search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் நடவடிக்கை"

    கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏமூர் நடுப்பாளையம் பகுதியில் குடிநீர் கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்று கொண்டார். கூட்டத்தில், கரூர் அருகே ஏமூர் நடுப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வந்து கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. அங்கு அமைக்கப்பட்ட 3 ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு அந்த தொட்டியில் சேகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆழ்துளை கிணறுகள் வற்றிவிட்டதால் பொதுமக்கள் வயல்வெளியிலுள்ள கிணறுகள் உள்ளிட்டவற்றுக்கு அலைந்து திரிந்து குடிநீர் பிடித்து வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    கரூர் மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கொடுத்த மனுவில், கரூர் மாவட்ட அரசு பள்ளிகளில் 1,250 பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர். இதில் 250-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு கடந்த நவம்பர் மாத சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக கல்வி அதிகாரியிடம் கேட்ட போது, அனைவருக்கும் கல்வி இயக்கம் உள்ளிட்டவற்றின் கீழ் பட்ஜெட் ஒதுக்கீடு பெற தவறியதால் தாமதம் ஏற்படுவதாக கூறுகிறார். இதனால் வீட்டு வாடகை செலுத்துவது, மளிகை சாமான் வாங்குவது உள்ளிட்டவற்றுக்கு பணம் இல்லாமல் ஆசிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே விரைவில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு நவம்பர் மாத சம்பளத்தை வினியோகம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    கரூர் மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் மூர்த்தி, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் பழனிசாமி, தாந்தோன்றி ஒன்றிய செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கொடுத்த மனுவில், அமராவதி ஆற்றின் குறுக்கே கோயம்பள்ளி-மேலப்பாளையத்தை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலப்பணிகள் நடந்தன. 70 சதவீத பணிகள் நிறைவடைந்த போதும், மீதிப்பணியை மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டு விட்டனர். எனவே அதனை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். வீரராக்கியம் ரெயில்வேகேட் அடிக்கடி மூடப்படுவதால், அங்குள்ள ஊர்களுக்கு பொதுமக்கள் தடையின்றி செல்லும் வகையில் மாற்றுப்பாதை அமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    கரூர் மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் வேலை செய்யும் செவிலியர் உதவியாளர்கள் கொடுத்த மனுவில், நாங்கள் செவிலியர் உதவியாளருக்கான 2 ஆண்டு டிப்ளமோ படிப்பினை படித்து முடித்து விட்டு தான் மருத்துவமனைகளில் வேலை செய்கிறோம். எனினும் நாங்கள் படித்த படிப்பின் சான்றிதழ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினால் ஏற்று கொள்ளாத நிலை உள்ளது. இதனால் அரசு வேலை உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்க முடியாமல் அவதிக்குள்ளாகிறோம். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு குறிப்பிட்ட மத அடையாள கோவில் கட்டப்படுகிறது. மத அடையாளங்கள் அரசு அலுவலகங்களில் இருக்க கூடாது என்கிற உத்தரவினை மீறும் வகையில் உள்ளது. எனவே இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் மாவட்ட சமநீதி கழகத்தினர் மனு கொடுத்தனர்.

    மண்மங்கலம் நடையனூரை சேர்ந்த முன்னாள் நிலஅளவை துறை ஊழியர் அர்ச்சுனன் (வயது 55) அளித்த மனுவில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு என்னை மிரட்டி கையெழுத்து வாங்கிவிட்டு பணிநீக்கம் செய்து விட்டனர். இது குறித்து விசாரித்து மீண்டும் எனக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் அளித்த மனுவில், குடும்பர், பண்ணாடி என அழைக்கப்பட்ட பிரிவினை ஒன்று சேர்த்து தேவேந்திர குலவேளாளர் என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் ஆண்டாண்டு காலமாக தாங்கள் விவசாயம் செய்து வருவதை காட்டும் விதமாக நெற்பயிருடன் வந்து தேவேந்திரகுல வேளாளர் சங்கத்தினர் சிலரும் மனு கொடுத்தனர்.

    தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நல துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு மடக்குகோல் மற்றும் கருப்பு கண்ணாடி, மடக்கு சக்கர நாற்காலி மற்றும் சிறப்பு சக்கர நாற்காலி என ரூ.26,150 மதிப்பிலான உதவி உபகரணங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். மேலும் தேசிய அளவில் தமிழக அணியில் இடம் பெற்று புனேயில் நடைபெற்ற கையுந்து பந்து போட்டியில் இரண்டாமிடம் பெற்ற தனியார் பள்ளி மாணவர்களை பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மக்கள் குறை தீர்க்கும் தனித்துணை கலெக்டர் மீனாட்சி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அதிகாரி குமரேசன், மாவட்ட ஆதி திராவிடர் நல அதிகாரி லீலாவதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி ஜான்சி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    குடிநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதாக கூறி டி.எம்.சி. காலனி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் தென்னம்பாளையம் டி.எம்.சி. காலனியில் நூற்றுக்கணக்கானோர் குடியிருந்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புகளுக்கு மாநகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குழாயில் வரும் குடிநீருடன் அடிக்கடி சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்த நீரையே பொதுமக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்றும் குடிநீர் குழாயில் வந்த குடிநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று இரவு திடீரென திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதிக்கு வரும் குடிநீரில் இதுபோல அடிக்கடி சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது. இதுகுறித்து பல முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. இதுமட்டுமின்றி எங்கள் பகுதியில் சாக்கடைகள் தூர்வாரப்படவில்லை.

    இதனால் கொசுப்புழுக்கள் அதிகம் உற்பத்தியாகின்றன. எங்கள் பகுதியில் பெரும்பாலானவர்கள் மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். ஆனால் எங்கள் பகுதியை சுகாதாரமாக வைத்திருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. சுகாதாரமான குடிநீர், சுத்தமான சாக்கடை வசதிகளை செய்து தரவில்லை என்றால் நாங்கள் மாநகராட்சி துப்புரவு பணியில் ஈடுபடாமல் வேலை நிறுத்தம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம். இதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதைத்தொடர்ந்து அங்கு வந்த திருப்பூர் தெற்கு போலீசார், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முதியவர் 5 ஆண்டுகள் கழித்து மகனிடம் ஒப்படைக்கப்பட்டார்.
    திருவண்ணாமலை:

    கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதியவர் ஒருவர் சட்டை போடாமல், லுங்கியுடன் இருந்ததை பார்த்து அவரிடம் நேரில் சென்று விசாரித்தார். மேலும் முதியவரை தனது அலுவலகத்திற்கு அழைத்து சென்று முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் ஆகியோரை அழைத்து முதியவர் குறித்து விவரங்கள் சேகரிக்க உத்தரவிட்டார்.

    முதியவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பேசினார். ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் எழுதியும் காண்பித்தார். அதில் அவர் பெயர் அலோசியல் பர்னபாஸ்டோபோ எனவும், அவரது சொந்த மாநிலம் ஜார்க்கண்ட் எனவும் தெரியவந்தது.

    இதையடுத்து அவரது குடும்பத்தினரை கண்டு பிடிப்பதற்காகவும், தொடர்பு கொள்வதற்காகவும் முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட சமூக நல அலுவலர் மூலமாக அந்த முதியவர், டேனியல் மெமோரியல் நேசம் முதியோர் பராமரிப்பு இல்லத்தில் அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள முதியவரின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு வீடியோ அழைப்பு மூலம் முதியவர் அடையாளம் காணப்பட்டு அங்கிருந்து அவரது மகனை வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் முதியவரை அவரது மகனிடம் கலெக்டர் கந்தசாமி ஒப்படைத்தார்.

    மேலும் முதியவருக்கு கலெக்டர், புதிய துணி வாங்கி கொடுத்து அதனை முதியவருக்கு அணிவித்து மகிழ்ந்தார்.

    வயது முதிர்வின் காரணமாக சில நேரங்களில் நினைவு இழந்ததால், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்து கடைசியாக திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளார். தனது தந்தையை கண்ட மகன் கண்கலங்கி, கலெக்டருக்கு நன்றி தெரிவித்து ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு அழைத்து சென்றார்.

    அப்போது உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் விஜயகுமார், மாவட்ட சமூக நல அலுவலர் கிறிஸ்டீனா தா.டார்த்தி, நேசம் முதியோர் இல்ல பொறுப்பாளர் குளோரி ஆகியோர் உடனிருந்தனர். 
    ஆரணி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ஆரணி:

    ஆரணியை அடுத்த பையூர் ஊராட்சி எம்.ஜி.ஆர். நகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சுமார் 20 நாட்களாக குடிநீர் வரவில்லை. மேலும் இங்கு தெருவிளக்குகள் எரியவில்லை, குப்பைகள் சரிவர அகற்றப்படவில்லை. இதுகுறித்து கிராம மக்கள் ஊராட்சி செயலாளர், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை பொதுமக்கள் திடீரென அந்த பகுதியில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலாரகு, மணிமேகலை, முன்னாள் கவுன்சிலர்கள் பாத்திமாவாசு, கல்பனாஆனந்த், ஊராட்சி செயலாளர்கள் விஜயகுமார், அருண்குமார் ஆகியோர் விரைந்து வந்து மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

    மேலும் திருவண்ணாமலையில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு சென்ற செய்யாறு உதவி திட்ட அலுவலர் அரிகரன், ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.பாண்டியன் ஆகியோர் மாலையில் பையூருக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், ‘இங்கு கடந்த மாதம் 2 ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் அதில் போதிய தண்ணீர் இல்லை. இதனால் வேறு பகுதியில் இருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். சில தினங்களுக்கு முன்பு கூட தெருவிளக்குகள் மாற்றப்பட்டது. ஆனால் சில சமூக விரோதிகள் மின்விளக்குகளை சேதப்படுத்தி உள்ளனர். உடனடியாக குப்பைகளை அகற்றியும், தெருவிளக்குகள் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். 
    சீரான குடிநீர் வழங்கக்கோரி நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு காலிக்குடங்களுடன் திரண்டு வந்த பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.
    நாமக்கல்:

    பேளுக்குறிச்சி அருகே உள்ள கல்குறிச்சி ஈச்சம்பட்டியை சேர்ந்த பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்து, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது :-

    கல்குறிச்சி ஈச்சம்பட்டியில் 350 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க உதவும் மின்மோட்டார்கள் பழுதாகி விட்டதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. காவிரி குடிநீரும் வாரத்திற்கு ஒருமுறை மிக குறைவான அளவே வருகிறது. எனவே குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஊராட்சிக்கு அறிவுறுத்தி, பழுதான மின்மோட்டார்களை சரிசெய்து சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதேபோல் கந்தம்பாளையம் அருகே உள்ள வானக்காரன்பாளையம் ராமதேவம் கிராமத்தை சேர்ந்த பெண்களும் நேற்று காலிக்குடங்களுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது :-

    ராமதேவம் கிராமத்தில் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் மின்மோட்டார் பழுதாகி விட்டதால் கடந்த 2 மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. காவிரி குடிநீரும் வாரம் ஒருமுறை மிக குறைவான அளவே வருகிறது. இதனால் குடிநீர் இன்றி கடும் அவதி அடைந்து வருகிறோம். எனவே பழுதான மின்மோட்டாரை சரிசெய்து, சீரான முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சீரான குடிநீர் வழங்கக்கோரி இரு கிராமங்களை சேர்ந்த பெண்கள் காலிக் குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
    சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி ஊட்டியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மற்றும் குறைகளை மனுவாக அளித்தனர். அதன்படி ஊட்டி மஞ்சனக்கொரை ஜல்லிகுழி பகுதி பொதுமக்கள் சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    ஜல்லிகுழி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பொதுமக்களுக்கு சரிவர வினியோகம் செய்யப்பட வில்லை. 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மக்கள் வேலைக்கு சென்ற பின்னர் குடிநீர் விடப்படுவதால், அதனை பிடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் சில நேரங்களில் குடிநீர் கிடைக்காமல் திண்டாட வேண்டிய நிலை உள்ளது. தெருவிளக்குகள் இல்லாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவு நேரத்தில் வெளியில் செல்ல முடிவது இல்லை. மேலும் தடுப்புச்சுவர் அமைத்து கொடுக்கப்பட வில்லை. இதனால் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ஊட்டி பிங்கர்போஸ்ட் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் நலச் சங்கத்தினர் குடியிருப்பை சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்து தரக்கோரி மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    பிங்கர்போஸ்ட்டில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அரசு அலுவலர்கள் பலர் வசித்து வருகிறோம். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாகவே குடியிருப்பு வளாகத்துக்குள் ஆடு, மாடு, குதிரை போன்ற கால்நடைகள் உலா வந்து கொண்டு இருக்கிறது. அவை குடியிருப்பின் முன்பகுதியில் அசுத்தம் செய்து விடுகின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல் கொசு உற்பத்தியாகி நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. கால்நடைகளை பிடித்து செல்லவோ அல்லது வளாகத்துக்குள் கட்டாமல் இருக்கவோ வழிவகை செய்ய வேண்டும்.

    மேலும் குடியிருப்பை சுற்றி கால்நடைகள் உள்ளே நுழையாத வகையில் பாதுகாப்பு வேலி அமைத்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 213 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ஊரக வளர்ச்சித்துறை சார்பில், முள்ளிகூர் ஊராட்சியில் செயலாளராக பணிபுரிந்து பணியின் போது உயிரிழந்த அய்யப்பன் என்பவரின் மனைவி பீனாவிற்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 23 உலமாக்களுக்கு அடையாள அட்டைகள், தாட்கோ மூலம் ரூ.33 லட்சத்து 32 ஆயிரத்து 385 மதிப்பில் ரூ.15 லட்சத்து 58 ஆயிரத்து 332 மானியத்துடன் கூடிய சுற்றுலா வாகனங்கள் பழங்குடியினர் 4 பேருக்கு வழங்கப்பட்டது.
    மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு காரணங்களால் குடிநீர் பிரச்சினை கடுமையாகி வரும் நிலையில் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் குடிநீர் தேவைக்கு கிராமப்புறங்களும், நகர்ப்புறங்களும் நீண்ட நாட்களாக நிலத்தடி நீர் ஆதாரத்தையே நம்பி உள்ள நிலையில் சமீபகாலமாக தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், நகர்ப்புறங்களுக்கும், ஒரு சில கிராமப்புறங்களுக்கும் கைகொடுத்து வந்தது. நகர் பகுதிகளுக்கு நிலத்தடிநீர் ஆதாரமாக உள்ள ஆனைக்குட்டம், வெம்பக்கோட்டை, இருக்கன்குடி அணை பகுதிகள் வறண்டு விட்ட நிலையில் இந்த நீர் ஆதாரங்களில் இருந்து குடிநீர் கிடைப்பது வெகுவாக பாதித்து விட்டது.

    கிராமப்பகுதிகளில் 90 சதவீதம் கிராமங்கள் நிலத்தடி நீர் ஆதாரத்தை நம்பி உள்ள நிலையில் நீர் ஆதாரத்தில் வறட்சி, பகிர்மான குழாய் உடைப்பு, மின் மோட்டார் பழுது போன்ற பல்வேறு காரணங்களால் குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் பஞ்சாயத்து செயலர்களே குடிநீர் பிரச்சினையை கையாள வேண்டிய நிலையில் நிதிப்பற்றாக்குறை காரணமாக அவர்களால் குடிநீர் வினியோகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க முடியவில்லை.

    பல கிராம மக்கள் குடிநீர் கோரி பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களை முற்றுகையிடும் நிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனையும் தாண்டி காலிகுடங்களுடன் கிராமத்து பெண்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.

    நகர் பகுதிகளை பொறுத்தமட்டில் மக்களின் குடிநீர் தேவைக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் ஓரளவு கைகொடுத்து வந்த நிலையில் சமீபத்தில் தென் மாவட்டங்களில் பெருமழை பெய்த காரணத்தால் தாமிரபரணிஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் கிணறுகள் சேதம் அடைந்துள்ளதால் அங்கிருந்து வரும் குடிநீர் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகத்தின் இடைவெளி நாட்கள் அதிகரித்து விட்டது. பேரூராட்சி பகுதிகளிலும் இதே நிலை தான் நீடிக்கிறது.

    மொத்தத்தில் தென்மேற்கு பருவமழை விருதுநகர் மாவட்டத்தை ஏமாற்றி விட்ட நிலையில் மாவட்டத்தில் உள்ள குடிநீர் ஆதாரங்கள் வறண்டு விட்டதால் நகர்ப் பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் குடிநீர் பிரச்சினை கடுமையாகி வருகிறது. உள்ளாட்சி அமைப்புகள் அதிகாரிகளின் நிர்வாகத்தில் உள்ள நிலையில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் முனைப்புடன் எடுக்கப்படாத நிலையே நீடிக்கிறது. எனவே குடிநீர் வினியோகத்தை சீராக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள சிறப்பு குழுக்களை கலெக்டர் அமைத்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.

    முன்னேற துடிக்கும் மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த மாவட்டத்தில் அடிப்படை தேவையான குடிநீர் வினியோகத்திலேயே பிரச்சினை ஏற்பட்டால் மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே மாவட்ட நிர்வாகம் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க அரசிடம் சிறப்பு நிதி கேட்டு பெற்று தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும். இதுவரை குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த கிராம மக்களுக்கு அவர்களது குடிநீர் பிரச்சினையில் தீர்வு ஏற்பட்டதாக தெரியவில்லை. இதேநிலை நீடித்தால் கிராமப்பகுதிகளிலும் குடிநீருக்காக போராட்டங்கள் நடைபெறும் நிலை ஏற்பட்டுவிடும். 
    ×