search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூத்துக்குடி ஸ்டெர்லைட்"

    • தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது.
    • போலீசார் தனித்துவிடப்பட்டதாகவும், தாக்கப்பட்டதாகவும் தேசிய மனித உரிமை ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதில் 13 பேர் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது.

    இதனை எதிர்த்த வழக்கில், துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்ற காலத்தில் பணியாற்றிய போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களை கணக்கெடுக்கும்படி, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த உத்தரவுக்கு தடை கேட்டு தூத்துக்குடி நில எடுப்பு தாசில்தார் சந்திரன், சிப்காட் டாஸ்மாக் டெப்போ மேலாளர் கண்ணன், தூத்துக்குடி மண்டல துணை தாசில்தார் சேகர் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

    இந்த மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.

    அப்போது போலீஸ் அதிகாரிகள் சார்பில் வக்கீல் பி.பாலாஜியுடன் மூத்த வக்கீல் கபில்சிபல் ஆஜராகி, 'ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டதால் இந்த விவகாரம் பந்தாடப்படுகிறது. இதை அனுமதிக்க முடியாது.

    போலீசார் தனித்துவிடப்பட்டதாகவும், தாக்கப்பட்டதாகவும் தேசிய மனித உரிமை ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசாரை விட போராட்டக்காரர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது' என வாதிட்டார்.

    வாதங்களை பதிவுகளை கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, 'துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற காலத்தில் பணியாற்றிய போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களை கணக்கிடுமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

    மேலும் மேல்முறையீட்டு மனுக்களுக்கு 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க தமிழ்நாடு அரசு மற்றும் எதிர்மனுதாரர்களான மனித உரிமை ஆர்வலர் என்ட்ரி டிபேன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த அர்ஜூனன் உள்ளிடடோருக்கு உத்தரவிட்டது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #SterlitePlant #NGT #SC
    புதுடெல்லி:

    தமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை, சில நிபந்தனைகளுடன் மீண்டும் திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனையடுத்து ஆலையைத் திறக்கவும், மின்சாரம் வழங்கவும் அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் தமிழக அரசுக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை.

    இதையடுத்து ஆலையைத் திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டும், ஆலையை திறக்க உத்தரவிடுவதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்து வருவதாக வேதாந்தா நிறுவனம் கூறியிருந்தது.

    இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வேதாந்தா நிறுவனம் சார்பில் தங்கள் தரப்பு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.



    இதையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

    மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆலை பராமரிப்பு மற்றும் நிர்வாக ரீதியிலான பணிகளுக்கு மட்டுமே ஆலையை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. #SterlitePlant #NGT #SC
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு வழக்கை விசாரித்த சென்னை சி.பி.ஐ. அதிகாரி சரவணன் மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளார். #Thoothukudifiring
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள நாகேஸ்வரராவ் நாடு முழுவதும் சி.பி.ஐ. அதிகாரிகளை இடமாற்றம் செய்து அதிரடி நடவடிக்கையை எடுத்து உள்ளார்.

    முக்கிய நகரங்களில் பணியாற்றி வந்த 20 உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னையில் சி.பி.ஐ. உயர் அதிகாரிகளில் ஒருவராக சரவணன் இருந்தார். இவர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் அவர் மும்பை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளார். மும்பையில் வங்கி முறைகேடுகள் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டு இருக்கிறார்.

    நிரவ்மோடி செய்துள்ள வங்கி மோசடியை விசாரிக்கும் பிரிவுக்கு தற்போது அவர் சென்றுள்ளார்.

    சரவணன் மும்பைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட போதிலும் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விவகாரத்தை தொடர்ந்து விசாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மும்பையில் உள்ள பணிகளை பார்த்துக்கொண்டே அவர் கூடுதலாக இந்த பணியையும் செய்வார் என்று தெரிய வந்துள்ளது.

    2ஜி ஊழல் வழக்கை விசாரித்து வந்த டெல்லி சி.பி.ஐ. அதிகாரி விவேக் பிரியதர்சி சண்டிகருக்கு மாற்றப்பட்டுள்ளார். மற்றொரு சி.பி.ஐ. அதிகாரி கவுதமிடம் உள்ள பொறுப்புகள் குறைக்கப்பட்டுள்ளன.

    இதற்கிடையே நாகேஸ்வர ராவ் சி.பி.ஐ.யின் இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து பிரபல வக்கீல் பிரசாந்த் பூ‌ஷன் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதை விசாரிக்கும் பொறுப்பில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகினார்.

    இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி சிக்ரி தலைமையிலான பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. நாளை அந்த பெஞ்சில் நாகேஸ்வர ராவுக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற உள்ளது. #Thoothukudifiring
     
    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியதால் தூத்துக்குடி முக்கிய பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். #sterliteissue #supremecourt

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் குடிநீர், காற்று மாசு ஏற்படுவதாக கூறி பல்வேறு கிராம மக்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடந்தது. 100-வது நாள் போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 14 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தினர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது.

    பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் தூத்துக்குடி பேராசிரியை பாத்திமாபாபு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு மதுரை ஐகோர்ட்டு தற்போதைய நிலையே தொடரவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

    இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகமும் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த அனைத்து மனுக்களும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரோகின்டன் பாலி நார்மன், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது வைகோவும் ஆஜராகி தனது மேல்முறையீட்டு மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டார். இந்த அனைத்து மனுக்களையும் விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை இல்லை என்று நேற்று தீர்ப்பு கூறினார்கள்.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள தெற்கு வீரபாண்டியபுரம், குமரெட்டியாபுரம், பண்டாரபுரம், மீளவிட்டான் மற்றும் தூத்துக்குடி கலெக்டர் அலுவலக பகுதிகளில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.

    ஏற்கனவே தூத்துக்குடியில் பசுபதிபாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் முக்கிய பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக கடந்த 15.12.18 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவு வந்தவுடன், முதல்அமைச்சர் இது இறுதி உத்தரவு அல்ல, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அறிவித்தார். அதன்படி தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவில் உள்ள அனைத்து விவரங்களையும் ஆய்வு செய்து, சட்டப்படி மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டு உள்ளது. அதன்பேரில் உச்சநீதிமன்றம் எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தர விட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் உடனே ஆலையை திறக்க எந்த இடத்திலும் கூறவில்லை. உச்சநீதிமன்றத்தில் சட்ட வல்லுனர்கள் மூலம் வழக்கு நடத்தப்படும்.

    இந்த வழக்கு விசாரணை முடியும் வரை இதே நிலை(ஸ்டேட்டஸ் கோ) நீடிக்கும். உடனடியாக ஆலையை திறப்பதற்கான எந்த உத்தரவும் உச்ச நீதிமன்றத்தில் இருந்து வரவில்லை. மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தாலும், அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை நடக்கிறது.

    தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. அந்த நிபந்தனைகளை ஆலை நிர்வாகம் சரி செய்த பிறகு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு மாசுகட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்யும். தற்போது எந்தவிதமான முடிவும் எடுக்கவில்லை. நிபந்தனைகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் நிறைவேற்றியதாகவும் தெரியவில்லை.

    நாங்கள் சட்டரீதியாக தொடர்ந்து போராடி வருகிறோம். ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்பது அரசின் முடிவு ஆகும். சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார். #sterliteissue #supremecourt

    தூத்துக்குடியில் பாட்டாளி மக்கள் கட்சி மாணவர் சங்க செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. #pmk
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் பாட்டாளி மக்கள் கட்சி மாணவர் சங்க செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. மாநில மாணவர் சங்க துணை செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். மத்திய மாவட்ட மாணவர் சங்க செயலாளர் வெற்றி, தலைவர் ராஜதுரை முன்னிலை வகித்தனர். மாநில மாணவர் சங்க துணைத் தலைவர் பிரேம்குமார் வரவேற்றார்.

    மாநில மாணவர் சங்க செயலாளர் செஞ்சி ரவி, மத்திய மாவட்ட தலைவர்  ஜெயக்குமார், செயலாளர் சின்னத்துரை, வடக்கு மாவட்ட தலைவர் கருப்பசாமி, செயலாளர் வினோத் குமார், மாவட்ட அமைப்புச் செயலாளர் விசுவநாதன்,  சிவபெருமாள், காளிராஜ், மத்திய மாவட்ட பொருளாளர் சந்தனலெட்சுமி சிறப்புரையாற்றினார்கள். சுஜின் நன்றி கூறினார். 

    கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியில் மாணவர்களை அதிகளவில் சேர்ப்பது, கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் பகுதியில் பருவகால மாற்றத்தின் காரணமாக பூச்சி தாக்குதலால் அதிகமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. #Sterliteplant #tuticorincollectoroffice

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22-ந்தேதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு ஆணை வெளியிட்டது.

    தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதனிடையே ஆலை மூடப்பட்டதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான பசுமை தீர்ப்பாய குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தியது.

    இதன் தொடர்ச்சியாக ஆலையை சில நிபந்தனைகளுடன் இயக்கலாம் என்று பசுமை தீர்ப்பாயம் கூறியது. இதற்கு அரசியல் கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சில அமைப்புகள் பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி ஆலையை திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளன.

    இதனிடையே தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் ஏராளமானோர் மனு கொடுக்க வந்திருந்தனர். இருதரப்பினரும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மோதல் ஏதும் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இன்று 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டி ருந்தனர். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு சார்பாக வக்கீல் கிருஷ்ண மூர்த்தி, பிரபு, வேல்ராஜ் ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

    அப்போது அவர்கள் கூறும் போது, ‘தூத்துக் குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக போலீசார் செயல்படுகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையை அகற்றும் வரை அறவழியில் போராடுவோம். தமிழக அரசு உடனடியாக சட்ட மன்றத்தை கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என்றார்கள். தொடர்ந்து அவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பியபடி ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

    தூத்துக்குடி அருகே உள்ள பண்டாரம்பட்டி கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மனு கொடுத்தனர். அப்போது அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்று கூறி முகத்தில் கவசம் அணிந்து வந்தார்கள்.

    பின்னர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். அப்போது அங்கு திரண்டு நின்ற பெண்கள் கூறுகையில், ‘பசுமை தீர்ப்பாய உத்தரவு பொதுமக்களுக்கு எதிராக அமைந்துள்ளது. அரசு வேதாந்தா குழுமத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. மக்களை பாதிக்கும் இந்த ஆலையை உடனடியாக அகற்ற வேண்டும்’ என்றனர்.

    போராட்டக்குழுவை சேர்ந்த வக்கீல் அரிராகவன் தலைமையில் பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தார்கள். அப்போது அவர்கள் கூறுகையில், ‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், பசுமை தீர்ப்பாயத்தை கண்டித்தும் வருகிற 5-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். இதற்கு அனுமதி கிடைக்காத பட்சத்தில் உயர்நீதிமன்ற அனுமதியை பெற்று உண்ணாவிரதம் நடத்தப்படும்’ என்றனர். #Sterliteplant #tuticorincollectoroffice

    ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பட்டதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #NGTSterliteCommittee #SupremeCourt #TamilNaduReviewPetition
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிரச்சனைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.

    பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்தும், பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால், தமிழக அரசின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது.


    தீர்ப்பாயம் அமைத்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில்தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குழு அறிக்கை அளித்தால்தான் ஆலை மூடப்படும் என்றும் தெரிவித்தது.

    இந்த தீர்ப்பு தமிழக அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, இவ்வழக்கில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #NGTSterliteCommittee #SupremeCourt #TamilNaduReviewPetition
    தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 173 வழக்குகளையும் ஒரே வழக்காக விசாரிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #ThoothukudiSterlite #SterliteProtest #SterliteCases
    மதுரை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த போராட்டம் மற்றும் வன்முறை தொடர்பாக தூத்துக்குடி சிப்காட், தூத்துக்குடி வடக்கு, தெற்கு உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    இந்த வழக்குகள் அனைத்தையும் ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும், துப்பாக்கி சூடு நடத்திய அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி மதுரை ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளன.



    இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், துப்பாக்கி சூடு மற்றும் போராட்டம் தொடர்பாக மே 22ம் தேதி பதிவு செய்யப்பட்ட 173 வழக்குகளையும் ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தனர். 173 வழக்குகளையும் குற்ற வழக்கு எண் 191-ன் கீழ் கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவின்படி குற்ற வழக்கு எண் 191-ஐ தவிர்த்து மற்ற வழக்குகளில் யாரையும் போலீசார் கைது செய்யக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #ThoothukudiSterlite #SterliteProtest #SterliteCases

    தூத்துக்குடியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் இன்று 3-வது நாளாக சோதனை நடத்தினர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாயினர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் தலைமையில் 5 வழக்குகளுக்கும் தலா ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இவர்கள் வழக்கு தொடர்பான ஆவணங்களை திரட்டி வருகிறார்கள். அதே நேரத்தில் துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் விவரங்களை பெறவும், துப்பாக்கிகளை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பவும் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. ஆனால் இதுவரை துப்பாக்கிகள் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கலவரப்பகுதிகளில் ஆய்வு நடத்துவதற்காக சென்னையில் இருந்து தடயவியல் துறை கூடுதல் இயக்குனர் திருநாவுக்கரசர் தலைமையில் உதவி இயக்குனர்கள் விசாலாட்சி, மணிசேகர், வல்லுனர் சண்முகசுந்தரம், வெடிகுண்டு நிபுணர்கள் வாசுதேவன், பிள்ளை ஆகியோர் நேற்று முன்தினம் தூத்துக்குடிக்கு வந்தனர். 100-க்கும் மேற்பட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிரடி சோதனையை தொடங்கினர்.

    சி.பி.சி.ஐ.டி. போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் இன்று 3-வது நாளாக சோதனை நடத்தினர். துப்பாக்கி சூடு நடைபெற்ற கலெக்டர் அலுவலக பகுதியில் ஒரு குழுவினரும், திரேஸ்புரம், அண்ணாநகர் பகுதியில் மற்றொரு குழுவினரும், இதர பகுதியில் வேறு குழுவினரும் சோதனை நடத்தி வருகிறார்கள். மற்றொரு குழுவினர் ஸ்டெர்லைட் ஊழியர்கள் குடியிருப்பில் கார்கள் தீவைத்து எரிக்கப்பட்ட பகுதியில் ஆய்வு நடத்தினர். அதன்பிறகு கலெக்டர் அலுவலகம் முன்பு மெயின் ரோட்டிலும், இந்திய உணவுக்கழக குடோன் ரவுண்டானா பகுதியிலும் சோதனை நடத்தினர்.

    ஏற்கனவே நேற்று நடைபெற்ற சோதனையில் தூத்துக்குடி அண்ணாநகர் 6-வது தெருவில் ஒரு வீட்டின் மாடியில் உள்ள சுவரில் ஒரு தோட்டா துளைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அருகிலேயே இன்னொரு தோட்டாவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தோட்டாக்களை இன்று போலீசார் சுவரில் இருந்து எடுத்து ஆய்வுக்கு அனுப்பினார்கள். இதுவரை நடைபெற்ற ஆய்வில் துப்பாக்கி சூடு தொடர்பான முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளதாக சி.பி.சி.ஐ.டி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    நீலகிரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஊட்டி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்தும், அதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நீலகிரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சகாதேவன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் மோகன்குமார், ஊட்டி சட்டமன்ற தொகுதி செயலாளர் கட்டாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். 

    தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஊட்டி மலைப்பாதையில் நடந்த அரசு பஸ் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். ஊட்டி எச்.பி.எப். தொழிற்சாலை வளாகத்தில் அரசு மருத்துவ கல்லூரி அல்லது நவீன வசதியுடன் கூடிய மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதில் மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரகாஷ், ஊட்டி நகர செயலாளர் இஸ்மாயில் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட நடிகை நிலானி குன்னூரில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். #SterliteProtest
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடியில் நடத்தப்பட்ட பேரணியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தொலைக்காட்சி நடிகை நிலானி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.

    போலீஸ் உடை அணிந்து நிலானி அந்த வீடியோவில் பேசும் போது, இது தற்செயலாக நடந்தது இல்லை. திட்டமிட்ட படுகொலை. இறந்தவர்களில் 8 பேர் போராட்டத்திற்காக முன்நின்றவர்கள். அவர்களை திட்டமிட்டே கொன்றுள்ளனர். என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார். இதையடுத்து நடிகை நிலானி மீது 4 பிரிவுகளில் தியாகராய நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 



    இந்த நிலையில், நிலானி இன்று குன்னூரில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். #SterliteProtest #Nilani

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காரணமான கலெக்டர், அதிகாரிகளை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். #sitaramyechury #thoothukudiincident

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேர் குடும்பங்களை சந்தித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து நலம் விசாரித்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உரிய விதிகளை பின் பற்றாமல் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற போது மாவட்ட கலெக்டர் அங்கு இல்லை. அப்படியென்றால் துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி கொடுத்தது யார்? ஸ்டெர்லைட் ஆலையால் நிலம், நீர், பெருமளவு மாசு பட்டு உள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு காரணமான கலெக்டர், அதிகாரிகளை சஸ்பெண்டு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #sitaramyechury #thoothukudiincident

    ×