search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறவினர் கைது"

    ஆழ்வார்குறிச்சி அருகே பெண் கொலையில் அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர்.
    கடையம்:

    நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள செட்டிகுளம் புதுகிராமம் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் மனைவி கல்யாணி (வயது 44). இவருக்கும், அக்காள் ஈஸ்வரி, அவருடைய மகள் இசக்கியம்மாள் ஆகியோருக்கும் இடையே குழாயில் தண்ணீர் பிடிப்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் இதே பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கல்யாணி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இசக்கியம்மாளின் கணவர் கருப்பசாமியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பொட்டல்புதூரில் பதுங்கி இருந்த கருப்பசாமியை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக என்னுடைய மாமியார், மனைவியிடம் கல்யாணி அடிக்கடி தகராறு செய்து வந்தார். மீண்டும் ஏற்பட்ட தகராறில் எனது மனைவி இசக்கியம்மாளை அவதூறாக பேசினார். இதுகுறித்து நான் கல்யாணியிடம் தட்டிக்கேட்டேன். இதனால் எங்களுக்குள் ஏற்பட்ட தகராறில் நான் கல்யாணியை அரிவாளால் வெட்டினேன். இதில் அவர் இறந்து விட்டார். நான் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டேன். போலீசார் என்னை தேடிப்பிடித்து கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட வழக்கில் உறவினரை போலீசார் கைது செய்தனர். திருமணம் நிச்சயமானதால் கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். #PollachiIssue
    பொள்ளாச்சி:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைசாமி, பைனான்சியர். இவருடைய மகள் பிரகதி (வயது 20). இவர் கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் பிர கதிக்கு நாட்டுதுரை என்ற வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

    இவர்களுக்கு வருகிற ஜூன் மாதம் 13-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது. உறவினர்கள், நண்பர்களை திருமணத்திற்கு அழைக்க பத்திரிகையும் அச்சடிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி கல்லூரியில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்ட பிரகதியை காணவில்லை. அவரது உறவினர்கள் அவரை தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து கோவை காட்டூர் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் கல்லூரி மாணவி மாயம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் காணாமல் போன பிரகதி நேற்று முன்தினம் பொள்ளாச்சி அருகே பூசாரிபட்டியில் ரோட்டோரத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கோமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்லூரி மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆடைகள் கலைந்து இருந்ததால் அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா நேற்று காலை பூசாரிபட்டிக்கு வந்து கல்லூரி மாணவியின் உடல் கிடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    குற்றவாளிகளை பிடிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாடசாமி தலைமையில் துணை சூப்பிரண்டுகள் சிவக்குமார் (பொள்ளாச்சி), பாலமுருகன் (பேரூர்), இன்ஸ்பெக்டர்கள் வைரம், வெற்றிவேல்ராஜன், பாலமுரளிசுந்தரம் ஆகியோர் கொண்ட 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் துப்பு துலங்கியது. பரபரப்பு தகவல்களும் வெளியாயின. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

    மாணவி பிரகதி காணாமல் போனதை தொடர்ந்து கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில், மாணவி பிரகதியை ஒரு வாலிபர் அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

    மேலும் பிரகதியின் செல்போனில் பதிவாகி இருந்த எண்களை ஆய்வு செய்தபோது, இந்த கொலையில் முக்கிய துப்பு கிடைத்தது. பிரகதியின் உறவினர் சதீஷ்குமார் (30) என்பவர் தான் இந்த கொலைக்கு காரணம் என்பதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். தலைமறைவான அவரை போலீசார் பல இடங்களில் தேடி ஒட்டன்சத்திரம் பகுதியில் நேற்று மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

    பிரகதி பள்ளியில் படிக்கும் போது இருந்து அவருக்கும், சதீஷ்குமாருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் சதீஷ்குமார், பிரகதியை முறைப்படி பெண் கேட்டுள்ளார். ஆனால் பிரகதியின் பெற்றோர் பெண் கொடுக்க மறுத்து விட்டனர். ஆனாலும் பிரகதியும், சதீஷ்குமாரும் ஒருவரை ஒருவர் விரும்பி உள்ளதாக தெரிகிறது.

    இந்த நிலையில் சதீஷ்குமார் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. திருமணத்துக்கு பின்னர் கேரள மாநிலம் பாலக்காடு அருகே கொடுவாயூரில் சதீஷ்குமார் அடகு கடை நடத்தி வந்தார். கோவையில் பிரகதி கல்லூரியில் படித்து வந்ததால், மனைவிக்கு தெரியாமல் அவர், பிரகதியை அடிக்கடி வந்து சந்தித்துள்ளார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மாணவி பிரகதியை சந்திப்பதற்காக சதீஷ்குமார் காரில் வந்துள்ளார். பிரகதி அவருடன் காரில் சென்றார். இருவரும் பொள்ளாச்சி பகுதியை நோக்கி சென்றுள்ளனர். அப்போது, தனக்கு திருமணம் நிச்சயமான விவரத்தை மாணவி பிரகதி கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார், கத்தியால் பிரகதியின் கழுத்தில் குத்தி கொலை செய்து பிணத்தை பூசாரிப்பட்டி பகுதியில் போட்டுவிட்டு காரில் தப்பிச்சென்றுவிட்டார். கோவை காட்டூர் போலீசார் மாணவி காணாமல் போனது குறித்து, முதலில் மாணவியின் பெற்றோர் அளித்த தகவலின் அடிப்படையில் சதீஷ்குமாரை போனில் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். சதீஷ்குமார் மனைவி, குழந்தையுடன் கோவை காட்டூர் போலீஸ் நிலையத்துக்கு வந்து, பிரகதி காணாமல் போனது தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.

    இதனால் அவரை போலீசார் சந்தேகப்படாமல் விட்டு விட்டனர். பின்னர்தான் அவர் பிரகதியை கொலை செய்தது தெரியவந்தது. கொலை செய்துவிட்டு, போலீஸ் நிலையத்துக்கு குடும்பத்துடன் வந்து சதீஷ்குமார் நாடகமாடியது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மாணவியின் உடல் கிடந்த பகுதியான கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படையினர் சதீஷ்குமாரை தேடியபோது, அவர் செல்போனை சுவிட்ச்ஆப் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார். போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி நேற்று அவரை கைது செய்தனர். மாணவியை அழைத்து செல்ல பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    கைதான சதீஷ்குமார் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நெல்லுக்குழிகாடு பகுதியை சேர்ந்தவன். என்னுடைய தந்தை தங்கராஜ். ரூ.40 லட்சம் கடன் இருந்ததால் என்னுடைய தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். நான் பிரகதியை விரும்பினேன். பிரகதியும் என்னை விரும்பினார். ஆனால் எனக்கு பிரகதியை திருமணம் செய்து கொடுக்க அவளுடைய பெற்றோர் மறுத்துவிட்டனர்.

    எனக்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் நடைபெற்றது. இருந்தாலும் தொடர்ந்து பிரகதியுடன் பழகினேன். கோவையில் கல்லூரியில் படித்து வந்த பிரகதிக்கு பரிசு பொருட்கள், சேலை, நகைகள் வாங்கி கொடுத்துள்ளேன். ஏற்கனவே 10 பவுன் தங்கநகை வாங்கி கொடுத்தேன்.

    இதற்கிடையே மீண்டும் 10 பவுன் தங்க நகை வாங்கி தருமாறு என்னிடம் கேட்டாள். வேறு ஒருவருடன் பிரகதிக்கு திருமணம் நடைபெறுவது எனக்கு பிடிக்கவில்லை. திருமணம் ஆனாலும் என்னுடன் பழகுவேன் என்று பிரகதி கூறினாள். ஆனாலும் பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது என்று கருதினேன். வழக்கமாக பிரகதியை கோவையில் இருந்து பல்லடம் வரை அழைத்து சென்று விடுவேன்.

    கடந்த வெள்ளிக்கிழமை (5-ந் தேதி) காரில் பல்லடத்துக்கு அழைத்து செல்லாமல் கோமங்கலத்துக்கு அழைத்து சென்றேன். காரில் இருவரும் சந்தோஷமாக இருந்தோம். இந்த நிலையில் நான் ஏற்கனவே தயாராக வைத்து இருந்த கத்தியால் பிரகதியின் நெஞ்சு மற்றும் கழுத்தில் குத்தி கொலை செய்துவிட்டு உடலை பூசாரிபட்டி பகுதியில் வீசி சென்றேன். போலீசார் தீவிர விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.

    பிரகதியின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் 3 மணி நேரம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மாணவியின் கழுத்து மற்றும் நெஞ்சில் கத்திக்குத்து காயமும், கையால் தடுத்ததால் அவரின் கைவிரல் அறுபட்டு இருந்ததும் தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

    கல்லூரி மாணவியை, உறவினரே கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் கோவையில் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #PollachiIssue
    பூட்டிய வீட்டுக்குள் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மேலூர்:

    மதுரை திருமோகூர் பகுதியில் வசிப்பவர் முருகன். இவரது மனைவி கவுசல்யா (வயது22). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. மேலூர் அருகே வெள்ளரிப்பட்டியில் தனியார் நிறுவனத்தில் முருகன் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று அவர் வேலைக்கு சென்ற நிலையில் இரவில் கவுசல்யா வீட்டில் தனியாக இருந்தார். மறுநாள் காலையில் வீட்டு கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது அங்கு கவுசல்யா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தது தெரியவந்தது.

    பூட்டிய வீட்டுக்குள் கவுசல்யா கொலை செய்யப்பட்டு கிடந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கவுசல்யா கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க சங்கிலியும் மாயமாகி இருந்தது.

    இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனும் சம்பவ இடத்தை பார்வையிட்டார். கொலையாளியை பிடிக்க 2 தனிப்படைகளை அமைத்தும் அவர் உத்தர விட்டார்.

    இந்த வழக்கில் தனிப்படையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். இதில் கவுசல்யாவின் உறவினர் விஜயகுமார் (43) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை அழைத்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனை தொடர்ந்து போலீசாரை விஜயகுமாரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது குடும்ப பிரச்சினை காரணமாக கவுசல்யாவை கொலை செய்ததையும், அவரது கழுத்தில் கிடந்த நகையை திருடியதையும் ஒப்புக் கொண்டார். இதனை தொடர்ந்து விஜயகுமாரை கைது செய்து மேலூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

    ஆந்திர மாநிலத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்து கொண்ட பெண் மற்றும் அவரது 2 குழந்தைகளையும் அவரது உறவினர் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #HonourKilling
    நகரி:

    ஆந்திரமாநிலம் அனந்தபுரம் மாவட்ட கார்லதின்ன கிராமத்தை சேர்ந்த சிவய்யா மகள் மீனாட்சி (வயது24). அதே ஊரை சேர்ந்த நல்லப்பா என்னும் வேற்று மத வாலிபரை காதலித்து குடும்பத்தினரை எதிர்த்து 4 ஆண்டுகளுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்து கொண்டார்.

    இதையடுத்து மீனாட்சியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை ஒதுக்கி வைப்பதாக அறிவித்து எந்த சுப காரியத்திற்கும் அழைப்பதில்லை. மீனாட்சி- நல்லப்பா தம்பதிகளுக்கு விதேஷ் (வயது3), கீர்த்தி1) குழந்தைகள் பிறந்தனர்.

    குழந்தைகளை பார்த்த மீனாட்சியின் பெற்றோர் மற்றும் சகோதர-சகோதரிகள் மீனாட்சியுடன் பேசுவதும், அவர் குழந்தைகளை தங்கள் வீட்டிற்கு அழைத்து செல்வதும் ஒன்றுசேர ஆரம்பித்தனர். இதை கவுரவக் குறைவாக நினைத்த மீனாட்சியின் சித்தப்பா மகன் ஹரி ஆத்திரமடைந்தார்.

    ஏற்கனவே மீனாட்சி தம்பதியினரை ஊரை விட்டு ஓடிபோய் விட வேண்டும். இல்லாவிட்டால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி வந்த ஹரிக்கு இது மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சம்பவத்தன்று கத்தியுடன் வீட்டில் புகுந்து மீனாட்சி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளையும் கழுத்தை அறுத்து கொலை செய்தார். மீனாட்சியின் மாமியார் சுப்பம்மா காலை பிடித்து கெஞ்சினார் ஆனாலும் உதரி தள்ளி படுகொலை சம்பவத்தை அரங்கேற்றி விட்டு நிதானமாக வீட்டை விட்டு வெளியேறினார்.

    மோட்டார் சைக்கிளில் ஊரைவிட்டு தப்பியோட முயன்ற ஹரியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். #HonourKilling
    கன்னியாகுமரியில் காதலனை தாக்கிவிட்டு இளம்பெண்ணை கடத்தி சென்ற உறவினரை கைது செய்த போலீசார் மேலும் 7 பேரை தேடி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரியை அடுத்த கோவளம் கடற்கரை பகுதியில் நேற்று மாலை ஒரு சொகுசு கார் வேகமாக வந்தது.

    அந்த சொகுசு காரை இன்னொரு கார் துரத்தி வந்தது. சன்செட் பாயின்ட் அருகே வந்த போது துரத்தி வந்த கார், சொகுசு காரை முந்தி சென்று வழிமறித்தது. இதனால் தொடர்ந்து செல்ல முடியாத சொகுசு கார், வேறுவழியின்றி நின்றது.

    உடனே துரத்தி வந்த காரில் இருந்து திபுதிபுவென சிலர் இறங்கி ஓடி வந்தனர். அவர்கள் சொகுசு காரில் இருந்தவர்களை வெளியே வரும்படி அழைத்தனர்.

    சொகுசு காரில் இருந்தவர்கள் வெளியே வர மறுத்து காரின் கண்ணாடிகளை மூடிக்கொண்டு சத்தம் போட்டனர். உடனே கும்பல் கார் கண்ணாடிகளை அடித்து உடைத்து காரை திறந்தனர். அதில் இருந்தவர்களை வெளியே இழுத்து சரமாரியாக தாக்கினர்.

    சொகுசு காருக்குள் ஒரு இளம்பெண் இருந்தார். அந்த பெண்ணை துரத்தி வந்த காரில் இருந்தவர்கள் அலேக்காக தூக்கி அவர்களின் காரில் போட்டப்படி சிட்டாக பறந்து விட்டனர். சில நிமிடங்களில் இந்த சம்பவம் சினிமா போல் நடந்து முடிந்து விட்டது.

    இந்த தாக்குதல் சம்பவத்தில் சொகுசு காரில் இருந்த 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் வலியால் அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

    கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சம்பவம் பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில் காயம் அடைந்தவர்கள் மயிலாடி பெருமாள்புரத்தை சேர்ந்த ஸ்டார்லின்(வயது 24) மற்றும் அவரது உறவினர்கள் சுரேஷ் (43), அருள் (58) என தெரியவந்தது.

    இது பற்றி ஸ்டார்லின் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதில் காதல் தகராறு காரணமாக மயிலாடி பகுதியை சேர்ந்த ஜெயபால், பாலகிருஷ்ணன், ஸ்ரீதேவ், துரைராஜ் உள்பட 8 பேர் தாக்கியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதன்விபரம் வருமாறு:-

    மயிலாடி பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் டிக்சோனா (22). ஜெயபால், பெயிண்டிங் காண்டிராக்டர். அவரிடம் அதே பகுதியை சேர்ந்த ஸ்டார்லின் தொழிலாளியாக வேலை பார்த்தார். வேலை வி‌ஷயமாக ஜெயபால் வீட்டிற்கு ஸ்டார்லின் அடிக்கடி செல்வார். அப்போது டிக்சோனாவுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. நாளடைவில் இருவரும் காதலர்கள் ஆனார்கள். தொடர்ந்து பெற்றோருக்கு தெரியாமல் அடிக்கடி தனியாக சந்தித்து பேசினர்.

    காதலர்கள் தனியாக சந்தித்து பேசும் விவரம் பெற்றோருக்கு தெரியவந்ததும் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். டிக்சோனாவை அவரது தந்தையும் உறவினர்களும் கண்டித்ததோடு, ஸ்டார்லினிடம் பேசக்கூடாது எனவும் எச்சரித்தனர்.

    இதனால் மனம் உடைந்த காதலர்கள் கடந்த 10-ந் தேதி வீட்டை விட்டு மாயமானார்கள். மயிலாடியில் இருந்து குலசேகரம் பகுதிக்கு சென்ற அவர்கள் அங்கேயே மறைந்து இருந்தனர்.

    இதற்கிடையே காதலர்களின் பெற்றோர், அவர்களை பல இடங்களிலும் தேடினர். இந்த தகவல் காதலர்களுக்கு தெரியவந்தது. இனியும் மறைந்திருந்தால் சிக்கல் என்பதை அறிந்த காதலர்கள், நேற்று கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்து பாதுகாப்பு கேட்க முடிவு செய்தனர்.

    இதற்காக இருவரும் ஒரு கோவிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டு, அந்த தகவலை பெற்றோருக்கு தெரியப்படுத்தினர். இதை அறிந்ததும் அவர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

    டிக்சோனாவின் தந்தை ஜெயபால் மற்றும் அவரது உறவினர்கள், டிக்சோனா கன்னியாகுமரி போலீஸ் நிலையம் செல்லும் முன்பு அவரை பிடித்துவிட வேண்டும் என்று கன்னியாகுமரி செல்லும் சாலையில் காத்திருந்தனர்.

    அவர்கள் எதிர்ப்பார்த்தபடி டிக்சோனாவும், அவரது காதலன் ஸ்டார்லினும் ஒரு காரில் கன்னியாகுமரிக்கு வருவதை கண்டனர். அவர்களை துரத்தி சென்று கோவளம் பகுதியில் மடக்கி பிடித்து டிக்சோனாவை மட்டும் தங்களுடன் அழைத்து சென்றுவிட்டனர்.

    போலீஸ் விசாரணையில் தெரியவந்த இத்தகவலின் அடிப்படையில் கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன், காதல் தகராறில் வாலிபரை தாக்கிவிட்டு இளம்பெண்ணை கடத்தி சென்றதாக டிக்சோனாவின் தந்தை ஜெயபால்,அவரது உறவினர்கள் பாலகிருஷ்ணன், ஸ்ரீதேவ், துரைராஜ் உள்பட 8 பேர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 147, 148, 341, 294(பி), 323, 324, 506(2) உள்பட 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

    இவர்களில் துரைராஜ் கைது செய்யப்பட்டார். மற்ற 7 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் கடத்தி செல்லப்பட்ட இளம்பெண் டிக்சோனாவையும் போலீசார் கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். #tamilnews
    வண்ணாரப்பேட்டையில் தூங்கி கொண்டிருந்த பூசாரி மீது அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.
    ராயபுரம்:

    பழைய வண்ணாரப்பேட்டை, பிரிவில்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா (வயது 32). அதே பகுதியில் உள்ள ஆதிபராசக்தி கோவிலில் பூசாரியாக இருந்தார். ஆட்டோ ஓட்டி வந்த இவர் சிவசேனா கட்சியிலும் இருந்தார். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    நேற்று இரவு கார்த்திக் ராஜா காற்றுக்காக வீட்டின் வெளியே படுத்து தூங்கினார். இன்று அதிகாலை அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது தலையில் அம்மிக்கல் போடப்பட்டு இருந்தது. மேலும் அவரது உடலில் கத்திக்குத்து காயங்களும் இருந்தன.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்து சத்யா பார்த்த போது கணவர் கார்த்திக் ராஜா கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அலறி துடித்தார்.

    இதற்கிடையே கொலையுண்ட கார்த்திக் ராஜாவின் உறவினரான அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவர் ரத்தகறை படிந்த கத்தியுடன் பழைய வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

    அப்போது வீட்டு முன்பு தூங்கிய உறவினர் கார்த்திக் ராஜாவை கத்தியால் குத்தியும் தலையில் அம்மிக்கல்லை போட்டும் கொலை செய்ததாக தெரிவித்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    இதைத் தொடர்ந்து கார்த்திக் ராஜாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஏழுமலை போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 3 மாதத்துக்கு முன்பு ரம்ஜான் பேகம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். சில நாட்களுக்கு முன்பு எனது நண்பரின் தங்கை திருமணத்தை நடத்தி வைக்கும்படி கார்த்திக் ராஜாவிடம் கூறினேன்.

    அப்போது அவர் எனது மனைவி குறித்து தவறாகவும், இழிவாகவும் பேசினார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இது தொடர்பாக நேற்று இரவும் எங்களுக்குள் மோதல் ஏற்பட்டது. எனவே கார்த்திக் ராஜாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.

    நேற்று இரவு அவர் வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்தார். இதனை அறிந்த நான் அங்கு சென்று தூங்கிக் கொண்டிருந்த கார்த்திக் ராஜாவின் மார்பிலும், வயிற்றிலும் கத்தியால் குத்தினேன். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.

    உடனே அருகில் கிடந்த அம்மிக்கல்லை கார்த்திக் ராஜாவின் தலையில் போட்டேன். இதில் அவர் இறந்து போனார். பின்னர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்து விட்டேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? ஏழுமலைக்கு வேறு யாரேனும் உதவினார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தலையில் அம்மில்லை போட்டு பூசாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் வண்ணாரப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ×