என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பட்டாசு விற்பனை"
இந்தியாவின் 80 சதவீத பட்டாசு தேவையை சிவகாசி பட்டாசு ஆலைகள் பூர்த்தி செய்து வருகிறது. பட்டாசு உற்பத்தி மையமாக விளங்கும் இங்கு 800-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகின்றன.
இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மாசு அடைவதாக கூறி பட்டாசு உற்பத்திக்கு தொடர்ந்து கடுமையான தட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையன்று குறிப்பிட்ட நேரத்தில் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் காரணமாக பட்டாசு விற்பனை பெருமளவில் சரிந்தது. மேலும் பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் பட்டாசு தொழிலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
உச்சநீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும், பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி சிவகாசியில் கடந்த ஒரு மாதமாக பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம், தொழிலாளர்கள் சங்கம், அச்சக உரிமையாளர்கள் சங்கம், சிறுவணிகர்கள் சங்கம் என அனைத்து தரப்பினரும் இன்று (21-ந்தேதி) கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி இன்று சிவகாசி மற்றும் திருத்தங்கல், வெம்பக்கோட்டை, தாயில் பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. சிவகாசியின் முக்கிய வீதிகள் வெறிச்சோடியது.
மார்க்கெட், பஸ் நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
கடையடைப்பு போராட்டம் காரணமாக சிவகாசி, திருத்தங்கல், வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. #FireCrackers
தமிழ்நாடு பட்டாசு வியாபாரிகள் கூட்டமைப்பின் மாநிலத்தலைவர் ராஜாசந்திரசேகரன், பொதுச்செயலாளர் இளங்கோவன், பொருளாளர் கந்தசாமிராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு நேரக் கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும் சரவெடி தயாரிக்கவும், பேரியம் பச்சை உப்புகள் பயன்படுத்தவும் தடை விதித்தது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவால் 1070 பட்டாசு தொழிற் சாலைகளில் பணியாற்றும் 8 லட்சம் தொழிலாளர்கள் கடந்த 12-ந்தேதி முதல் வேலையில்லாமல் பரிதவித்து வருகின்றனர்.
பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்ததின் காரணமாக பட்டாசு விலையும் 40 சதவீதம் குறைந்து வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தியும், பட்டாசு தொழில்களுக்கான தடைகளை நீக்கக்கோரியும் வருகிற 26-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெறுகிறது.
இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பட்டாசு வியாபாரிகள் கடையடைப்பு செய்து போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
போராட்டத்தின் முடிவில் கோரிக்கையை வலியுறுத்தி முதல்-அமைச்சரிடம் மனு கொடுக்கப்படும்.
மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள், சுப்ரீம் கோர்ட் விதித்த கடுமையான நிபந்தனைகளின் எதிரொலியாக காலவரையின்றி மூடப்படுவதாக அறிவித்துள்ளது. இதனால், சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ள அவலம் மிகுந்த வேதனை அளிக்கக்கூடிய செய்தி.
குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசி நகரம் முடங்கியே போகும் நிலை ஏற்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்கவும், விற்பனை செய்யவும் தடை இல்லை எனக் கூறிவிட்டு, பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதால் அவற்றை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லாதது என்று பட்டாசு ஆலைகளின் கூட்டமைப்பான டான்பாமா தெரிவித்து உள்ளது.
மாண்புமிகு அம்மா அவர்களின் மறைவுக்குப் பின்னர், தமிழகம் தொடர்பான அனைத்து வழக்குகளிலும், மாநில நலன் கருதி உரிய வாதங்களை பழனிசாமி அரசு முன்னெடுக்காததால் பெரும் பாதிப்பை தமிழகம் தொடர்ந்து சந்தித்து வருகிறது.
தமிழக கலாச்சார அடையாளங்களில் ஒன்றாகவும், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகவும் திகழும் பட்டாசு தொழிலை பாதுகாக்க உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி அவர்களுக்கான உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TTVDhinakaran
த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தீபாவளி பண்டிகைக்கு- பட்டாசு வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தற்போதைய தீர்ப்பில் உள்ள விதிமுறைகள் மாற்றப்பட்டு கடந்த காலங்களில் இருந்த நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும் அல்லது காலை, மாலை ஆகிய நேரங்களில் கூடுதலான நேரங்களில் பட்டாசு வெடிப்பதற்காக விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
திடீரென்று புதிய விதிமுறைகளை திணித்து, மக்கள் காலம் காலமாக வழக்கத்தில் கொண்டுள்ள கலாச்சாரத்தை மாற்ற நினைப்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
மாசுக்கட்டுப்பாடு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, படிப்படியாக விதிமுறைகளை கொண்டு வந்து, மக்களின் மனநிலைக்கு ஏற்ப இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டுமே தவிர திடீரென்று கட்டாயப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட முன்வரக் கூடாது.
தமிழக அரசும் பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பான அறிவிப்பில் தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறிவிட்டது.
இச்சூழலில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து பொது மக்கள் பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை அதிகப்படுத்திட வேண்டும். குறிப்பாக பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரின் நலன் காக்கவும், பண்டிகையின் கலாச்சாரத்தை பாதுகாக்கவும், பொது மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கவும் உச்சநீதிமன்றம் முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார். #TamilMaanilaCongress #GKVasan
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பட்டாசு தயாரிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்தபோதே, தமிழகத்தில் பட்டாசு தொழிலை நம்பி வாழும் பல லட்சம் மக்களின் நலனை மனதில்கொண்டு வாதாட தமிழக அரசு தவறிவிட்டது. அதனால்தான் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று தீர்ப்பு வந்தது.
அந்த வழக்கே டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும். தமிழகத்தில் அதை அமல்படுத்த அவசியமில்லை என்ற கருத்தையும் வலியுறுத்த தமிழக அரசு தவறிவிட்டது. இதன்மூலம் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை தமிழக அரசு கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
இரவு 8 மணி முதல் 10 மணி வரை என்ற கட்டுப்பாட்டில் திருத்தம் கோரி செய்த மனுவிலும் தமிழக அரசு மக்களின் உணர்வுகளை, அவர்களின் சவுகரியத்தை புரிந்துக்கொள்ளவில்லை. அதனால்தான் அதிகாலை 4.30 முதல் 6.30 வரை கூடுதல் நேரம் வேண்டும் என்று அர்த்தமற்ற வாதத்தை முன்வைத்திருக்கிறார்கள்.
குழந்தைகளும் இளைஞர்களும் பெண்களும் ஆர்வமுடன் வெடிக்கும் பட்டாசை, அந்த அதிகாலை நேரத்தில் எந்தளவுக்கு பாதுகாப்பாகவும் உற்சாகமாகவும் வெடிக்க முடியும்..? இந்த புரிதல் கூட இல்லாத மாநில அரசின் மனநிலை வேதனை அளிக்கிறது.
இனிமேலாவது தமிழக மக்களின் உணர்வுகளையும், பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில்கொண்டு, பாதுகாப்பான, கட்டுப்பாடற்ற கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு வழிவகுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TTVDhinakaran
தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின் போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு சுவாச கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதாகவும், எனவே டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி 3 சிறுவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது.
தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு அனுமதி வழங்கி அப்போது நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள்
இந்த தீர்ப்பில் திருத்தம் கோரி தமிழக அரசின் சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு வக்கீல் பா.வினோத் கன்னா தாக்கல் செய்த அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த 23-ந் தேதியன்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் அனைத்து பண்டிகைகளின் போதும் இரவு 8 மணியில் இருந்து 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
இந்தியா பல்வேறு கலாசாரங்கள் அடங்கிய கூட்டாட்சியின் அடிப்படையில் இயங்கும் நாடு ஆகும். ஒவ்வொரு மாநிலமு ஒவ்வொரு பகுதி மக்களும் தங்களுக்கான பாரம்பரியம், கலாசாரம், நம்பிக்கை ஆகியவற்றை கொண்டு விளங்குகிறார்கள்.
வடமாநிலங்களில் தீபாவளி இரவில் கொண்டாடப்படுகிறது. ராமர் போரில் ராவணனை கொன்றதை கொண்டாடும் வகையில் அங்கு கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் நரகாசுரனை வதம் செய்ததை கொண்டாடும் வகையில் விடியற்காலையில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. அன்று மக்கள் அதிகாலை 4 மணிக்கே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்த தீபாவளி கொண்டாடுவது வழக்கமாகும். காலையில் தொடங்கும் இந்த கொண்டாட்டம் நாள் முழுவதும் தொடரும். மேலும் தமிழ்நாட்டில் தீபாவளி அமாவாசையன்று சதுர்த்ததி திதியில் கொண்டாடப்படுகிறது. அந்த திதி தீபாவளி அன்று காலை 4 மணிக்கு வருகிறது.
வட மாநிலங்களில் தீபாவளியன்று இரவு தீபம் ஏற்றுகிறார்கள். தமிழ்நாட்டில் தீபாவளி அன்று தீபம் ஏற்றாமல் கார்த்திகை பண்டிகையன்று தீபங்கள் ஏற்றப்படுகின்றன. எனவே வடக்கிலும், தெற்கிலும் கொண்டாடப்படும் தீபாவளி கொண்டாட்டங்களில் அதிக வேறுபாடு உள்ளது.
மேலும் கோர்ட்டு உத்தரவின்படி குறைந்த அளவு நேரமான 2 மணி நேரத்தில் பட்டாசு வெடிக்கும் போது ஒரே நேரத்தில் அனைவரும் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பெருமளவில் மாசுக்கேடு விளைவிக்கும்.
எனவே, தீபாவளியின் போது தமிழ்நாட்டில் வசிக்கும் மக்கள் அன்று அதிகாலை காலை 4.30 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை பட்டாசு வெடித்து பண்டிகையை கொண்டாட அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் பா.வினோத் கன்னா, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஆஜராகி தமிழ்நாட்டுக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பான திருத்தம் கோரும் மனுவை தாக்கல் செய்திருப்பதாகவும், அந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை (இன்று) இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஏற்கனவே தாக்கல் செய்துள்ள மனுவில்; “இந்த ஆண்டுக்கான பட்டாசுகளை ஏற்கனவே தயாரித்து முடித்தாகி விட்டது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டுள்ள நேரக்கட்டுப்பாட்டினால் நிறைய பட்டாசுகள் விற்பனையாகாமல் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள நேரக்கட்டுப்பாட்டை இந்த ஆண்டுக்கு விலக்கிக் கொள்ள வேண்டும். மேலும் இத்தீர்ப்பில் பசுமை பட்டாசு மட்டுமே வெடிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே விதிமுறைகள் எதுவும் கூறப்படவில்லை. எனவே பசுமை பட்டாசு என்பதற் கான விளக்கம் தேவைப்படுகிறது” என்று கூறப்பட்டு உள்ளது.
இந்த மனுவும் தமிழக அரசின் மனுவுடன் சேர்த்து இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. #DiwaliCrackers #CrackersBurstingTime #SupremeCourt
தீபாவளி பண்டிகை வருகிற 6-ந்தேதி நடக்கிறது. விபத்தில்லா தீபாவளியை கொண்டாட மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பட்டாசு கடைகளில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க பட்டாசு விற்பனையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடத்தப்பட்டது.
மேலும் பட்டாசுக்கடைகளில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய தீத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தீயணைப்புத் துறையினர் செயல் விளக்க ஒத்திகையை பட்டாசுக்கடை உரிமையாளர்களுக்குச் செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
உரிமம் இல்லாமல் பட்டாசுகள் விற்பதை தடுக்கவும், அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்காத பட்டாசுக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் மாவட்ட வருவாய் அலுவலர், உதவி கலெக்டர்கள் உள்பட பல்வேறு அதிகாரிகள் பட்டாசுக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் பட்டாசுகள் விற்பனை செய்பவர்களை கைது செய்யும்படி போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் தீபாவளியையொட்டி உரிமம் இல்லாமல் பட்டாசுகள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் துறை சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த பட்டாசுக்கடைகளில் விவரங்கள் பெறப்பட்டு, அவை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி அந்தந்தப்பகுதிக்கு உட்பட்ட அனைத்துப்பட்டாசுக்கடைகளிலும் போலீசார் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஆய்வின்போது பட்டாசு விற்பனையாளர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து பெறப்பட்ட உரிமத்தை போலீசாரிடம் காண்பிக்க வேண்டும். அல்லது உரிமம் தெரியும்படி கடையின் முன்பாக தொங்க விட வேண்டும். உரிமம் இல்லாமல் பட்டாசுகள் விற்பனை செய்தால் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்படும்.
இவ்வாறு போலீசார் கூறினர். #tamilnews
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் அனுமதியின்றி பட்டாசு விற்பதாக பண்ருட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஷ்னுபிரியா, ஜவ்வாதுஉசேன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று இரவு பண்ருட்டி பகுதிகளில் உள்ள கடைகளில் தீவிரசோதனை நடத்தினர்.
அப்போது பண்ருட்டி ரத்தினம்பிள்ளை மார்க்கெட்டில் மளிகைகடை நடத்திவரும் குமார் (வயது 42) என்பவர் கடையில் சோதனை செய்தபோது அங்கு மூட்டை மூட்டையாக பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் உரிய அனுமதியின்றி கடையில் பட்டாசு விற்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து குமாரை போலீசார் கைது செய்தனர். அந்த கடையில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தீபாவளி பண்டிகையின்போது இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. பட்டாசு விற்பனைக்கும் கட்டுப்பாடுகளை விதித்தது.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பட்டாசு வெடிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பசுமை பட்டாசு என்றால் என்ன என்று விளக்கம் அளிக்கக் கோரி தமிழக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. #DiwaliCrackers #CrackersBurstingTime #SupremeCourt
விருதுநகரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பட்டாசு மீதான தடை நீக்கப்பட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது. மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு பெரும் முயற்சி எடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தீர்ப்பு 8 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வில் பாலை வார்த்துள்ளது.
பால் கொள்முதல் உயர்வு குறித்து கூட்டுறவு சங்கத்தேர்தல் முடிந்தவுடன் நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #RajendraBalaji #FirecrackersSale #SupremeCourt
காற்று மாசு அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த, பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு நாடு முழுவதும் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் பட்டாசு விற்பனை மற்றும் உற்பத்திக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.
அதேசமயம், பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை விதித்துள்ளனர். அந்த நிபந்தனைகள் வருமாறு:-
அதிகளவிலான சத்தம் மற்றும் மாசு ஏற்படுத்தும் பட்டாசுகள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அங்கீகாரம் இல்லாத கடைகளில் பட்டாசுகள் விற்பனை செய்யக்கூடாது.
தடை செய்யப்பட்ட பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டால், அந்தந்த பகுதியில் உள்ள காவல்நிலைய அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். #FirecrackersSale #SupremeCourt
தீபாவளி என்றாலே பட்டாசுக்குதான் பிரதான பங்களிப்பு உண்டு.
பட்டாசு இல்லாத தீபாவளியை நினைத்து பார்க்கவே இயலாது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக காற்றில் மாசு அதிகரிப்பதாக கூறி பட்டாசு வெடிப்பதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
கடந்த 2016-ம் ஆண்டு டெல்லியில் மிகப்பெரிய அளவுக்கு காற்று மாசு ஏற்பட்டது. இதையடுத்து தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதை ஏற்று டெல்லியில் பட்டாசுகள் வெடிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.
கடந்த ஆண்டும் அக்டோபர் மாதம் 9-ந்தேதி டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கு தற்காலிக தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. பட்டாசு தயாரிப்பாளர்கள், “2 நாட்கள் மட்டுமாவது பட்டாசு விற்க அனுமதிக்க வேண்டும்" என்று விடுத்த கோரிக்கையையும் சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது.
இதனால் டெல்லியில் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை நீடித்தது.
இந்த நிலையில் காற்று மாசு நாடு முழுவதும் இருப்பதால் இந்தியா முழுவதும் பட்டாசு தயாரிக்கவும், விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்க வேண்டும் என்று டெல்லியைச் சேர்ந்த அர்ஜுன்கோபால், ஆரவ் பண்டாரி, ஜோயோ ரா பாசீன் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இதை எதிர்த்து சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சார்பில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.
சுப்ரீம்கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. பட்டாசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், காற்று மாசு காரணமாக மக்களுக்கு கடுமையான நோய்கள் ஏற்படுவதாக சுட்டி காட்டினார்.
இதை சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் மறுத்தார். அவர் வாதாடுகையில், “காற்று மாசுபடுவதற்கும் அதன் மூலம் நோய் பரவுவதற்கும் பட்டாசு தயாரிப்பாளர்கள் காரணம் அல்ல. காற்று வீசும் திசை மற்றும் அப்போதைய தட்பவெட்ப சூழ்நிலை காரணமாகவே காற்று மாசு ஏற்படுகிறது. எனவே பட்டாசை முழுமையாக தடை செய்வதற்கு பதில் அதன் விற்பனையை ஒழுங்குப்படுத்த வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறுகையில், “நாட்டில் உள்ள 130 கோடி மக்களின் சுகாதாரத்தையும், பட்டாசு உற்பத்தியாளர்களின் அடிப்படை வாழ்வாதார உரிமையையும் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது. எனவே இருவருக்கும் சமமான அளவில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றனர்.
நாடு முழுவதும் 25 சதவீதம் குழந்தைகள் காற்று மாசு காரணமாக சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு இருப்பதையும் நீதிபதிகள் சுட்டிக் காட்டினார்கள்.
எனவே மக்களின் சுகாதாரத்தை பேணும் வகையில் எந்த அளவுக்கு பட்டாசு சத்தம் மற்றும் மாசு ஏற்படுத்துவதை கட்டுப்படுத்தலாம் என்பதை பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதை ஏற்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.
இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி நிறைவு பெற்றன. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளியானது. நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூசண் ஆகியோர் கொண்ட பெஞ்ச் தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பு விவரம் வருமாறு:-
நாடு முழுவதும் பட்டாசு தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்க இயலாது. டெல்லியில் இதுவரை பட்டாசு வெடிப்பதற்கு இருந்த தடை இன்று முதல் நீக்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய நாட்களில் இரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை 35 நிமிடங்களுக்கு மட்டுமே பட்டாசுகளை வெடிக்கலாம்.
குறைந்த சக்தி கொண்ட ஒலி எழுப்பும் பட்டாசுகளையே மக்கள் வெடிக்க வேண்டும்.
நாடு முழுவதும் பட்டாசு விற்பனை செய்வதற்கு உரிய லைசென்சு பெறப்பட வேண்டும். லைசென்சு பெற்றவர்கள் மட்டுமே பட்டாசுகளை கடைகளில் வைத்து விற்பனை செய்ய வேண்டும்.
அங்கீகாரம் இல்லாமல் மற்ற கடைக்காரர்கள் பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது. அப்படி யாராவது விற்பனை செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பட்டாசு தயாரிப்பதற்கு சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை தயாரிப்பாளர்கள் கடை பிடிக்க வேண்டும். அதிகமாக சத்தம் ஏற்படுத்தும் பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது.
அதுபோல அதிகமாசு ஏற்படுத்தும் பட்டாசுகளும் விற்பனை செய்யப்பட கூடாது. அதிக மாசு, அதிக சத்தம் கொண்ட பட்டாசுகள் விற்பனையானால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
பட்டாசுகள் டீலர்கள் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். ஆன்லைனில் பட்டாசு விற்பனையை ஏற்க இயலாது. எனவே ஆன்லைன் விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.
இந்த தீர்ப்பு மூலம் பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. எனவே இந்த ஆண்டு தீபாவளிக்கு அதிகளவில் புதிய ரக பட்டாசுகள் வர வாய்ப்பு உள்ளது.
அதுபோல ஆன்லைன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதற்கு கடைக்காரர்கள் மிகுந்த மகிழ்ச்சியும் வரவேற்பும் தெரிவித்துள்ளனர். #FirecrackersSale #SupremeCourt
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்