என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
துபாய்
- ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனையை தேர்வுசெய்து ஐ.சி.சி கவுரவித்து வருகிறது.
- சிறந்த வீராங்கனை விருது வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூசுக்கு வழங்கப்பட்டது.
துபாய்:
ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கவுரவித்து வருகிறது. அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்திருந்தது.
ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதிற்கான பரிந்துரை பெயர் பட்டியலில் நமீபிய வீரரான எராஸ்மஸ், யு.ஏ.இ கேப்டனான முகமது வாசிம், பாகிஸ்தான் முன்னாள் கேப்டனான ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்நிலையில் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருது வென்றவர்களை ஐ.சி.சி அறிவித்துள்ளது.
அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது யு.ஏ.இ கேப்டன் முகமது வாசிமுக்கும், சிறந்த வீராங்கனை விருது வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூசுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
- சிறப்பு கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் கப்பலில் இறங்கி அதில் இருந்த இந்திய மாலுமிகள் உள்பட 25 பேரையும் சிறை பிடித்தனர்.
- கப்பலில் இருந்த கேரளாவை சேர்ந்த ஆன்டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் விடுவிக்கப்பட்டு சொந்த ஊர் அனுப்பி வைக்கப்பட்டார்.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரக கடற்கரை பகுதியில் இருந்து மும்பை நவசேவா துறைமுகத்துக்கு கடந்த மாதம் 12-ந்தேதி எம்.எஸ்.சி. ஏரிஸ் என்று பெயரிடப்பட்ட சரக்கு கப்பல் கண்டெய்னர் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது.
போர்ச்சுகீசிய கொடியுடன் இஸ்ரேலுடன் தொடர்புடைய இந்த கப்பலில் இந்தியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ரஷியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 25 மாலுமிகள் பயணம் செய்தனர். இதில் 3 தமிழர்கள் உள்பட 18 பேர் இந்தியர்கள் ஆவார்கள்.
இந்த சரக்கு கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தி அருகில் வந்து கொண்டிருந்த போது ஈரானின் புரட்சி படையை சேர்ந்த சிறப்பு கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் கப்பலில் இறங்கி அதில் இருந்த இந்திய மாலுமிகள் உள்பட 25 பேரையும் சிறை பிடித்தனர். பின்னர் அவர்கள் ஈரான் நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஈரான் கடற்படையினரிடம் சிக்கிய இந்திய மாலுமிகளை மீட்க மத்திய அரசு முயற்சியினை மேற்கொண்டது. இதையடுத்து இந்தியர்களை விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
கப்பலில் இருந்த கேரளாவை சேர்ந்த ஆன்டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் விடுவிக்கப்பட்டு சொந்த ஊர் அனுப்பி வைக்கப்பட்டார். கொச்சி விமான நிலையத்துக்கு வந்த அவருக்கு அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதன் தொடர்ச்சியாக மேலும் இந்திய மாலுமிகள் 5 பேர் நேற்று மாலை ஈரானில் இருந்து சொந்த நாட்டுக்கு திரும்புவதை பந்தர் அப்பாசில் உள்ள இந்திய துணை தூதரகம் உறுதிபடுத்தி உள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் எக்ஸ் வலைதள பக்கத்தில் தகவலை வெளியிட்டு ஈரானுக்கு இந்தியா நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இவர்களை தொடர்ந்து மற்ற இந்திய மாலுமிகளும் இன்னும் ஓரிரு நாளில் சொந்த நாட்டுக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.
- பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகிறது.
- துறைமுகம் மற்றும் பூங்காக்களை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.
துபாய்:
ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை கொட்டியது. இதனால் துபாய், அபுதாபி, சார்ஜா போன்ற நகரங்கள் வெள்ளத்தில் மிதந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
இந்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் நேற்று மீண்டும் துபாய் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. சாலைகள், நடைமேடைகள், சுரங்க பாதைகள் என அனைத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முடங்கி போய் உள்ளது.
தேங்கி கிடக்கும் மழைநீரில் வாகனங்கள் தத்தளித்த படி சென்றன. துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் தண்ணீர் ஆறு போல ஓடியதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. பல்வேறு நாடுகளில் இருந்து துபாய் வந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
துபாயில் இருந்து மற்ற நாடுகளுக்கு செல்லும் 15-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதன் காரணமாக விமான நிலையத்தில் பயணிகள் கடும் தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இன்று 2-வது நாளாக தொடர்ந்து துபாயில் மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இரவு நேரம் சூறாவளி காற்று வீசுகிறது. இடைவிடாத மழையால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகிறது.
துறைமுகம் மற்றும் பூங்காக்களை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.
சார்ஜாவில் மழையால் பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்றும் மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் போன்ற நகரங்களில் முறையான வடிகால் வசதிகள் இல்லாததால் வெள்ளம் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுவும் பொதுமக்களை அவதிக்குள்ளாக்கி இருக்கிறது.
இதுவரை கடும் வறட்சியால் செயற்கை மழையை உருவாக்கி வந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தற்போது இயற்கை மழையால் தத்தளித்து வருகிறது. கடந்த 75 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது வரலாறு காணாத வகையில் பேய் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கால நிலை மாற்றத்தால் வருங்காலங்களில் வளைகுடா நாடுகளில் வெப்பம் மேலும் அதிகரித்து வெப்ப சலனம் காரணமாக கன மழை பெய்யும் என்றும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- கோளின் ஒரு பாதி நிரந்தரமாக ஒளிரும் (பகலாகவே இருக்கும்).
- மற்றொரு பாதி நிரந்தரமாக இருள் சூழ்ந்ததாகவும், மிகவும் குளிர்ந்த நிலையிலும் உள்ளது.
அபுதாபி:
பூமியில் இருந்து சுமார் 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அபுதாபி நியூயார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அரிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து அரசு செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளதாவது:-
அபுதாபி நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஜாஸ்மினா பிலெசிக், பேராசிரியர் இயன் டாப்ஸ் டிக்சன் மற்றும் குழுவினர் இணைந்து நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் ஆராய்ச்சி செய்துவந்தனர். இதில் பூமியில் இருந்து சுமார் 86 ஒளி ஆண்டுகள் (ஒளி 1 ஆண்டில் பயணம் செய்யும் தூரம்) தொலைவில் உள்ள டபள்யூ.ஏ.எஸ்.பி- 43பி என்ற புதிய கோள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த கோள் சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன் கிரகத்தை போன்று அதே நிறையுடையதாக உள்ளது. இந்த கோள் சூரியன் போல் ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. மிக நெருக்கமாக அந்த நட்சத்திரத்தை சுற்றி வருவதால் அந்த கோளுக்கு ஒரு ஆண்டு என்பது 19 ½ மணி நேரம் மட்டுமே ஆகும். பூமி சூரியனை சுற்றி வருவதற்கு 365 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. நெருக்கமாக அந்த கோள் தனது நட்சத்திரத்தை சுற்றி வரும்போது அதன் சுழற்சியானது அதன் சுற்றுப்பாதையுடன் இணைந்து செல்கிறது. அதாவது நமது பூமியை நிலவு சுற்றி வருவதுபோல அந்த கோள் தனது நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. இதன் காரணமாக கோளின் ஒரு பாதி நிரந்தரமாக ஒளிரும் (பகலாகவே இருக்கும்). மற்றொரு பாதி நிரந்தரமாக இருள் சூழ்ந்ததாகவும், மிகவும் குளிர்ந்த நிலையிலும் உள்ளது.
இந்த கோளில் அடர்த்தியான மேகங்கள் காணப்படுகிறது. மேலும் அதன் இருள் சூழ்ந்த பகுதியின் ஆச்சர்யபடத்தக்க வகையில் வளிமண்டலத்தில் மீத்தேன் கிடையாது. அதற்கு பதிலாக எங்கு பார்த்தாலும் தண்ணீர் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. பூமியில் உள்ள மேகங்களை விட அதிக உயரத்தில் இந்த கோளில் மேகங்கள் காணப்படுகிறது. இந்த டபள்யூ.ஏ.எஸ்.பி- 43பி கோளின் நிரந்தரமாக ஒளிரும் பகுதியின் வெப்பநிலை 1,250 டிகிரி செல்சியசாக உள்ளது.
அதேபோல இருள் சூழ்ந்த பகுதியில் 600 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. இருள் சூழ்ந்த பகுதியில் நேரடி சூரிய ஒளி இல்லாத காரணத்தால் இரவு மற்றும் பகல் நிலவும் பகுதிகளுக்கு இடையே வெப்பநிலை வேறுபாடுகளை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக வலுவான காற்று அங்கு உருவாக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒரு நிமிடத்திற்கு ஒரு புத்தகத்தை வைத்து சுத்தம் செய்யலாம்.
- கண்காட்சி அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் வருகிற 5-ந் தேதி வரை நடக்கிறது.
அபுதாபி:
அபுதாபி ஷேக் ஜாயித் பெரிய பள்ளிவாசல் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அபுதாபியில் உள்ள ஷேக் ஜாயித் பெரிய பள்ளிவாசல் வழிபாட்டு தலமாக மட்டுமல்லாமல் கலாசார அடையாளமாக விளங்கி வருகிறது. இந்த வளாகத்தில் அமீரக பாரம்பரிய கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இங்குள்ள அல் ஜாமி நூலகத்தில் விலைமதிப்பில்லா லட்சக்கணக்கான புத்தகங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த மதிப்புமிக்க புத்தகங்களை நீண்ட நாட்கள் சேதமடையாமல் பாதுகாக்க நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது. அதில் புத்தகங்களை பாதுகாக்க நவீன 'ஃபிரிட்ஜ்' (குளிர்சாதன பெட்டி) ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குளிர்சாதன பெட்டி என்பது வெப்பநிலையை கட்டுப்படுத்துவதன் மூலம் உணவை பாதுகாக்க பயன்படுகிறது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் இதுபோன்ற அமைப்புள்ள நவீன 'ஃபிரிட்ஜ்' தற்போது ஷேக் ஜாயித் பெரிய பள்ளிவாசல் நூலகத்தில் பயன்படுத்தப்படுகிறது. இது புக் ஸ்டெரிலைசர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
இதன் உள்ளே புத்தகங்கள் வைக்கப்படும்போது தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள், தூசு மற்றும் அசுத்தங்கள் நீக்கப்படுகிறது. இதன் மூலம் பூஞ்சைகள், பூச்சிகள் அரிக்காமல் நீண்ட நாட்கள் புத்தகங்களை அப்படியே பராமரிக்க முடியும். இதன் உள்ளே காற்றாடி அமைப்பு அனைத்து பக்கங்களையும் புரட்டுகிறது. இதில் புற ஊதா கதிர்களை பாய்ச்சும் அமைப்பு உள்ளது. இதன் மூலம் புத்தகம் கிருமி நீக்கம் செய்யப்படுகிறது.
ஒரு நிமிடத்திற்கு ஒரு புத்தகத்தை வைத்து சுத்தம் செய்யலாம். விரைவாக வேண்டுமென்றால் 30 வினாடிகளில் சுத்தம் செய்யும் வசதியும் உள்ளது. இதன் செயல்பாடுகளை சிறிய கண்ணாடி மூலம் வெளியில் இருந்து காணமுடியும். இந்த சாதனம் தற்போது அபுதாபி சர்வதேச புத்தக கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் வருகிற 5-ந் தேதி வரை நடக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இறுதியில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள அடிவார முகாமை 7 நாட்களில் சென்றடைந்தார்.
- 6 வயதில் எவரெஸ்ட் மலைச்சிகரத்தின் அடிவார முகாமை அடைந்த சிறுவன் இவானுக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
துபாய்:
துபாயில் வசிக்கும் ரஷிய நாட்டை சேர்ந்தவர் டிமிட்ரி. இவரது மனைவி அல்லா கிராசியுகோவ். இந்த தம்பதிக்கு இவான் என்ற 6 வயது மகன் உள்ளார். துபாயில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் சிறுவன் இவான் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுவன் தடகளம், அக்ரோபாட்டிக்ஸ், நீச்சல் மற்றும் நடனம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார். பெற்றோரின் ஊக்கத்துடன் மலையேறும் பயிற்சியில் மிகுந்த ஈடுபாடு வந்ததும் அதற்கான பயிற்சியையும் சிறுவன் இவான் எடுத்துக்கொண்டார். இந்த நிலையில் தானும் எவரெஸ்ட் மலை மீது ஏறி சாதனை புரிய வேண்டும் என மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார்.
இதற்காக கடந்த மாதம் ரம்ஜான் பண்டிகை விடுமுறையில் பெற்றோருடன் சிறுவன் இவான் நேபாளத்துக்கு விமானம் மூலம் சென்றார். பிறகு அங்கிருந்து புறப்பட்டு கடுமையான குளிரில் சிறப்பு மலையேற்ற குச்சியை ஊன்றி மலையேற தொடங்கினார். இறுதியில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள அடிவார முகாமை 7 நாட்களில் சென்றடைந்தார். இதன் உயரம் 17 ஆயிரத்து 598 அடியாகும் (5,364 மீட்டர்). இந்த சாதனை குறித்து துபாயில் சிறுவன் இவான் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பேஸ் கேம்ப்பை அடைந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அங்கு சென்ற உடன் கொஞ்சம் மகிழ்ச்சியாகவும், வருத்தமாகவும் இருந்தது. ஏனென்றால் எனது பயணம் முடிவுக்கு வந்து விட்டது. மீண்டும் நான் துபாய்க்கு விமானத்தில் வர வேண்டி இருந்தது. அங்குள்ள கும்பு பனிப்பாறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அழகாக இருந்தது. எனக்கு குளிர்காற்று மிகவும் சவாலாக இருந்தது.
அந்த காற்றினால் கைகள் உறைந்து விட்டன. எனது பயணத்தில் நீண்ட முடியுடைய யாக், எருதுகள், கழுதைகள் மற்றும் குதிரைகள் போன்ற விலங்குகளை பார்த்து மகிழ்ந்தேன். எதிர்காலத்தில் தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சாரோ, ரஷியாவில் உள்ள எல்பரஸ் ஆகிய மலைகளில் ஏற ஆசையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
6 வயதில் எவரெஸ்ட் மலைச்சிகரத்தின் அடிவார முகாமை அடைந்த சிறுவன் இவானுக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
- பொது போக்குவரத்துகளான பஸ், மெட்ரோ ரெயில்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
- 4 மெட்ரோ ரெயில் நிலையங்களில் இன்னும் சேவை தொடங்கவில்லை.
துபாய்:
துபாயில் ஒரு வாரம் கனமழை பாதிப்பால் வீட்டில் முடங்கி இருந்த மக்கள் நேற்று தங்கள் அலுவலகங்களுக்கு மீண்டும் பணிக்கு திரும்பினர். இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 200 மீட்டரை கடக்க 45 நிமிடம் வரை ஆனது.
அமீரகத்தில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைவெள்ளம் புகுந்தது. இதன் காரணமாக துபாய், சார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைவெள்ளம் தேங்கி இருந்ததால் மக்கள் வெளியே வர முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
குறிப்பாக மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட முக்கிய சாலைகள் மூடப்பட்டன. இதனால் வாகனங்கள் மாற்று வழியில் செல்ல அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாக அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
கடந்த வாரத்தில் குடியிருப்புகள், அலுவலக கட்டிடங்களை சுற்றி மழைவெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் தாங்கள் பணியாற்றும் இடங்களுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினர். மேலும் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதித்தனர்.
துபாயில் நிலைமை தற்போது சீராகி வருவதால் ஒருவாரமாக வீட்டில் முடங்கி கிடந்த மக்கள் நேற்று வாரத்தின் முதல் நாளன்று பணிக்கு திரும்பினர். இதன் காரணமாக சாலைகளில் வாகனங்கள் அதிகரித்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொது போக்குவரத்துகளான பஸ், மெட்ரோ ரெயில்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
துபாயின் முக்கிய வர்த்தக அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியான பிசினஸ் பே-ல் நேற்று காலை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மக்கள் கூட்டம் அலைமோதியது. வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து நெரிசல் காரணமாக நீண்ட நேரம் முன்னேறி செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர். ஷேக் ஜாயித் சாலை அருகே அல் சபா சுங்க சாவடி அருகே உள்ள உட்புற சாலைகளில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாகனங்கள் ஆமை வேகத்திலேயே ஊர்ந்து சென்றன. இதனால் சுமார் 200 மீட்டர் தூரத்தை கடக்க 45 நிமிடம் பிடித்ததாக வாகனங்களில் சென்றவர்கள் கூறினர். பிசினஸ் பே பகுதி மட்டுமல்லாமல் அல் பர்சா தெற்கு, அல் கைல், ஹெஸ்சா சாலை மற்றும் ஜே.வி.சி. ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதேபோல 4 மெட்ரோ ரெயில் நிலையங்களில் இன்னும் சேவை தொடங்கவில்லை. மேலும் பல்வேறு பகுதிகளுக்கு ரெயில்கள் தாமதமாக வந்தது. இதன் காரணமாக வழக்கமாக செல்லும் பயணிகள் சிரமத்துக்குள்ளாகினர்.
- டாக்டர்கள் முகம்மது ஹுசைனை திரும்பி நிற்க வைத்து தஸ்லிபானுவை ஏதாவது பேசுங்கள் என சமிஞ்சையில் கூறினர்.
- கணவருக்காக போராடி கேட்கும் திறனை பெற்றுத்தந்த தஸ்லிபானுவுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அபுதாபி:
அபுதாபியில் வசித்து வரும் இந்தியர் முகம்மது ஹுசைன் (வயது 52). இவரது மனைவி தஸ்லிபானு. இவர்களுக்கு கடந்த 1995-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் அபுதாபியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 2 வயதில் இருந்து செவித்திறனை இழந்த முகம்மது ஹுசைன் அபுதாபியில் டெய்லராகவும், சலவை தொழிலாளியாகவும் பணியாற்றி வந்தார்.
கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு அவரது மனைவி தஸ்லிபானுவுக்கு மருத்துவ ஊழியராக வேலை கிடைத்தது. இதனால் அவர்களின் கஷ்டநிலை மாறியது. குடும்பத்தை தஸ்லிபானு முழுவதுமாக கவனித்துக்கொண்டார். ஒரு கட்டத்தில் கணவருக்கு மீண்டும் காது கேட்க வைக்க வேண்டும் என அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.
மருத்துவ ஊழியரான அவர், பைலேட்டரல் காக்லியர் இம்பிளாண்ட் அறுவை சிகிச்சை மூலம் செவித்திறனை கொண்டு வர விரும்பினார். இந்த அறுவை சிகிச்சை உட்காதில் (காக்கிலியா) சிறு மின்னணு உபகரணம் பொருத்தப்பட்டு செய்யப்படுகிறது. அதாவது காதுகளின் உட்புறத்தில் ஒரு முதுகெலும்பு வடிவ எலும்பு செய்யும் வேலையை இந்த சாதனம் செய்கிறது. குறிப்பாக இதில் வெளியில் கேட்கும் ஒலி மின் தூண்டுதலாக மாற்றப்படுகிறது. பிறகு அந்த தூண்டுதல் நரம்பினால் கடத்தப்பட்டு மூளைக்கு எடுத்து செல்லப்பட்டு காது கேட்கிறது. இதில் காதுகளின் வெளிப்புறத்தில் ஒலியை வாங்கும் ரிசீவர் மற்றும் டிரான்ஸ் மீட்டர், மைக்ரோபோன் ஆகியவை பொருத்தப்படுகிறது.
இதற்கு சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும். அதாவது காதுக்கு பின்னால் உள்ள எலும்பில் சிறிய துளை ஏற்படுத்தப்பட்டு அதில் உபகரணம் தோலின் உள்ளே பொருத்தப்படுகிறது. இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை அபுதாபி தனியார் மருத்துவமனையில் தஸ்லிபானு தனது கணவருக்கு ஏற்பாடு செய்தார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்த பிறகு டாக்டர்கள் முகம்மது ஹுசைனை திரும்பி நிற்க வைத்து தஸ்லிபானுவை ஏதாவது பேசுங்கள் என சமிஞ்சையில் கூறினர்.
அதனை அடுத்து தனது செல்லப்பெயரான 'பானு' என அவர் உச்சரித்தார். 50 ஆண்டுகளுக்கு பிறகு முதல் சத்தத்தை கேட்டு அதுவும் தனது மனைவியின் பெயரை கேட்ட முகம்மது ஹுசைன் ஆனந்த கண்ணீர் வடித்து திரும்பி பார்த்தார். இதை கண்ட தஸ்லிபானுவும் ஆனந்த கண்ணீர் வடித்தார். கணவருக்காக போராடி கேட்கும் திறனை பெற்றுத்தந்த தஸ்லிபானுவுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
- துபாய், சார்ஜா, அஜ்மானில் உள்ள பல்வேறு சாலைகள் மழைவெள்ளத்தில் நிரம்பி உள்ளதால் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
- இந்த நாட்களில் பொதுமக்கள் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அபுதாபி:
அமீரகத்தில் வளிமண்டலத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை பெய்தது. கடந்த செவ்வாய்கிழமை பெய்த இடைவிடாத மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. இதில் கடந்த 16-ந்தேதி ராசல் கைமாவில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரில் பயணம் செய்த அமீரகத்தை சேர்ந்த முதியவர் பலியானார்.
அதனை தொடர்ந்து துபாயில் 47 வயதுடைய பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஊழியர் மழையில் ஏற்பட்ட வாகன விபத்து காரணமாக பலியானார். தொடர்ந்து சார்ஜாவில் மழைவெள்ளத்தில் காரில் சிக்கிக்கொண்ட 2 பிலிப்பைன்ஸ் நாட்டு ஊழியர்கள் மூச்சடைத்து பலியானார்கள். இதனை அந்நாட்டு துணைத்தூதரகம் உறுதி செய்துள்ளது.
மேலும் துபாய், சார்ஜா, அஜ்மானில் உள்ள பல்வேறு சாலைகள் மழைவெள்ளத்தில் நிரம்பி உள்ளதால் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று அமீரக தேசிய வானிலை ஆய்வு மையம் அடுத்த ஒரு வாரத்துக்கான வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (சனிக்கிழமை) லேசான பனிமூட்டத்துடன் வானம் மேகமூட்டமாக காணப்படும். அடுத்த வார தொடக்கத்தில் வரும் 22-ந் தேதி நாடு முழுவதும் பரவலாக லேசான மழை காணப்படும். அதற்கு அடுத்த நாள் 23-ந் தேதி அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மழைப்பொழிவுக்கு பிறகு வெப்பநிலை கணிசமாக உயரக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் பொதுமக்கள் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
- பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல கலாசாரங்களை கொண்ட விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- நோன்பு திறக்கும் நேரம் வந்ததும் அனைவரும் பிரார்த்தனை செய்து நோன்பை திறந்தனர்.
துபாய்:
ரமலான் நோன்பையொட்டி இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. பள்ளிவாசல்கள், கூடாரங்களில் நடைபெறும் இப்தார் நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று நோன்பு திறந்து வருகின்றனர். இந்த நிலையில் உலகில் முதல் முறையாக துபாய் சர்வதேச விமான நிலைய ஓடு பாதையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. விமானங்கள் தரையிறக்கப்படும் ஓடுபாதையில் நடந்த இப்தார் நிகழ்ச்சியில் அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல கலாசாரங்களை கொண்ட விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பேரீச்சம் பழம், தண்ணீர், ஜூஸ், பிரியாணி உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
இந்த நோன்பு திறக்கும் நேரம் வந்ததும் அனைவரும் பிரார்த்தனை செய்து நோன்பை திறந்தனர். அவர்கள் நோன்பை திறந்த போது விமானங்கள் தரையிறங்குவது, புறப்படுவது நடந்து கொண்டிருந்தது.
இது குறித்து துபாய் விமான நிலைய அதிகாரி கூறும்போது, துபாய் சர்வதேச விமான நிலைய ஊழியர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மிகவும் பரபரப்பான சூழலில் வேலை செய்து வந்தவர்கள் அதனை மறந்து பலரும் விளையாட்டாக பேசிக் கொண்டு மன இறுக்கத்தை மறந்து செயல்பட்டனர்.
விமான நிலையத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் ஊழியர்களின் பங்களிப்பு முக்கியமானது அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற வித்தியாசமான நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றார்.
துபாயில் கின்னஸ் உலக சாதனைகள் பல வித்தியாசமான முறையில் படைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக விமான ஓடு பாதையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
- டி20 வரலாற்றில் 400 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ஸ்டிர்லிங் படைத்தார்.
- இவருக்கு அடுத்த இடத்தில் பாபர் அசாம் 395 பவுண்டரிகள் அடித்துள்ளார்.
துபாய்:
ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. அதில் அயர்லாந்து வெற்றி பெற்றது.
இதில் அயர்லாந்து கேப்டன் பால் ஸ்டிர்லிங் 2 பவுண்டரிகள் உட்பட 25 ரன்கள் அடித்தார். இந்தப் போட்டியில் அடித்த 2 பவுண்டரிகள் சேர்த்து இதுவரை டி20 போட்டிகளில் அவர் அடித்த பவுண்டரிகளின் எண்ணிக்கை 401 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் சர்வதேச டி20 வரலாற்றில் 400 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற மகத்தான சாதனையை அவர் படைத்துள்ளார்.
டி20 போட்டிகளில் அதிக பவுண்டரிகள் அடித்தவர்களின் பட்டியல் வருமாறு:
பால் ஸ்டிர்லிங் - 401 பவுண்டரிகள்
பாபர் அசாம் - 395 பவுண்டரிகள்
விராட் கோலி - 361 பவுண்டரிகள்
ரோகித் சர்மா - 359 பவுண்டரிகள்
டேவிட் வார்னர் - 320 பவுண்டரிகள்.
- வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது.
- ரோகித் சர்மா விராட் கோலியை தாண்டி 6-வது இடம் பிடித்துள்ளார்.
துபாய்:
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி மற்றும் ஆஸ்திரேலியா -நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நிறைவடைந்ததை அடுத்து ஐ.சி.சி. வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நியூசிலாந்தின் வில்லியம்சன் முதலிடத்திலும், இங்கிலாந்தின் ஜோ ரூட் 2-வது இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்மித் 2 இடங்கள் சரிந்து 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் சதமடித்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கிடுகிடுவென முன்னேறி மற்றொரு இந்திய வீரரான விராட் கோலியை தாண்டி 6-வது இடம் பிடித்துள்ளார். ஜெய்ஸ்வால் 2 இடங்கள் முன்னேறி கோலியை தாண்டி 8-வது இடம் பிடித்துள்ளார். விராட் கோலி 9-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.
டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய வீரர் பும்ரா 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வீழ்த்திய அஸ்வின் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறினார். ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் 2-வது இடத்தில் உள்ளார். இந்த தரவரிசையில் மற்றொரு இந்திய வீரரான ஜடேஜா 7-வது இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா முதலிடத்திலும், அஸ்வின் 2-வது இடத்திலும் தொடருகின்றனர். அக்சர் படேல் ஒரு இடம் சரிந்து 6-வது இடத்தில் உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்