search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி விடுதி"

    மாதவரத்தில் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #StudentSuicide
    மாதவரம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகள் செண்பகவள்ளி (வயது18). இவர் மாதவரத்தில் உள்ள அரசு தோட்டக்கலை கல்லூரி விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று காலை செண்பகவள்ளி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று உடன் தங்கி இருக்கும் மாணவிகளிடம் தெரிவித்தார். மேலும் அவர் கல்லூரிக்கு செல்லவில்லை.

    இந்தநிலையில் கல்லூரி முடிந்து மாணவிகள் திரும்பி வந்தபோது விடுதி அறையில் செண்பகவள்ளி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    இதனையடுத்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் அலறி கூச்சலிட்டனர். இதுபற்றி மாதவரம் பால்பண்ணை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    செண்பகவள்ளியின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? கல்லூரியில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள். அவருடன் தங்கி இருந்த மாணவிகளிடமும் விசாரணை நடக்கிறது.

    செண்பகவள்ளி சிறுவயதிலேயே தாயை இழந்தவர். தந்தை முத்து கிருஷ்ணனின் ஆசைப்படி அவர் விவசாயம் தொடர்பான படிப்பை படித்தார். படிப்பில் அவர் ஆர்வமுடன் இருந்ததாக தெரிகிறது.

    தற்கொலை செய்வதற்கு முன்பு செண்பகவள்ளி தோழிகளிடம் தனக்கு உடல்நிலை சரியில்லாததால் அறையில் ஓய்வு எடுப்பதாக கூறி இருந்தார். அவர்கள் கல்லூரி முடிந்து திரும்பி வருவதற்குள் செண்பக வள்ளி தற்கொலை செய்து விட்டார்.

    கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #StudentSuicide
    கும்பகோணம் அரசு கல்லூரி விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அரசு கலை கல்லூரியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு கல்லூரி மாணவர்கள் தங்கிய விடுதியில் இரவு சாப்பாடு வழங்கப்பட்டது. அப்போது சாப்பாட்டில் பல்லி கிடந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் திடீரென அசூர் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதியில் தரமான, சுகாதாரமான உணவு வழங்க கோரி கோ‌ஷமிட்டனர்.

    இதையடுத்து கும்பகோணம் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பிறகு மறியலில் போராட்டத்தில் ஈடுபட்ட 5 மாணவர்களை மட்டும் போலீசார் அழைத்து சென்றனர். பிறகு சிறிது நேரத்தில் 5 மாணவர்களையும் விடுவித்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை கும்பகோணம் அரசு கலை கல்லூரி மாணவ- மாணவிகள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கல்லூரி வளாகத்தில் சுமார் 2 ஆயிரம் மாணவ- மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    பிறகு கல்லூரி முன்பு ரோட்டில் மாணவர்கள் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள் போலீசாரை விசாரணைக்கு அழைத்து சென்றதை கண்டித்தும், விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதை கண்டித்தும் மாணவ- மாணவிகள் கோ‌ஷமிட்டனர்.

    இதையடுத்து கும்பகோணம் போலீசார் விரைந்து வந்து போராட்டம் நடத்திய மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். #tamilnews
    கோவையில் ராக்கிங் செய்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் 4 பேரும் கல்லூரி விடுதியில் இருந்து ஒரு ஆண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
    கோவை:

    தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராக்கிங் கொடுமை தாங்காமல் சில மாணவர்கள் விபரீத முடிவு எடுத்தனர். எனவே ராக்கிங் கொடுமையை தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

    இதன் மூலம் ராக்கிங் செய்வது தடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கல்லூரிகளில் ராக்கிங் செய்வது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை ராக்கிங் செய்த 2-ம் ஆண்டு மாணவர்கள் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதே போல கோவை அரசு கலைக்கல்லூரியில் ராக்கிங்கில் ஈடுபட்ட 3 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    தற்போது கோவை அரசு மருத்துவ கல்லூரியிலும் ராக்கிங் கொடுமை அரங்கேறி உள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த மாணவர் ஒருவர் விடுதியில் தங்கி இருந்து மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அவரை, விடுதியில் தங்கியிருக்கும் சீனியர் மாணவர்கள் 4 பேர் ராக்கிங் செய்து உள்ளனர்.

    இது குறித்து அந்த மாணவர் தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். உடனே அவர்கள், டெல்லியில் உள்ள ராக்கிங் தடுப்பு கமிட்டிக்கு புகார் மனு அனுப்பினர்.

    இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி ராக்கிங்கில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் அசோகனுக்கு ராக்கிங் கமிட்டி அறிவுறுத்தியது.

    இதையடுத்து ராக்கிங்கில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கும் வகையில் கல்லூரி துணை முதல்வர், ஆர்.டி.ஓ., மனநல மருத்துவர், விடுதி காப்பாளர் உள்பட 10 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் பொள்ளாச்சி, தர்மபுரி, திருப்பூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் 4 பேர் தான் திருவண்ணாமலையை சேர்ந்த மாணவரை ராக்கிங் செய்தது தெரியவந்தது.

    இதையடுத்த அந்த மாணவர்கள் 4 பேரும் கல்லூரி விடுதியில் இருந்து ஒரு ஆண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இது குறித்து மருத்துவகல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் அசோகன் கூறியதாவது:-

    கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் 750 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மருத்துவ படிப்பு படித்து வரும் மாணவ-மாணவி களின் வசதிக்காக கல்லூரி வளாகத்தில் தங்கும் விடுதி உள்ளது.

    இங்கு சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்வதை தடுக்கும் வகையில் 10 பேர் கொண்ட ராக்கிங் தடுப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக கல்லூரி வளாகத்தில் ஆங்காங்கே விழிப்புணர்வு நோட்டீசுகளும் ஒட்டப்பட்டு உள்ளன. அதில், ராக்கிங் செய்வது சட்டப்படி குற்றம். அதையும் மீறி ராக்கிங் செய்தால் சம்பந்தப்பட் டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுதவிர கல்லூரி மற்றும் விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு ராக்கிங் தடுப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையும் மீறி மருத்துவ கல்லூரி விடுதியில் ராக்கிங் நடந்து உள்ளது. இதில் 4 மாணவர்கள் ராக்கிங் செய்தது உறுதி செய்யப்பட்டது. எனவே ராக்கிங் செய்த மாணவர்கள் 4 பேரும் ஒரு ஆண்டுக்கு விடுதியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இதில் ஒரு மாணவர் மட்டும் ஒரு மாதத்துக்கு கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.

    இங்குள்ள விடுதியில் சீனியர் மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை ராக்கிங் செய்வார்கள் என்பதற்காக பிற மாணவர்கள் செல்ல முடியாத வகையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தனியாக விடுதி அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் தான் 3-ம் ஆண்டு மாணவர்கள் 2-ம் ஆண்டு மாணவரை ராக்கிங் செய்து உள்ளனர்.

    இது குறித்த அறிக்கை டெல்லியில் உள்ள ராக்கிங் தடுப்பு கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து ராக்கிங் நடக்காத வகையில் கண்காணிக்கப் பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    அரசு முத்துரங்கம் கலைக்கல்லூரியில் ராகிங் புகாரை அடுத்து கல்லூரி விடுதியில் இருந்து 6 மாணவர்களை நீக்கி வேலூர் கலெக்டர் உத்தரவிட்டார்.
    வேலூர்:

    வேலூர் ஓட்டேரியில் அரசு முத்துரங்கம் கலைக்கல்லூரி உள்ளது. இங்கு 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் ஆதிதிராவிடர் சமுகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்லூரி அருகிலேயே தங்கும் விடுதி உள்ளது.

    விடுதியில் தங்கி 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் அஜித், சுரேஷ், கிரண், விக்னேஷ், படையப்பா, மணிகண்டன், தங்கி முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களை கேலி கிண்டல் செய்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

    இது குறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு முதலாம்ஆண்டு மாணவர்கள் புகார் தெரிவித்தனர். விசாரணையில் மாணவர்கள் ராகிங் செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து 3-ம் ஆண்டு மாணவர்கள் 6 பேரையும் கல்லூரி நிர்வாகம் விடுதியில் இருந்து 12 நாட்கள் தற்காலிக நீக்கம் செய்தது. இடை நீக்கம் செய்யபட்ட 6 மாணவர்கள் மீண்டும் விடுதிக்கு திரும்பும் போது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் அவர்களுக்கும் மோதல் சூழ்நிலை உருவாகியுள்ளதாக விடுதி அதிகாரிகள் செய்த விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து மற்ற மாணவர்களின் நலன் கருதி 6 மாணவர்களை விடுதியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.இதைத்தொடர்ந்து 6 மாணவர்களையும் விடுதியில் இருந்து நிரந்தமாக நீக்கம் செய்து கலெக்டர் ராமன் உத்தரவிட்டார். #tamilnews
    கல்லூரி விடுதியில் மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திருவையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவையாறு:

    திருவையாறில் சத்திரம் நிர்வாகத்தின் கீழ் அரசர் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் மாணவிகளுக்கு மட்டும் விடுதி உள்ளது. இந்தவிடுதியில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். தற்போது கல்லூரி தேர்வு நடைபெற்று வருவதால் 48 மாணவிகள் மட்டுமே தங்கியுள்ளனர்.

    இதில் அரியலூர் மாவட்டம் காவனூரை சேர்ந்த கண்ணன் மகள் நித்யா(21). தங்கி எம்.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் விடுமுறைக்கு வீட்டிற்கு சென்றுவிட்டு கடந்த 7-ம் தேதி விடுதிக்கு வந்துள்ளார். பின்னர் கல்லூரி சென்று தேர்வு எழுதிவிட்டு விடுதிக்கு வந்தவர் மின்விசிறியில் தூக்கு போட்டுக்கொண்டுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மாணவி பார்த்துவிட்டு சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் வந்து நித்யாவை காப்பாற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நித்யாவிற்கு முதல் உதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று நித்யா இறந்து விட்டார். இது குறித்து அவரது தந்தை கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் திருவையாறு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×