என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கவர்னர் பன்வாரிலால் புரோகித்"
கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணை வேந்தராக டாக்டர் வைதேகி விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று வழங்கினார்.
துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் வைதேகி விஜயகுமார் பேராசிரியர் பணியில் நீண்ட கால அனுபவம் கொண்டவர். 12 ஆண்டுகளுக்கு மேலாக அண்ணா பல்கலைக் கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றினார்.
6 ஆண்டுகளுக்கும் மேலாக துணை தலைவராகவும், 5 ஆண்டுகள் டீனாகவும் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் வி.ஐ.டி. பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்து நிர்வாக ஆற்றல் பெற்றவர்.
கனடா, சிங்கப்பூர் நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் சிறப்பு பேராசிரியராக பணியாற்றியவர்.
ஆராய்ச்சித்துறையில் 24 ஆராய்ச்சியாளர்களுக்கு வழி காட்டியாக இருந்துள்ளார். சர்வதேச அளவில் 266 ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் இங்கு மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 123-வது மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இதற்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பூங்காவில் பார்வையாளர்களை கவரும் வகையில் 5 லட்சம் வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. மரங்கள், புல்வெளிகளை சுற்றி வித விதமாக பூந்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியினை சிறப்பிக்கும் வகையில் 89 அடி அகலம், 23 அடி உயரத்தில் 1¼ லட்சம் கார்னேசன் மலர்களால் பாராளுமன்றத்தின் தோற்றமும், 12 அடி உயரத்தில் 2 ஆயிரம் ஆர்கிட், 2 ஆயிரம் கார்னேசன் மலர்களால் மலர் அருவியும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காளைகள், மயில் போன்ற அமைப்புகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூஞ்செடிகளும், மலர் மாடங்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூந்தொட்டிகளும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களை வரவேற்கும் வகையில் வண்ண மலர்களால் அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சி ஏற்பாடுகள் நடைபெற்று வரும்போதே பொதுமக்கள் ஆர்வமுடன் செல்போன்களில் செல்பி எடுத்து வருகின்றனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 123-வது மலர் கண்காட்சியினை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை (வெள்ளிக்கிழமை) ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். விழாவிற்கு வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங்பேடி தலைமை தாங்கி பேசினார். மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வரவேற்று பேசினார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, தேயிலை வாரிய செயல் அலுவலர் பால்ராசு, சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட மேலாண்மை இயக்குநர் அமர்குஷ்வாஹா, இயக்குநர் இண்கோ வினித், தமிழ்நாடு தேயிலை கழகமேலாண்மை இயக்குநர் ஸ்ரீநிவாஸ்ரெட்டி, முதுமலை புலிகள் காப்பக முதன்மை வன பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் கவுசல், மாவட்ட வன அலுவலர் குரு சுவாமி, கூடலூர் வனகோட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
முடிவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் டாக்டர் சுப்பையன் நன்றி கூறினார். இதில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மலர் கண்காட்சியினை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்த பின்னர் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.20, கேமிராவிற்கு ரூ.100, வீடியோ கேமிராவிற்கு ரூ.500 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் குடும்பம், குடும்பமாக தாவரவியல் பூங்காவில் குவிந்தனர். அங்கு தோட்டக் கலைத்துறை சார்பில் செய்யப்பட்டிருந்த மலர் கண்காட்சியினை கண்டு ரசித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் தங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
பொதுமக்கள் கூட்டத்தினை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் முக்கிய இடங்களில் கேமிராவும், பொதுமக்கள் கூடும் பகுதிகளில் ஹெலி கேமிரா மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் சுற்றுலாப்பயணிகளுக்கு உதவும் வகையில் மாணவர்கள் வழிகாட்டிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தனர். மலர் கண்காட்சியினை கண்டுகளிக்க பொது மக்கள் அணிவகுத்து வந்த வண்ணம் உள்ளனர்.
கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிறந்தநாளையொட்டி அவருக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பினார். அதில், “தங்களது மகிழ்ச்சிகரமான பிறந்த நாளில் உங்களுக்கு எனது பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
நீங்கள் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் சேவை புரிய நல்ல உடல்நலத்துடனும், அமைதியுடனும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் நன்றி தெரிவித்தார். #TNGovernor #Banwarilalpurohi #Edappadipalaniswami
தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
மகிழ்ச்சிகரமான தமிழ் புத்தாண்டு தினத்தில் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வருடம் தமிழ்நாட்டுக்கும், அதன் மக்களுக்கும் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை நிறைந்ததாக திகழ இந்த நாள் உதயமாகட்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #BanwarilalPurohit #TamilNewYear
பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த வழக்கு தொடர்பாக உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு விசாரணையில் நியாயம் கிடைக்காது என்று அப்பகுதி மக்களும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து ஐ.ஜி. ஸ்ரீதர், பெண் போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோரது தலைமையிலான போலீசார் நேற்று பொள்ளாச்சிக்கு சென்று அதிரடி விசாரணை மேற்கொண்டனர். பாலியல் சம்பவம் நடைபெற்றதாக புகார் கூறப்பட்டுள்ள வீட்டுக்கு சென்றும் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்தது. இதற்கு தமிழக அரசும் சம்மதித்து சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்தது. இதற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து சிபிஐக்கு வழக்கை மாற்றுவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டது. #PollachiAbuseCase #PollachiCase
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கவர்னருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு மாநிலத்தின் முதல்- அமைச்சராக பொறுப்பேற்கும் ஒருவர், அவர் அமர்ந்து பணியாற்றும் அரசின் தலைமைச் செயலகத்தை, அரசுப் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது விதிமுறை.
அ.தி.மு.க. கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதும் குற்றம் சாட்டியதால், அ.தி.மு.க.விலிருந்து விலக்கி வைக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமியை தேர்தல் நெருங்கும் இவ்வேளையில், மீண்டும் கட்சியில் இணைக்கும் செயலை, அரசின் தலைமைச் செயலகத்தில் செய்துள்ளனர். இந்நிகழ்ச்சி குறித்து தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் செய்திகள் வெளிவந்துள்ளன.
நேற்று நடந்த இந்நிகழ்வால், தமிழக அரசின் முதல்-அமைச்சராக இருக்கின்ற எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்-அமைச்சராக இருக்கின்ற ஓ.பன்னீர் செல்வமும் தமிழக அரசின் தலைமைச் செயலாளரும் சட்ட விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டுள்ளனர்.
எனவே, தமிழக ஆளுநர் இப்பிரச்சனையில் தலையிட்டு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடமிருந்தும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடமிருந்தும் தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடமிருந்தும் உடனடியாக விளக்கம் கேட்டு, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMK #RSBharathi #EPS #OPS
அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுவதைப் போன்று காலை உணவு வழங்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் சென்னை மாநகராட்சியும் அட்சய பாத்திரம் தொண்டு நிறுவனமும் இணைந்து, மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளவன் உள்பட 7 பேர் சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தமிழக கவர்னரிடம் மனு கொடுத்தார். ஆனால், இதுவரை அதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் அற்புதம்மாள் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று 7 பேரின் விடுதலை குறித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
அதன்படி நேற்று கடலூருக்கு வந்த அற்புதம்மாள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தின் கோப்பு கவர்னருக்கு அனுப்பி வைத்து 6 மாதங்கள் ஆகியும் கவர்னர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய அரசு உறுதியாக உள்ளது. ஆனால், கவர்னர் முட்டுக்கட்டையாக உள்ளார்.
இது தொடர்பாக ஏற்கனவே கவர்னரை சந்தித்து வலியுறுத்திய நிலையில் மீண்டும் அவரை சந்திக்க சட்டத்தில் இடமில்லையாம். எனவே மக்களை சந்திக்க முடிவெடுத்து இதுவரை 16 மாவட்டங்களில் மக்களை சந்தித்துள்ளேன். எனது 71 வயதிலும் சட்டத்தின் வழிகாட்டுதலின்படியே போராட்டம் நடத்தி வருகிறேன்.
அடுத்த மாதம் (மார்ச்) 9-ந் தேதி சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், புதுவை ஆகிய இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது. தமிழக கவர்னர் சட்டத்தை மதித்து பேரறிவாளன் உள்பட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
மும்பை குண்டு வெடிப்பில் 254 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் கைதான பிரபல நடிகர் 5 ஆண்டுகளில் வெளியே வந்தார். சி.பி.ஐ. விசாரித்த அந்த வழக்கில் அந்த மாநில கவர்னரே அவரை விடுதலை செய்தார்.
ஆனால், தமிழகத்துக்கு மட்டும் வேறு ஒரு சட்டம் கடைபிடிக்கப்படுகிறது. எனவே பேரறிவாளன் உள்பட 7 பேரின் சட்டப் படியான விடுதலையை எதிர்நோக்கியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். #Arputhammal
தூத்துக்குடியில் கடலோர காவல்படை நிலையம் அமைந்து உள்ளது. இந்த நிலையம், இந்தியாவின் 16வது கடலோர காவல்படை மாவட்ட தலைமையகமாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா நேற்று மாலை கடலோர காவல்படை அலுவலக வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு கடலோர காவல்படை கிழக்கு பிராந்திய கமாண்டர் பரமேஷ் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு கடலோர காவல்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து கடலோர காவல்படை புதிய மாவட்ட தலைமையகத்தை தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:-
இந்தியாவின் கடல்சார் பாதுகாப்புக்காக கடலோர காவல்படை 1978-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்று சிறந்த பாதுகாப்பு படையாக மாறி உள்ளது. இதில் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் சிறந்த தொழில்நுட்பங்கள் அடங்கிய கப்பல்கள் உள்ளன. இந்திய கடலோர காவல்படையில் கட்டமைப்பு, மனிதவளம் ஆகியவற்றின் விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கப்பட்டு உள்ளது. இந்தியா சர்வதேச கடல்வழிப்பாதையில் நடுவில் அமைந்து உள்ளது. கிழக்கு ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் கப்பல்கள் நம் கடல் பாதையை கடந்துதான் செல்ல வேண்டும். இந்தியாவின் வாணிபத்தில் 95 சதவீதம் கடல்வழியாக நடக்கிறது.
இந்திய கடலோர காவல்படை உலகில் 4-வது பெரிய கடலோர காவல்படை ஆகும். இங்கு 139 கப்பல்களும், 62 விமானங்களும் உள்ளன. இந்த படை 2023-ம் ஆண்டில் 200 கப்பல்களையும், 100 விமானங்களையும் பெற்று இருக்கும்.
தீவிர மீட்பு பணிக்காக அரசு தூத்துக்குடியில் உள்ள கடல்சார் மீட்பு துணை மையத்தை, கடல்சார் மீட்பு துணை மையமாக தரம் உயர்த்தி உள்ளது. நாட்டின் பலம், பாதுகாப்பு படையின் பலத்துடன் இணைக்கப்பட்டது. ஆகையால் பாதுகாப்பு படையினருக்கான தேவைகளை முன்னுரிமை அளித்து செய்வது நமது முக்கிய தேவை ஆகும். சமீபத்தில் நடந்த கஜா புயல் தாக்குதலின் போது, 74 கப்பல் மற்றும் 10 விமானங்கள் மூலம் மீனவர்கள் பாதுகாப்பாக கரைக்கு திரும்புவதற்கு நடவடிக்கை எடுத்தனர். இதனால் மீனவர்கள் இழப்பு தடுக்கப்பட்டது. புயல் தாக்கத்துக்கு பிறகு கடலோர காவல்படையினர் பாதிக்கப்பட்ட கிராமங்களில் நிவாரண பொருட்கள் கொடுத்தனர். கடலோர காவல்படை தொடங்கப்பட்ட பிறகு அவர்களின் சிறப்பான செயல்பாடுகாரணமாக இந்தியாவில் இதுவரை 9 ஆயிரத்து 193 மீனவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.
இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் கடல் சூழலியலை பாதுகாக்க அண்டை நாடுகளான வங்கதேசம், மாலத்தீவு, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இதற்காக இந்தியா, தெற்காசிய கூட்டு சுற்றுச்சூழல் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் தெற்காசிய பிராந்தியத்தில் ரசாயனம் மற்றும் எண்ணை மாசு ஏற்பட்டால், அதனை அகற்றுவதற்கு வழிவகை செய்து உள்ளது. இந்த மண்டல எண்ணெய் மாசு கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த திட்டத்தை இந்திய கடலோர காவல்படை செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #BanwarilalPurohit
திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகித்த டாக்டர் கே.பாஸ்கரின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து புதிய துணைவேந்தரை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார். புதிய துணை வேந்தராக கே.பிச்சுமணி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 3 ஆண்டுகளுக்கு துணை வேந்தராக பதவி வகிப்பார்.
துணைவேந்தராக நியமிக்கப்பட்ட கே.பிச்சுமணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று பணி நியமன ஆணையை வழங்கினார்.
வேதியியல் பேராசிரியரான பிச்சுணி, ஆசிரிய பணியில் 37 வருடம் அனுபவம் வாய்ந்தவர் எனவும், மதுரை பல்கலைக்கழக பொறுப்புகள் மட்டுமின்றி தைபே, ஜப்பான் போன்ற நாடுகளின் பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராக பணியாற்றியிருப்பதாகவும் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #MSUniversity ViceChancellorPichumani
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் உள்ளனர்.
7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக கவர்னர் முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. ஆனால் பல மாதங்களாகியும் அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து கவர்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் தங்களை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று காலை உணவை தவிர்த்து 8-வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதேபோன்று பெண்கள் சிறையில் இருக்கும் நளினியும் கடந்த 9-ந் தேதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் இன்று காலை உணவையும் சாப்பிட மறுத்துவிட்டார். தொடர்ந்து 6-வது நாளாக அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார்கள். தொடர் உண்ணாவிரதம் காரணமாக 2 பேரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து அவர்கள் சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு முருகனுக்கு 2 பாட்டில் குளுகோஸ், நளினிக்கு 2 பாட்டில் குளுகோஸ் ஏற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முருகன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, சிறைகண்காணிப்பாளர் மூலம் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் சிறையிலேயே தான் இறந்துவிட்டால், தனது உடலை அரசு மருத்துவமனைக்கு தானம் செய்ய முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்