search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Election Results 2024"

    • ஒருநாளைக்கு மூன்று முறை ஆடைகளை மாற்றியவர்கள்,
    • தற்போது ஒரே ஆடையில் மூன்று நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

    சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வரான காங்கிரஸ் கட்சி தலைவர் பூபேஷ் பாகல், இந்தியாவில் இன்னும் 6 மாதத்திற்குள் அல்லது ஒரு வருடத்திற்குள் மறுதேர்தல் நடைபெறும் என தான் கணிப்பதாக தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பூபேஷ் பாகல் கூறியதாவது:-

    கட்சி தொண்டர்கள் தயாராக வேண்டும். இன்னும்  ஆறு மாதங்களில் அல்லது ஒரு வருடத்திற்குள் மறுதேர்தல் வரப்போகிறது. யோகி ஆதித்யநாத்தின் நாற்காலி (உ.பி. முதல்வர் பதவி) ஆடிக்கொண்டிருக்கிறது. பாஜன் லால் சர்மா (ராஜஸ்தான் முதல்வர்) தள்ளாடுகிறார். பட்நாவிஸ் ராஜினாமா கூட செய்ய தயாராகிவிட்டார்.

    ஒருநாளைக்கு மூன்று முறை ஆடைகளை மாற்றியவர்கள் (பிரதமர் மோடியை கிண்டல் செய்து) தற்போது ஒரே ஆடையில் மூன்று நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது அல்லது என்ன அணிவது என்பது குறித்து அவர்கள் கவலைப்படப்போவதில்லை.

    கட்சிகளை உடைத்தவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களை சிறைக்கு தள்ளியவர்கள், மிரட்டியவர்களுக்கு மக்கள் நல்ல பாடம் கற்பித்துள்ளனர்.

    இவ்வாறு பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.

    தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி பாராளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஜனாதிபதியும் அழைப்பு விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7.15 மணிக்கு 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார்.

    இதனைத் தொடர்ந்து பூபேஷ் பாகல் மேற்கண்டவாறு விமர்சனம் செய்துள்ளார்.

    • உமர் அப்துல்லாவை எதிர்த்து சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற உள்ளார்.
    • மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் போட்டி சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற உள்ளார்.

    இந்திய பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 542 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இதில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் எந்த கட்சியையும் சாராமல் சுயேட்சையாக களம் இறங்கினர். இதில் ஆறு வேட்பாளர்கள் மட்டுமே வெற்றியை ருசிக்க இருக்கிறார்கள்.

    பஞ்சாப் மாநிலம் ஃபரித்காட் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கியவர் சரப்ஜீத் சிங் கல்சா. இவர் இந்திரா காந்தியை படுகொலை செய்த பியாந்த் சிங்கின் மகன் ஆவார். இவர் ஆம் ஆத்மி வேட்பாளர் கரம்ஜித் சிங் அன்மோலை எதிர்த்து வெற்றி பெற இருக்கிறார். இவர் ஏற்கனவே 2014 மற்றும் 2019-ல் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

    இதே மாநிலத்தில் உள்ள கதூர் சாஹிப் தொகுதியில் அம்ரித்பால் சிங் காங்கிரஸ் வேட்பாளரை சிங் ஜிராவை எதிர்த்து வெற்றிபெற இருக்கிறார்.

    மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி தொகுதியில் விஷால் பிரகாஷ்பாபு பாட்டில் வெற்றி பெற உள்ளார். காங்கிரஸ் கட்சி கூட்டணியில் சிவசேனாவுக்கு இந்த தொகுதி கொடுக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி சுயேட்சையாக போட்டியிட்டார். இவர் மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் வசந்த்தாதா பாட்டில் மகன் ஆவார்.

    காஷ்மீர் லடாக் தொகுதியில் தேசிய மாநாடு கட்சியில் இருந்து விலகி சுயேட்சையாக போட்டியிட்ட முகமது ஹனீபா ஜான் வெற்றி பெறும் நிலையில் உள்ளார்.

    டாமன்&டையூ தொகுதியில் பட்டேல் உமேஷ் பாய் பாபுபாய் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெறும் நிலையில் உள்ளார்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாடு கட்சி தலைவர் உமர் அப்துல்லாவை எதிர்த்து அப்துல் ரஷித் ஷெய்க் வெற்றி பெறும் தருவாயில் உள்ளார்.

    2019-ல் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் நான்கு சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

    1951-52-ல் முதன்முறையாக நடைபெற்ற தேர்தலில் 37 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 1957-ல் 42 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 1962-ல் 20 பேரும், 1984-ல் 13 பேரும் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

    • பா.ஜனதா தனியாக 240 இடங்கள் வரை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • கூட்டணி ஆட்சி அமைய உள்ள நிலையில் ஜே.பி. நட்டா அமித் ஷாவுடன் ஆலோசனை.

    மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 295 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 231 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    பா.ஜனதா கட்சிக்கு ஆட்சி அமைப்பதற்கான 272 என தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா, ராம் விலாஸ் பஸ்வான் மகன் சிராஜ் பஸ்வான் கட்சி ஆகியவற்றின் ஆதரவு ஆட்சி அமைக்க தேவைப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    இந்த நிலையில் பா.ஜனதா தேசிய தலைவரான ஜே.பி. நட்டா வீட்டிற்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் சென்றுள்ளனர்.

    தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை குறித்து விரிவான ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சி அமைக்க தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைப்பு ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது.

    இதற்கிடையே தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் நாளை டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    2019 தேர்தலில் பா.ஜனதா தனியாக 303 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது 240 இடங்களில்தான் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கருத்துக் கணிப்பில் 20-க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டது.
    • ஆனால், மம்தா பானர்ஜியின் கட்சி 29 இடங்களில் முன்னணி வகித்து வருகிறது.

    மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சியை கழற்றி விட்டு பா.ஜனதாவை தனியாக எதிர்த்து நின்றார் மம்தா பானர்ஜி. சந்தேஷ்காளி உள்ளிட்ட பல்வேறு விசயங்களை கையில் எடுத்து பா.ஜனதா மம்தா பானர்ஜி கட்சியை ஓரம் கட்ட பார்த்தது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பா.ஜனதா 22 இடங்களை பிடிக்கும் என தகவல் வெளியானது. அப்போது மம்தா பானர்ஜி கருத்து கணிப்பு பொய்யாகும் என உறுதியாக கூறினார்.

    இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் பா.ஜனதா முதலில் முன்னணி வகித்தது. நேரம் செல்ல செல்ல மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்க தொடங்கியது.

    தற்போது 29 இடங்களில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. 12 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது.

    கடந்த முறை 18 இடங்களை பிடித்த பாஜக, தற்போது 12 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மம்தாவின் 29 இடங்கள் இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

    • பா.ஜனதா ஆட்சி அமைப்பதற்கான தனி மெஜாரிட்டியை இழக்கும் நிலையில் உள்ளது.
    • பா.ஜனாதா கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமாரை இழுக்க இந்தியா கூட்டணி முடிவு.

    மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பாஜக கூட்டணி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு கூறிய நிலையில், கருத்துக் கணிப்பை மீறி இந்தியா கூட்டணி 230 தொகுதிகளுக்கு மேலான இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.

    பாஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 233 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மற்றவை 17 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    தேர்தல் வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக முடிவடையும்போது சுமார் 240 இடங்களை தாண்டினால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படும். இதற்கு முக்கிய காரணம் பா.ஜனதாவுக்கு ஆட்சி அமைப்பதற்கான தனி மெஜாரிட்டி (272) கிடைக்கவில்லை.

    பாஜக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு (16), நிதிஷ் குமார் (14) ஆகியோரிடம் 30 இடங்கள் உள்ளது. இந்த 30 இடங்களை பாஜகவிடம் இருந்து இழுத்துவிட்டால் பாஜனதாவுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

    இந்த கணக்கை மனதில் வைத்து இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் காய் நகர்த்தி வருகின்றனர். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி ஆட்சி அமைப்பதற்கான தனி மெஜாரிட்டியை பிடித்துள்ளது.

    இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவிடம் இந்தியா கூட்டணி கட்சியில் உள்ள சரத் பவார் டெலிபோன் மூலம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் நிதிஷ் குமாரிடமும் பேசியதாகவும் கூறப்படுகிறது. அப்போது துணை பிரதமர் பதவி தர தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால் இந்தியா கூட்டணி தலைவர்கள் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவை இழுக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்வார்கள் எனத் தெரிகிறது.

    ×