள்ள நிலையில் அங்கு நடைபெறும் குளம் அமைக்கும் பணியை பார்வையிட்டார். நீர்நிலை மற்றும் பூங்கா அமைப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியையும் அவர் ஆய்வு செய்தார்.

    மழை நீரை தேக்கி வைக்கும் அளவிற்கு மிகப்பெரிய அளவில் குளம் அமைக்குமாறு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியதையடுத்து பணி தொடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஓடையின் நீர் வரத்து தடைப்பட்டால் உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • 12 டிப்பர் லாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட மாதவபுரம், வ.உ.சி நகர், ஜீவன் நகர், வீராங்கல் ஓடை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியதாவது:-

    ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட அய்யப்பன் தாங்கல், பரணிபுத்தூர், மவுலிவாக்கம், கொளப்பாக்கம், முகலிவாக்கம், மணப்பாக்கம் ஆகிய பகுதிகள் போரூர் ஏரியின் உபரிநீர் வெளியேற்றத்தால் பாதிக்கப்படுவதை தடுக்க ரூ.204.93 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாய்க்கால்களின் மதகுகள் சீராக இயங்குமாறு தயார் நிலையில் வைத்திருக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    ஆதம்பாக்கம், பழவந்தாங்கல், வானுவம்பேட்டை, நங்கநல்லூர் வீராங்கல் ஓடையால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய ரூ.13.80 கோடி மதிப்பில் அதன் கரைகளை பலப்படுத்துப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஓடையின் நீர் வரத்து தடைப்பட்டால் உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆலந்தூர் மண்டலத்தில் ரூ.83 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணிகளையும், ரூ.9.88 கோடி மதிப்பீட்டில் கண்ணன் காலனி, ஆலந்தூர் மாதவரம் ஆகிய இடங்களில் கழிவுநீர் உந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஆலந்தூர் மண்டலத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 13 அவசர கால குழுக்களும், சுமார் 2 ஆயிரம் பொதுமக்கள் தங்கும் வகையில் 13 நிவாரண முகாம்கள், 3 பொது சமையல் கூடங்கள், 52 மோட்டார் பம்புகள், 37 மரம் வெட்டும் எந்திரங்கள், 5 மண் நிரம்பும் எந்திரங்கள், 12 டிப்பர் லாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநாடு பணிக்காக 27 குழுக்களை அமைத்து விஜய் உத்தரவிட்டுள்ளார்.
    • பாதுகாப்பு பணிகளில் போலீசாருடன் இணைந்து 10 ஆயிரம் தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர்.

    சென்னை:

    விஜய்யின் தமிழக வெற்றிக்கழக முதல் அரசியல் மாநாடு வருகிற 27-ந்தேதி விக்கிரவாண்டி அருகே உள்ள வி. சாலை என்ற இடத்தில் நடைபெற இருக்கிறது.

    மாநாடுக்கு 33 நிபந்தனைகளை போலீசார் விதித்ததுடன் அதில் 17 நிபந்தனைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்தனர்.

    இதைத் தொடர்ந்து கடந்த 4-ந்தேதி மாநாட்டு பணிகள் பூஜையுடன் தொடங்கியது. மேடை மற்றும் வாகன நிறுத்தம், உணவுக் கூடங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 85 ஏக்கர் நிலப்பரப்பில் நடந்து வரும் மாநாடு பணிகளை கட்சி பொதுச்செயலாளர் அங்கு தங்கி இருந்து மாநாடு வளாகம் முழுவதையும் மோட்டார் சைக்கிளில் சென்று பார்வையிட்டு வருகிறார்.

    மாநாடு பணிக்காக 27 குழுக்களை அமைத்து விஜய் உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு பணிகளில் போலீசாருடன் இணைந்து 10 ஆயிரம் தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் மாநாடு தொடர்பாக போலீசார் மீண்டும் 5 கேள்விகளை கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    அதில் 27-ந்தேதி மாநாடு நடைபெறும் போது மழை பெய்தால் லட்சக்கணக்கில் வரும் தொண்டர்களுக்கு என்ன ஏற்பாடு செய்துள்ளீர்கள்? வாகன நிறுத்தம் வரைபடங்கள் உள்பட 5 கேள்விகளை மாநாடு நடைபெறுவதற்கு முன்பாக போலீசாருக்கு அளிக்க வேண்டும் என நோட்டீசில் கூறியுள்ளனர்.

    போலீசார் கேட்ட 5 கேள்விகளை தொடர்ந்து விஜய் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். போலீசார் கேட்ட 5 கேள்விகளுக்கும் கட்சி சார்பில் பதில்கள் தயாராகி வருகிறது. இன்னும் சில தினங்களில் 5 கேள்விகளுக்கும் கட்சி சார்பில் பதில் அளிக்கப்பட இருக்கிறது.

    மாநாட்டு பந்தலை சுற்றிலும் அவசர சிகிச்சைக்காக மருத்துவக் குழுவினர் ஈடுபட உள்ளனர். மருத்துவ பணியில் 150 டாக்டர்கள், 150 நர்சுகள் பணிபுரிய இருக்கின்றனர். 15 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்நிலையில் மருத்துவக் குழுவினர் நேற்று மாநாடு பந்தலை பார்வையிட்டனர்.

    மருத்துவ முகாம் அமைக்கப்பட இருக்கும் இடங்கள் பற்றி கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    • ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகத் தமிழ்நாட்டில் தோன்றிய புரட்சிச் சுடர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாள்!
    • தென்னாட்டின் வீரம் செறிந்த வரலாற்றுப் பக்கங்களில் எந்நாளும் ஒளிவீசும்!

    சென்னை:

    புரட்சிச் சுடர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகத் தமிழ்நாட்டில் தோன்றிய புரட்சிச் சுடர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாள்! அந்நியரின் ஆதிக்கம் பொறுக்காமல், நெஞ்சை நிமிர்த்திப் போரிட்ட அவரது புகழ், தென்னாட்டின் வீரம் செறிந்த வரலாற்றுப் பக்கங்களில் எந்நாளும் ஒளிவீசும்!

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.

    • தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான கோவி.செழியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
    • பெரியார் பல்கலைக்கழகத் துறைகளில் பயின்ற 1,018 மாணவர்களும், பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் பயின்ற 1,077 மாணவர்களும் பட்டங்களை பெற்றனர்.

    கருப்பூர்:

    சேலம் பெரியார் பல்கலைக்கழக 23-வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான ஆர்.என்.ரவி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு வந்தார்.

    அவரை சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் தலைமையில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் வரவேற்றனர். இதனையடுத்து பேண்டு வாத்தியம் முழங்க கவர்னர் ஆர்.என்.ரவி, ஆட்சிப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்களுடன் விழா மேடைக்கு வந்தார்.

    இதனையடுத்து நடந்த விழாவில் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஜெகநாதன் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். இந்தநிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழக இணைவேந்தரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான கோவி.செழியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    விழாவில் முதன்மை விருந்தினராக சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் க.ஜ.ஸ்ரீராம் பங்கேற்று பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான ஆர்.என்.ரவி முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்துள்ள 288 பேருக்கு பட்டச் சான்றிதழை வழங்கினார். மேலும், பெரியார் பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் முதுநிலை மற்றும் இளங்கலைப் பாடங்களில் முதலிடம் பிடித்த 107 மாணவ மாணவிகளுக்கு தங்கப் பதக்கத்துடன் கூடிய பட்டச் சான்றிதழை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

    பெரியார் பல்கலைக்கழக 23-வது பட்டமளிப்பு விழாவின் வாயிலாக, மேடையில் பட்டம் பெற்ற 397 மாணவர்களுடன் சேர்த்து சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலிருக்கும் இணைவு பெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த 46,365 மாணவர்களும், பெரியார் பல்கலைக்கழகத் துறைகளில் பயின்ற 1,018 மாணவர்களும், பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் பயின்ற 1,077 மாணவர்களும் பட்டங்களை பெற்றனர்.

    பட்டமளிப்பு விழாவில் பதிவாளர் பெ.விஸ்வநாதமூர்த்தி, தேர்வாணையர் எஸ்.கதிரவன், ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப் பேரவை உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவியர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் எல்லா பகுதிகளுக்கும் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
    • ஆவின் பால் வினியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை.

    சென்னை:

    சென்னையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பொதுமக்கள் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அதிகமாக வாங்கி குவித்தனர். இதனால் மளிகை கடைகள், பெட்டிக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.

    ஆவின் பார்லர், விற்பனை மையங்களில் நீண்ட வரிசையில் நின்று பால் வாங்கி சென்றனர். வழக்கமாக வாங்கும் அளவை விட ஒவ்வொருவரும் கூடுதலாக பால் வாங்கியதால் கடைகளில் உடனே விற்று தீர்ந்தன.

    ஆவின் பால் மட்டுமல்லாமல் தனியார் பால் பாக்கெட்டுகளுக்கும் கிராக்கி ஏற்பட்டது.

    சென்னையில் ஆவின் பால் தினமும் 14.5 லட்சம் லிட்டர் வினியோகிக்கப்படுவது வழக்கம். கனமழை எச்சரிக்கை, விடுமுறை விடப்பட்டதால் திடீர் தேவை அதிகரித்தது. இதனால் கூடுதலாக 1.5 லட்சம் லிட்டர் வினியோகிக்கப்படுகிறது.

    2 நாட்களாக தினமும் 16 லட்சம் லிட்டர் ஆவின் பால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வினியோகிக்கப்படுகிறது.

    இதுகுறித்து ஆவின் அதிகாரி ஒருவர் கூறுகையில், பாலுக்கு ஏற்பட்டுள்ள திடீர் தேவையின் அடிப்படையில் வெளி மாவட்டங்களில் இருந்து கூடுதலாக பால் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்படுகிறது.

    5 பாக்கெட்டுகள் வரை ஆவின் பார்லர்களில் கொடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதற்கு மேல் மொத்தமாக கேட்டால் கொடுக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் எல்லா பகுதிகளுக்கும் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பால் வினியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை.

    அம்பத்தூர் பால் பண்ணையில் மழை நீர் தேங்கியது. அவற்றை உடனே வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வழக்கமாக 330 ஆம்னி பஸ்கள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வரும்.
    • சென்னை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் கனமழை பெய்ததால் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வருவதையும் ஒத்தி வைத்தனர்.

    சென்னை:

    சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது.

    நேற்றும் இன்றும் மிக கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டதால் வெளியூர் பயணத்தை மக்கள் தவிர்த்தனர். இதனால் பஸ்களில் கூட்டம் குறைந்து.

    அரசு பஸ்கள் குறைந்த அளவிலான பயணிகளுடன் சென்றது. வார இறுதி நாட்கள் (வெள்ளி, சனி, ஞாயிறு) இல்லாத பிற நாட்களில் 800 அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படும். சென்னையில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் இக்கப்பட்டன.

    ஆம்னி பஸ்களை பொறுத்தவரையில் 50 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை. வழக்கமாக சென்னையில் இருந்து 800 ஆம்னி பஸ்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும்.

    ஆனால் பயணிகள் இல்லாததால் 350 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் தெரிவித்தார். அதே போல வெளியூர்களில் இருந்தும் சென்னைக்கு நேற்று குறைந்த அளவில்தான் ஆம்னி பஸ்கள் வந்தன.

    வழக்கமாக 330 ஆம்னி பஸ்கள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வரும். நேற்று 200 பஸ்கள் மட்டுமே வந்தன.

    சென்னை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் கனமழை பெய்ததால் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வருவதையும் ஒத்தி வைத்தனர். பலர் முன்பதிவு செய்த பயணத்தை ரத்து செய்தனர். அவசரமாக செல்ல வேண்டியவர்கள் மட்டுமே பஸ் பயணத்தை மேற்கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்று இதுவரை லேசான மழைதான் பெய்து உள்ளது.
    • அதி கனமழை பெய்தாலும், அதையும் எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது.

    சென்னை:

    சென்னையில் பெய்து வரும் மழையால் இடைவிடாது தொடர்ந்து பணியாற்றி வரும் மாநகராட்சி முன்கள பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சிற்றுண்டி உள்ளிட்ட உதவிப் பொருட்களை வழங்கினார்.

    சேப்பாக்கத்தில் உள்ள தொகுதி சட்டமன்ற அவலகத்துக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் சாலை பணியாளர்களுக்கு இந்த நிவாரண பொருட்களை வழங்கினார். போர்வை, பிரட், பிஸ்கட், குடிநீர் பாட்டில்கள் ஆகியவற்றுடன் உதவித் தொகையையும் அவர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் அவருடன் தயாநிதி மாறன் எம்.பி., மாநகராட்சி நிலைக்குழு தலைவர் நே.சிற்றரசு, மண்டல குழுத் தலைவர் மதன் மோகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சி முடிந்ததும் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் அனைத்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் களத்தில் இறங்கி மக்களுக்கு மழையால் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக அனைத்துவித முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

    இன்று இதுவரை லேசான மழைதான் பெய்து உள்ளது. இதற்கு பிறகு அதி கனமழை பெய்தாலும், அதையும் எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது.

    பொதுமக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் ஒத்துழைப்பு தந்ததற்கு. களத்தில் தொடர்ந்து பணியாற்றி வரும் தூய்மையாளர்கள் உள்ளிட்ட அனைத்து துறையினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மழை நீர் தடுப்பு பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டு உள்ளார். சென்னையில் மழை நீர் தேங்காமல் இருப்பதே வெள்ளை அறிக்கை தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல ஆம்னி பஸ்கள் சென்னைக்கு செல்லவில்லை.
    • கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    போடியில் இருந்து தேனி, மதுரை, கரூர் வழியாக சென்னைக்கு ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய 3 நாட்கள் அதி விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டும், அட்டவணைகள் மாற்றியமைக்கப்பட்டும் உள்ளது.

    குறிப்பாக தென் மாவட்ட ரெயில்களின் இயக்கம் மாற்றியமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு 8.30 மணிக்கு போடியில் இருந்து சென்னைக்கு புறப்பட வேண்டிய அதி விரைவு ரெயில் முன் அறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இதனால் ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் டிக்கெட்டை ரத்து செய்து கட்டணத்தை திரும்ப பெற்றுச் சென்றனர்.

    இதே போல் பல ஆம்னி பஸ்கள் சென்னைக்கு செல்லவில்லை. கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டது. இதனால் அவசர தேவைக்காக சென்னை செல்ல கைக்குழந்தை, முதியவர்களுடன் வந்த பயணிகள் சிரமம் அடைந்தனர்.

    அரசு பஸ்கள் மற்றும் மாற்று வாகனங்களில் சென்னை சென்றனர். அடுத்ததாக வியாழக்கிழமை ரெயில் இயக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

    • மலை ரெயில் போக்குவரத்து 2 நாட்கள் ரத்து.
    • 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ராட்சதளவில் நீர்வீழ்ச்சிகள் உருவாகி உள்ளன.

    மேட்டுப்பாளையம்:

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை கொட்டி வருகிறது.

    நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழையின் தீவிரம் அதிகமாக உள்ளது. இதனால் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலைரெயில் தண்டவாளத்தில் மண் சரிவு மற்றும் பாறை, மண் ஆகியவை விழுந்து தண்டவாளங்கள் சேதமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே நேற்று குன்னூர் இடையே உள்ள மரப்பாலம், பர்லியாறு, கே.என்.ஆர், ஹில்குரோவ், அடர்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால் மலைரெயில் பாதையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ராட்சதளவில் புதிய நீர்வீழ்ச்சிகள் உருவாகி உள்ளன.

    அதில் இருந்து தண்ணீர் காட்டாற்று வெள்ளம் போல தண்டவாளத்தில் விழுந்து அந்த பகுதியே வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேட்டுப்பாளையம் ரெயில்வே பணிமனை ஊழியர்கள் மழை பெய்து கொண்டே இருந்ததால் தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்துள்ளனவா என ஆய்வு செய்ய சென்றனர்.

    அப்போது தான் இந்த நீர்வீழ்ச்சிகள் உருவாகி இருந்ததை கண்டனர். மேலும் சில இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டு இருந்தது. உடனடியாக அவர்கள் ரெயில்வே அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் இன்றும், நாளையும் என 2 நாட்கள் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மலைரெயில் ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம்-பர்லியாறு இடையே முதல் கொண்டை ஊசி வளைவின் அருகே பழமை வாய்ந்த ராட்சத மரம் ஒன்று சாலையின் நடுவே முறிந்து விழுந்தது.

    இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து வந்த வாகனங்களும், குன்னூரில் இருந்து வந்த வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    இதுகுறித்து தகவலறிந்து வந்த மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினர் மற்றும் வருவாய் துறையினர், போலீசார் சாலையில் விழுந்து கிடந்த ராட்சத மரத்தை 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி அகற்றினர்.

    இதனால் மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை பாதையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதேபோல் வண்டிச்சோலை, பெள்ளட்டி மட்டம், பாய்ஸ் கம்பெனி, வண்டிச்சோலை, மூன்று ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதித்தது.

    குன்னூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் குமார் மற்றும் தாசில்தார் கனி சுந்தரம் ஆகியோர் மேற்பார்வையில் மரங்கள் அகற்றப்பட்டது.

    இன்று அதிகாலை குன்னூர் அருகே உள்ள பிளாக்பிரிட்ஜ்-சப்ளை டிப்போ சாலையில் 3 மரங்கள் அடுத்தடுத்து மின் கம்பிகள் மீது விழுந்தது. இதனால்

    மின்சாரத்துறையினர் விரைந்து வந்து மின்சாரத்தை துண்டித்தனர். தொடர்ந்து அங்கு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    • சென்னையில் இந்த முறை எதிர்பார்த்ததை விட குறைவாகவே மழை பெய்திருக்கிறது.
    • வடகிழக்கு பருவமழைக் காலத்தில் எதிர்பார்ப்பை விட அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

    சென்னை:

    பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

    சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு குறிப்பிடும்படியாக மழை பெய்யாததாலும், மாநகராட்சி சார்பில் மழை நீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதாலும் சென்னை மாநகரின் முதன்மைச் சாலைகளில் நேற்று பகலில் தேங்கியிருந்த மழை நீர் வடிந்திருக்கிறது. அதனால் போக்குவரத்து ஒருபுறம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், பொதுமக்களும் நிம்மதிப் பெருமூச்சு விடத் தொடங்கியுள்ளனர்.

    அதேநேரத்தில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் உட்புறச்சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் தேங்கியுள்ள மழை நீர் இன்னும் வெளியேற்றப்படவில்லை. அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி அந்த பகுதிகளிலும் இயல்பு நிலையைத் திரும்பச் செய்வதற்கு சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததையும், அதிக எண்ணிக்கையிலான நீர் இறைப்பான்கள் கொண்டு வரப்பட்டு தேங்கிக் கிடந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டதையும் மறுக்க முடியாது. அதே நேரத்தில் மழை நீர் தேங்காமல் தடுப்பதில் சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் தோல்வியடைந்து விட்டன. திருப்புகழ் குழு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தவாறு மழை நீர் வடிகால்கள் முழுமையாக அமைக்கப்பட்டிருந்தால் சென்னையில் எந்தப் பகுதியிலும் மழை நீர் தேங்காமல் தடுத்திருக்க முடியும்.

    சென்னையில் இந்த முறை எதிர்பார்த்ததை விட குறைவாகவே மழை பெய்திருக்கிறது. இன்னும் இரு மாதங்கள் நீடிக்கக்கூடிய வடகிழக்கு பருவமழைக் காலத்தில் எதிர்பார்ப்பை விட அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அத்தகைய சூழல் ஏற்பட்டால் அதை சமாளிக்கும் வகையில் சென்னையில் இன்னும் முடிக்கப்படாத மழைநீர் வடிகால்கள் உள்ளிட்ட வெள்ளத்தடுப்புப் பணிகளை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு முடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    ×