என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காவிரி வெள்ளம்"
கரூர் எல்.ஜி.பி. நகரைச் சேர்ந்தவர் பாபுவின் மகன் தன்வந்த் (4) யு.கே.ஜி. படித்து வந்தான்.
பிறந்த நாளையொட்டி, பெற்றோர் அவனை வேலாயுதம் பாளையம் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை காண அழைத்து சென்றனர்.
காவிரி பாலத்தின் கிழக்குப்புறம் உள்ள 24-வது தூண் மீது மகனை அமர வைத்து இடது கையால் தாங்கிப் பிடித்துக் கொண்டு செல்போனில் செல்பி எடுத்தார்.
அப்போது, காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் பின்னால் சாய்ந்த தன்வந்த் பாபுவின் பிடியில் இருந்து நழுவி ஆற்றில் விழுந்தான். இதில் அந்த சிறுவன் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டான்.
தீயணைப்பு வீரர்கள், போலீசார் அங்கு விரைந்து வந்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். விநாடிக்கு சுமார் 2 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் நீரின் இழுப்பு வேகம் அதிகமாக இருந்தது. இதனால் அவர்கள், ஆற்றின் கரையோரமாக தேடினார்கள்.
மாயனூர் தடுப்பணை பகுதியில் கரூர், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் போலீசார் இரவு 8 மணி வரை தேடினார்கள். அதன் பிறகு தேடும் பணியை நிறுத்தி விட்டனர்.
இன்று 2-வது நாளாக காலை 8 மணி முதல் வாங்கல் காவிரி ஆற்று பாலத்தில் இருந்து ஒருவந்தூர், உன்னியூர், காட்டுப்புத்தூர், முசிறி, புலியூர், மாயனூர் தடுப்பணை வரை தீயணைப்பு நிலைய வீரர்கள் ரப்பர் படகு கொண்டு தேடி வருகிறார்கள். அப்பகுதி மீனவர்களும் பரிசல்கள் மூலமாக சிறுவனை தேடி வருகிறார்கள்.
காட்டுப்புத்தூர் பகுதியிலும், முசிறி பகுதியிலும் காவிரி ஆற்றின் நடுவே உயரமான திட்டுக்கள் உள்ளது. அதில் மரம், செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகின்றன. அந்த பகுதியில் ஆங்காங்கே பெரிய மரங்களும் உள்ளன. சிறுவன் இந்த பகுதியில் தங்கி இருக்கலாம் என்ற கோணத்தில் வீரர்கள் தேடுகின்றனர்.
இது குறித்து தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், நேற்று விட இன்று காவிரி ஆற்றில் தண்ணீர் குறைவாக வருகிறது. இதனால் ஆற்றில் இறங்கி சிறுவனை தேடும் பணி சற்று எளிதாக உள்ளது. நேற்று இருட்டாக இருந்ததால் தேட முடியவில்லை. இன்று நாங்கள் ஒருவந்தூரில் இருந்து மாயனூர் வரை தேடி வருகிறோம் என்றனர். #Selfie #CauveryRiver
கரூர், என்.சி.சி.நகரை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் தன்வந்த் (4). ஒரு தனியார் பள்ளியில் பிரிகேஜி வகுப்பு படித்து வந்தான்.
காவிரி ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்தை பார்ப்பதற்காக பாபு, மனைவி சோபா மற்றும் மகன் தன்வந்த் ஆகியோருடன் காரில் நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள வாங்கல் ஆற்று பாலத்திற்கு இன்று காலை 9.30 மணிக்கு வந்தார். காரை ஓரமாக நிறுத்தி விட்டு வாங்கல் ஆற்று பாலத்தில் நின்று வெள்ளம் சீறிப்பாய்ந்து ஓடுவதை பார்த்து மகிழ்ந்தனர்.
கரை புரண்டும் ஓடும் வெள்ளத்தை செல்பி எடுப்பதற்கு ஆசைப்பட்டனர். இதற்காக பாபு, பாலத்தின் தடுப்பு சுவர் ஓரத்தில் நின்று மகனை ஒரு கையில் தூக்கி பிடித்தார். மற்றொரு கையில் செல்போன் வைத்துக் கொண்டு செல்பி எடுத்தார்.
அப்போது குழந்தை தன்வந்த் திடீரென திமிறினான். இதனால் நிலை தடுமாறிய பாபு கையில் இருந்த குழந்தையை விட்டு விட்டார். உடனே குழந்தை ஆற்றில் விழுந்தது.
இதை பார்த்த பாபு மற்றும் சோபா கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அய்யோ குழந்தை ஆற்றில் விழுந்து விட்டது. யாராவது வந்து காப்பாற்றுங்கள்... என்று கதறினர். தங்கள் முன்பு குழந்தையை வெள்ளம் இழுத்து செல்வதை கண்டு துடித்தனர்.
அங்கிருந்தவர்களிடம் யாராவது குழந்தையை காப்பாற்றுங்கள் என கெஞ்சினார்கள். ஆனால், காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் யாரும் ஆற்றில் குதிக்க முன்வரவில்லை. தாய் சோபா அதிர்ச்சியில் உறைந்தார்.
போலீசார், தீயணைப்பு வீரர்கள் படகு மற்றும் பரிசல்கள் மூலம் குழந்தையை தேடி வருகிறார்கள். #Selfie #CauveryRiver
ஈரோடு:
இந்த ஆண்டு பருவமழை தீவிரம் அடைந்ததால் காவிரி ஆற்றில் வரலா காணாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கர்நாடக அணைகளில் திறக்கப்படும் 2 லட்சம் கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வருகிறது. அணை நிரம்பியதால் 2 லட்சம் கன அடி காவிரியில் திறந்து விடப்படுகிறது.
காவிரி வெள்ளத்துடன் பவானி சாகர் அணையில் திறக்கப்படும் 50 ஆயிரம் கன அடி தண்ணீரும், அமராவதி ஆற்றுத் தண்ணீரும் கலப்பதால் 3 லட்சம் கன அடி தண்ணீர் வரை காவிரியில் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு இரு கரைகளையும் தொட்டுச் செல்லும் காவிரி வெள்ளம் ஊருக்குள் புகுந்து பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.
பவானி ஆற்றின் சீற்றத்தால் சத்தியமங்கலத்தில் 300 வீடுகளில் வெள்ளம் புகுந்தது. 400 வீடுகளை வெள்ளம் சூழந்தது. வீடுகளில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் பவானி நகரமும் வெள்ளத்தால் கடும் பாதிப்புக்குள்ளானது. சின்னாற்றுப்பாலம், மார்க்கெட் வீதி உள்பட பல்வேறு இடங்களில் 550 வீடுகளில் வெள்ளம் புகுந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்த வீடுகளை சேர்ந்த பொதுமக்கள் திருமண மண்டபங்களிலும் பள்ளிகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளிலும் சுமார் 1500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அப்பகுதி மக்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பாக இடங்களில் தங்கி உள்ளனர்.
இதேபோல் காவிரி வெள்ளத்தால் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதிகளில் 50 வீடுகளிலும் கொடுமுடி, ஊஞ்சலூர் பகுதிகளில் 250 வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது.
காவிரி மற்றும் பவானி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர் கார் மூலம் ஈரோடு மாவட்டம் பவானி சென்றார்.
அங்குள்ள கல்யாண மண்டப முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.
பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடந்து சென்று பார்வையிட்டார். அப்போது கால் முட்டு அளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது. வேட்டியை மடித்தபடி அந்த தண்ணீரில் இறங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.
தொடர்ந்து பவானி- குமாரபாளையம் பழைய காவிரி ஆற்று பாலத்தையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பவானி மார்க்கெட் பகுதியையும் பார்வையிட்டார்.
பிறகு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மீண்டும் ஈரோடு கருங்கல்பாளையம் வந்த முதல்- அமைச்சர் அங்கு வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டு நிவாரணம் வழங்கினார். முதல்-அமைச்சருடன் அமைச்சர்கள் செங்கோட்டையன் கருப்பணன், விஜயபாஸ்கர், தங்கமணி சென்றனர்.
இதைத்தொடர்ந்து ஈரோடு காலிங்கராயன் பயணியர் விடுதியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் வெள்ள சேதம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், அஞ்செட்டியில் இருந்து ஒகேனக்கல் ஆறு பாய்கிறது.
கடந்த ஒரு மாத காலமாக கர்நாடக பகுதியில் இருந்து மழை அதிகம் பெய்து வினாடிக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான கனஅடி நீர் வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
ஒகேனக்கல்லுக்கு மேலே கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைக்குட்பட்ட ராசி மணல் பகுதியில் காவிரி ஆற்றின் நடுவே இயற்கையான மணல் திட்டு உள்ளது. ஏறத்தாழ ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு காவிரிக்கு நடுவே தீவு போல இந்த மணல் திட்டு அமைந்து உள்ளது.
காவிரி ஆற்றில் தண்ணீர் குறைவாக இருக்கும்போது இந்த தீவு பகுதியிலும், காவிரி ஆற்றின் இரு புறங்களிலும் உள்ள அடர்ந்த வனப்பகுதியிலும் நாட்டு மாடுகள் மேய்ச்சலுக்கு செல்வது வழக்கம்.
தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பலரும், பட்டி மாடுகள் என்ற பெயரில் குறைந்தது 100 மாடுகளைக் கொண்ட கூட்டங்களை வனப் பகுதிக்குள் மாதக் கணக்கில் மேய்ப்பார்கள்.
தற்போது காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களது மாடுகளை வனப் பகுதிக்குள் மேய்ச்சலுக்கு அனுப்பவில்லை. ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி ஊராட்சிக்குட்பட்ட பாண்டிரங்கன்கொட்டி உள்பட பல்வேறு பகுதியை சேர்ந்த மாரிமுத்து உள்பட சிலர் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளை இந்த ராசிமணல் திட்டு பகுதியில் மேய்த்து வந்தனர். நேற்று 60 மாடுகள் இந்தப் பகுதியில் சிக்கிக் கொண்டன.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தேன்கனிக்கோட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி ஜானகிராமன் தலைமையில் 10 வீரர்கள் ராசிமணல் பகுதிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் பரிசல் ஓட்டிகள் உதவியுடன் 10 மாடுகளை மீட்டனர்.
2 மாடுகள் வீதம் அந்த மாடுகளின் காலில் கயிற்றை கட்டி பரிசலில் ஏற்றி மறு கரைக்கு கொண்டு வந்தனர். இதேபோல விவசாயிகள் 8 மாடுகளை மீட்டனர். இன்று காலை வரை மொத்தம் 18 மாடுகள் மீட்கப்பட்டன.
மீதி உள்ள 42 மாடுகளை மீட்கும் பணி இன்று 2-வது நாளாக நடந்து வருகிறது. ராசிமணல் திட்டு பகுதியின் நாலாபுறமும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அந்த மாடுகளை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.
தொடர்ந்து காவிரி ஆற்றில் 2 லட்சத்து 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வருவதால் அஞ்செட்டியில் இருந்து தேன்கனிக்கோட்டை வழியாக ஒகேனக்கல்லுக்கு போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு உள்ளது. அஞ்செட்டி, ஒகேனக்கல் சாலையில் பஸ், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
காவிரியில் வெள்ளம் 3 லட்சம் கன அடி அளவுக்கு பாய்ந்தோடுகிறது. இதனால் தமிழகத்தில் காவிரி கரையோரப் பகுதியில் வெள்ளம் புகுந்துள்ளது. அங்கு வசித்த மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி வெள்ளப்பகுதிகளை நாளை பார்வையிடுகிறார். இதற்காக இன்று அவர் சேலம் செல்கிறார்.
நாளை காலை அவர் ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டத்தை பார்வையிடுகிறார். பவானியில் தொடங்கி காளிங்கராயன் பாளையம், குமாராபாளையம், பள்ளிபாளையம் ஆகிய இடங்களையும், பின்னர் கரூர் மாவட்டத்தில் வெள்ளப் பகுதிகளையும் பார்வையிடுகிறார்.
நாளை மாலை ஈரோட்டில் வெள்ள நிவாரண பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார். #TNCM #EdappadiPalaniswami
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட கூடுதல் தண்ணீர் மூலம் கரூர் மாவட்டம் மாயனூரில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக மாயனூர் அணைக்கு மேற்கு பகுதியில் உள்ள மேல மாயனூர், கீழமாயனூர் உள்ளிட்ட பகுதிகளில் நாவல் மரங்கள், கிணறுகள், ஆழ் குழாய் மோட்டார்கள் தண்ணீரில் மூழ்கின.
இதனால் நாவல் மரங்களில் கட்டியிருந்த வலைகளில் உள்ள நாவல் பழங்களை விவசாயிகள் பரிசல் மூலம் சென்று சேகரித்தனர். மேலும் கட்டளை பகுதியில் உள்ள தரிசு வயல்களிலும், மேல மாயனூர் பகுதியில் உள்ள வாழைத்தோப்பு மற்றும் நெல் சாகுபடிக்கு தயார் செய்யப்பட்ட நிலங்களிலும் தண்ணீர் புகுந்தது.
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வரும் நாட்களில் அதிகரிக்கப்படும் என்பதால் கொள்ளிடம் கரையோரத்தில் துணிகளை துவைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சலவை தொழிலாளர்கள், பொதுமக்கள் யாரும் ஆற்றங்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதை தவிர்த்து, அருகில் உள்ள வாய்க்கால்களுக்கு சென்று குளிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக முசிறி, தொட்டியம் பகுதி காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக கரூர், திருச்சி மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதியில் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் நொய்யல் முதல் திருமுக்கூடலூர் வரை காவிரியின் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு வெள்ள நீர் செல்கிறது. இதில் தவுட்டுப்பாளையத்தில் காவிரி கரையோரம் உள்ள வீரமணி என்பவரது வீட்டையும், அங்குள்ள விவசாய நிலங்களிலும் வெள்ளநீர் புகுந்தது. இதனால் வீரமணி தனது குடும்பத்துடன் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தஞ்சம் அடைந்தார்.
இதையடுத்து மண்மங்கலம் தாசில்தார் கற்பகம், நொய்யல், சேமங்கி, தவுட்டுப்பாளையம், புகளூர் உட்பட காவிரி கரையோர பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அங்கு கரையோரம் வசிக்கும் பொதுமக்களிடம் காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் வருவதால் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறும், குழந்தைகளை காவிரி கரையில் விளையாட விடவேண்டாம் என்றும் பாதுகாப்பாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுத்தார்.
அமைச்சர் உதயகுமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
மத்திய நீர்வள ஆணையம் கடந்த 9-ந்தேதி கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1 லட்சம் கன அடி வீதம் இரு தினங்களில் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் எனவும், காவிரி ஆற்றுப்படுகைகளில் அமைந்துள்ள மாவட்டங்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்தது.
தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆற்றங்கரையில் குழந்தைகள் குளிக்கவும் மற்றும் விளையாடவும் அனுமதிக்கக் கூடாது எனவும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் கட்டிவைக்க வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் உயர்மட்ட பாலங்கள் தவிர ஆற்றின் குறுக்கே செல்லும் பாதைகளை அடையாளம் காண்பதற்கு தரைமட்ட பாலங்களிலும் எச்சரிக்கை பதாகைகள் அமைக்க உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது
பாதிப்பிற்குள்ளாகும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி நிவாரண முகாம்களில் தங்க வைத்திடவும் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை உயரம்-120.2 அடி, கொள்ளளவு- 93.79 டி.எம்.சி, வினாடிக்கு 1,30,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து-வினாடிக்கு 1,35,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஒலிப்பெருக்கிகள் மற்றும் தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 359 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு 4 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஆங்காங்கே 13 மற்றும் 14-ந்தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார். #MinisterUdayakumar #Cauveryflood
கர்நாடாக மாநிலத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதையடுத்து டெல்டா மாவட்ட விவசாயிகளின் நீராதாரமாக திகழும் மேட்டூர் அணை கடந்த 23-ந்தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது.
இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. அணையில் இருந்து சுமார் 75 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்ளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் சேலம் மாவட்டம் செக்கானூர் கதவணை வழியாக நெருஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சி கோட்டை வழியாக பவானி, ஈரோடு கருங்கல் பாளையம் வழியாக நாமக்கல் மாவட்டம் சோழசிராமணி சென்றடைந்தது.
பின்னர் பரமத்திவேலூர் வழியாக சென்று கரூர் அருகேயுள்ள மேட்டுக்கட்டளை என்னுமிடத்தில் காவிரியுடன் கலக்கிறது. கரூர் அருகே ஸ்ரீராமசமுத்திரம், மாயனூர், முசிறி, குளித்தலை, வாத்தலை, முக்கொம்பு (காவிரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது), ஜீயபுரம், முத்தரசநல்லூர், கம்பரசம் பேட்டை (தடுப்பணை) வழியாக காவிரி ஆற்றில் பாய்கிறது.
அங்கிருந்து அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம் வழியாக கல்லணையை சென்றடைகிறது. கல்லணையில் காவிரி ஆறு நான்காக பிரிகிறது. அதாவது கல்லணை கால்வாய், காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் என பிரிந்து பரந்து விரிந்து செல்கிறது. தொடர்ந்து பல்வேறு கிளை வாய்க்கால்களில் பாயும் காவிரி ஆறு இறுதியில் நாகை மாவட்டம் பூம்புகார் அருகே கடலில் கலக்கிறது.
தமிழகத்தின் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுச்சேரியின் காரைக்கால் பகுதி ஆகியவை காவிரி டெல்டாவை சேர்ந்தவை ஆகும்.
கடந்த சில ஆண்டுகளாக போதிய பருவமழை பெய்யாததாலும், காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததாலும் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. முப்போகம் விளைவித்த டெல்டாவில் ஒருபோக சாகுபடி கூட செய்ய முடியாமல் தவித்த விவசாயிகள் வாழ்வாதாரம் பாதித்து தற்கொலையும் செய்து கொண்டனர்.
அவ்வாறான சூழலில் தற்போது காவிரியில் பெருக்கெடுத்து வரும் தண்ணீரால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவிரியில் கரைபுரண்டு வரும் தண்ணீரை ஆங்காங்கே விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மலர்கள் தூவியும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள்.
ஆடிப்பெருக்கு வருகிற 3-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தற்போதே காவிரி ஆற்றில் ஏராளமானோர் திரண்டு வந்து காவிரி தாய்க்கு பூஜை பொருட்களை வைத்து ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தி வரவேற்று வருகிறார்கள்.
இதற்கிடையே கொள்ளிடம் ஆற்றில் கரைபுரளும் வெள்ள நீரால் கரையோரத்தில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றில் செல்லும் தண்ணீர் நேராக கடலில் சென்று கலக்கிறது. கடந்த சில தினங்களாக கொள்ளிடத்தில் திறக்கப்படும் 40 ஆயிரம் கனஅடிக்கும் மேலான தண்ணீரால் தினமும் கடலில் 5 டி. எம்.சி. தண்ணீர் வரை கலந்து வருகிறது.
கடந்த 22-ந்தேதி தஞ்சை மாவட்டம் கல்லணையை காவிரி தண்ணீர் அடைந்ததும் அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆறுகளில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
அந்த தண்ணீர் நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தை சென்றடைந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, ஆலங்குடி, அறந்தாங்கி, மணமேல்குடி ஆகிய 4 தாலுகா பகுதிகளிலும் காவிரி நீரை நம்பி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்ட கடைமடை பகுதிக்கு இன்று காலை 8 மணியளவில் காவிரி தண்ணீர் வந்தது. நாகுடியை அடுத்த இடையன் கொல்லை நீர்த்தேக்கத்திற்கு கல்லணை கால்வாயில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கரைபுரண்டு வந்தது. அப்போது அங்கு கூடியிருந்த விவசாயிகள் மலர்கள் தூவி தண்ணீரை வரவேற்றனர்.
இந்த தண்ணீர் மூலம் 160 ஏரிகள் நிறைந்து சுமார் 28 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். எனவே இந்த ஆண்டு தொடர்ந்து 2 ஆயிரம் கனஅடி வரை இப்பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டால் பல ஆண்டுகளுக்கு பிறகு முப்போகம் சாகுபடி செய்ய முடியும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் கலந்து அரியலூர் மாவட்டம் திருமானூர், தா.பழுர் வழியாக ஜெயங்கொண்டம் அருகேயுள்ள அணைக்கரை கீழணையை சென்றடைந்தது. அணைக்கரை கொள்ளிடம் ஆற்று கரையோரங்களில் ஏராளமானோர் குடிசை வீடுகள் அமைத்து தங்கியுள்ளனர். ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் குடிசை வீடுகள் மற்றும் கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டது.
இதையடுத்து பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைக்கரை கீழணையில் இருந்து உடனடியாக தண்ணீரை திறந்து விட்டனர். அணைக்கரை கீழ ணையில் தண்ணீர் நிரம்பியதும், அமைச்சர் மற்றும் அரியலூர், நாகப்பட்டினம், கடலூர், தஞ்சை மாவட்ட கலெக்டர்கள் பாசனத்திற்காக தண்ணீரை திறந்து விட இருந்தனர். ஆனால் வெள்ள அபாயம் ஏற்பட்டதால், நேற்றிரவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் சுமார் 30ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட்டனர்.
அங்கிருந்து வடவாறு வாய்க்கால், வடக்கு ராஜன் கால்வாய், தெற்கு ராஜன் கால்வாய் ஆகிய வாய்க்கால்களில் 400, 300 மற்றும் 1500கன அடிவீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கரை கீழணையில் இருந்து வடவாற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கடலூர், காட்டு மன்னார்கோவில் வழியாக சென்னை வீராணம் ஏரியை சென்றடைகிறது.
அணைக்கரை கீழணை தண்ணீர் மூலம் கடலூர், நாகை மாவட்டத்தில் சுமார் 67 ஆயிரத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதும் தண்ணீர் எப்போதும் வரும் என்று கடலூர், நாகை மாவட்ட விவசாயிகள் காத்திருந்தனர். அணைக்கரைக்கு தண்ணீர் வந்ததும் அதன்பிறகு விவசாய பணிகளை தொடங்க இருந்தனர்.
இந்தநிலையில் விவசாயிகள் யாரும் எதிர்பாராத வகையில் நேற்றிரவே அணைக்கரை கீழணையில் முழுவதும் தண்ணீர் நிரம்பி, அங்கிருந்து வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டதை இன்று காலைதான் விவசாயிகள் அறிந்தனர். இதனால் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர்.
மேலும் உடனடியாக விவசாய பணிகளையும் தொடங்கினர். தற்போது திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் சம்பா சாகுபடிக்கு மிகவும் கைக்கொடுக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்