search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம சபை கூட்டம்"

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். #DMK #MKStalin #JayalalithaaDeathProbe
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம்  ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலகூட்டுடன் காடு கிராமத்தில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொது மக்களிடம் குறைகள் கேட்டார்.

    அப்போது அங்கு திரண்டிருந்த பெண்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி இல்லை, சாலை வசதிகள் செய்யப்படவில்லை. ரே‌ஷன் கடைகளில் முறையாக பொருட்கள் வழங்கப்படவில்லை. தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. பேருந்துகள் முறையாக இயக்கப்படவில்லை என அடுக்கடுக்கான புகார்களை கூறினர். அவற்றை மு.க.ஸ்டாலின் குறிப்பெடுத்து கொண்டார்.

    மேலும் அங்கு பங்கேற்ற பெண்கள் வங்கியில் கடன் கேட்டால் அலைக்கழிப்பதாகவும் குற்றம் சாட்டினார்கள். ஏராளமான பெண்கள் மு.க.ஸ்டாலினிடம் குறைகளை எடுத்து கூறினர்.

    தி.மு.க. சார்பில் எல்லா மாவட்டங்களிலும் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாநில நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் இதில் பங்கேற்று வருகிறார்கள். நான் கலந்து கொள்ளும் 20-வது கூட்டம் இதுவாகும். இங்குள்ள பெரும்பாலான மக்கள் குடிநீர் வசதி, ரே‌ஷன் கடை பிரச்சனை, சாலை வசதிகள் குறித்து புகார் கூறினார்கள். இதற்கெல்லாம் காரணம் உள்ளாட்சி நிர்வாகம் இல்லாதது தான். உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பட்டிருந்தால் இந்த குறைகள் உடனடியாக பூர்த்தி செய்யப்பட்டிருக்கும்.

    உள்ளாட்சி நிர்வாகம் அமையாததால் அரசின் திட்டப்பணிகள் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். இந்த ஆட்சி உள்ளாட்சி தேர்தலை நடத்த விரும்பவில்லை. தி.மு.க. ஆட்சியில் மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்பட்டன. தி.மு.க. மீது நீங்கள் நம்பிக்கை வைத்துள்ளீர்கள்.

    இந்த கிராமத்தில் நடந்த கூட்டத்தில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பங்கேற்றுள்ளீர்கள். உங்கள் நம்பிக்கை எனக்கு புரிகிறது. அதற்கேற்றார் போல் நாங்கள் செயல்படுவோம். உங்களது குறைகளை நிறைவேற்ற மக்கள் நம்பிக்கைக்கு ஏற்ப மீண்டும் தி.மு.க. ஆட்சி அமையும்.

    இதைத்தொடர்ந்து முதல் வேலையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் முந்தைய தி.மு.க. ஆட்சியை போல் சுழல் நிதி வழங்கப்படும். தற்போதைய ஆட்சியில் கட்சி பாகுபாடு பார்த்து முதியோர் உதவித் தொகை வழங்கப்படுகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்பு அனைத்து முதியோருக்கும் முறையாக உதவித்தொகை வழங்கப்படும்.


    முதுமை காரணமாக கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவர் முதல்- அமைச்சராக இல்லாத போதும் தினமும் காலை, மாலை என இரு நேரங்களில் அவரது உடல் நிலை பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தினோம். ஆனால் முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது நிலையை பற்றி யாரும் உண்மையை கூறவில்லை.

    ரூ.1 கோடி ரூபாய்க்கு இட்லி சாப்பிட்டதாக தகவல் கூறுகின்றனர். இதுகுறித்து விசாரணை கமி‌ஷன் நடத்தப்பட்டு வருகிறது. அது முறையாக நடக்கவில்லை. முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன என்று நான் சொல்லி மக்களுக்கு தெரிய வேண்டியதில்லை.

    மேலும் கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில் அங்குள்ள ஊழியர் உள்பட 5 பேர் மர்மமாக இறந்துள்ளனர். இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு உண்மை குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

    ஊழல், லஞ்சத்தை தாண்டி கொலை, கொள்ளையிலும் அ.தி.மு.க. அரசுக்கு தொடர்பு உள்ளது. இதற்கு மத்திய அரசு துணை போகிறது. வருகிற பாராளுமன்ற தேர்தல் மற்றும் 21 சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் தகுந்த தீர்ப்பு வழங்கி தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #DMK #MKStalin #JayalalithaaDeathProbe
    கரூர் பகுதியில் திமுக சார்பில் நடத்தப்பட்ட கிராம சபை கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமை வகித்து பேசினார். #DMK #SenthilBalaji
    வேலாயுதம்பாளைம்:

    கரூர் மாவட்டம் நன்செய்புகழுர் ஊராட்சி அரசு பள்ளி, திருக்காடுதுறை ஊராட்சி ஆலமரத்து மேடு பகுதி, கோம்புபாளையம் ஊராட்சி சமுதாயக்கூடம், வேட்டமங்கலம், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் கரூர் மாவட்ட தி.மு.க.சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது,

    கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமை வகித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க. அரசு நடத்தாமல் இருப்பதால் உள்ளாட்சி பகுதிகளில் சாலை வசதி, மின்விளக்கு வசதி, குடிநீர் வசதிகள் சரி செய்யப்படாமல் உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.

    மோடி அரசு வந்தவுடன் பெட்ரோல், டீசல், கியாஸ், கேபிள் டி.வி. விலைகள் அதிக அளவு உயர்ந்துவிட்டது. ஜிஎஸ்டி வரி விதிப்பின் காரணமாக பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எல்லா ஓப்பந்தங்களையும் உறவினருக்கு கொடுத்து மகனையும், மருமகனையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார். தமிழக அரசு அனைத்து வகையிலும் கொள்ளையடித்து வருகிறது. இன்னும் மூன்று மாதத்தில் புதிய ஆட்சி அமையும். அப்போது தமிழகத்திற்கு விடிவு காலம் வரும்.

    வரும் பாராளுமன்ற தேர்தலிலும், 21 சட்டமன்ற தொகுதிக்கு வரும் இடைத்தேர்தலில் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் குறித்து பேசினார். சிலர் மனு கொடுத்தனர். கோரிக்கை மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்கபடும் என்றார்.

    கூட்டத்தில் மாநில விவசாய அணிசெயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் கந்தசாமி மற்றும் மாவட்ட ஊராட்சி ஒன்றிய, பேரூர், கிளை பொருப்பாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். #DMK #SenthilBalaji
    மீஞ்சூர் தெற்கு ஒன்றியத்தின் காட்டூர் கடப்பாக்கம், தத்தை மஞ்சி, அ.ரெட்டிப்பாளையம் வேளூர், காணியம்பாக்கம் ஆகிய 6 ஊராட்சிகளில் தி.மு.க. சார்பில் ஊராட்சி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. #DMK
    சென்னை:

    மீஞ்சூர் தெற்கு ஒன்றியத்தின் காட்டூர் கடப்பாக்கம், தத்தை மஞ்சி, அ.ரெட்டிப்பாளையம் வேளூர், காணியம்பாக்கம் ஆகிய 6 ஊராட்சிகளில் தி.மு.க. சார்பில் ஊராட்சி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு தலைமையிலும் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. வேளச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர் வாகை சந்திரசேகர் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் கே.எஸ்.மணி, முன்னாள் ஒன்றிய செயலாளர் பாஸ்கர், சுந்தரம், மீஞ்சூர் பேரூர் செயலாளர் மோகன்ராஜ், ஒன்றிய அவைத்தலைவர் தன்சிங், மாவட்ட பிரதிநிதிகள் தமிழரசன், பாளையம், முனுசாமி, ஒன்றிய துணை செயலாளர் கஸ்தூரி தசரதன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #DMK

    காரிமங்கலம் அருகே கிராம சபை கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    காரிமங்கலம்:

    தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜிட்டாண்ட அள்ளி கிராமத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    இந்தகூட்டத்திற்கு அதிகாரிகள் யாரும் வராததால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மகேந்திரமங்கலம் போலீசார் அரசு ஊழியர்கள் போராட்டம் நடைபெறுவதால் அதிகாரிகள் கலந்து கொள்ள முடியவில்லை. அடுத்த வாரம் சபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு அதிகாரிகள் கலந்து கொள்வதாக வாக்குறுதி அளித்து சமாதானம் செய்தனர். அதனை தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர். 

    இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    இன்று முதல் 3 நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் கமல்ஹாசன் நாளை கடலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் கலந்துகொள்கிறார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செல்கிறார். அதன்படி, கமல்ஹாசன் இன்று மகளிர் கிறிஸ்தவ கல்லூரி, வை‌ஷ்ணவா கல்லூரி மற்றும் இந்துஸ்தான் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நாளை (26-ந் தேதி) கடலூர் மாவட்டம் குணமங்கலம் மற்றும் அதிசயநத்தத்தில் நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இதையடுத்து தேவனாம்பட்டினம், மந்தாரகுப்பம் மற்றும் விருத்தாசலத்தில் மக்களை கமல்ஹாசன் சந்திக்கிறார்.

    27-ந் தேதி கடலூர் அண்ணா நகரில் நடைபெறும் சான்றோன் விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்கிறார். இதையடுத்து அன்றைய தினமே மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட, பகுதி பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் நடத்துகிறார். தொடர்ந்து மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெறும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் 6-வது மாநில மாநாட்டில் பங்கேற்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #KamalHaasan #MakkalNeedhiMaiam
    தகுதி நீக்க வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக கோட்டையில் ஓ.பன்னீர்செல்வம் யாகம் நடத்தி உள்ளார் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #OPanneerSelvam
    கரூர்:

    தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் மாவட்ட வாரியாக ஒரு சில ஊராட்சி கூட்டங்களில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் பங்கேற்று பொது மக்களிடம் மனுக்கள் பெற்று குறைகேட்டு பேசி வருகிறார்.

    அதன்படி கரூர் மாவட்டத்தில் 2 ஊராட்சி சபை கூட்டங்களில் இன்று அவர் பங்கேற்று பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியம் ஈசநத்தம் ஊராட்சியில் இன்று காலை 9.30 மணிக்கு தி.மு.க. ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகேட்டு மனுக்கள் பெற்றார். பின்னர் அவர் பேசியதாவது:-

    உங்கள் பிரச்சனைகளை, குறைகளை, எண்ணங்களை புரிந்துகொள்ள இந்த கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நடைபெறும் சர்வாதிகார ஆட்சிக்கும், மோடி தலைமையில் நடைபெறும் மத்திய பாசிச, மதவாத ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.

    கோவிலுக்கு வருவது போல் நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். பக்தர்களுக்கு புனித இடம் கோவில் என்றால் எங்களுக்கு கிராமங்கள் தான் புனித ஸ்தலம். இங்கிருந்துதான் அரசியல் தொடங்கி இருக்கிறது. முன்பெல்லாம் குடவோலை முறையில் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இப்போது வாக்குப்பதிவு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

    தற்போது தமிழகம் முழுவதும் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. பிப்ரவரி 17-ந்தேதிக்குள் அனைத்து கூட்டங்களும் முடிக்கப்பட்டு விடும். இந்த ஊராட்சி சபை கூட்டத்தை பார்த்து ஆளுங்கட்சியினர் அதிர்ந்துபோய் உள்ளனர். இதனால் அப்பட்டமாக பொய்களை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

    நான் துணை முதல்வராக இருக்கும்போது கிராமங்களுக்கு செல்லவில்லை என்று கூறுகிறார்கள். நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது 12,617 கிராமங்களுக்கும், நூலகம் கொண்டு வந்தேன். அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ஒவ்வொரு கிராமத்திற்கும் ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கி மேம்படுத்தி வளர்ச்சி பணிகள் இதுவரை செய்யப்பட்டுள்ளது.

    எடப்பாடிக்கு சேலத்தை தவிர வேறு எந்த ஊராவது தெரியுமா? ஜெயலலிதா செல்வாக்கால் ஆட்சி செய்கிறார்கள். அவர்களுக்கு மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி கவலையில்லை. கமி‌ஷன், ஊழல், வசூல் என்ற நிலையில்தான் அவர்கள் உள்ளனர். விரைவில் இந்த ஆட்சி தூக்கி எறியப்படும்.


    தகுதி நீக்க வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக கோட்டையில் ஓ.பன்னீர்செல்வம் யாகம் நடத்தி உள்ளார். இது பற்றி விளக்கம் கேட்டால் யாகம் நடத்தவில்லை, சாமி மட்டுமே கும்பிட்டேன் என்று விளக்கம் அளித்திருக்கிறார். யாகம் நடத்த அது என்ன உங்கள் அப்பன் வீட்டு சொத்தா? மக்களின் வரிப் பணத்தில் உருவான கோட்டையில் ஏன் யாகம் நடத்தினீர்கள்? பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்திற்கும் தேர்தல் வர வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டங்களில் முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, வி.செந்தில்பாலாஜி மற்றும் பலர் கலந்துகொண்டனர். #DMK #MKStalin #OPanneerSelvam
    கிராம சபை கூட்டம் மூலம் மக்கள் பாரத்தை எங்கள் மீது இறக்கி வைத்து விட்டீர்கள். உங்கள் பாரத்தை நாங்கள் சுமப்போம், குறைகளை தீர்ப்போம் என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறினார். #DuraiMurugan #DMK
    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த எலவமலை ஊராட்சி மூலப்பாளையத்தில் தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சரும் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான முத்துசாமி தலைமை தாங்கி பேசினார்.

    கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் மற்றும் முன்னாள் மத்திய மந்திரி தயாநிதிமாறனும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் துரைமுருகன் பேசியதாவது.-

    உங்களையெல்லாம் நேரில் சென்று பார்த்து குறைகளை கேட்டறிய தளபதி ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ளார். எம்.எல்.ஏ.வாக இருப்பவர்கள் மக்களை சந்தித்து குறைகளை கண்டறிந்து தீர்க்க வேண்டும். ஆனால் வரவில்லை. எங்களுக்கு ஓட்டு போட்டாலும் போடா விட்டாலும் உங்களுக்காக உழைக்கின்ற கட்சி தி.மு.க.தான்.

    நீங்கள் கொடுத்த மனுக்களை ஜெராக்ஸ் எடுத்து தலைமை கழகத்துக்கு ஒன்று அனுப்பி வைப்போம். மற்றொன்றை அதிகாரிகளிடம் சென்று கொடுப்போம்.

    10 பேருக்கு கொடுத்து 6 பேருக்கு கிடைத்தால் கூட போதும் என்று நீங்கள் (மக்கள்) பாரத்தை எங்கள் மீது இறக்கி வைத்து விட்டீர்கள். உங்கள் பாரத்தை நாங்கள் சுமப்போம். குறைகளை தீர்ப்போம்.

    இவ்வாறு துரைமுருகன் கூறினார்.

    கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் சதாசிவம் கட்சி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். #DuraiMurugan #DMK

    கிராம சபை கூட்டங்கள் மூலம் ஜனவரி 3-ந்தேதி முதல் மக்களை சந்திப்போம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin
    சென்னை:

    பாராளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால் அதற்கான ஆயத்த பணிகளை தி.மு.க. இன்று தொடங்கியது.

    40 தொகுதிகளில் உள்ள ‘பூத்’ கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்தபிறகு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மீண்டும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. ஜனவரி 3-ந்தேதி தொடங்கி இந்த கூட்டங்கள் நடைபெறும்.

    இந்த கூட்டங்கள் மூலம் நாங்கள் மக்களை சந்தித்து பேச உள்ளோம். தி.மு.க. மட்டுமின்றி தி.மு.க. கூட்டணி கட்சிகளும் இதில் பங்கேற்கும்.

    கடந்த 2016-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சென்று கிராம சபை கூட்டங்களில் பங்கேற்றார். மக்களோடு மக்களாக அமர்ந்து பேசினார்.

    மேலும் அந்தந்த பகுதி பிரச்சனைகளை கேட்டு அறிந்தார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால்தான் தி.மு.க. அதிகப்படியான தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    கிராம சபை கூட்டங்கள் தந்த வெற்றி காரணமாக தற்போது பாராளுமன்ற தேர்தலுக்கும் அதே பாணி பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் மீண்டும் கையில் எடுத்துள்ளார். #DMK #MKStalin
    மொடக்குறிச்சி ஒன்றியத்திற்குள்பட்ட 23 ஊராட்சிகளில் சுதந்திரதினத்தையொட்டி கிராமசபா கூட்டம் நடைபெற்றது.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி ஒன்றியத்திற்குள்பட்ட 23 ஊராட்சிகளில் சுதந்திரதினத்தையொட்டி கிராமசபா கூட்டம் நடைபெற்றது.

    நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கிராமசபா கூட்டத்தில் சாவடிபாளையம்புதூர் பகுதி பொதுமக்கள் குடிநீர், சாலைவசதி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்துதர வேண்டும் கூட்டத்தில் மனு அளித்தனர்.

    அதிகாரிகள் மனு குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விரிவாக பொதுமக்களிடம் எடுத்துக்கூறப்பட்டது.

    இதேபோல், அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற்ற கூட்டத்தில் நியாயவிலைகடைகள் குறித்தும், சுகாதாரம், மின்சாரவசதி, இலவச வீடு கட்டும் திட்டம், குடிநீர் விநியோகம் குறித்து பொதுமக்களின் கருத்துக்கள் பெறப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பப்பட்டது.

    ஆனந்தம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு சிறுகுறு விவசாயிகள் சங்க தலைவர் கே.ஆர். சுதந்திரராசு தலைமையில் விவசாயிகள் கலந்து கொண்டு, மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதி விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க அரசு அனுமதிக்க கூடாது என்று மனு அளித்தனர். அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று உறுதி அளித்தனர்.

    இதேபோல் பல்வேறு மற்ற ஊராட்சிகளிலும் கிராமசபா கூட்டங்கள் நடைபெற்றது.

    அனுப்பப்பட்டு பஞ்சாயத்தை சேர்ந்த பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர். இதனால் கிராம சபை வெறிச்சோடி காணப்பட்டது.
    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட 55 பஞ்சாயத்துக்களில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஒன்றியத்தில் உள்ள அனுப்பப்பட்டு பஞ்சாயத்தை சேர்ந்த பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர். இதனால் கிராம சபை வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்த கிராமத்தில் வீட்டுமனை ஒதுக்கீடு, சாலை சீரமைப்பு, சமுதாயகூடம் ஆகிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர்.

    இதுபற்றி கிராம மக்களிடம் கேட்ட போது எங்கள் ஊராட்சிக்குட்பட்ட வேலப்பாக்கம் அரசு புறம்போக்கு இடத்தில் எங்கள் பகுதியில் வீடு இல்லாதவர்களுக்கு மனை வழங்க வேண்டும், வேறு பகுதியில் உள்ளவர்களுக்கு வழங்க கூடாது.

    உத்தன்டிகன்டிகை-அனுப்பம்பட்டு இடையேயான ஒன்றிய சாலை 10 ஆண்டுகளாக சீரமைக்கவில்லை. பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. சுகாதார நிலையம், சமுதாயக் கூடம் அமைக்க வலுயுறுத்தியும் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    கமல் தத்தெடுத்த அதிகத்தூர் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தகோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    திருவள்ளூர்:

    நடிகர் கமல்ஹாசன் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அதிகத்தூர் கிராமத்தை தத்தெடுத்துள்ளார். அங்கு பல்வேறு வளர்ச்சி பணிகள், நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் கூறும் போது, ‘‘சுதந்திரதினத்தை யொட்டி நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் அனைவரும் கண்டிப்பாக பங்கேற்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’’ என்று கூறி இருந்தார்.

    இந்த நிலையில் அதிகத்தூர் கிராமத்தில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி செயலர் முருகன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பானுமதி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும். சாலையை சீரமைத்தல், தெரு விளக்கு பராமரித்தல், குப்பைகளை அகற்றுதல், சீரான குடிநீர் விநியோகம், கழிவுநீர் அகற்றுதல் அதே போல், பகுதி நேர ரே‌ஷன் கடைக்கு நிரந்தர கடை வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முன்னதாக, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

    இதில் முன்னாள் ஊராட்சி தலைவி சுமதி சிதம்பரநாதன், மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர் அருணாச்சலம், ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணா பிரசாத் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
    சேலம்-சென்னை 8 வழி பசுமை விரைவு சாலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாத கிராம சபை கூட்டங்களில் கோரிக்கையை நிறைவேற்ற கோரி அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
    திருவண்ணாமலை:

    சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை சாலை திருவண்ணாமலை மாவட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக அமைக்கப்படவுள்ளது.

    இந்த திட்டத்துக்காக விவசாய நிலங்களில் குறியீடு கல் பதிக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், போலீஸ் பாதுகாப்புடன் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு நில அளவீடு பணிகளை முடித்துவிட்டனர்.

    இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இதில், பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்படும் கிராமங்களில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற பொதுமக்களும் விவசாய சங்கங்களும் முடிவு செய்திருந்தனர்.

    ஆனால், பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் ஏதும் நிறைவேற்றக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. பிரச்சினை ஏற்படக்கூடிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

    செங்கம் அடுத்த நரசிங்கநல்லூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிவிட்டு கூட்டத்தை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதற்கு மறுப்பு தெரிவித்த அதிகாரிகள், கோரிக்கை தொடர்பாக மனுவாக அளித்தால் கலெக்டரிடம் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    இதற்கு, எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் தீர்மானம் நிறைவேற்றிய பிறகே கூட்டத்தை நடத்த வேண்டும் என்று முழக்கமிட்டனர். நீண்ட நேரமாகியும் பொதுமக்கள் சமாதானம் அடையாததால் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    சி.நம்மியந்தல் கிராமத்தில் கிராம சபைக் கூட்டத்துக்கு வந்த அதிகாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள், பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று உறுதியாக தெரிவித்தனர். இதனை ஏற்காத அதிகாரிகள் பொதுமக்களிடம் மனுவை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டனர். 3 மணி நேரம் பொதுமக்கள் அதிகாரிகளை சிறை வைத்திருந்தனர்.

    நரசிங்கநல்லூர், தொரப்பாடி, சி.நம்மியந்தல், ஓரந்தவாடி, அந்தனூர், நயம்பாடி, சிறுகலாம் பாடி, மேல்ராவந்தவாடி உள்ளிட்ட கிராமங்களில் பொது மக்களிடம் இருந்து மனுக்களை மட்டும் அதிகாரிகள் வாங்கி சென்றனர்.

    மேல்வணக்கம்பாடி, பெலாத்தூர், தென்னகரம், தென்பள்ளிப்பட்டு, ராந்தம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம சபைக் கூட்டங்களில் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துவிட்டு சென்றுள்ளனர். அதன் நகலையும் வழங்குவதாக கூறியுள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது.
    ×